மீண்டும் தேசிய ஆலோசனைக் குழு

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் அரியணை ஏறியுள்ளதை அடுத்து தேசிய ஆலோசனைக் குழுவுக்கு மீண்டும் புத்துயிரூட்டும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. 2004-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் த

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் அரியணை ஏறியுள்ளதை அடுத்து தேசிய ஆலோசனைக் குழுவுக்கு மீண்டும் புத்துயிரூட்டும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

2004-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் முயற்சியால் உருவானதுதான் தேசிய ஆலோசனைக் குழு. மக்கள் ஆதரவுத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும், மக்கள் சமூகம் பலன் பெறவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இது தொடங்கப்பட்டது.

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அந்த மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட், தேசிய ஆலோசனைக் குழுவை மீண்டும் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

அரசின் திட்டங்கள் மூலம் கட்சிகள் ஆதாயம் பார்ப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து தேசிய ஆலோசனைக் குழுவின் செயல்பாட்டு வேகம் குறைந்துபோனது. இதன் தலைவராக இருந்த சோனியா காந்தியும் பதவி விலக முடிவு செய்தார். இதனால் பெயரளவில் செயல்பட்டு வந்த தேசிய ஆலோசனைக் குழு, 2008-ம் ஆண்டு மார்ச் 31-ல் செயலிழந்து போனது.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி மீண்டும் தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவராக விரும்பாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் அதைத் தவிர்த்து வருகிறார்.

தேசிய ஆலோசனைக் குழுவின் தனித்தன்மையான செயல்பாடுகள், குறிப்பாக இரண்டு முக்கிய நடவடிக்கைகள் வரலாறு உள்ளவரை அதனை நினைவுபடுத்தும். முதல் நடவடிக்கை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவர வழிவகை செய்தது. இன்று இச்சட்டத்தைப் பயன்படுத்தி மக்கள் அதிக அளவில் பயன்பெற்று வருகின்றனர். அரசின் செயல்பாடு வெளிப்படையாக இருக்கவேண்டும், அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதே இன்றைய நிலைப்பாடு.

தேசிய ஆலோசனைக் குழு முன்வைத்த இரண்டாவது யோசனை தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டம். மத்திய அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருவதன் மூலம் பலரும் பலனடைந்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றதற்கு இத் திட்டமும் ஒரு காரணம் என்ற பேச்சும் உள்ளது.

மத்திய அரசின் தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஏஜென்சிகளாக மாநில அரசுகள் இருப்பதால் பல்வேறு மாநில முதல்வர்கள், குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ராஜஸ்தான் மாநிலத்தில் அப்போது முதல்வராக இருந்த பாஜகவின் வசுந்தராராஜே சிந்தியா போன்றவர்கள் தேர்தல் சமயத்தில் இத்திட்டத்தை முன்வைத்தே பிரசாரம் செய்துவந்தனர்.

இந்தத் திட்டத்தை ராஜீவ் பெயரிலான திட்டமாக மாற்றி, இத்திட்டத்தின் கீழ் பணி செய்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 என கூலி நிர்ணயித்து மத்திய அரசே நேரடியாக ஐந்தாண்டுகளுக்குச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸôர் எழுப்பி வருகின்றனர். அதாவது மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தை மாநில அரசுகள் தங்கள் ஆதாயத்துக்கு பயன்படுத்திக் கொள்கின்றன. இதற்கு இடம்தரலாகாது என்பது காங்கிரஸôரின் கோரிக்கையாகும்.

தேசிய ஆலோசனைக் குழு என்று ஒரு அமைப்பு இருந்திராவிட்டால் தகவல் அறியும் உரிமைச் சட்டம், தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டம் போன்றவை வெளிச்சத்துக்கு வந்திருக்காது என்பது பொதுவான எண்ணம். இத்திட்டத்துக்கு அதிக நிதிஒதுக்கீடு செய்ய வேண்டியிருக்கும் என்ற காரணத்தால் இதில் பிரதமர் மன்மோகன் சிங் முதலில் ஆர்வம் காட்டாமல் இருந்தார்.

தேசிய ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டத்தில் இத்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சோனியா காந்தி தலைமையில் இதன் உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இத்திட்டம் பற்றி எடுத்துக் கூறினர். அப்போது பிரதமர் அவர்களிடம், "இது ஒரு நல்ல திட்டம்தான் ஆனால், இதற்கான நிதிக்கு எங்கே போவது?' என்று கேட்டார்.

இதைத் தொடர்ந்து இத்திட்டத்துக்கு எப்படி நிதி திரட்டுவது என்பது குறித்து விவாதம் நடந்தது. உறுப்பினர்கள் பலரும் பலவிதமான யோசனைகளைக் கூறினர். பிரதமரும் அரசுடன் நேரடித் தொடர்பு இல்லாத சிலரிடம் இது குறித்து விவாதித்தார். இறுதியில் இத் திட்டம் அரசியல் நோக்கம் சார்ந்தது, நிதி சார்ந்தது அல்ல என்பது தெரியவந்தது.

இதன் பிறகு நடந்த கூட்டங்களில் இது குறித்து சோனியா காந்தி எதுவும் பேசவில்லை. ஆனால், தேசிய ஆலோசனைக் கூட்டத்தின் பரிந்துரைகளை பிரதமருக்கு அனுப்பிவைத்தார். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் சோனியா காந்தி மிகவும் ஆர்வமாக இருக்கிறார் என்பதை மட்டும் எல்லோரும் புரிந்து கொண்டனர்.

தேசிய ஆலோசனைக் குழு, ஆட்சியாளர்களுக்கு யோசனை கூறும் அமைப்பாக இருந்தாலும், அதில் சோனியா காந்தி தலைவராக இடம்பெற்றிருந்ததால் அதிக முக்கியத்துவம் பெற்றது. இந்த அமைப்பு மூலம் அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக சோனியாகாந்தி செயல்பட்டு வந்தார். இதனால் இக்குழு முன்வைத்த பரிந்துரைகளைப் புறக்கணிக்க மத்திய அரசால் இயலவில்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டம், தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து மகளிருக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்ட மசோதா, தேசிய ஊரக சுகாதார இயக்கம் ஆகியவற்றை தேசிய ஆலோசனைக் குழு முன்வைத்தது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் சில இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதனைச் செயல்படுத்தும் நோக்கில்தான் தேசிய ஆலோசனைக் குழுவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.

நாட்டில் பருவமழை பொய்த்து, பல மாநிலங்களில் வறட்சி நீடிக்கும் நிலையிலும் உணவுதானிய உற்பத்தி எதிர்பார்க்கும் இலக்கைவிட 20 சதவிகிதம் குறையும் என்ற சூழ்நிலையிலும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முறையாக நிறைவேற்ற தேசிய ஆலோசனைக் குழு பரிந்துரைக்கலாம்.

"வறுமையை ஒழிப்போம்' என்று தேர்தலின் போது வாக்குறுதி அளித்த காங்கிரஸ் இத்திட்டத்தை செயல்படுத்த முன்வரக்கூடும்.

உணவுப் பாதுகாப்புச் சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு சேவை அமைப்புகள் தங்களின் யோசனைகளை முன்வைத்துள்ளன. ஆனால், அரசின் நிலை என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

இதேபோல தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும் எல்லோராலும் பேசப்பட்டு வரும் "முழு சுகாதாரம் பெறும் உரிமை' சட்டம் என்ன நிலையில் இருக்கிறது என்பது தெரியவில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முறையாகச் செயல்பட வேண்டுமெனில் தேசிய ஆலோசனைக் குழு புதுப்பிக்கப்பட வேண்டும். மீண்டும் அதன் தலைவர் பதவியை சோனியாகாந்தி ஏற்பாரானால் அவருக்கு காபினெட் அமைச்சருக்கான அந்தஸ்து கிடைக்கும். அவருக்கு என தனி அலுவலகம் அமைத்துச் செயல்பட முடியும். ஆனால், அந்த அமைப்புக்கு என்ன அதிகாரம் உண்டோ அதன் கீழ் அவர் செயல்பட வேண்டியிருக்கும். அரசு சாராத ஓர் அமைப்புக்கு அதிக அதிகாரங்கள் வேண்டுமெனில் அது விவாதத்துக்குரிய விஷயமாகும்.

மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படாவிட்டால் தேசிய ஆலோசனைக் குழு என்பது அதிகாரங்கள் நிறைந்த "சூப்பர் காபினெட்' போலாகிவிடும். கடந்த முறை இதன் உறுப்பினர் செயலர்- ஜெய்ராம் ரமேஷ் சூப்பர் காபினெட் அமைச்சர் போல் அனைத்துத் துறையிலும் தலையிட்டது போலாகிவிடும்.

தேசிய ஆலோசனைக் குழு மீண்டும் புதுப்பிக்கப்பட்டால் அதில் ராகுல் காந்தி முக்கிய பங்கு வகிப்பார் என்ற பேச்சும் உள்ளது. குழுவின் தலைவராக அவர் நியமிக்கப்படாவிட்டாலும் அதன் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக அவர் இருக்கக்கூடும்.

தேசிய ஆலோசனைக் குழுவிலும் சில மாற்றங்கள் செய்யப்படலாம். அதாவது அரசு சாரா அமைப்பைச் சேர்ந்த சிலரும், அதாவது ராகுல் காந்திக்கு நெருக்கமான சிலர் இதில் இடம்பெறலாம் என்ற பேச்சும் உள்ளது.

தேசிய ஆலோசனைக் குழு என்பது வழக்கத்தில் இல்லாத, அதேசமயம் பயனுள்ள ஓர் அமைப்பாகும். மக்கள் ஆதரவுத் திட்டங்களை அரசு செயல்படுத்த இந்த அமைப்பு ஒரு கருவியாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் இதற்கு மதிப்பு. வெளிப்படையான நிர்வாகம் இல்லாமல், முறைகேடுகளும் சேர்ந்து கொண்டால் ஆட்சிக்கே ஆபத்து வந்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com