"சிக்கனம்' என்பது எதுவரை?

"சிக்கனம்' இந்த வார்த்தைதான் இப்போது அரசு அலுவலகங்களில் பேசப்பட்டு வரும் பரபரப்பான விஷயம்.   சமீபத்தில் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தியில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளியுறவு இணை
"சிக்கனம்' என்பது எதுவரை?

"சிக்கனம்' இந்த வார்த்தைதான் இப்போது அரசு அலுவலகங்களில் பேசப்பட்டு வரும் பரபரப்பான விஷயம்.

  சமீபத்தில் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தியில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர் இருவரும் அரசு பங்களா கிடைக்காததால் கடந்த மூன்று மாதங்களாக ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

  இந்தச் செய்தி வெளியானதை அடுத்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அவ்விருவரையும் உடனடியாக ஹோட்டல் அறைகளைக் காலி செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து சசி தரூர், தாம் ஒருவாரம் முன்னதாகவே ஹோட்டல் அறையைக் காலிசெய்து விட்டதாக விளக்கம் அளித்தார்.

  முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், அமைச்சர்கள் சிக்கன நடவடிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களது சம்பளத்தில் 20 சதவீதத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிட்டிருந்தார்.

  மேலும் பிரணாப் முகர்ஜி உள்நாட்டில் விமானப் பயணம் மேற்கொள்ளும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் "பிஸினஸ் கிளாஸில்' செல்லாமல் "எகானமி' வகுப்பிலேயே செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அத்துடன் நில்லாமல், தில்லியிலிருந்து கோல்கத்தாவுக்குக் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் தனியார் விமானத்தில் சென்று மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார். இது தமக்கு ஒன்றும் புதிதல்ல என்றும், பி.வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த காலத்திலேயே தாம் விமானத்தில் "எகானமி' வகுப்பில் சென்றதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

  இதையடுத்து மத்திய அமைச்சர்களும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களும், கட்சி எம்.பி.க்களும் போட்டி போட்டுக் கொண்டு சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். அதாவது அமைச்சர்களும், எம்.பி.க்களும் விமானத்தில் "பிஸினஸ் கிளாஸில்' பயணம் செய்வதை கைவிட்டு "எகானமி' வகுப்பில் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

  அனைவரும் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற செய்தி பிரதமரிடமிருந்து நேரடியாக வராமல், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மூலம் அறிவுரையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங் இருவரின் ஆலோசனை இல்லாமல் பிரணாப் அதிரடியாக இப்படி அறிவித்திருக்க மாட்டார்.

  வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் செயல்பாடு அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்பதும் காங்கிரஸ் தலைமையின் கருத்தாகும். மேலும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அவர் தங்கியிருந்ததும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பிரதமர் மன்மோகன் சிங்தான் அவரை வெளியுறவு அமைச்சர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தார். அவரை வெளியுறவு அமைச்சராக்கினால் அதில் தாம் பெரும் பங்கு வகிக்க முடியும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நினைத்தார்.

  மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்றதிலிருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார். எந்த விதத்திலும் அரசுக்கும் கட்சிக்கும் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதிலும், ஆட்சி தடம்புரண்டுவிடக்கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருக்கிறார். வறுமை ஒழிப்புதான் தமது அரசின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என்பது அவரது குறிக்கோள். 2014-ம் ஆண்டு தேர்தலிலும் தமது கட்சி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இப்போதிலிருந்தே சிக்கன நடவடிக்கையை அவர் தொடங்கிவிட்டாரோ என்று தோன்றுகிறது.

  சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய பிரணாப் முகர்ஜி, திட்டம் சாரா செலவினங்களை 10 சதவீதம் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்களுக்காக அரசு செலவிடும் தொகையில் 75 சதவீதம் அவர்களின் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணத்துக்காகவே செலவிடப்படுகின்றன என்று அண்மையில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களைக் குறைப்பதன் மூலமும், விமானத்தில் அவர்கள் "எகானமி' வகுப்பில் பயணம் செய்ய வைப்பதன் மூலம் செலவினங்களைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்பது முகர்ஜியின் நம்பிக்கை.

  அமைச்சர்கள் தங்கள் பயணத்தைக் குறைத்துக் கொள்வதுடன் நில்லாமல், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் "பார்ட்டி' கொடுப்பதையும், அங்கு கருத்தரங்குகள் நடத்துவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் வெளிநாட்டுப் பிரமுகர்கள் வருகை தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  அரசின் செலவினங்களைக் குறைக்க அமைச்சர்களும் எம்.பி.க்களும் சிக்கன நடவடிக்கையை பின்பற்றினாலும், சர்வதேசப் பொருளாதாரச் சரிவு காரணமாக நம்நாட்டில் லட்சக்கணக்கான பேர் வேலையிழந்து நிற்கும் நிலையில், வறட்சி காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்தவே கஷ்டப்படும் நிலையில் அவர்களின் நலனுக்கு அமைச்சர்கள், எம்.பி.க்களின் செயல்பாடு என்ன என்ற கேள்வி எழுகிறது.

  மத்திய அமைச்சர்கள் இருவரும் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் பில்லில் தள்ளுபடி கொடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது அமைச்சர்களின் பில்லை வேறு யாராவது எதிர்கால ஆதாயம் கருதிச் செலுத்தியிருக்கலாம். மேலும் வெளிநாட்டுப் பிரமுகர்கள் வரும்போது அவர்கள் நமது ஹோட்டலில் தங்க வைக்கப்படலாம் என்ற எண்ணத்திலும் ஹோட்டல் நிர்வாகம் அவர்களுக்கு ஏதாவது சலுகை காட்டியிருக்கலாம். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தெளிவான விடை கிடையாது.

  அந்த அமைச்சர்கள் இருவரும் தங்கள் ஹோட்டல் பில்லை தாங்களே செலுத்தியிருக்கலாம். "சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்' என்று சொல்லுவதுண்டு. ஆனால், இப்போதுள்ள நிலைமை சீசரின் மீதே சந்தேகம் ஏற்படுவதுதான்.

  சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்; வீண் செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு உண்மையிலேயே இருக்குமானால் "எகானமி' வகுப்பில் பயணம் செல்லுங்கள் என்று கூறுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் அதற்கு அப்பாலும் நடவடிக்கைகள் தொடர வேண்டும்.

  அதாவது சுவிஸ் வங்கியிலும், வேறு சில வெளிநாட்டு வங்கிகளிலும் அரசியல்வாதிகளும், முக்கிய பிரமுகர்களும் போட்டுவைத்துள்ளதாகக் கூறப்படும் கறுப்புப் பணத்தை வெளிக்கொணர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக சுவிஸ் நாட்டு அரசுடன் வரும் டிசம்பர் மாதம் பேசவிருப்பதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஏற்கெனவே கூறியுள்ளார். வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை இந்தியா வெளிக்கொணர்ந்தால் அதைவைத்து இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் தலா ரூ.15 கோடி நிதியுதவி அளித்து வளர்ச்சிப் பணிக்குப் பயன்படுத்த முடியும் என்பது நிபுணர்களின் கருத்து.

  இதேபோல தேர்தல் செலவினங்களையும் கணிசமாகக் குறைக்க வேண்டும். பொதுத் தேர்தல் எனில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. தேர்தல் செலவினங்களுக்காகத் தொழில் நிறுவனங்களும் வியாபாரிகளும் கோடிக்கணக்கில் ஆட்சியாளர்களுக்குக் கொடுத்து உதவியதால்தான் இன்று அதற்கு கைமாறு செய்யும் வகையில் விலைவாசி உயர்ந்து நிற்கின்ற போதிலும் அதை அரசு கண்டுகொள்ளவில்லை என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது.

  எஸ்.எம்.கிருஷ்ணாவும், சசி தரூரும் ஐந்து நட்சத்திர ஹோட்டலை காலி செய்துவிட்டு அரசு பங்களாக்களில் தங்கினாலும் அவர்களது செலவினங்களில் பெரிதும் வித்தியாசம் இருக்கும் என்று சொல்ல முடியாது. இதைச் சிக்கனம் என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

  சிக்கன நடவடிக்கை எனில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், மூத்த அரசு அதிகாரிகள் எவ்வளவு செலவு செய்யலாம் என்பதை வெளிப்படையாகத் தெளிவுபடுத்த வேண்டும். அதுமட்டுமல்ல; அரசின் எல்லாத் துறைகளிலும் சிக்கனம் கையாளப்பட வேண்டும்.

  மேலும் அரசு சாராத அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், கார்ப்பொரேட் நிறுவனங்களும் செலவில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

  நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் 5 வயதுக்கு உள்ளிட்ட இரண்டாவது குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 80 லட்சம் குழந்தைகள் இறக்கும் அபாயம் உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  அரசு வீண்செலவுகளைக் குறைப்பதன் மூலம் ஏழை மக்களின் நல்வாழ்விலும், நாட்டின் வளர்ச்சியிலும் மேலும் கவனம் செலுத்த முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com