சிலைக்குத் தரப்போகும் விலை...

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் உருவச் சிலை திறந்து வைக்கப்பட்ட நிகழ்ச்சியில் பங்குகொண்ட தமிழக முதல்வர் மு. கருணாநி திக்கு எதிராக, 6 வழக்குரைஞர்கள்  கோஷம் எழுப்பி, கருப்பு

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் உருவச் சிலை திறந்து வைக்கப்பட்ட நிகழ்ச்சியில் பங்குகொண்ட தமிழக முதல்வர் மு. கருணாநி திக்கு எதிராக, 6 வழக்குரைஞர்கள்  கோஷம் எழுப்பி, கருப்புக்கொடி காட்டியதும், அவர்கள் மீது திமுக சார்பு வழக்குரைஞர்கள் தாக்குதல் நடத்தியதும், படம் எடுக்கச் சென்ற ஊடகத்தினர் தாக்கப்பட்டதுமான சம்பவங்கள் நடந்துள்ளன.

÷கருப்புக் கொடி காட்டப்பட்டதற்குக் காரணம், 2009 பிப்ரவரி 19}ம் தேதி நடந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததால் முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு என்று கூறப்படுகிறது.

÷நீதிமன்ற வளாகத்திலோ அல்லது அதன் நுழைவாயிலிலோ எந்த ஒரு நீதி சம்பந்தமில்லாத விழாக்களோ அல்லது கூட்டங்களோ நடத்தக்கூடாது; கட் அவுட் வைக்கக் கூடாது என்பதை உயர் நீதிமன்றப் பதிவாளர் உறுதி செய்ய வேண்டும்; இவை மீறப்படும்போது பூக்கடை போலீஸ் உயர் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2006-ம் ஆண்டு நீதிபதி ஏ.பி. ஷா மற்றும் பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது. அந்த உத்தரவு வெறும் காகித உத்தரவாகி, நீதித்துறை அதனை அமல்படுத்தத் தவறியதால்,உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சுமார் 30 நாள்கள் இலங்கைப் பிரச்னைக்காக நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் நடத்தியதும், 2009 பிப்ரவரி 19-ம் தேதி அதற்காக எடுக்கப்பட்ட போலீஸ் நடவடிக்கை போன்றவையும் அனைவரும் அறிந்ததே. இப்போது அந்தச் சம்பவத்தின் பின்விளைவாக நீதிமன்ற வளாகத்திலேயே முதல்வருக்குக் கருப்புக்கொடி காட்டுகிற அளவுக்கு வளர்ந்துள்ளது. 

÷வழக்கறிஞர்களின் தன்னிச்சையான அதிகாரம் நீதிமன்றப் புறக்கணிப்பு அல்லது நீதித்துறை வளாகத்தில் ஆளுகை என்பவை ஓர் எழுதாத சட்டமாகிக் கொண்டிருக்கின்றன. நீதித்துறையும் அரசும் இதுபற்றி ஒரு மறுபரிசீலனை செய்து நீதிபரிபாலனத்தை பொதுமக்கள் நன்மைக்கு இசைவாக ஆக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

÷2007, 2008, 2009-ம் ஆண்டுகளில்  மொத்தம் வேலை செய்ய வேண்டிய 210 வேலை நாள்களில் குறைந்தது 60 முதல் 80 நாள்கள் வரை வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உயர் நீதிமன்றத்தின் நிலைமை இதுவென்றால், கீழமை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் மேலும் அதிக அளவில் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

÷இந்த நிகழ்வுகளுக்குக் காரணம் வழக்கறிஞர்கள் என்றாலும் வழக்கறிஞர்களைத்  திருப்திப்படுத்த நினைப்பதாய்க் கருதிக்கொண்டு, மௌனமாய் இருக்கும் நீதித்துறை நிர்வாகம் இவை இரண்டுமே இதற்குத் துணை போகின்றன என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

÷நீதித்துறை நிர்வாகம் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் இதர உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கியது. நீதிபரிபாலனத்துக்கு ஊறுகோள் விளைவிக்கும் இத்தகைய போக்கை நீதிமன்ற நிர்வாகம் எப்படி மெத்தனமாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறது என்பதை எடுத்துக்காட்ட சில உதாரணங்கள்.

÷2006-ம் ஆண்டு நீதிமன்ற வளாகத்தில் அரசியல் தலைவர்கள் "கட்-அவுட்' அரசியல் சார்புடைய தர்ணா கூட்டங்கள், பட்டாசு வெடித்தல், அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் விழாக்கள் கட்டுக்கடங்காமல் போன தருணத்தில்தான் மேற்குறிப்பிட்ட தீர்ப்பை நீதிபதி ஏ.பி. ஷா மற்றும் பிரபா ஸ்ரீதேவன் அடங்கிய பெஞ்ச் வழங்கியது. அந்த உத்தரவை எல்லா மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. அந்த உத்தரவை நீதித்துறை அமல்படுத்தத் தவறியது.

÷நீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டு பொதுநல வழக்கில் கூறியபடி அந்த உத்தரவு அமலாக்கப்பட்டிருந்தால் பிப்ரவரி 19-ம் தேதி நடந்த வக்கீல்-போலீஸ் மோதல் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று அது பற்றிய விசாரணை செய்த நீதிபதி இப்ரகீம் கலிபுல்லா, பானுமதி உள்ளடக்கிய டிவிஷன் பெஞ்சின் தீர்ப்பில் நீதிபதி பானுமதி மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.

÷அதுமட்டுமல்லாமல் ஹரிஷ் உப்பல் வழக்கிலும், தொடர்புடைய சில வழக்குகளிலும், வழக்கறிஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு சட்டத்துக்குப் புறம்பானது என்று கூறி அதற்காக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்ற நிலை உள்ளபோதுகூட, நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடும் தமிழக வழக்கறிஞர்கள்மேல் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 வழக்கறிஞர்-போலீஸ் மோதலை விசாரித்து தீர்ப்பளித்த நீதிமன்றம்கூட, நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் தாக்குதல் நடத்தியது நீதிமன்ற அவமதிப்பு என்று தீர்ப்புக் கூறி அதற்கான நடவடிக்கை எடுக்கும் நேரத்தில், அதே நீதிமன்ற அவமதிப்பைச் செய்த வழக்கறிஞர்களுக்கு, ஒருதலைப்பட்சமாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்குப் பதில் ஒரு கண்டிப்பு மற்றும் வருங்காலத்துக்கான அறிவுரையுடன் நிறுத்திக் கொண்டதானது, சட்டத்தின் ஆட்சிக்கும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டுக்கும்  புறம்பானது. வக்கீல்கள் விசாரணைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லவே!

 இப்படி இருக்க வழக்கறிஞர்கள் பிப்ரவரி 19-ம் தேதியை ஒரு நினைவுநாளாக்கி, கறுப்பு தினமாக நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுவது எழுதப்படாத விடுமுறை தினமாக நடந்து கொண்டிருக்கிறது.

 இதுபற்றி நீதித்துறை என்ன செய்யப் போகிறது?  வழக்கம்போல மௌனமாக, நீதிமன்றத்தை வக்கீல் இல்லாமல் நடத்தி ஓய்வு எடுத்துக் கொள்ளப் போகிறதா? அல்லது இரும்புக்கரம் கொண்டு அதைத் தடுக்கப் போகிறதா?

÷அம்பேத்கர் ஓர் அரசியல் சட்ட மேதை. அவர் இந்திய அரசியல் சட்டத்தின் முனைவர் என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்தில்லை. அம்பேத்கர் சட்டமேதை என்பதற்காக சிலையா? அல்லது தலித் மக்களின் அரசியல் அடையாளம் என்பதற்காகவா? சட்டமேதை என்றால் கண்டிப்பாக அதில் ஆட்சேபம் இல்லை. தலித் மக்களின் அரசியல் அடையாளம் என்றால்...? அதற்கு நீதிமன்ற வளாகத்தில் அவசியம் இல்லை!

÷இந்தச் சிலை விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் இந்த விவாதம் வந்தபோது, சென்னை சட்டக் கல்லூரியில் இரு ஜாதியினர் மத்தியில் ஏற்பட்ட கலவரம் நாம் அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஒன்று.

÷அம்பேத்கரை ஒரு சட்டமேதையாகப் பார்க்காமல் ஜாதியத் தலைவராய் முன்னிறுத்தப்படும்போது அதன் எதிர் வினையாக தென் மாவட்டங்களில் உள்ள "பசும்பொன்' முத்துராமலிங்கத் தேவர் மற்றும் அம்பேத்கர் சிலைகள் இரும்புக் கூண்டுடன் தகுந்த பாதுகாப்புடனே பாதுகாக்கப்பட வேண்டியுள்ள அவலம், அவமானகரமானதாக ஏன் இவர்களுக்குத் தெரியவில்லை?

÷கலவரம் செய்ய நினைப்பவர்கள் சிலையை அவமதிக்கும் விதமாய் நடந்துகொள்வது ஒரு வாடிக்கையான விஷயமாகிவிட்டது. இதைச் சுட்டிக்காட்டியவுடன் அம்பேத்கர் சிலை நிறுவ, "தலித் வக்கீல் சங்க கோரிக்கை' முழு கோர்ட் சம்மதத்துடன் நிறுத்திவைக்கப்பட்டது.

÷இந்த விவாதம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூட்டத்தில் நடந்தபொழுது முத்துச்சாமி ஐயருக்கு மட்டும் சிலை இருக்கிறதே, அப்போது ஏன் அம்பேத்கருக்கு இருக்கக்கூடாது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உடனே உயர் நீதிமன்றத்தின் சரித்திரம் அறிந்த ஒரு நீதிபதி, ""சர்.முத்துச்சாமி ஐயரின் சிலை பிரிட்டிஷ் அரசால், அந்தக் காலத்தில் முதல் இந்திய நீதிபதி என்கிற அந்தஸ்தில் வைக்கப்பட்டது. அதற்குப் பின்னால் எந்த ஒரு பிராமணீய அல்லது அரசியல் கட்சியின் நோக்கம் இல்லை. தற்போதுகூட முத்துச்சாமி ஐயரின் சிலையால் எந்த ஒரு பதற்ற நிலையோ அல்லது ஜாதிய அடையாளமோ எழவில்லை. நீதிபதி முத்துச்சாமி ஐயரின் சிலையை அங்கிருந்து அகற்றினால்கூட எந்த ஒரு கலவரமும் ஏற்படப்போவதில்லை'' என்று கூறப்பட்டது.

÷ஏதோ சில காரணங்களுக்காக யாரையோ திருப்திப்படுத்துவதற்காக மீண்டும் இந்தக் கோரிக்கை எழுப்பப்பட்டு உயர் நீதிமன்றம், முழு கோர்ட் முடிவுக்கு எதிராக மீண்டும் ஒரு தலித் வக்கீல் பிரதிநிதியின் கோரிக்கையை வைத்து, மீண்டும் இது நிறைவேற்றப்பட்டு, டாக்டர் அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டுள்ளது.

 அம்பேத்கருக்கு சிலை திறக்கப்பட்டது ஒரு பிரச்னையே அல்ல. அம்பேத்கரை முன்னிறுத்தி நடக்கப்போகும் ஜாதி அரசியல் தான் பிரச்னை. இதர ஜாதித் தலைவர்களின் சிலைகளையும் உயர் நீதிமன்றத்தில் வைப்பதற்கான  கோரிக்கைகள், அது தொடர்பாகத் தூண்டப்படும் கலவரங்கள், சிலையை அவதூறில்லாமல் காப்பது போன்ற தலைவலிகள் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாமல், உயர் நீதிமன்ற நிர்வாகம் நடந்து கொண்டுள்ளது. மெரினா கடற்கரையில் உள்ளதுபோல உயர் நீதிமன்றத்திலும் பல கட்சி மற்றும் ஜாதியத் தலைவர்களின் சிலைகளுக்கான இடம் தேர்வு செய்வது முதல், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வரை இனி வாடிக்கை நிகழ்வுகளாகிவிடும்.

2006-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட பொதுநல வழக்கின் நோக்கமான, ""வேறுபாடுகள், அரசியல் அற்ற நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிமன்றப் பரிபாலனம்'' இல்லாமல் போகும். சிலைகள் இரும்புப் பாதுகாப்பு வேலியுடனும், போலீஸ் துணையுடனும் மெüனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அவலநிலை, அந்த மாபெரும் தலைவர்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கே தலைகுனிவு!

÷நாம் தலைவர்களை அவமானப்படுத்துவது என்று முடிவெடுத்திருக்கிறோம். இதன் விபரீத விளைவுகளை நீதித்துறையும். நீதி தேடி நாடிவரும் பொதுமக்களும் எதிர்கொள்வதைத் தவிர்க்க முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com