காலைச் சுற்றிய பாம்பு!

பனிபடர்ந்த மலைகளையும், வெப்பம் சிதறும் பாலைவனத்தையும் கொண்டு நீண்டு கிடப்பது இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதி. அசாதாரண அமைதியும், அவ்வப்போது காற்றைக் கிழித்துத் தோட்டாக்கள் சீறும் ஓசையும் அங்கே பழகிப் ப

பனிபடர்ந்த மலைகளையும், வெப்பம் சிதறும் பாலைவனத்தையும் கொண்டு நீண்டு கிடப்பது இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதி. அசாதாரண அமைதியும், அவ்வப்போது காற்றைக் கிழித்துத் தோட்டாக்கள் சீறும் ஓசையும் அங்கே பழகிப் போன காட்சியாகும்.

 எதிர்த் திசையிலிருந்து எவரும் ஊடுருவிவிடாமல் வேலி அமைத்து, அதில் மின்சாரம் பாய்ச்சி லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் இரவு-பகலாய் உறங்காமல் அங்கே காவலுக்கு நிற்பது, ஏறத்தாழ அறுபதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது. தேசத்தின் தலைவாசலில் பூட்டுக்கு மேல் பூட்டுப் போட்டுக் கண்ணிமைக்காமல் காவல் காத்து வருவது மிகச்சரியே.

 ஆனால், தேசத்தின் கொல்லைப்புறக் கதவுகளான தென்னிந்திய மாநிலங்களை எந்தக் கவலையுமின்றி அகலத் திறந்து வைத்திருக்கிறோமே, அதுதான் விளங்கவில்லை. நம் அலட்சியத்தின் பலனை அறுவடை செய்ய வலிமைமிக்க மற்றோர் அண்டை நாட்டு டிராகன் மிக அண்மையில் காத்திருக்கிறது என்பதே இன்றைய சுடும்  நிஜம்.   

 இலங்கையில் கடந்த முப்பதாண்டுகளாக நிலவிய உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தபோது,   தமிழக மீனவரின் துன்பங்கள் உள்ளிட்ட அனைத்துச் சிக்கல்களும் ஓய்ந்து விடுமென அனைவரும் எதிர்பார்த்தனர். ஏனென்றால், தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போதெல்லாம், அவர்கள் மீது தீவிரவாத சாயத்தை இலங்கை அரசு பூசி வந்தது. ஆனால், போர் முடிந்த பின்னரும் தமிழக மீனவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு வருவது நிற்கவில்லை. சிங்களக் கடற்படை மட்டுமல்லாமல், சிங்கள மீனவர்களும் நம் மீனவர்களைக் குண்டுவீசித் தாக்கும் அளவு துணிவுடன் நடந்து வருகின்றனர்.

 தெற்காசியமண்டல அரசியலை உற்று நோக்கி வரும் பார்வையாளர்களுக்கு இதன்மூலம் ஒரு செய்தி தெள்ளத் தெளிவாக விளங்க ஆரம்பித்துள்ளது. அதாவது, சின்னஞ்சிறு நாடான இலங்கை இத்தனை துணிச்சலோடு வெளிப்படையாக மோதுவதன் பின்னணியில் சக்தி மிக்க வேறு எவரோ உள்ளனர். அது இலங்கையில்  தளவாடங்கள் முதல் சிறைச்சாலைக் கைதிகள் வரை முதலீடு செய்து வரும் சீனாவே என்பது வெளிச்சமாகத் தொடங்கியுள்ளது. சீனா ஏன் தலையைச் சுற்றிக் கொண்டு தமிழகத்தின் வழியாக இந்தியாவுக்குள் மூக்கை நுழைத்து வருகிறது என்பதுதான் இப்போது அனைவரின் முன் உள்ள கேள்வி.

 உலக வல்லரசாக மாறுவதற்கு வெள்ளோட்டமாக ஆசியப் பிராந்தியத்தில் பலம் வாய்ந்த மேலாதிக்கச் சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள சீனா விரும்புகிறது. குறிப்பாகத் தெற்காசியாவில் சீனாவின் வல்லரசு கனவுக்குத் தடையாக இருக்கும் ஒரே நாடு, அதே பிராந்தியத்தில் ஜனநாயகப் பேரரசாகத் தழைத்து நிற்கும் இந்தியா. பல்வேறு குறைபாடுகளுக்கு இடையிலும் தெளிந்த ஜனநாயகம், கருத்துச்சுதந்திரம், பரவலான உரிமைகள் ஆகியவற்றோடு உலகின் மிகப்பெரிய சந்தையாகவும் பரந்து கிடக்கும் இந்தியா என்றைக்கும் தன் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருக்கும் என சீனா கணிக்கிறது. ஆனால், அறுபதுகளைப் போன்று  நேரடியாகத் தாக்காமல் வெவ்வேறு பாதைகளில் இந்தியாவைச் சுற்றி வளைக்கத் திட்டமிட்டு வருகிறது. அத்திட்டத்துக்கு முத்துமாலை எனப்பெயர் சூட்டி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

 இந்தியாவை நிலம்-நீர்-ஆகாயம் என அனைத்து மார்க்கத்திலும் தந்திரமாக முற்றுகையிட்டு முடக்குவதே முத்துமாலை. இதற்காகச் சீனாவின்  ஆயுத முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள், இந்திய எல்லையில் அமைந்திருக்கும் கிராமங்களோடு ரயில், சாலை மார்க்கமாக ஏற்கெனவே இணைக்கப்பட்டுவிட்டன.

 குறிப்பாக, அருணாசலப்பிரதேசத்தின் எல்லையில் உள்ள கிராமங்கள் முழுமையாகச் சீனாவின் முக்கிய ராணுவத்தளங்களோடு நேரடியாக இணைக்கப்பட்டுத் தயாராக உள்ளன.

 சீனாவின் இம்முற்றுகைத் திட்டத்துக்கு, இந்தியாவின் வடஎல்லைத் தெய்வமான பாகிஸ்தானின் பரிபூரண ஆசியும், ஒத்துழைப்பும் கிடைப்பதில் எந்த ஆச்சர்யமுமில்லை. இந்தியாவின் மேற்குப்பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தானின் துறைமுகங்கள், கிழக்கில்  வங்கத்துடன் ராணுவ உடன்பாடு என எல்லாப் பக்கத்திலும் முத்துமாலையின் ஆதிக்கம் நீள்கிறது. இந்தியாவின் மற்றோர் அண்டைநாடான நேபாளம், சீனாவின்  முழுக்கட்டுப்பாட்டுக்குள் செல்லத் தொடங்கி சில காலமாகிவிட்டது. மியான்மரிலும் சீனஆதரவுடன் பெரிய கடற்படைத்தளம் அமைக்கப்பட்டு வருகிறது. மிச்சமிருப்பது இந்தியாவின் தெற்கு முனை மட்டுமே. அதைக் குறிவைத்து இலங்கையின் அம்பாந்தோட்டையில் அதிநவீனத் துறைமுகத்தைச் சீனா அமைத்துள்ளது. அத்துடன், தமிழகக் கடற்கரைக்கு மிக அருகிலுள்ள இலங்கையின் வடக்குப்பகுதி நகரங்களில் புனரமைப்பு என்ற பெயரால் சீனா ஊடுருவி வருகிறது.

 எல்லாவற்றுக்கும் மேலாக, இலங்கைக்கு நாம் தானமாக அளித்த கச்சத்தீவில் ராணுவக்கோபுரம் அமைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் உலவுகின்றன. கடந்த முப்பதாண்டுகளாகத் தமிழர்களின் ரத்தத்தால் சிவந்து கிடந்த இலங்கை-தமிழகக்கடற்பகுதி, இப்போது சீனமுற்றுகையில் சிவப்பாகி வருகிறது என்பதே கசப்பான உண்மை.

 ராணுவரீதியாக சீனாவை எதிர்கொள்ள முற்பட்டால் அதற்காக நாம் தரும் விலை மிக அதிகம். அத்துடன் ராணுவரீதியான எந்த முன்முயற்சியும் இந்தியப் பொருளாதாரத்தை அதளபாதாளத்தில் சரிய வைத்து விடும் ஆபத்திருக்கிறது.

 முத்துமாலை என்ற பெயரில், பாரதத்தின் கழுத்தை இறுக்கக் காத்திருக்கும் சுருக்குக்கயிற்றை, சீனாவின் பாதையிலேயே சாமர்த்தியமாகச் சென்று சந்திப்பதே சிறந்தது. தென்பகுதிக்கடலில் ராணுவத்தை நிறுத்துவது, ஒத்திகைப்பயிற்சி, கடற்படையை வலிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எதுவும் இல்லாமலேயே இச்சிக்கலை நம்மால் சமாளிக்க முடியும். அதாவது, கடந்த சில ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் சேதுசமுத்திரத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதே, இப்பிரச்னையைத் தீர்க்கும் ஒரே வழிமுறையாகும்.

 உள்ளூர் அரசியல் லாப-நஷ்டக்கணக்குகள், குறுகிய கண்ணோட்டம், மதச்சாயம் ஆகியவற்றைத் தவிர்த்து விட்டுப்பார்த்தால், சேது சமுத்திரத்திட்டம் இந்தியாவுக்கு எவ்வளவு பெரிய பாதுகாப்புக் கேடயம் என்பது புரியும். இத்திட்டத்தை நிறைவேற்றினால் தென்னிந்தியாவின் வழியாக உள்ளே நுழைவதை எவரும் கனவுகூட காண முடியாது.  

 ஆனால், இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன் சேதுசமுத்திரத் திட்டவரைவில் சிறுமாற்றங்களைச் செய்வது அவசியமாகும். இப்போதுள்ள திட்டத்தின்படி சிறியரகக் கப்பல்கள் மட்டுமே அக்கால்வாயில் பயணிக்க முடியும். அதைப் பெரியரகக் கப்பல்களும் பயணம் செய்யும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். அத்துடன் சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் இதைச் செயல்படுத்தும் நவீனத் தொழில்நுட்ப வழிமுறைகளையும் சிந்திக்கலாம். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் தென்தமிழகத்தின் பொருளாதாரநிலை மேம்படும் என்பது மட்டுமே முந்தைய இலக்கு. ஆனால், இன்றுள்ள தெற்காசியச் சூழலில் இத்திட்டத்தை மேற்கொள்வதன் வழி இந்தியாவுக்கு நேரடியாகப் பயன்கள் ஏற்படும்.

 கால்வாய்ப்பகுதி உள்ள கடற்பகுதி முழுவதும் இந்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்துவிடும். கால்வாயில் பயணிக்கும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு தரும் அதேவேளையில் இலங்கையைச் சுற்றியுள்ள பகுதி முழுவதையும் நாம் கவசம்போல் மூடிக் கண்காணிக்கலாம்.

 அம்பாந்தோட்டையில் பலமில்லியன் டாலர்களைச் செலவிட்டு சீனா கட்டிவரும் துறைமுகத்துக்கும் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் முடக்கிவிட முடியும். ஏனென்றால், உலகநாடுகளின் கப்பல்கள் இலங்கை சென்று திரும்பி வரும் பயணச்சூழலைச் சேதுசமுத்திரப்பாதை அடியோடு மாற்றிவிடும்.

 இத்திட்டம், சீனாவை மையமாக வைத்து இலங்கை நடத்தும் அரசியல் நடவடிக்கைகளுக்குத் தரும் நேரடி எச்சரிக்கையாக அமையும். இலங்கையை அடக்கி வைப்பதன் மூலம், தன் பிராந்திய வல்லமையைத் தெற்காசிய மண்டலத்தில் இந்தியா தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியும்.

 தென்தமிழகத்தை மையமாக வைத்து தொழில்வளம், பொருளாதார ஏற்றம், கடல்வழிச்சுற்றுலா வர்த்தகம் போன்றவை உருவாகும். இதனால் தமிழகப்  பொருளாதாரநிலை மேம்படுவதுடன், இளைஞர்களுக்கும் பேரளவில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

 எல்லாவற்றுக்கும் மேலாக, கால்நூற்றாண்டு காலமாக மீனவச்சொந்தங்கள் அடைந்து வரும் எல்லையில்லாத் துன்பத்துக்கு விடிவு பிறக்கும். இத்திட்டத்தைக் காரணம் காட்டியே கச்சத்தீவை மீட்டு அல்லது நெடுங்காலக் குத்தகைக்கு எடுத்து சரிந்து கிடக்கும் நம் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பன்மடங்கு உயர்த்தலாம்.

இவ்வாறு இந்தியாவுக்கு நன்மை அளிக்கக்கூடிய சேதுக்கால்வாய்த் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நமக்கு உடனடியாகத் தேவையானது, ஒற்றுமை. இந்தியாவின் பாதுகாப்பை மனதிற்கொண்டு இவ்விஷயத்தைச் சிந்தித்தால், சீனா மட்டுமல்ல, தெற்குப்பகுதியினூடாக  இந்தியாவுக்குள் நுழைய நினைக்கும் எந்தநாட்டுக்கும் சேதுசமுத்திரமே சரியான பாடம் புகட்டும்.

 அரசியல் லாபங்களுக்காக சுற்றுச்சூழல் போன்றவற்றைக் காரணம் காட்டி இத்திட்டத்தைத் தொடர்ந்து எதிர்ப்போமானால் பவளப்பாறைகளை வேண்டுமானால் காப்பாற்றலாம். பாரதத்தைக் காப்பாற்ற இயலாது.

(கட்டுரையாளர்: பாரதிதாசன் மகளிர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com