மயிர் நீப்பின்...

ஐம்பதாண்டுகளுக்கு முன்பு ஒன்றுபட்டிருந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உயர் பதவியிலிருந்த ஒருவரின் சகோதரர் இழைத்து வந்த துன்பங்களைப் பொறுக்க முடியாத அவரது துணைவியார் சொன்ன சோகக் கதைகளைக் கேட்டு மனவே

ஐம்பதாண்டுகளுக்கு முன்பு ஒன்றுபட்டிருந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உயர் பதவியிலிருந்த ஒருவரின் சகோதரர் இழைத்து வந்த துன்பங்களைப் பொறுக்க முடியாத அவரது துணைவியார் சொன்ன சோகக் கதைகளைக் கேட்டு மனவேதனையடைந்து இந்திய தேசிய இயக்கத்திலும், பின்னர் பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதற்காக ஐ.சி.எஸ். பதவியைக்கூடத் தூக்கியெறிந்த ஓர் அற்புதமான மனிதர், அப் பெண்மணியின் துன்பங்களுக்கான தீர்வு ஏற்படும் வரை தனது வீட்டில் தங்கியிருக்க ஏற்பாடு செய்தார். பெண்மணிக்கு இருந்த குறைகளைக் கேட்டு, அவரைத் துன்புறுத்தி வந்த கணவரைக் (அவரும் கட்சி உறுப்பினர்தான்) கண்டிப்பதற்குப் பதிலாக, அப் பெண்மணிக்கு அடைக்கலம் கொடுத்த  மனிதர் ஒழுக்கக்கேடாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டி, அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கியது அக் கட்சித் தலைமை.

அண்மையில், கேரளத்தில் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்யும் ஒரு பெண், தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த கணவருடன் வாழ்ந்து வருகிறார்.அவருடைய  நடத்தை ஒழுக்கக்கேடானது என்னும் குற்றம்சாட்டி அவருக்குப் பல்வேறு வகையான தொல்லைகளைத் தந்து வந்த தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆண் ஆட்டோ ஓட்டுநர்களின் அடாவடித்தனத்தைக் கண்டனம் செய்த புகழ்பெற்ற மலையாள,ஆங்கில எழுத்தாளர் பால் ஸக்கரியா, சிபிஎம் தொண்டர்களால் தாக்கப்பட்டார்.

 நீண்ட இடைவெளியைக் கொண்டுள்ள இந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே (இவற்றுக்கிடையில் இன்னும் ஏராளமானவை உள்ளன) நிலப்பிரபுத்துவ, ஆணாதிக்க, ஜாதிய, தந்தமைக் (ல்ஹற்ழ்ண்ஹழ்ஸ்ரீட்ஹப்) கண்ணோட்டத்தை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் கட்சி, அந்தக் கண்ணோட்டத்திலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன.

ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் எந்தத் தொல்லையையும் - அது சொல்லளவிலான தொல்லையாக இருந்தாலும்கூட- சகித்துக் கொள்ள மாட்டோம், அந்தக் குற்றத்தைச் செய்பவர் கட்சித் தலைமையில் இருப்பவராக இருந்தாலும்கூட அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் விட மாட்டோம் என்னும் உரிமை கொண்டாடும் சிபிஎம் கட்சித் தலைமை, உ.ரா.வரதராசனைத் தற்கொலை செய்யத் தூண்டிய காரணங்களைப் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

உ.ரா.வரதராசனுக்கு அவரது கட்சியால் இழைக்கப்பட்ட அநீதிக்கும், அவமானத்துக்கும் தற்கொலை செய்து கொண்ட அந்தத் தோழர் கடந்த பிப்ரவரியில் பிரகாஷ் காரத்துக்கு எழுதிய கடிதம் சான்றாக உள்ளது. தில்லியிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்றில் வெளியிடப்பட்ட அந்தக் கடிதத்தின் பெரும் பகுதியிலுள்ள விவரங்களை இதுவரை சிபிஎம் கட்சித் தலைமையால் மறுக்க முடியவில்லை என்பதாலும்,அந்தச் செய்தியேடு நீண்ட பாரம்பரியம் கொண்டது என்பதாலும் அதில் வெளியிடப்பட்ட கடிதத்தின் நம்பகத்தன்மையைச் சந்தேகிக்க முடியவில்லை.

மாண்டுபோனவர் பாலியல் தொல்லை என்னும் குற்றத்தைச் செய்தவர் என்றும், குற்றம் செய்த கட்சித் தலைவர்களையோ, ஊழியர்களையோ தண்டிக்கும்போது அவர்கள் கட்சிக்கு வழங்கிய பங்களிப்பும் கருத்தில் கொள்ளப்படுகிறது என்றும் பிரகாஷ் காரத் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார். ஆனால், உ.ரா.வரதராசனின் கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள விவரங்கள், பிரகாஷ் காரத்தை முழுமையாக மறுதலிக்கின்றன. உ.ரா.வரதராசன் பிரதிவாதியாக மிக நாகரிகமான மொழியைக் கையாண்டு காரத்திடம் மன்றாடும் அந்தக் கடிதத்தில் உள்ள முக்கிய விஷயங்களை மட்டும் இங்கு காண்போம்:

2009 ஜனவரி 17-ம் தேதி இரவு பத்துமணியளவில் உ.ரா.வரதராசனுக்கு, சம்பந்தப்பட்ட பெண்ணின் செல்பேசியிலிருந்து ஒரு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வந்திருந்தது. இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. தொலைபேசியில் என்னை அழைப்பதையோ, குறுஞ்செய்திகளை அனுப்புவதையோ நிறுத்துங்கள். இல்லாவிட்டால் நான் போலீஸில் புகார் கொடுப்பேன். இந்த விஷயத்தை உ.ரா.வரதராசனுக்குத் தெரிந்த இரு பெண்மணிகளுக்குத் தெரிவிக்கப் போவதாகவும் அந்தக் குறுஞ்செய்தி கூறியது.

அந்தக் குறுஞ்செய்தியை அனுப்பியவர் அந்தப் பெண்மணியல்ல. மாறாக,அவரது செல்பேசியிலிருந்து அந்தச் செய்தியை அனுப்பியவர் உ.ரா.வரதராசனின் குடும்ப நண்பரும், சிவில் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரும் ஆவார்.

அந்த மூத்த வழக்கறிஞர் உ.ரா.வரதராசனுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், உ.ரா.வரதராசன் அந்தப் பெண்ணுக்குத் தனது செல்பேசி மூலம் அனுப்பிக் கொண்டிருந்த குறுஞ்செய்திகள் அனைத்தையும் தனது கணினியில் சேமித்து வைத்திருப்பதாகவும், உ.ரா.வரதராசன் தனது தவறான செய்கையைக் கைவிட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். பின்னர், அவரே இன்னொரு மின்னஞ்சலில், அந்தப் பெண் ஒழுக்கமுள்ளவராகத் தெரியவில்லை என்றும் தன்னைப் பொறுத்தவரை அந்தப் பிரச்னை செத்துப் போய்விட்டது என்றும் கூறியிருக்கிறார்.

2009 ஆகஸ்ட்டில்  உ.ரா.வரதராசன் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கிவிட்டதால் ஏற்பட்ட கோபத்தில் அவரது துணைவியார், கட்சியின் மாநிலச் செயலாளருக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், உ.ரா.வரதராசனிடமிருந்து திருமண விலக்குப் பெறப் போவதாகக் கூறியிருந்தார். ஆனால், உ.ரா.வரதராசன் இன்னொரு பெண்ணுக்குத் தந்து வந்ததாகக் கூறப்படும் பாலியல் தொல்லை (குறுஞ்செய்தித் தொல்லை) பற்றி எதையும் சொல்லவில்லை.

உ.ரா.வரதராசன், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பாலியல் தொல்லைகள் தந்து வந்ததாக 2009 செப்டம்பர் இறுதியில் அனைத்திந்திய மாதர் சங்கத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் (இவர்களில் உ.ரா.வரதராசனின் துணைவியாரும் ஒருவர்). கட்சியின் மாநிலச் செயலாளருக்கு மூன்று தனித்தனிப் புகார் கடிதம் அனுப்பினர். அந்த மூன்று பெண்களில் இருவர் அந்தக் குறுஞ்செய்தி விஷயம் தங்களுக்கு 2009 மே மாதம்தான் தெரியவந்தது எனக் கூறினர். கூறப்படும் சம்பவம் நிகழ்ந்தது 2009 ஜனவரியில். புகார் கடிதங்கள் அனுப்பியவர்களில் இருவர் அந்த விஷயம் தங்களுக்கு 2009 மே மாதம்தான் தெரியவந்தது என்று கூறினர். ஆனால் அவர்கள் புகார் கடிதம் அனுப்பியதோ 2009 செப்டம்பர் இறுதியில்தான்.

அந்த மூன்று புகார் கடிதங்களிலொன்று  உ.ரா.வரதராசன் மீது இரு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது: 1. அவர் தகாத குறுஞ்செய்திகளைச் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார் 2. தனது மனைவியைத் திருமண விலக்குச் செய்துவிட்டு, சம்பந்தப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அப் பெண்ணிடம் வாக்குறுதி தந்திருந்தார். ஆனால், மற்ற இரு புகார் கடிதங்களில் இரண்டாவது குற்றச்சாட்டு இருக்கவில்லை என்பதுடன், அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவே இல்லை.

2009 அக்டோபரில் உ.ரா.வரதராசன், அவரது துணைவியார் ஆகிய இருவரும் ஒருமித்து திருமண விலக்குப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. ஆனால், புகார் கடிதம் கொடுத்தவர்களில் ஒருவர், திருமண விலக்குச் செய்தால் அது கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்திவிடும், எனவே அந்த ஏற்பாட்டை ஒத்திவையுங்கள், உ.ரா.வரதராசன் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம் என்று உ.ரா.வரதராசனின் துணைவியாரிடம் சொல்லியிருக்கிறார்.

அந்தப் புகார் கடிதங்களின் அடிப்படையில் கட்சித் தலைமை நால்வர் அடங்கிய விசாரணைக் குழுவை அமைத்தது. புகார் அளித்தவர்களிலொருவர் அந்த விசாரணைக் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டதன் மூலம் நடுநிலையான விசாரணை என்னும் நியதி கேலிக்கூத்தாக்கப்பட்டது அந்த நால்வரும் ஒரு சமயம்கூட ஒன்றாக உட்கார்ந்து முடிவுகள் எடுக்கவில்லை. விசாரணைக் குழு உறுப்பினர்களில் ஒருவர் உ.ரா.வரதராசனிடம் சம்பந்தப்பட்ட புகார் குறித்து ஒருமுறை கூட குறுக்கு விசாரணை செய்யவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, (அ) பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாகச்        சொல்லப்படும் பெண்ணைச் சந்தித்து அவரிடமிருந்து எழுத்துபூர்வமான குற்றச்சாட்டு எதையும் பெறவில்லை. அந்தப் பெண்ணிடம்  தாங்கள் தொலைபேசியில்  இந்த விவரம் குறித்து, தொடர்பு கொண்டதாக விசாரணைக் குழு உறுப்பினர்கள் இருவர் கூறியதை ஏற்றுக்கொண்ட விசாரணக் குழுவினர் அனைவரும்,அந்தத் தொலைபேசி உரையாடலின்போது, உ.ரா.வரதராசன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் மறுத்தாரா, உறுதி செய்தாரா என்பதைச் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை. அந்தப் பெண் ஒருகாலத்தில் அனைத்திந்திய மாதர் சங்க உறுப்பினராக இருந்தார் என்னும் உண்மை அந்தப் புகார்க் கடிதங்களில் மூடி மறைக்கப்பட்டது. அந்தப் பெண் வரவழைக்கப்பட்டு விசாரணை செய்யப்படவில்லை.

உ.ரா.வரதராசன் மீது சொல்லப்பட்ட புகார்களுக்கான மூலகர்த்தாவாக இருந்த,சிவில் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரிடம் விசாரணை நடத்தப்படவில்லை என்பதோடு, அவருமே அந்தப் பிரச்னையிலிருந்து தன்னைக் கழற்றிக் கொண்டார். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் உ.ரா.வரதராசனுக்கும்

உடல்ரீதியான தொடர்பு இருந்ததே இல்லை என்றும், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் உத்தேசம் அவருக்கு இருக்கவில்லை என்றும் அந்த மூத்த வழக்கறிஞர் உ.ரா.வரதராசனின் துணைவியாருக்கு அனுப்பிய மின்னஞ்சலில்       கூறியிருக்கிறார்.

அவரும் உ.ரா.வரதராசனும் ஒருவருக்கொருவர் அனுப்பிக் கொண்டிருந்த மின்னஞ்சல்களின் நகல்களை உ.ரா.வரதராசன் அந்த விசாரணைக் குழுவிடம் தந்திருக்கிறார். ஆனால், அந்த மூத்த வழக்கறிஞர் சேமித்து வைத்திருந்ததாகச் சொல்லப்பட்ட உ.ரா.வரதராசனின் குறுஞ்செய்திகள் எதனையும்  விசாரணைக் குழுவால் அவரிடம் காட்ட முடியவில்லை. விசாரணைக் குழுவும் அவற்றைத் திரட்டுவதற்கான  எந்த முயற்சியும் செய்யவில்லை.

ஒரு குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்வதில் இருக்க வேண்டிய அடிப்படை நெறிகள், நியதிகள் எதையும் கடைப்பிடிக்காமலும், எவ்வித ஆதாரமில்லாமலும், அந்த விசாரணக் குழு, உ.ரா.வரதராசன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் கட்சியின் மாநிலத் தலைமை, உ.ரா.வரதராசனை அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்கியது.

பிரகாஷ் காரத்துக்கு உ.ரா.வரதராசன் எழுதிய கடிதம்,மேற்சொன்ன பொய்மைகளை எடுத்துக் காட்டி, விசாரணைக் குழுவின் தீர்ப்பையும் கட்சியின் மாநிலத் தலைமை அவருக்கு வழங்கிய தண்டனையையும் ரத்து செய்யுமாறு கேட்டிருந்தது. கட்சித் தலைமை பாரபட்சமாக நடந்து கொள்வதற்கு இரு எடுத்துக்காட்டுகள் தருகிறது. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஒருவர், மாவட்டச் செயலர் ஒருவர் ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வந்தபோது சம்பந்தப்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவை (உடல்ரீதியான) தொல்லைகள் என நிரூபிக்கப்பட்டன. ஆனால் அவர்கள் இருவரையும் கட்சி எச்சரித்ததோடு விட்டுவிட்டது.  உ.ரா.வரதராசன் மீது நடத்தப்பட்ட வழக்கு விசாரணையின் எல்லாக் கட்டங்களிலும் அவர் கலந்து கொண்டதுடன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தக்கபடி எடுத்துக் காட்டியிருக்கிறார். அப்படியிருந்தும் வரதராசனின் வாதங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.

மானம் வரப் பெறின் உயிர் நீக்க முடிவு செய்தவரைத் தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டிருக்கின்றன அவரது கட்சித் தலைமையின் அறிக்கைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com