நேரங்கெட்ட நேரத்தில்...

ஒரு வழியாக எம்.பி.க்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டது. எம்.பி.க்களின் ஊதியம் உயர்த்தப்படுவது இது முதன்முறை அல்ல. ஆனால், இந்த முறை அவர்களின் ஊதியத்தை உயர்த

ஒரு வழியாக எம்.பி.க்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டது. எம்.பி.க்களின் ஊதியம் உயர்த்தப்படுவது இது முதன்முறை அல்ல. ஆனால், இந்த முறை அவர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியது. பத்திரிகைகளும், ஊடகங்களும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டு விவாதங்களையும் எழுப்பின. ஆனாலும் எம்.பி.க்கள் பிடிவாதமாக இருந்து தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொண்டுள்ளனர். வழக்கம்போல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று இதற்கான மசோதா நிறைவேறியது.

   தங்களுடைய ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று பலத்த குரலில் கோரிக்கை வைத்த எம்.பி.க்கள், ஊதியத்தை 500 சதவிகிதம் உயர்த்த வேண்டும் என்றும், ஒவ்வோர் எம்.பி.க்கும் ஊதியம் மற்றும் அலவன்சுகள் சேர்த்து | 80,001, அதாவது இந்திய அரசின் செயலர்களின் ஊதியமான | 80,000-த்தைவிட ஒரு ரூபாயாவது கூட இருக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத், குழந்தைகள் பள்ளிகளில் நடத்துவது போல மாதிரி நாடாளுமன்றத்தையே கூட்டி பிரசாரம் செய்தார்.

   இந்தப் பிரச்னையை முன்வைத்து லாலு பிரசாத் யாதவும், முலாயம் சிங் யாதவும் சேர்ந்துகொண்டு கிட்டத்தட்ட ஒரு வாரம் நாடாளுமன்றத்தை சரிவர இயங்கவிடாமல் செய்தனர். எந்த ஒரு விவகாரமும் நன்கு அலசி ஆராயப்பட்ட பின்னரே, மத்திய அமைச்சரவையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். எம்.பி.க்கள் ஊதிய உயர்வு விவகாரம் மத்திய அமைச்சரவையின் கவனத்துக்கு வந்தபோது பல்வேறு அமைச்சர்களும் தங்களது கருத்து வேறுபாடுகளை வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை பிரதமர் மன்மோகன் சிங் கிடப்பில் போட்டார்.

   ஆனால், மூன்று நாள்களுக்குப் பிறகு மீண்டும் இவ்விவகாரம் அமைச்சரவையின் கவனத்துக்கு வந்தது. முதல் முறை வந்தபோது அமைச்சரவை எந்த முடிவும் எடுக்காததால், இந்த விஷயத்தை லாலுவும் முலாயமும் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு பெரிதுபடுத்திப் பேசத் தொடங்கினர். இறுதியில் எம்.பி.க்களின் வற்புறுத்தலுக்கு மத்திய அரசு அடிபணிந்துவிட்டது. ஜாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை எம்.பி.க்கள் எப்படி வழிக்குக் கொண்டுவந்தார்களோ அதேபோல இதிலும் செயல்பட்டு வெற்றிகண்டனர்.

   கடந்த சில மாதங்களாக இருக்கும் இடம் தெரியாமல் இருந்த லாலுவும், முலாயமும் மக்கள் மத்தியில் பேசப்படும் வகையில் ஏதாவது நடக்காதா என்று காத்திருந்தனர். எம்.பி.க்கள் ஊதிய உயர்வு கோரிக்கை எழுந்ததும் இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

   எம்.பி.க்களின் ஊதியத்தை அவசரம் அவசரமாக உயர்த்த வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் இப்போது நம்முன் எழும் கேள்வி. அத்தியாவசியப் பண்டங்களின் விலைகள் உயர்ந்துள்ளன. பெட்ரோல், கெரசின், சமையல் எரிவாயு என அனைத்து எரிபொருள்களின் விலையும் உயர்த்தப்பட்டு சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிதிச் செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறிவரும் தற்போதைய நிலையில், எம்.பி.க்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து அதில் வெற்றிபெற்றுள்ளது வியப்பை அளிக்கிறது.

   தற்போதைய சூழ்நிலையில் எம்.பி.க்களின் ஊதியம் | 16,000 என்பது மிகக் குறைவுதான். சமீபகாலத்தில் எந்த ஒரு தொழிலில் அல்லது பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளுக்கும் ஊதியம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால், எம்.பி.க்களுக்கு ஊதியம் தவிர, தொகுதி அலவன்ஸ், அலுவலக செலவினம், இலவச தொலைபேசி, தில்லியில் வீடு, விமானத்தில் மனைவியுடன் சென்றுவரும் சலுகை, கார் வாங்க வட்டியில்லாக் கடன் என பல சலுகைகள் அவர்களுக்குக் கிடைக்கின்றன. மக்களவை உறுப்பினராக இருந்தால் தில்லியில் ஓர்  அலுவலகத்தையும், தனது தொகுதியில் ஓர் அலுவலகத்தையும் ஏற்படுத்தி அவர்கள் செயல்பட வேண்டியுள்ளது. அடிக்கடி தங்கள் தொகுதிக்கு அவர்கள் வந்துசெல்ல வேண்டியுள்ளது என்பதும் உண்மைதான்.

   இன்றைய சூழ்நிலையில் மத்திய அமைச்சர்களும், எம்.பி.க்களும் தில்லியில் உள்ள பங்களாக்களில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். எம்.பி.க்களுக்கு கைநிறைய ஊதியம், அலவன்சுகள் வழங்கப்படுகின்றன. மேலும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக்கூட இதுபோன்ற வசதிகள் செய்துகொடுக்கப்படுவது இல்லை. அப்படியிருக்கையில் இவர்களுக்கு ஏன் ஊதிய உயர்வு என்று பெரும்பாலானவர்கள் வாதிடுகின்றனர்.

   நல்லதோ, கெட்டதோ தில்லியில் உள்ள சொகுசு பங்களாக்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கொடுக்காமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான எம்.பி.க்களுக்கு கொடுப்பது சரியானதுதான் என்று சொல்லலாம். இந்த இடங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டால் எவ்வளவு ஆனாலும் அதைக் கொடுக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த பங்களாக்களை எம்.பி.க்களுக்கு கொடுப்பதா அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுப்பதா என்று பார்த்தால் எம்.பி.க்களே பரவாயில்லை என்று சொல்லத் தோன்றும். எம்.பி.க்கள் என்ன தவறு செய்தாலும் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லியாக வேண்டும். ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை அவர்கள் மக்களைத் தேர்தல் மூலம் சந்தித்தாக வேண்டும். அவர் சரியாகச் செயல்படவில்லை எனில் மக்கள் ஒதுக்கிவிடுவார்கள். ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் அப்படியல்ல; எதையும் பணத்தால் சாதித்துவிட முடியும் என நினைப்பார்கள்.

  எம்.பி.க்களுக்கு ஊதிய உயர்வு கோரிக்கையையும், அதைச் செயல்படுத்திய முறையையும் பலரும் விமர்சித்து வருகின்றனர். அரசியல் என்பது சாக்கடை என்று சொல்வார்கள். அது உண்மைதான் போலும்! பணக்காரர்களும், கிரிமினல்களுமே அரசியலில் நுழைந்து எம்.பி.க்களாகின்றனர். இவர்களுக்கு மக்கள் பிரச்னையைப் பற்றி கவலையில்லை. தங்கள் காரியம் சிக்கலில்லாமல் நிறைவேறுகிறதா என்பதுதான் முக்கியம்.

   இது உண்மைதான். இன்று நாட்டில் உள்ள எம்.பி.க்களில் பாதிப் பேருக்கு மத்திய அரசு வழங்கும் இந்த ஊதியம் ஒரு பொருட்டல்ல. இவர்களிடம் இருக்கும் பணத்தையும், இவர்கள் வேறு வழிகளில் சம்பாதிக்கும் பணத்தையும் ஒப்பிட்டால் எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஒன்றும் பெரிதல்ல. இன்னும் சொல்லப்போனால் எம்.பி.க்களில் பலர் மகாராஜாக்கள் போல் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

  எம்.பி.க்களுக்கு ஊதியத்தை உயர்த்துவது தொடர்பான சர்ச்சை எழுந்ததிலிருந்து இது குறித்து பரிசீலிக்க எம்.பி.க்கள் அல்லாத ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்; புதிய கணக்கீட்டு முறையை வகுக்க வேண்டும் என்ற கருத்து வலுத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் எம்.பி.க்களில் சிலர்கூட இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளனர். இதை மத்திய அரசு ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும்.

   நாடாளுமன்றத்தில் சில துறைகள் பற்றி விவாதிப்பதற்காக குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இதில் இடம்பெற்றுவிட வேண்டும் என்று சில எம்.பி.க்கள் துடிக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட துறைக்கான குழுவில் இடம்பெற அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சில சமயங்களில் சர்ச்சைகளும், முரண்பாடுகளும் ஏற்படுகின்றன. இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.

   பாதுகாப்புத் துறைக்குத் தேவையான தளவாடங்கள் விற்பனை தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு எம்.பி., பாதுகாப்புக் கொள்கையை வகுப்பதற்கான பாதுகாப்புக் கமிட்டியில் இடம்பெற அனுமதிக்கப்படுகிறார். விமானப் போக்குவரத்தில் ஈடுபாடுள்ள மற்றோர் எம்.பி., விமானப் போக்குவரத்து தொடர்பான கமிட்டியில் இடம்பெறுகிறார். இதன் மூலம் அவர்கள் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் கொள்கையில் மாற்றம் கொண்டுவர முயலலாம். இதில் ரகசியம் ஒன்றும் இல்லை; ஆனால், இதைத் தடுக்காமல் எப்படி அனுமதிக்கிறோம் என்பதுதான் கேள்வி.

   மக்கள் பிரச்னையில் எம்.பி.க்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை என்ற புகாரும் உள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு முக்கிய விஷயம் குறித்து காரசாரமாக விவாதம் நடந்துகொண்டிருக்கும்போது அதில் பெரும்பாலான எம்.பி.க்கள் கலந்துகொள்ளாமல் இருக்கைகள் காலியாகவே உள்ளன.

  நாட்டு மக்களைப் பற்றியும் அவர்களது பிரச்னைகள் பற்றியும் நமது எம்.பி.க்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், இந்த தருணத்தில் தங்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்திருக்க மாட்டார்கள். எம்.பி.க்கள் தங்கள் நலனில் மட்டுமே அக்கறை செலுத்தி வருகிறார்கள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளினால் அவதிப்பட்டு வரும் நம்மைக் கண்டுகொள்வதில்லை என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டு வருகிறது. இது தொடருமானால், தேர்தல் வரும்போது அவர்களை மக்கள் புறக்கணிக்கத் தயங்கமாட்டார்கள். இதை எம்.பி.க்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com