காங்கிரஸில் கருத்து மோதல்

சமீபத்தில் பத்திரிகை ஆசிரியர்களிடத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், சில மாதங்களாகத் தனக்கு மனநிம்மதி இல்லாமல் இருந்ததைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். மத்திய அரசுக்கும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட

சமீபத்தில் பத்திரிகை ஆசிரியர்களிடத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், சில மாதங்களாகத் தனக்கு மனநிம்மதி இல்லாமல் இருந்ததைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். மத்திய அரசுக்கும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துவருவதைத்தான் அவர் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறார். வெளிப்படையாக இதை அவர் மறுத்தாலும் உண்மை அதுதான்.

  பிரதமர் பதவியைத் துறக்கும் எண்ணம் தனக்கு எப்போதும் இல்லை என்று, கடந்த மூன்று மாதத்தில் இரண்டாவது முறையாகத் தெளிவுபடுத்தியுள்ளார் மன்மோகன் சிங். சோனியா காந்தியின் நல்லெண்ணத்தைப் பெற்றவர். 2009-ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேராத, பிரதமர் பதவிக்கு ஏற்றவர் என்று அனைவராலும் சொல்லப்பட்டவர். அவர் இப்போது அப்படிப் பேசி வருவதன் காரணம் என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை அவர் பதவி விலக வேண்டும் என்று யாராவது வற்புறுத்தி வருகிறார்களா என்பதும் தெரியவில்லை.

   காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குப் பின்னரோ அல்லது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் புதுதில்லி வருகைக்குப் பின்னரோ பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகக்கூடும் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. 2012-ல் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு, ராகுல் காந்திக்கு வழிவிட்டு, பிரதமர் பதவியிலிருந்து  மன்மோகன் விலகிவிடுவார் என்ற பேச்சும் பரவலாக உள்ளது. இந்த நிகழ்வுக்குப் பிறகு பதவி விலகச் சொல்லிவிடுவார்கள் என்று மன்மோகன் சிங்கே நினைக்கிறாரோ என்னவோ?

   எனினும் தமது பதவியை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது என்று மன்மோகன் நினைக்கிறார் போலும்! அப்படிச் செய்வதால் அவர் இழக்கப்போவது ஒன்றும் இல்லை. பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என்று சொல்லிவரும்  அதேவேளையில் மத்திய அமைச்சரவையில் ஒருங்கிணைப்பு இல்லை; தலைக்குத் தலை தோன்றியதைப் பேசி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் சிங் மறுத்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால், நேரு, இந்திரா ஆட்சிக் காலத்தைவிட இப்போது அமைச்சரவைக் குழுவினர் தனக்கு நன்கு ஒத்துழைப்புத் தருவதாக அவர் கூறிவருகிறார்.

   முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, தனது அமைச்சரவை சகாவான சர்தார் வல்லபாய் படேலுக்கு தினசரி கடிதம் எழுதியுள்ளதை மன்மோகன் சுட்டிக்காட்டியுள்ளார். பல்வேறு பிரச்னைகள் குறித்து நேருவுக்கு, படேல் கடிதம் எழுதியதுண்டு. அதற்கு நேருவும் பதில் கடிதம் எழுதியுள்ளார். இப்படி மூத்த தலைவர்கள் கடிதப் பரிமாற்றம் செய்துகொண்டு, தங்கள் கருத்துகளை வலியுறுத்தியது நல்ல சிந்தனைதான். கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்திருந்தனர்.

    இந்த கடிதப் பரிமாற்ற விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும். நேருவும், படேலும் பலமுறை கடிதங்கள் எழுதி பரிமாற்றம் செய்துகொண்ட போதிலும், ஒருமுறை இவர்களில் ஒருவர் எழுதிய கடிதம் பத்திரிகைகளில் வெளிவந்துவிட்டது. இதற்கு இருவருமே ஆட்சேபம் தெரிவித்தனர்.

    இதேபோல முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும், துணைப் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கும் அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்பட்டதுண்டு. இதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டதும் உண்டு. ஆனால், எதிர்ப்புகளைத் தாங்கிக்கொள்ள முடியாத இந்திரா காந்தி, எதிரிகளை இருக்குமிடம் தெரியாமல் செய்து யாருமே வெல்லமுடியாத தலைவராக இருந்தார்.

    ஒவ்வொரு பிரதமரிடமும் அதாவது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக  இருந்தாலும் சரி, அவர்களிடம் பிடிவாதம் இருந்துவந்தது, பிரச்னைகள் இருந்துவந்தன. பிரதமரிடமே சர்ச்சையில் ஈடுபட்ட தலைவர்களும் உண்டு. ஆனால் நேருவும், இந்திராவும் பிரதமராக இருந்ததைவிட தனது ஆட்சி ஒன்றும் சோடையில்லை என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். தாம் விட்டுக்கொடுத்து இணக்கமாகச் செயல்படுவதை யாரும் பலவீனமாகக் கருதிவிட வேண்டாம் என்கிறார்.

    தமது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மூத்த அமைச்சர்கள் சிலரைக் குறிவைத்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தாக்கிப் பேசும்போது, அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து வருகிறார் பிரதமர் மன்மோகன் சிங். அமைச்சர்களை கட்சித் தலைவர் விமர்சிப்பதில் தவறு இல்லை; இதனால் கட்சிக்கும் ஆட்சிக்கும் மிகப்பெரிய இடைவெளி ஏற்படுவதாகக் கூறுவது தவறு என்பது மன்மோகனின் கருத்து.

    மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செயல்படும் விதத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கடுமையாகக் குறைகூறிப் பேசியபோது, சிதம்பரம் செயல்படும் விதம் சரியானதுதான் எனப் பாராட்டினார் மன்மோகன் சிங். மேலும் சிதம்பரம் சிறப்பாகச் செயல்படுகிறார்; அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனது ஆதரவும், ஒத்துழைப்பும் அவருக்கு உண்டு என்கிறார் பிரதமர்.

     சமீபத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்திப் பேசியபோது, சுற்றுச்சூழல் பாதிப்பு கவலைதரும் அம்சம் என்றாலும், வறுமை ஒழிப்பில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று அவருக்கு சாந்தமாகப் பதிலளித்துள்ளார் பிரதமர். சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் ஜெய்ராம் ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஜெய்ராம் ரமேஷ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து இந்திரா காந்தி கூறியிருந்த கருத்துகளை உள்ளடக்கிய புத்தகத்தைத் தொகுத்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரிசா மாநிலம், நியமகிரியில் பழங்குடியினர் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி பேசிய அதேநேரத்தில், அந்த மாநிலத்தில் பாக்ûஸட் வெட்டியெடுப்பதற்கான லைசென்ஸ், வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்படமாட்டாது என்று பிரதமர் மன்மோகன் தெரிவித்தார். இதிலிருந்து அவர் முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டு வருவது தெரிகிறது.

   அரசின் கொள்கை விஷயங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்தியதன் மூலம், நிர்வாக விஷயத்தில் உச்ச நீதிமன்றம் குறுக்கிடக்கூடாது என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார் பிரதமர். அதேசமயம்,  சேமிப்புக் கிடங்குகளில் உணவுதானியங்கள் எலி கடித்து வீணாகிறது என்பதற்காக இலவசமாக விநியோகிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  இந்திய உணவுக்கழகக் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள டன் கணக்கிலான உணவு தானியங்கள் எலிகளுக்குத்தான் உணவாகின்றன. நாட்டில் எத்தனையோ ஏழை மக்கள் உள்ளனர். அவர்களுக்கு இதை இலவசமாக விநியோகிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு பொதுநல வழக்கில் தீர்ப்புக் கூறியிருந்தது.

 இதையடுத்து மத்திய வேளாண் மற்றும் உணவுத்துறை அமைச்சர் சரத் பவார், ""உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது யோசனையே தவிர உத்தரவு அல்ல'' என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, ""இது ஆணைதான்; யோசனை அல்ல'' என்று உச்ச நீதிமன்றம் விளக்கம் கூறியிருந்தது. இந்த நிலையில் பவாருக்கு ஆதரவாகப் பிரதமர் மன்மோகன் சிங் மேற்கண்ட கருத்துகளைக் குறிப்பிட்டிருந்தார்.

   மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் என்ன பேசினாலும் அதை பிரதமர் மன்மோகன் சிங் ஆதரித்துவந்தார். ஆனால், கல்வி தீர்ப்பாய மசோதாவை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்று கபில் சிபல் முயன்றபோது அது நடக்கவில்லை. இந்த மசோதாவுக்கு காங்கிரஸôர் சிலரே எதிர்ப்புத் தெரிவித்ததுதான் காரணம்.

   இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது மத்திய அரசில் பிரதமர் மன்மோகன் சிங் கோஷ்டி, சோனியா காந்தி கோஷ்டி என இரு கோஷ்டிகள் தனித்தனியாகச் செயல்பட்டு வருவது போலத் தோன்றும். ஆனால், உண்மையில் அப்படியேதும் இல்லை. ஏனெனில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டு வருபவர்களை சோனியா அவ்வப்போது கண்டித்து வருகிறார். கட்சிக்குள் பிளவுகள் ஏதும் இல்லை. கொள்கை முடிவு எடுப்பதில் காங்கிரஸின் நிலை என்ன என்பதில்தான் சச்சரவு.

   தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், மகளிர், இளைஞர்கள் யாராக இருந்தாலும் சரி, காங்கிரஸ் அவர்களுக்கு விரோதி அல்ல என்பதை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் நிலைநிறுத்த முயன்று வருகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான கட்சிதான் காங்கிரஸ் என்பதை நான்காவது முறையாக கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோனியா காந்தி மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார்.

  தேசிய ஆலோசனைக் குழுவை மாற்றியமைக்க சோனியா முடிவு செய்ததிலிருந்து மத்திய அரசை ஒரு குறிப்பிட்ட திசையில் கொண்டு செல்ல அவர் விரும்புகிறார் என்பது தெரிகிறது. ஆட்சியில் தொய்வு ஏற்படும்போதெல்லாம், அதை நேரடியாகக் கண்டிக்காமல் மறைமுகமாக சில நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார். உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றும் விஷயத்தில் தேசிய ஆலோசனைக் குழுவுக்கும் அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. ஆனால், இந்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் சோனியா.

   எந்த ஒரு விஷயமானாலும் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது புதிது அல்ல; ஆனால், இதன் காரணமாக கட்சியிலும் ஆட்சியிலும் பிடி தளர்ந்துவிடக்கூடாது என்பதுதான் முக்கியம். நாட்டை எதிர்நோக்கியுள்ள சவால்களைச் சந்திக்க வேண்டுமானால், சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் கைகோத்து ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com