முடிவெடுக்காமல் இருப்பதும் நல்ல முடிவுதான்!

அயோத்தி ராமஜென்மபூமியில் அமைந்துள்ள சர்ச்சைக்கிடமான இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்

அயோத்தி ராமஜென்மபூமியில் அமைந்துள்ள சர்ச்சைக்கிடமான இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், அயோத்தி வழக்கின் தீர்ப்பு வரும் வியாழக்கிழமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த வெள்ளிக்கிழமையே இந்தத் தீர்ப்பு வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், தீர்ப்புக்கு முதல்நாள் உச்ச நீதிமன்றத்தில் ரமேஷ் சந்திர திரிபாதி என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டதால், தீர்ப்பை ஒத்திவைக்குமாறு அலாகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந் நிலையில் மீண்டும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டதால் அது செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆனால், அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

 அயோத்தி வழக்கில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் நிலையில் இருந்தபோது, உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வெளியிடத் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து தீர்ப்பு வழங்க நான்கு வகையான சாத்தியக்கூறுகள் இருந்தன.

 இந்த வழக்கு தொடர்பாக இரு நபர் கொண்ட நீதிபதிகள் பெஞ்சில் கருத்து வேறுபாடு நிலவியதை அடுத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பை 28-ம் தேதிக்குத் தள்ளிவைத்தது. இந்த விவகாரத்தில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகாண வேண்டும் என்ற கருத்தில் நீதிபதி எச்.எல். கோகலே இருந்தார். ஆனால், இந்த வழக்கில் நீண்டகாலமாக எந்த சுமுக முடிவும் ஏற்படவில்லை. எனவே, தீர்ப்பை உடனடியாக வழங்கிவிட வேண்டும் என்ற கருத்தில் நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் இருந்தார். இதையடுத்து, தலைமை நீதிபதி தலைமையிலான புதிய பெஞ்ச், தீர்ப்புக்குத்  தடைவிதிக்கக் கோரும் மனுவை செப். 28-ல் விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

 அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் விரும்புகிறது. பாபர் மசூதி செயல் கமிட்டி உள்ளிட்ட சில அமைப்புகளும் இதே கருத்தைக் கொண்டுள்ளன. கடந்த காலங்களில் அயோத்தி விவகாரத்தை வைத்து அரசியல் பண்ணியதில் எந்த உருப்படியான பலனும் ஏற்படவில்லை. தீர்ப்பு வெளியானாலாவது அரசியல் பண்ண தங்களுக்குப் புதுவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர்.

 இனிமேலும் தீர்ப்பை ஒத்திவைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வருகிற 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தடை கோரியதன் நோக்கம் தோல்வி அடைந்துவிட்டது எனலாம். கடந்த பல ஆண்டுகளாக தங்கள் நிலையிலிருந்து விட்டுக் கொடுக்காத நிலையில், இருதரப்பினரும் மீண்டும் பேச்சு நடத்தி சுமுகத்தீர்வுகாண வேண்டும் என்பது அநேகமாக இயலாத காரியமாகும். எனினும், தில்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளதால் அதுவரை தீர்ப்பைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.

 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் குளறுபடி, தில்லி ஜும்மா மசூதி அருகே சமீபத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. இந்நிலையில், தீர்ப்பு வெளிவந்தால் நாட்டில் வகுப்பு மோதல் உருவாகலாம் என்பதால் இந்த நேரத்தில் தீர்ப்பு வெளியாவது சரியல்ல என்ற கருத்தில் மத்திய அரசு உள்ளது.

 அயோத்தி விவகாரம் முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது போன்ற நிலை இப்போது இல்லை. தீர்ப்பு என்னவாக இருந்தாலும் போராட்டம் தேவையில்லை என்ற கருத்தில் பா.ஜ.க.வும், சங்கப் பரிவாரங்களும் உள்ளன. தீர்ப்பு வெளியானால் அது எந்தவிதத்தில் எதிரொலிக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

 ஒரு கட்டத்தில் தீர்ப்பு பற்றிக் கவலைப்படாமல் இருந்த மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் தீர்ப்பு வெளியானால் என்ன நடக்குமோ என்று சற்று கவலையுடன் இருக்கிறது. இதனால், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கருத இடமுள்ளது.

 காஷ்மீரில் தொடரும் வன்முறை, மாவோயிஸ்டுகள் பிரச்னை, தீவிரவாதிகள் அச்சுறுத்தல் என பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வரும் நிலையில், அயோத்தி தீர்ப்பு மூலம் மேலும் ஒரு பிரச்னை வெடிக்க வேண்டுமா என்ற கருத்தும் மத்திய அரசிடம் உள்ளது. நாட்டில் ஓரளவு நிலைமை சீரான பிறகு தீர்ப்பை வெளியிட்டால் நல்லது என்ற கருத்தும் மத்திய அரசிடம் உள்ளது.

 சரி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் முடிந்த பிறகு தீர்ப்பு வெளியாகலாம் என்றால், தசரா பண்டிகை, தீபாவளி உள்ளிட்ட விழாக்காலங்கள் வருவதாலும் அடுத்து நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், அதைத் தொடர்ந்து ஜனவரியில் குடியரசு தினம் வரும் சூழ்நிலையில் இது சரிப்பட்டு வருமா என்ற கருத்தும் பரவலாக உள்ளது. இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண காலஅவகாசம் அளிக்கலாம் என்று நீதிபதிகள் கருதும்பட்சத்தில் சில நாள்கள் கழித்து இப்பிரச்னை மீண்டும் தலைதூக்கக்கூடும்.

  தீர்ப்பைச் சிறிதுகாலம் ஒத்திவைக்கலாம் எனில், இந்த வழக்கை விசாரித்து வரும் மூன்று நீதிபதிகளில் ஒருவரான தரம்வீர் சர்மா அக்டோர் மாதம் 1-ம் தேதி ஓய்வுபெறுகிறார். இதற்கு ஒரே வழி அவருக்கு கால நீட்டிப்பு வழங்குவதுதான். அவருக்குப் பதிலாக புதிய நீதிபதி நியமிக்கப்பட்டால், இந்த வழக்கு விசாரணையை மீண்டும் முதல் கட்டத்திலிருந்து நடத்த வேண்டியிருக்கும். தீர்ப்பு வெளியாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகலாம்.

 தீர்ப்பு வெளியாவது தாமதமாகி 2014 பொதுத் தேர்தலுக்கு முன் வெளியாகும் பட்சத்தில் அது தங்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் என்று நாட்டின் முக்கிய அரசியல் கட்சியான காங்கிரஸ் நினைக்கிறது. 80-களிலும், 90-களிலும் அயோத்திப் பிரச்னையை அரசியலாக்கித்தான் பா.ஜ.க. இதர மாநிலக் கட்சிகளுடன் கைகோத்து காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுகட்டியது. மீண்டும் அதுபோன்ற சூழ்நிலை ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை. அதேசமயம் தீர்ப்பு, தங்களுக்கு எதிராக இருக்கும்பட்சத்தில் பாஜகவை ஓரங்கட்டிவிட்டு ராமர் ஆலயப் பிரச்னையை மீண்டும் கிராமங்களுக்குக் கொண்டு செல்ல விசுவ ஹிந்து பரிஷத், சங்கப்பரிவாரங்கள் உள்ளிட்ட அமைப்புகள் முற்படலாம்.

  ஒருவேளை தீர்ப்பு உடனடியாகவோ அல்லது சிறிது காலதாமதமாகவோ வெளியாகும் பட்சத்தில் ஏதாவது ஓர் அரசியல்கட்சியோ அல்லது அமைப்போ அலாகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடும். அயோத்தியில் சர்ச்சைக்கிடமான இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் உள்ளன. தீர்ப்பை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக வழக்குத் தொடுத்துள்ள சுன்னி வஃக்ப் வாரியத்துக்குச் சாதகமாகத் தீர்ப்பு இருந்தால், பாபர் மசூதியைக் கட்டியது மீர் பாகி. எனவே, அந்த இடம் எங்களுக்குத்தான் சொந்தம் என்று ஷியா தரப்பினர் மேல்முறையீடு செய்யலாம். அதாவது ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்னை ஷியா-சுன்னிகளுக்கு இடையிலான பிரச்னையாகவும் உருவெடுக்கக்கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து தீர்ப்பு வெளிவர மேலும் சில ஆண்டுகள் ஆகலாம். தீர்ப்பு எதுவானாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள புதிய தலைமுறை உருவானால்தான் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும்.

 ஒரு பிரச்னையில் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதே ஒரு முடிவுதான் என்பார் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ். அதுபோல சில விஷயங்களில் முடிவு எடுக்காமல் இருப்பதும்கூட நல்ல முடிவுதான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com