மோதல் சாவு தேவைதானா?

சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் ஆல்வின் சுதன் என்ற காவல்துறை சார்பு ஆய்வாளர் சில நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து கொலையாளிகள் பிரபு, பாரதி ஆகியோர் காவல்துறையால் "என்கவுண்டர்' செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் ஆல்வின் சுதன் என்ற காவல்துறை சார்பு ஆய்வாளர் சில நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து கொலையாளிகள் பிரபு, பாரதி ஆகியோர் காவல்துறையால் "என்கவுண்டர்' செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையைத் தொடர்ந்து கொள்ளையர்கள் காவல்துறையினரால் என்கவுண்டரில் மரணமடைந்திருக்கிறார்கள்.

இதைப்போன்று கோவையை உலுக்கிய இரட்டைக் கொலைகள் அதைத் தொடர்ந்து கொலையாளி ஒருவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இந்தச் சாவு குறித்து பொதுமக்களிடம் துளியும் எதிர்ப்பு இல்லை என்பதும் தமிழகத்தின் பல இடங்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்கவுண்டர்/மோதல் சாவு தேவையா? அது எதற்காக, யார்மீது என்ற கேள்விகளுக்கு விடை தேடும்போது கடந்த காலத்தைப் புரட்டிப் பார்க்கும் அவசியம் ஏற்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு சீவலப்பேரி பாண்டியின் என்கவுண்டர் கொலை பரபரப்பாகப் பேசப்பட்டு பின்பு திரைப்படமானது. எப்போதாவது அபூர்வமாக நடக்கும் இதுபோன்ற என்கவுண்டர்கள் கதையாகிப் பின்பு திரைப்படங்களாகியிருக்கின்றன.

ஆனால் சமீபகாலத்தில் இந்த என்கவுண்டர்கள் அதிக அளவில் நடப்பதன் காரணம் என்ன? அதிகரித்து வரும் குற்ற விகிதமும் குற்றவாளிகளுடன் காவல்துறை கைகோக்கும் தன்மையும், புலன் விசாரணையில் காவல்துறையின் மெத்தனப்போக்கும், தண்டனை வழங்குவதில் நம் நீதித்துறையின் காலதாமதமுமே இதற்கு முக்கிய காரணங்களாகும்.

குற்றவிகிதம் அதிகரித்து வருவது மக்கள் நலன் விழையும் தேசத்திற்கு நல்லதல்ல. ஒவ்வொரு நாட்டிலும் குற்றங்களுக்கு வெவ்வேறு விதமான தண்டனைகள் வரையறுக்கப்பட்டிருந்தாலும் அதன் முதன்மை நோக்கம் குற்றங்கள் பெருகக் கூடாதென்பதுதான்.

இதற்காகவே இஸ்லாமிய நாடுகளில் ""கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்'' என்ற அதிகபட்ச தண்டனை வழங்கப்படுகிறது. எனினும்கூட அங்கும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.

20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த குற்றங்களின் நிகழ்வுகளைப் பார்த்தால் சாராயம் தொடர்பான குற்றங்கள், சிறுதிருட்டு, ஜேப்படி, சிறுகாயம் ஏற்படுத்தல் போன்ற சிறு குற்றங்கள் அதிகமாகவும் வீடு புகுந்து திருடுதல், கொலையுடன் இணைந்த திருட்டு, பாலியல் பலாத்காரம் போன்ற பெருங்குற்றங்கள் குறைவாகவும், இரட்டைக் கொலை, குழந்தையைக் கடத்தி கொலை போன்றவை அரிதாகவும் நடந்து வந்தன. ஆனால் நடப்பு காலங்களில் சாராய குற்றங்கள் தவிர ஏனைய அனைத்து குற்றங்களும் பெரும் அளவில் அதிகரித்துள்ளன.

நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெறுவது குறித்த பயம் குற்றவாளிகளுக்கு குறைந்துவிட்டது. ஒரு கொலை வழக்கின் குற்றவாளி, சிறைச்சாலையின் வாசலைக் கூட மிதிக்காமல் முன் ஜாமீன் பெறுவதும், தண்டனை எதுவுமின்றி தப்புவதும், காவல்துறையின் புலன்விசாரணையின் தொய்வைக் காட்டுகிறது என்றாலும், தண்டனை வழங்குவதில் நீண்டகால தாமதங்கள் நம் சட்டத்தின் ஆட்சிமுறையைக் கேலிக் கூத்தாக்கி விடுகிறது.

இந்நிலையில், வெளிப்படையாகத் தெரிந்த குற்றவாளிகளுக்கு ஏதாவது தண்டனை உடனே கிடைக்காதா என்று பொதுமக்கள் ஏங்கும் நிலையில் என்கவுண்டர் என்ற ஆயுதம் காவல்துறையினரால் கையாளப்படுகிறது. நிராயுதபாணியுடன் ஆயுதமெடுத்துச் சண்டையிடக் கூடாதென்பதும் போர்க்களத்தில் பின்புறமிருந்து தாக்கக் கூடாதென்பதும் காப்பிய காலத்து போர் விதிகள் ஆகும். இருந்தபோதிலும் தர்மத்தை நிலைநாட்ட அவதார புருஷர்களால் அது மீறப்பட்டிருக்கிறது.

துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனத்தை காவல்துறை தன்னிச்சையாக மேற்கொள்வதை சட்டம் அனுமதிக்கவில்லை. என்கவுண்டர்கள் தொடராமலிருக்க வேண்டும் என்பதற்காக 2003-ஆம் ஆண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் என்கவுண்டர் நடத்திய காவல்துறையினர் மீது தேவைப்பட்டால் கொலை வழக்குப் பதியப்பட வேண்டும் என்றும் சுயேச்சையான புலனாய்வு அமைப்பு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

1994 முதல் 2011 முடிய நம் நாட்டில் சுமார் 20,000 காவல் சாவுகள் நடைபெற்றுள்ளன. குற்றவாளியுடன் நடந்த என்கவுண்டரில் ஒரே ஒரு காவல்துறை அதிகாரிதான் உயிரிழந்திருக்கிறார். ஆனால் பல போலி என்கவுண்டர்கள் நடத்தியுள்ளதாக காவல்துறை மீது புகார் உள்ளது. போலி என்கவுண்டர் நடத்தியதற்காக நீதிவிசாரணை நடந்து அதில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்சாரா, ரவிக்குமார் பாண்டியன் ஆகியோர் மீது கொலை வழக்கேகூடப் பதியப்பட்டிருக்கிறது.

2006-ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோமதி நகரில் சுரேஷ் கஹ்கா பாரி என்ற இளைஞரை சிறப்புப் போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட பாரி கொடிய குற்றவாளி எனவும் அவரைப் பிடிக்க போலீஸார் ரூ.20,000/- சன்மானம் அறிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாயின. ஆனால் இந்தத் தகவல்களை பாரி குடும்பத்தினர் மறுத்தனர். நீதி விசாரணையின்போது போலி என்கவுண்டர் ஊர்ஜிதமானது. சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் பாரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் போலீஸார் பயன்படுத்திய ஆயுதங்கள் எனத் தெரிய வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் உள்பட 15 போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு என்கவுண்டர்கள் முடிந்தனவா என்றால் இல்லை, அதிகரித்திருக்கின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 1914-இல் கள்ளிமந்தை என்ற காவல் நிலையம் 18 காவலர்களுடன் தொடங்கப்பட்டது. இன்று வரை அங்கு அதே அளவு காவலர்கள்தான் உள்ளனர். பெருகி வரும் மக்கள் தொகைக்கும் அதிகரித்துவரும் குற்றங்களுக்கும் ஏற்ப காவலர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.

15 ஆண்டுகளுக்கு முன்பு கூட சிறுகுற்ற வழக்கில் ஒரு குற்றவாளி விடுதலை செய்யப்பட்டால் புலன் விசாரணை அதிகாரியிடம் காரணம் கேட்கப்படுவதும் அவர்மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படுவதும் வழக்கம். ஆனால் இன்று அவ்வாறு இல்லை. ஒரு குற்ற வழக்கில் குற்றவாளிக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியதா இல்லையா என்று பார்ப்பதைவிட அந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதா என்றும், ஒரு வழக்கைச் சுழித்து விட்டோம் என்றும்பார்த்து புலன் விசாரணை அதிகாரிகள் நிம்மதி அடைகின்றனர்.

ஒரு மாதத்தில் எத்தனை வழக்குகள் முடிக்கப்பட்டிருக்கிறது என்ற புள்ளிவிவரத்தை மட்டுமே உயர் அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். அதனால், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிய குற்றவாளிகளைக் காணும் இதர குற்றவாளிகளுக்கு தண்டனை குறித்த பயம் குறைந்து விடுகிறது.

குற்ற வழக்குகளுக்குத் தகுந்த அளவு நீதிமன்றங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவில்லை. வழக்குகளை விரைவில் விசாரித்து முடிவு செய்ய விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட போதிலும் நீதி வழங்குவதில் காலதாமதமாகிறது. நீதித்துறையின் கட்டமைப்பு பலப்படுத்தப்படுவதோடு அதிகரித்து வரும் குற்ற விகிதத்திற்கு தகுந்தாற்போல் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

காவல் துறையினரும் மனிதர்களே. அவர்களுக்கும் மனித உரிமைகள் உண்டு. எனினும் காவல் துறை என்ற குதிரைக்கு கடிவாளம் அவசியம். சேலம் கர்ணன் என்பவர் சாராய வழக்குகளில் தொடர்புள்ள ஒரு சாதாரணக் குற்றவாளி. அவர் ஒரு காவலரை குடிபோதையில் தாக்கி விட்டார் என்பதற்காக காவல் துறை அவரைப் பல வழக்குகளில் தொடர்புபடுத்தியது. அதுவரை காவல் துறையால் முடியாத வழக்குகளில் அவர் குற்றவாளியாக சிருஷ்டிக்கப்பட்டதும், இறுதியில் காவல்துறை அவரை என்கவுண்டர் செய்ததையும் நாம் மறந்திருக்க முடியாது.

அதேபோன்று தான் சிவகங்கை மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட காவல் துறை சார்பு ஆய்வாளரின் சாவுக்கு பழிக்குப் பழியாக கொலையாளர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால் அங்கு ஆல்வின் சுதன் படுகொலைக்கு முன்பு காவல் துறையினர் உதவியுடன் ரவுடிகள் ராஜ்ஜியம் நடந்ததையும், டி.எஸ்.பி. அந்தஸ்திலான உயர் அதிகாரி ரவுடிகளால் அவமானப்படுத்தப்பட்ட பின்பும், ரவுடிகள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் நாம் மறந்து விடமுடியாது.

எனவே காவல் துறையினர் குற்றப் பின்னணி உள்ளவர்களோடு தொடர்பு வைக்காதிருந்தால் இத்தகைய அசம்பாவிதங்களைத் தடுத்திருக்க முடியும். என்கவுண்டர் என்பது காவல் துறையினரின் சாகசம் அல்லது சாதனை என்று ஊடகங்கள் ஒருவிதமான மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. வினோதினி என்ற பெண் மீது ஒரு தலைக்காதல் கொண்டு அக்காதலை ஏற்காததால் ஆசிட் வீசிய வாலிபரை என்கவுண்டர் செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் பலர் ஊடகத்தில் கருத்து தெரிவிக்கும் அளவிற்கு என்கவுண்டர் மோகம் அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு நிறைந்த ஆரோக்கியமான சமூகத்திற்கு இது நல்லதல்ல.

இந்நிலையில் காவல்துறை தன்னை தற்பரிசோதனை செய்து கொள்வது அவசியம். குற்றவாளிகளுடன் தொடர்பைத் துண்டித்துக் கொள்வதும், என்கவுண்டர் மோதல்களை தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல்படி தாமாக முன்வந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நீதிமன்றத்தில் தற்காத்துக் கொள்ளும் உரிமையை நிரூபிப்பதும் காவல் துறையினரின் மீதுள்ள களங்கத்தைப் போக்கும்.

ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பதை முறையான, அதே நேரத்தில் விரைவான விசாரணைக்குப் பின் நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டுமே தவிர, காவல்துறையினரின் துப்பாக்கி தீர்மானிக்க முடியாது. தீர்ப்பளிக்கவும், தண்டனை வழங்கவும் காவல் துறை முற்படுமானால் பிறகு நீதிமன்றங்களின் அவசியம்தான் என்ன? மோதல் சாவு என்பது நாகரிக சமுதாயத்திற்குக் களங்கம். அதை ஆதரிக்கவோ, அனுமதிக்கவோ முற்படுவது ஆபத்தை அனுமதிப்பதாகிவிடும்!

கட்டுரையாளர்: வழக்குரைஞர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com