திறந்தவெளி என்பது கழிப்பிடமல்ல

திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் கழிப்பதைத் தவிர்க்க மக்களிடையே சுகாதார விழிப்புணர்வை உண்டு பண்ண வேண்டியது இன்றியமையாதது.

திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் கழிப்பதைத் தவிர்க்க மக்களிடையே சுகாதார விழிப்புணர்வை உண்டு பண்ண வேண்டியது இன்றியமையாதது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதுடன் தனிநபர் ஆரோக்கியமும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றது. பல்வேறு தொற்றுநோய்களுக்கு அடிப்படைக் காரணியாக இது அமைந்துவிடுவதை மறுக்க முடியாது.

அரசும், பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் திறந்தவெளிகளை பயன்படுத்துவதைத் தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. பல்வேறு இடங்களில் இருபாலருக்கும் தனித்தனியாக ஒருங்கிணைந்த சுகாதார வளாக வசதிகளை ஏற்படுத்தித் தந்து அவற்றைத் திறம்பட நிர்வகிக்க, உபயோகிப்பாளர்களிடம் மாதந்தோறும் மிகக் குறைந்த அளவிலான கட்டணத்தைப்பெறும் நடைமுறைகள் வரவேற்கத்தக்கது எனலாம்.

அதேவேளையில், அவ்வொருங்கிணைந்த சுகாதார வளாகத்தைக் கிடைத்தற்கரிய ஒன்றாகக் கருதி அதனை நன்கு சுத்தமாகப் பராமரித்தலை ஒவ்வொரு உபயோகிப்பாளரும் தமது தலையாயக் கடமையென உணருதல் நல்லது. அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்குப் பாடம் தவிர தன்சுத்தம் மற்றும் பொதுசுகாதாரம் பேணுதலின் அவசியம், சுற்றுப்புறத்தூய்மை,கழிப்பறைப் பயன்பாடுகள்,நகச்சுத்தம் மற்றும் காலணி அணிவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வுகள் கற்றுத்தரப்பட்டுச் செயல்படுத்தப்படுவது அவசியம்.

இன்னும் கிராமங்களில் வாழும் பலர், குறிப்பாக, பெண்கள் படும் பாடுகள் சொல்லிமாளாதவை. எட்ட முடியாத உயரங்களையும் சிகரங்களையும் பெண்களின் ஒரு பகுதியினர் தொட்டுப் பெருமிதப்பட்டுக்கொண்டாலும் மறுபுறத்தில் அடிப்படை சுகாதார வசதிகள் இன்னும் கிடைக்கப்பெறாதோர் அடையும் துன்பங்கள் கணக்கிலடங்கா. தமக்கேற்படும் இயற்கை உபாதைகளை எளிதில் கழிக்க வழியின்றித் துயரப்படுவது வேதனைக்குரியது. இவற்றைத் தணித்துக்கொள்ளவும் தம் மானத்தைக் காத்துக்கொள்ளவும் சரியான பொழுதாக இவர்களுக்கு இருப்பது இரவு மட்டுமே. அதற்காக இவர்கள் தம் உடல் பெரும்பாட்டோடும் வலியோடும் நெடுந்தவம் கிடப்பதனை சமூக வெட்கக்கேடாகவே கருத வேண்டியிருக்கின்றது.

தவிர, இரவு நேரத்தில் திறந்தவெளிகளை நோக்கிப் படையெடுக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் ஏராளம். பாம்பு மற்றும் பூச்சிக்கடிகளுக்கு ஆளாகிய துன்பியல் நிகழ்வுகள் பரிதாபத்திற்குரியன.

நம் நாடு உலகளவில் தனிநபர் மற்றும் பொதுசுகாதாரத்தில் தன்னிறைவு பெற்று தலைநிமிர்ந்து நிற்கவேண்டுமானால் வீட்டுக்கொரு கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தருதல் அரசின் இன்றியமையாத கடமையாகும். பல்வேறு சுகாதாரம் குறித்த திட்டங்கள் வாயிலாக ஆண், பெண் ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு வந்தாலும் அவை போதுமானதாக இல்லை. வீடுதோறும் தோற்றுவிக்கப்படும் கழிப்பிட வசதிகளாலும் மக்களிடையே உண்டாக்கப்படும் தனிநபர் சுகாதார விழிப்புணர்வு காரணங்களாலும் மட்டுமே திறந்தவெளியில் இயற்கை உபாதைகளைக் கழிக்கும் போக்கிலிருந்து பொதுமக்களை விடுவிக்கவியலும். இத்தகைய மக்கள் நலப்பணி இயக்கத்திற்கு தன்னார்வத் தொண்டு அமைப்புகள் முன்வந்து கைகோர்த்து அதனை வெற்றியடையச் செய்திடுதல் வேண்டும்.

இத்தகைய வசதிகளையெல்லாம் ஏற்படுத்தித்தந்துவிட்ட பிறகு, கிராம மற்றும் நகர அளவில் அந்தந்த பகுதி சார்ந்த பொதுமக்களைக்கொண்டு ஒரு சுகாதாரக் கண்காணிப்புக் குழுவை அமைத்து திறந்தவெளிப் பயன் பாட்டை முற்றிலுமாக ஒழிக்கலாம்.

இதுதவிர, மக்கள் அதிகம் புழங்கும் பொதுவிடங்களில் போதிய சுகாதார வசதிகள் கொண்ட, அனைவரும் எளிதில் அணுகிடவும் பயன்படுத்திடவும் தக்க இருபாலருக்குமான ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்களைப் பெருமளவில் ஏற்படுத்தித்தந்து தனிநபர் சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முயலுதல் வேண்டும். அவற்றைச் செம்மையாக நிர்வகிக்கவும் பராமரிக்கவும் தக்க பணியாளர்களைப் பணியமர்த்துதல் வேண்டும். இதற்கு சிறுகட்டணம் செலுத்துவதை பொதுமக்கள் சுமையாகக் கருதக் கூடாது.

இதுபோன்ற நிர்வாகத்தை அரசு தனியாருக்குத் தாரைவார்க்க நினைக்கும்போது வணிகப்போட்டியில் கிடைக்கும் பெரும் ஏலத்தொகையை மட்டும் கவனத்தில்கொள்ளாது அத்தகையோரின் சமுதாயஅக்கறைப் பணியையும் நினைவில் கொண்டால் நன்மை உண்டாகும். ஒரு சிலர் ஏனோதானோவென்று நிர்வகிக்கும் நோக்காலும் போக்காலும் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைவதுடன் நம் நாட்டை நோக்கிப் படையெடுத்துவரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அருவருத்துச் செல்லும் அவலங்களும் மலிகின்றன.

அதுபோல், நெடுந்தூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு ஏதுவாக நெடுஞ்சாலைகள் ஓரமாக இந்திய, மேலைநாட்டு முறையிலமைந்த நல்ல சுகாதாரக் கழிப்பிட வசதிகள் பெருக்கப்படுவது மிகுந்த பேருதவியாக அமையும். குழந்தைகள், பெண்கள், முதியோர், நோயாளிகள் போன்றோர் இதன் காரணமாக அடையும் துயரங்கள் பற்பல. அந்தந்த ஊர்களில் உள்ள கட்டணக் கழிப்பிடம் என்று அழைக்கப்படும் பாதுகாப்பற்ற, அசுத்தமிக்க, பல்வேறு தொற்றுநோய்களின் பிறப்பிடமாகத் திகழும் நரகத்திற்கு திறந்தவெளியே மேலென்று வெட்கத்தை விட்டொழித்துவிட்டு ஒதுங்க முற்படுவோரை ஏதோ ஆடு, மாடுகளை விரட்டித் தொழுவத்தில் அடைப்பதுபோல ஏலதாரர்களின் கைக்கூலிகள் சிலர் பெருந்தடியுடன் இரக்கமின்றித் திட்டவும் நடத்தவும் ஈவுஇரக்கமில்லாமல் பெரும் தண்டத்தொகையை வலுக்கட்டாயமாகப் பிடுங்கவும் செய்கின்ற போக்குகள் கண்டிக்கத்தக்கவை. ஒரு மேம்பட்ட நாகரிகம் படைத்திட்ட சமுதாயத்தில்தாம் நாம் வாழ்கின்றோமா என்கின்ற ஐய உணர்வு இவற்றால் இயல்பாக நம்முள் எழுவதைத் தடுக்க முடியவில்லை.

இதுதவிர, பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா மையங்கள், சந்தைகள், பொதுக்கூட்ட நிகழ்விடங்கள், விளையாட்டுத் திடல்கள் போன்றவற்றில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இத்தகைய சுகாதார வளாகங்கள் கட்டிப் பராமரிப்பதன் வாயிலாக திறந்தவெளி அசுத்தங்களைத் தடுக்கவியலும். பொதுமக்கள் பயன்படுத்தும் நீர்நிலைகள் உள்ள கரைகளிலும் இவ்வசதிகளை ஏற்படுத்தித்தந்து பொதுசுகாதாரத்தைப் பேணிக்காக்க முடியும்.

இதற்குச் சமூக நோக்குக்கொண்ட தன்னார்வத் தனியார் பங்களிப்புகளைப் பெருமளவில் ஊக்குவித்து செவ்வனே அவற்றை நடைமுறைப்படுத்திட அரசு முன்வரவேண்டும்.

சமுதாயத் தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் வழக்கமான ஆண்டு செயல்திட்டங்களான இரத்த தானம், கண் தானம் ஆகியவற்றுக்கு ஓராண்டு விலக்களித்து இல்லம்தோறும் கழிப்பிடம் எனும் உயரிய முழக்கத்தோடு தீவிரமாகச் செயற்படுதல் மிகுந்த பலனளிக்கும்.

திறந்தவெளிகளை அசுத்தப்படுத்தாதிருக்க இன்றே சபதமேற்போம். சுற்றுச்சூழலைக் காப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com