ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே

தமிழர்கள் ஒற்றுமைப்பட காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை போல இன்னும் நிறையப் பிரச்னைகள் தேவைப்படுமோ எனத் தோன்றுகிறது.

தமிழர்கள் ஒற்றுமைப்பட காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை போல இன்னும் நிறையப் பிரச்னைகள் தேவைப்படுமோ எனத் தோன்றுகிறது.

முல்லைப் பெரியாறு பிரச்னை விஸ்வரூபம் எடுத்தபோது, பெரியாற்று நீரால் பாசன வசதி பெறும் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், மக்கள், பெண்கள் என அனைவரும் ஒருமித்த உணர்வோடு திரண்டனர். அவர்கள் முல்லைப் பெரியாறு அணையை முற்றுகையிடச் சென்றனர்.

தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவே மக்களின் இந்த எழுச்சியைக் கண்டு திகைத்தது. ஆனால், அப்போது முல்லைப் பெரியாறு பிரச்னை என்பது ஏதோ விவசாயிகளுக்கான பிரச்னை அதுவும், தேனி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் பிரச்னை என்பது போலவே, தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் செயல்கள் இருந்தன. ஏனெனில், மற்ற பகுதி விவசாயிகள் அதற்குப் பெரிதாக ஆதரவு காட்டவில்லை.

இப்போது, "காவிரியால் குறுவையும் போச்சு, சம்பாவும் போச்சு' என "டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டும்' புலம்புகின்றனர்.

முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகளோ அல்லது தமிழகத்தின் இதர பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளோ இதுகுறித்துப் பெரிதாகக் கவலைப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால், டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயிகளைத் தவிர, மற்ற மாவட்ட மக்கள் பெரிதாகக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. காவிரி நீர் மூலம், மேட்டூர் அணையிலிருந்து கடை மடைவரை எத்தனையோ மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக் கணக்கான மக்கள் குடிநீர் வசதி பெறுகின்றனர். அந்த மக்கள் காவிரியில் தங்களுக்கான உரிமை மறுக்கப்படுகிறதே என உணரவில்லை. உணர்ந்திருந்தால் உரிமைக்காகக் குரல் கொடுத்து, உரிமைகளை மீட்பதற்கான செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் அடிக்கடி நடைபெறும் நிகழ்வாக உள்ளது. இதற்கு மீனவர்களைத் தவிர வேறு மக்கள் தரப்பில் இருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லை.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால், அணு உலைக்கு எதிராக, தமிழகத்தின் பிற பகுதிகளில் பெரிதாக போராட்டம், எதிர்ப்பு இல்லை. அணு உலையில் விபத்து நேரிட்டால் அந்த "வருவாய் வட்டம்' மட்டும்தான் பாதிக்கப்படும் என்று யாரோ சொல்லிக்கொடுத்துவிட்டார்கள் போலத் தெரிகிறது!

முல்லைப் பெரியாறு, காவிரி நதிநீர், மீனவர் மீது தாக்குதல், வேலூர் - திண்டுக்கல் தோல் ஆலைக் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாழாய்ப்போனது, திருப்பூர் சாய ஆலைப் பட்டறைகள், அணுஉலை இப்படி ஒவ்வொரு பிரச்னையும், அந்தந்த பகுதி மக்களின் பிரச்னை என்ற கண்ணோட்டமே தமிழகத்தில் நிலவுகிறது. அது தமிழக மக்களின் பிரச்னை என்ற கண்ணோட்டத்தில் யாரும் பார்க்கவில்லை. மக்கள் பிரச்னையாக உருவெடுக்கவில்லை.

இதனால் மத்திய அரசில் தொடர்ந்து பத்தாண்டுகளாகப் பதவிசுகம் அனுபவிக்கும் திராவிடக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட இந்தப் பிரச்னைகளுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுப்பதில்லை.

ஒட்டுமொத்த தமிழக மக்களும் இதுபோன்ற பிரச்னைகளுக்காக ஒன்று சேரும்போதுதான், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பக்கம் நிற்பார்கள். அதுவரை அவர்களும் அந்தந்த பகுதிகளில் மட்டும் - அதுவும் மேலோட்டமாகத்தான் - ஆதரவு தெரிவித்துக் கொண்டிருப்பார்கள்.

தமிழகத்தில் ஒரு நிலைப்பாடும், கர்நாடகத்தில் ஒரு நிலைப்பாடும், கேரளத்தில் ஒரு நிலைப்பாடும் கொண்டுள்ள தேசிய அரசியல் கட்சிகளும் தங்களுடைய தவறைத் திருத்திக் கொள்வார்கள்.

தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் வஞ்சிக்கப்படும் மாநிலமாக இருக்கும் தமிழகத்தில், மக்கள் எழுச்சி பேரளவில் ஏற்படும்போதுதான் இந்த அரசியல் கட்சியினர் மக்கள் பின்னால் திரள்வார்கள். அந்த எழுச்சி அரசியல் சார்பற்றதாக இருக்க வேண்டும்.

வன்முறை இல்லாமல் காந்திய வழியில் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். அதில் படித்தவர்கள், மாணவர்கள்,அரசு ஊழியர்களும் தன்னலம் பாராமல் சேர வேண்டும். அப்போதுதான் "வாக்குகளை வேட்டையாடுவதே ஜனநாயகம்' என்று செயல்பட்டுக்கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள், உண்மையாகவே மக்களின் பிரச்னைகளிலும் சற்று அக்கறை காட்டுவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com