எல்லோருக்குமே குழப்பம்தான்?

ஜூலை மாதம் வந்துவிட்டது. 4 மாநிலங்களில் சட்டப் பேரவை பொதுத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள்தான் இருக்கின்றன; அரசியலில் விடுமுறை என்பதே கிடையாது!

ஜூலை மாதம் வந்துவிட்டது. 4 மாநிலங்களில் சட்டப் பேரவை பொதுத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள்தான் இருக்கின்றன; அரசியலில் விடுமுறை என்பதே கிடையாது!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசை அமைப்பதன்மூலம் காங்கிரஸ் கட்சி மேலும் ஒரு வெற்றியைப் பெற்றுவிட்டது. 2014 மக்களவை பொதுத் தேர்தலில் மேலும் 5 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துகொண்டிருக்கிறது. பாரதிய ஜனதா மாநிலத்தில் ஆட்சியை இழந்ததுமல்லாமல், மக்களவை பொதுத் தேர்தலிலும் தொகுதிகளை இழக்கப்போகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிபுசோரனின் மகன் ஹேமந்த் சோரன் முதல்வராகிறார்; இந்தக் கூட்டு மக்களவை பொதுத் தேர்தலிலும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2009 மக்களவை பொதுத் தேர்தலில் 206 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி 2014 பொதுத் தேர்தலில் அதிகபட்சம் 150 முதல் 155 தொகுதிகளில் வெற்றிபெறும். பாரதிய ஜனதா கட்சிக்கு அதிகபட்சம் 100 தொகுதிகளையொட்டிதான் கிடைக்கும்; அதற்கும் அந்தக் கட்சி அரும்பாடுபடவேண்டியிருக்கும். மாநிலக் கட்சிகளுக்கு சுமார் 270 தொகுதிகள் கிடைக்கும். ஆனால் அவையெல்லாம் இணைந்து கூட்டணியாகச் செயல்பட்டு காங்கிரஸ் கட்சியை நிர்பந்தப்படுத்தித் தங்களுடைய கூட்டணி அரசில் சேரவைக்க முடியுமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. தேர்தலுக்குப் பிறகு இதுவோ அல்லது இதற்கும் மேலாகவோ நடைபெறக்கூடும். ஆனால் என்னுடைய உள்மனது, ""தேர்தல் முடிவுகள் வரும்வரை காத்திருக்க அவசியமில்லை, அதற்கும் முன்னதாகவே எல்லாம் தீர்மானிக்கப்பட்டுவிடும்'' என்று கூறுகிறது.

உங்களுக்கு இதில் சந்தேகம் இருந்தால் ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்துக் கொள்ளுங்கள். காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கக்கூடிய கட்சிகளின் பெயர்களையும் பாரதிய ஜனதாவை ஆதரிக்கக்கூடிய கட்சிகளின் பெயர்களையும் அதில் வரிசையாக எழுதுங்கள். யார் ஆட்சி அமைப்பார்கள் என்று உங்களுக்கே விடை கிடைத்துவிடும்.

************************************

உத்தரகண்ட் மாநிலத்தில் மீட்பு மற்றும் உதவிப்பணிகளில் மிகவும் சிக்கலான கட்டத்தில் ராணுவமும் மத்திய, மாநில அரசுகளும் ஈடுபட்டுள்ளன. இறந்தவர்களின் சடலங்களைத் தேடும் பணியையும் உயிரோடு இருப்பவர்களுக்கு உணவு, குடிநீர், துணிமணிகள் வழங்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

பத்திரிகைகளும் செய்தித் தொலைக்காட்சிகளும் பத்து நாள்களுக்கும் மேல் உத்தரகண்டுக்குக் கொடுத்துவந்த முக்கியத்துவத்தைக் குறைத்துக்கொண்டு குஜராத் மாநிலப் போலீஸýடனான மோதலில் சுட்டுக்கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் வழக்கில் இப்போது கவனத்தைத் திருப்பியுள்ளன. மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. மத்திய உளவுப்பிரிவும் குஜராத் போலீஸ் படையும் இணைந்து "போலி மோதலில்' இஷ்ரத்தை சுட்டுக் கொன்றுவிட்டதாக முதல் தகவல் அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது.

இது மிகவும் சிக்கலான விஷயம்; எல்லோருக்கும் இதில் எதிரெதிரான கருத்துகள் இருக்கின்றன. இந்த விவகாரம் போகப்போக எப்படியெல்லாம் போகும், இதன் விளைவுகள் எந்த அளவுக்கு பாரதூரமாக இருக்கும் என்பதையெல்லாம் ஊகிப்பது கடினம். இந்த மோதல் என்றில்லை எந்த விவகாரமாக இருந்தாலும் உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் முடிவே இறுதியானது என்று நாம் கட்டுப்படுவதே நல்லது என்பது என்னுடைய கருத்து.

அரசியல் கட்சிகள் அவரவர் அரசியல் நிலைக்கேற்ப இந்த வழக்குக்குப் பல்வேறு விளக்கங்களை அளிக்கக்கூடும். உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் வழக்கு விசாரணை நடைபெறுவதால் நாம் கவலைப்படத் தேவையில்லை. "போலி மோதல்கள்' நமக்கொன்றும் புதியவை அல்ல; மனித உரிமைகள் குழுக்களின் விழிப்புணர்வுப் பிரசாரம் காரணமாக இந்த விவகாரம் இப்போது பொது விவாதத்துக்கு வந்துள்ளது.

ஏதாவதொரு சம்பவம் நடந்து, மக்கள் கொதித்தெழுந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தால் உடனடித் தீர்வாக அப்பாவிகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களை உள்ளே தள்ளுவதே போலீஸாரின் வாடிக்கையாக இருக்கிறது. அப்படி அநியாயமாகக் குற்றஞ்சுமத்தப்பட்டு சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மற்றும் பிற இளைஞர்களை நினைத்தால் என்னுடைய நெஞ்சு துடிக்கிறது.

2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்கள் அவ்வளவு எளிதில் மறக்கப்படமாட்டாது. அரசியல்ரீதியாக பாரதிய ஜனதாவுக்கு இது தொடர்ந்து தோல்விகளையே தந்துவரும். இந்த விவகாரத்தை சரியாக முடிக்க வேண்டிய கடமை அந்தக் கட்சிக்கு இருக்கிறது.

************************************

தீவிர அரசியலிலிருந்து சில காலத்துக்கு முன்னரே ஓய்வுபெற்றுவிட்டேன். இனி அரசியலில் என்ன நடக்கும் என்பதைத் தீர்மானிப்பதில் எனக்கு பெருத்த குழப்பம் இருக்கிறது; இந்தக் குழப்பம் என்னுடன் அந்தக்காலத்தில் சகாக்களாக இருந்த இப்போதைய மூத்த அரசியல்வாதிகள் பலருக்கும் இருக்கிறது.

நம்முடைய ஜனநாயக அமைப்பில் நாடாளுமன்றம்தான் உச்சத்தில் இருக்கிறது. எந்த அமைப்பும் கூண்டுக்கிளியாக இருக்க வேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் பேச்சு சுதந்திரம் இல்லாமல் தலைமைக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சொன்னதை அப்படியே சொல்லும் கிளிப்பிள்ளையாக இருந்தால் முடிவுகளை எடுக்கும் சக்தியற்றவர்களாகிவிடுவார்கள்.

அரசின் அதிகாரத்துக்குக் கட்டுப்படாமல் சி.பி.ஐ. சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பது நியாயமானால், நீதிமன்றங்களுக்கு மட்டும் ஏன் அது கட்டுப்பட வேண்டும்? சர்வாதிகாரம் போலச் செயல்படும் ஜனநாயகத்தை நாம் விரும்புகிறோம்!

ஜனநாயகத்துக்கு அப்பாற்பட்டவர்களான அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்கள் மேலே வருவதையும் கீழே போவதையும் பார்த்துவிட்டோம். தூய்மையான நிர்வாகத்துக்காகக் குரல் கொடுத்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளையும் ஓய்வுபெற்ற தரைப்படை தலைமை தளபதியையும் பார்த்துவிட்டோம்; (எங்கே அந்த தலைமை தளபதி?) சிவில் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து அரசியல் கட்சியைத் தொடங்கியவர்கள் எங்கே? தேர்தலில் போட்டியிட்டால் காப்புத் தொகையை மீட்கவே அவர்கள் அரும்பாடு பட வேண்டியிருக்கும்.

சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் ஆகியவை இடைவிடாமல் அவர்களுக்கு விளம்பரம் தந்தும் அவர்கள் ஏன் இப்படி மக்களுடைய கவனத்திலிருந்து விலகிப் போனார்கள்? உண்மை என்னவென்றால் எல்லோரும் அவரவருக்குத் தெரிந்தவிதத்தில் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்க வந்தார்கள், அது குழப்பமாகவும் அராஜகமாகவும் இருந்தது.

************************************

எகிப்து நாட்டில் இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். அதிபர் மோர்ஸி தலைமையிலான அரசை, "ராணுவத் தலைமை' பதவி நீக்கம் செய்துவிட்டது. தலைநகர் கெய்ரோ வீதிகளில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுவிட்டனர். உயிரிழந்தோர், காயமடைந்தோர் எண்ணிக்கை மேலும் பெருகக்கூடும்.

அதிபருக்கு ஆதரவாகவும் எதிராகவும் திரண்டு இரு கட்சிகளாகப் பிரிந்து நிற்கும் மக்களிடம் தெளிவான கொள்கைகளோ மாற்று திட்டங்களோ இல்லை; மத்திய கிழக்கு நாடுகளில் இப்படித்தான் நடந்தது என்பதையும் பார்த்தோம். 2 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே நிலைமைதான்.

ஜனநாயகம் என்பது ஜனநாயக அமைப்புகளின் பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றைப் பொருத்தது. ஜனநாயகத்தைக் காக்கும் தூண்களுக்கு இடையே சமநிலை நிலவவேண்டியது அவசியம்.

ஜனநாயகத்துக்காகப் போராடுவது என்ற பெயரில் அதற்குத்தான் நாம் தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறோம் என்று ஒரு சிலர்தான் உணர்கிறார்கள்; உணராதவர்கள் குழப்பத்தையும் அராஜகத்தையும்தான் ஏற்படுத்துகிறார்கள். இத்தகைய ஆபத்துகளிலிருந்து நம்முடைய ஜனநாயக அமைப்புகள் மீண்டுவிட்டன.

அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளவும் கருத்தொற்றுமை அடிப்படையில் செயல்படவும் தயாராக உள்ள கட்சிக்கே சாமானிய வாக்காளர் வாக்களிப்பார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

கட்டுரையாளர்: அரசியல் விமர்சகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com