பாடாய்படுத்துகிறது "ந-மோ'னியா

பரதிய ஜனதாவின் தலைவர்களுக்குள் பதவிச் சண்டை நடக்கிறது என்பதை மென்று முழுங்காமல், உரத்த குரலில் ஏற்கெனவே கூறியிருக்கிறேன்; அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்பட்ட மக்கள் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய், உடல் நலம் குன்றியதால் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்ற நாளிலிருந்து நல்ல தலைமை இல்லாமல் பாரதிய ஜனதா கட்சி திணறிக்கொண்டிருக்கிறது.

பரதிய ஜனதாவின் தலைவர்களுக்குள் பதவிச் சண்டை நடக்கிறது என்பதை மென்று முழுங்காமல், உரத்த குரலில் ஏற்கெனவே கூறியிருக்கிறேன்; அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்பட்ட மக்கள் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய், உடல் நலம் குன்றியதால் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்ற நாளிலிருந்து நல்ல தலைமை இல்லாமல் பாரதிய ஜனதா கட்சி திணறிக்கொண்டிருக்கிறது. இதை யாராவது சுட்டிக்காட்டினால், "அப்படியெல்லாம் எங்களுக்குள் பிளவு இல்லை' என்று மறுத்துக் கொண்டிருந்தாலும் அவர்களுக்குள் "ஒற்றுமை இல்லை' என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

கோவாவில் நடைபெறும் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மூத்த தலைவர்கள் அத்வானி, ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. "அத்வானிக்கு உடல் நலம் சரியில்லை' என்று காரணம் கூறப்படுகிறது. நரேந்திர மோடியின் பெயரைச் சுருக்கி "ந-மோ' என்று அழைக்கிறார்கள். அடுத்த பொதுத் தேர்தலுக்கான பிரசாரக் குழுவுக்கு மோடியைத்தான் தலைவராக்க வேண்டும் என்று கட்சிக்குள் ஒரு கோஷ்டி வலியுறுத்தத் தொடங்கிவிட்டது. மோடி கூடாது என்று மற்றொரு கோஷ்டி கூறுகிறது. மோடியை எதிர்ப்போருக்கு "ந-மோ'னியா காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கேலி செய்கின்றனர். இதனாலோ என்னவோ, யஷ்வந்த் சின்ஹாவிடம் "நீங்கள் ஏன் கோவாவுக்குப் போகவில்லை?' என்று கேட்டபோது, "எனக்கு ந-மோனியா இல்லை' என்று நறுக்கென்று பதில் அளித்திருக்கிறார்.

இதனால் கட்சித் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டு வருகிறது. தொண்டர்களைவிட வெளியிலிருந்து ஆதரிக்கும் மக்களிடையே வருத்தமும் சலிப்பும் ஏற்பட்டுவருகிறது. கட்சியின் இந்த நிலைமைக்கு இவர்தான் காரணம், அவர்தான் காரணம் என்று கையை நீட்டி அடையாளம் காட்டிவிடலாம். கட்சியின் முக்கிய முடிவுகளையெல்லாம் எடுப்பது ஆர்.எஸ்.எஸ். தலைமைதான். எனவே இந்தக் கோளாறுகளுக்குக் காரணம் அதன் அளவுக்கு மீறிய தலையீடுதான். வாஜ்பாய் கட்சியின் தலைவராக இருந்தவரை எந்தக் குழுவும், அமைப்பும் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

எந்த ஒரு பிரச்னையையும் "பாரதிய ஜனதா கட்சியின் கண்ணோட்டத்தில்' பார்க்காமல் "தேசியக் கண்ணோட்டத்தில்' பார்த்து நடவடிக்கைகளை எடுத்தார். எனவே அவர் மீது மக்களுக்கு நல்ல அபிப்ராயம் இருந்தது. காலத்துக்கு ஒவ்வாத பழைய சித்தாந்தங்களை பாரதிய ஜனதா தலைமை இன்னமும் தூக்கிப்பிடிக்கப் பார்க்கிறது. இதைப் பெரும்பாலான வாக்காளர்கள் இப்போதும் விரும்பவில்லை. அத்துடன் கட்சிக்குள் இப்போது பல அதிகார மையங்கள் வேர்விட்டுவிட்டன. எனவே கட்சிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதாக இருக்காது.

அத்வானி ஒன்றும் அரசியல் பக்குவம் இல்லாதவர் அல்ல; கட்சியில் சிலர் எடுக்கும் நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் என்ன ஆகும் என்று அத்வானியும் அறிவார், அவரை எதிர்த்து நிற்கும் மோடியும் அறிவார். சிக்கல் இப்போதைக்குத் தீரும் என்று தோன்றவில்லை. பாரதிய ஜனதாவின் எந்தத் தலைவரும் தன்னுடைய அதிகாரத்தை, வாய்ப்பை விட்டுத்தரத் தயாராக இல்லை.

இமாசலப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய இரு மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களிலும் நரேந்திர மோடி பிரசாரம் செய்தும் அக்கட்சி தோல்வியைத் தழுவியது. இதிலிருந்து தேசிய அளவில் மக்களால் ஏற்கப்பட்ட தலைவர் அல்ல மோடி என்பது நிரூபணமாகிறது.

குஜராத்தில் நரேந்திர மோடி மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், ஒரு சில மாநிலங்களில் மட்டும் ஆட்சியில் இருக்கும் "மாநிலக் கட்சி' போன்றதுதான் பாரதிய ஜனதா. 2004-இல் என்ன நடந்தது என்று மறக்கக்கூடாது. வாஜ்பாய் ஆட்சி நன்றாக இருந்தாலும் குஜராத்தில் நடந்த வகுப்புக் கலவரத்தால் அடுத்த மக்களவை பொதுத் தேர்தலில் கூட்டணி தோல்வியைத் தழுவியது. வாஜ்பாயால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இது கடந்த கால வரலாறு மட்டுமல்ல, சிறுபான்மைச் சமூக மக்களின் நினைவுகளிலிருந்து இன்னமும் அழியாமலிருக்கிறது.

""குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியைவிட மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் செüகான் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார், குஜராத்தாவது ஏற்கெனவே முன்னேறிய மாநிலம், மத்தியப் பிரதேசமோ மிகவும் பின்தங்கிய மாநிலம்; எனவே முன்னேறிய மாநிலத்தை மேலும் முன்னேற்றிய சாதனையைவிட வறுமை, கல்லாமை, நோய், சமூக - பொருளாதார ரீதியாகப் பின்தங்கியமை ஆகிய எல்லா வழிகளிலும் பின் தங்கியிருந்த மத்தியப் பிரதேசத்தை செüகான் முன்னேற்றியதுதான் சாதனை'' என்ற கருத்தை அத்வானி ஏன் இந்த நேரத்தில் வெளியிட்டார் என்பது வியப்பை அளிக்கிறது. தேசிய அளவில் பாரதிய ஜனதா கூட்டணியை அடுத்து வழிநடத்திச் செல்ல வேண்டிய தலைவர் யார் என்பதில் அவர்களுக்குள் போட்டியும் பொறாமையும் இருக்கிறது என்பதையே இவை காட்டுகின்றன.

குஜராத்தில் சமீபத்தில் நடந்த 4 சட்டப் பேரவை 2 மக்களவை இடைத் தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதாவுக்கே சாதகமாகியிருக்கின்றன. எனவே மோடியினுடைய கை ஓங்கியிருக்கிறது. பிரதமர் பதவியைக் கைப்பற்றும் அவருடைய முயற்சி இன்னும் பல கட்டங்களைத் தாண்ட வேண்டியிருக்கிறது. கோவாவில் நடைபெறும் பாரதிய ஜனதாவின் தேசிய செயற்குழு கூட்டத்தோடு இந்த மோதல்கள் நின்றுவிடும் என்று தோன்றவில்லை. தலைவர் யார் என்பதைத் தீர்மானிப்பது 2014 ஏப்ரல் வரை ஒத்திபோடப்படும் என்று எனக்குத் தோன்றவில்லை. நரேந்திர மோடி அதிலும் வெற்றி பெற்றுவிட்டார் என்றே நினைக்கிறேன்.

******************************************

மகராஜ்கஞ்ச் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தல் முடிவிலிருந்து பிகார் முதலமைச்சர் நிதீஷ்குமாரின் செல்வாக்கு சற்றே ஆட்டம் கண்டிருக்கிறது. 1.36 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள வேட்பாளர் பிரபுநாத் சிங் வெற்றி பெற்றிருக்கிறார்.

சமீப காலங்களாக லாலு பிரசாதின் பொதுக்கூட்டங்களுக்கு மக்களுடைய வருகை இரண்டு மடங்காகிவருவது அவருக்கு மீண்டும் செல்வாக்கு அதிகரித்து வருவதையே காட்டுகிறது. 2014 மக்களவை பொதுத் தேர்தலில், கடந்த முறை வென்ற 4 தொகுதிகளைவிட நிச்சயம் அதிக தொகுதிகளை அவர் கைப்பற்றுவார். இது ஐக்கிய ஜனதா தளம் பாரதிய ஜனதா கூட்டணிக்கு மிகப்பெரிய இழப்பை பிகாரில் ஏற்படுத்தும். காங்கிரஸ் கட்சியும் லாலு கட்சியும் கூட்டணி வைத்துக்கொண்டால் 10 முதல் 15 தொகுதிகள்வரைகூட கைப்பற்றும். அந்த வெற்றி மாநிலத்தின் அரசியல் போக்கையே மாற்றிவிடும்.

******************************************

மேற்கு வங்கத்தில் ஹெளரா மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் - மும்முனைப் போட்டியில் - வெற்றி பெற்றிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இழந்த செல்வாக்கை மீண்டும் வேகமாகத் திரும்பப் பெற்றுவருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் 95,000 வாக்குகள் பெற்றார், பாரதிய ஜனதா போட்டியிலிருந்து கடைசி நேரத்தில் விலகிக் கொண்டு, தன்னுடைய ஆதரவு வாக்குகளை திரிணமூல் காங்கிரஸýக்கு அளித்து அதை வெற்றிபெறச் செய்திருக்கிறது. திரிணமூல் காங்கிரஸýக்கும் பாரதிய ஜனதாவுக்கும் "ரகசிய உடன்பாடு' ஏற்பட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. வாக்கு வித்தியாசம் குறைந்ததற்குப் பல காரணங்கள் கூறப்படலாம், ஆனால் மம்தாவின் செல்வாக்கு சரிவதையே இது உணர்த்துகிறது.

பாரதிய ஜனதாவுடன் மம்தா நெருங்கிச் செயல்படுகிறார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தால், மேற்கு வங்க முஸ்லிம்கள் அவருக்கு அளித்துவரும் ஆதரவைத் திரும்பப் பெறுவார்கள். அந்த முஸ்லிம் வாக்குகள் மார்க்சிஸ்டுகளுக்கு ஆதரவாகத் திரும்பும். திரிணமூல் காங்கிரஸ் ஒத்திவைக்க நினைத்தாலும் பஞ்சாயத்துத் தேர்தல்கள் அடுத்து அந்த மாநிலத்தில் நடந்தாக வேண்டும். அத் தேர்தல் முடிவுகள் மம்தாவுக்கு எச்சரிக்கையாக அமையும். திரிணமூல் காங்கிரûஸத் தோற்கடிக்கவே முடியாது என்ற மாயை முதலில் உடைபடும். வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு சதவீத வாக்கு வித்தியாசம் போதும் என்ற நிலையில்தான் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிலைமை இப்போது இருக்கிறது.

******************************************

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பி.சி.சி.ஐ.) நிர்வாகம் தொடர்பான சர்ச்சை இன்னும் ஓயவில்லை. இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் "சாம்பியன்ஸ் கோப்பை' கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. தொழில் முதலீட்டில் தோனி, பாண்டே ஆகியோரின் பங்கு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. திடீரென அவருக்குக் கோடிக்கணக்கான ரூபாய்கள் குவிந்த விதமும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. எனவே செய்தி ஊடகங்கள் தோனியின் விளம்பர வருவாய், தொழில் வருவாய், அவருடைய நண்பர்கள், தொழில் முயற்சிகள் ஆகியவை குறித்துத் தோண்டித் துருவி விசாரிக்கத் தொடங்கியிருக்கின்றன. "புயலுக்கு முன்னே அமைதி' என்ற நிலை காணப்படுகிறது.

கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகத்தைச் சீரமைப்பார்கள் என்று எதிர்பார்த்தால், சென்னையில் நடந்த சிறப்பு கூட்டம் சப்பென்று ஆகிவிட்டது. எல்லாவற்றையும் மூடிமறைக்கும் முயற்சிகளோ இவை என்ற சந்தேகம்கூடத் தோன்றுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவிடம் தில்லி போலீஸார் 12 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அவரும் சூதாடியதை ஒப்புக்கொண்டதுடன் ஷில்பாவிடம் அதற்காக மன்னிப்பும் கோரியிருக்கிறார்.

சென்னையில் ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் மீண்டும் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. "ஸ்பாட் பிக்சிங்கில்' தொடர்புள்ளவர்களைப் பிடிக்க கண்ணி இறுகிவருகிறது.

கட்டுரையாளர்: அரசியல் விமர்சகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com