"எதிர்பார்த்தது நடந்தது'

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பணிக்குழுத் தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டதைக் கட்சியின் மூத்த தலைவரான லால் கிருஷ்ண அத்வானி கடுமையாக எதிர்த்தார்; கட்சியில் தான் வகித்துவந்த பொறுப்புகளிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பணிக்குழுத் தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டதைக் கட்சியின் மூத்த தலைவரான லால் கிருஷ்ண அத்வானி கடுமையாக எதிர்த்தார்; கட்சியில் தான் வகித்துவந்த பொறுப்புகளிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார். ஆர்.எஸ்.எஸ். தலைமையும் கட்சியின் உயர் நிர்வாகிகளும் தலையிட்டனர். இறுதியில், "எதிர்பார்த்தபடியே' எல்லாம் நடந்தது. ஆம், நரேந்திர மோடியின் நியமனம் ரத்து செய்யப்படவில்லை, அத்வானிதான் தன்னுடைய ராஜிநாமாவைத் திரும்பப் பெற நேர்ந்தது! இந்த விவகாரத்தில் வென்றவர் யார், தோற்றவர் யார் என்பதில் ரகசியம் ஏதுமில்லை; (அத்வானிக்கு) இதெல்லாம் தேவைதானா என்றே மனம் கேட்கிறது.

கட்சித் தலைமை கொடுத்த நெருக்கடிக்கு வளைந்துகொடுத்துவிட்டார் அத்வானி. அவர் மீது நமக்கிருந்த மதிப்பு சற்றே சரிந்துவிட்டது. அந்தக் கட்சியைப் பொருத்தவரை சித்தாந்தமோ, அணுகுமுறையோ, தாங்கள் நினைத்ததை அமல்படுத்தும் வழிமுறைகளோ எதுவுமே மாற்றமடையவில்லை என்பதையே இந்த விவகாரமும் உணர்த்துகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வேலைகளைக் கவனிக்க நரேந்திர மோடியின் வலதுகரம் என்று கருதப்படும் அமித் ஷா நியமிக்கப்பட்டு ஒரு முறை மாநிலம் முழுவதையும் சுற்றிப்பார்த்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைகளையும் முடித்துவிட்டார். ஹிந்துத்துவா கொள்கைகளை கட்சி விட்டுத்தராது என்பதையே இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. இதனால் ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கு கொண்டாட்டம்தான்.

இவையெல்லாம் மக்களவை பொதுத் தேர்தலுக்கு முந்தைய ஆரம்பகால நடவடிக்கைகள்; போகப்போகத்தான் இவற்றால் பலன் இருக்குமா, இல்லையா என்பது தெரியும்.

மாநிலக் கட்சிகளைக் கொண்ட முன்னணி அமைப்பது குறித்து ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய மூன்றும் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டுள்ளன. மம்தா கட்சி இருக்கும் அணியில் இடதுசாரிகள் சேரமாட்டார்கள்; அவர்கள் உத்தரப்பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியுடனான உறவை வலுப்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார்கள்.

அ.இ.அ.தி.மு.க., பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தங்களுடைய உத்தி என்ன என்று அறிவிக்காமல் நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

************************************************

மீண்டும் பழைய விஷயத்துக்குச் செல்வோம்; அத்வானி ஒன்றும் அரசியல் கற்றுக்குட்டி அல்ல, மோடிக்கு கட்சியில் முக்கியத்துவம் தரவேண்டும் என்று பெருவாரியான தொண்டர்கள் நினைக்கும்போது அதை எதிர்த்தால் என்னாகும் என்று தெரிந்தவர்தான்; மோடியும் விவரம் இல்லாதவர் அல்ல. ஆனால் பாரதிய ஜனதா கட்சியைப் பொருத்தவரை வலுவான முதலமைச்சராக இருந்தாலும் சரி, கட்சித் தலைவராக இருந்தாலும் சரி - அவ்வளவு எளிதில் கட்சிக்குள்ளேயே கூட தங்களுடைய எதிராளிக்கு விட்டுக்கொடுத்துவிடமாட்டார்கள்.

இமாசலப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களின்போது பிரசாரத்துக்கு நரேந்திர மோடி சென்றார். அப்படியும் அவ்விரு மாநிலங்களிலும் கட்சிக்குத் தோல்விதான் ஏற்பட்டது. தேசிய அளவில் எழுச்சியை ஊட்டும் அளவுக்கு அவர் வலுவான தலைவர் அல்ல என்பதையே அது காட்டுகிறது. பாரதிய ஜனதா கட்சியே நாடு முழுக்க அல்ல, சில மாநிலங்களில் மட்டும்தான் வெற்றிபெற முடிந்த மாநிலக் கட்சியாகத் திகழ்கிறது.

2004-இல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை மறந்துவிடக்கூடாது. ஆனானப்பட்ட அடல் பிகாரி வாஜ்பாயே, குஜராத் வகுப்புக் கலவரங்கள் காரணமாக ஆட்சியை இழந்தார். இழந்த ஆட்சியை பாரதிய ஜனதா கூட்டணியால் இன்றுவரை பிடிக்க முடியவில்லை. கடந்த 50 ஆண்டுகளில் பொதுத் தேர்தலில் அரசியல்ரீதியாக ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாக அந்தத் தோல்வியைத்தான் சுட்டிக்காட்ட முடியும். இந்தத் தோல்வி கடந்த காலத்தில் ஏற்பட்டது என்று கருதலாம். சிறுபான்மைச் சமூக மக்கள் மனதில் பாரதிய ஜனதா மீதான அச்சம் பசுமையாக இன்றும் பதிந்திருக்கிறது. ஆயினும் தொண்டர்களின் ஆதரவு காரணமாக நரேந்திர மோடியை கட்சித் தலைவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது.

************************************************

எதிர்கால அரசியல் எப்படி இருக்கும் என்று கணித்துச் சொல்வதுதான் என்னுடைய வேலை. அடுத்த மக்களவை பொதுத் தேர்தலை காங்கிரஸ் கூட்டணியில் ராகுல் காந்தியும், பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் நரேந்திர மோடியும் தலைமை வகித்து நடத்துவார்கள் என்று கூறியிருந்தேன்; காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தியால் சுமுகமாக பதவி ஏற்க முடிந்தது. பதவி ஏற்றதுமட்டுமின்றி, மாநிலங்களில் கட்சி நிர்வாகத்தில் மாற்றங்களையும் அவர் மேற்கொண்டு வருகிறார். வேட்பாளர்களுக்குத் தகுதியை நிர்ணயித்து அதன்படி தேர்வு செய்துவருகிறார். நரேந்திர மோடி பிரசாரக்குழுத் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டவுடனேயே கட்சிக்குள் பூகம்பம் ஏற்பட்டது. மூத்த தலைவர்கள் கோவாவில் நடந்த கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தையே புறக்கணித்தனர். ஐக்கிய ஜனதா தளம் கட்சியோ தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட்டே விலகிவிட்டது.

ஹிந்துத்துவக் கொள்கைக்கு மக்களிடையே இனி வரவேற்பு இருக்காது; எனவே அதை முன்மொழிந்தால் எதிர்காலம் இருக்காது.

காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகியவையே இப்போதைக்கும் முக்கியமான கட்சிகள். மக்கள் ஏற்கும்படியான கொள்கைகளையும் தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டு, தோழமைக் கட்சிகளை அரவணைத்துச் சென்றால் வெற்றி நிச்சயம். அதற்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளும்படியான செயல்முறைகளும் நடவடிக்கைகளும் இருக்க வேண்டுமே?

************************************************

மேற்கு வங்க மாநிலத்தில் ஹெüரா மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெறும் 27,000 வாக்குகள் வித்தியாத்தில்தான் வெற்றிபெற முடிந்தது. இந்தத் தொகுதிக்கு உள்பட்ட 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பேரவை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது அக் கட்சி. பாரதிய ஜனதா போட்டியிடாமல், தன்னுடைய ஆதரவாளர்களின் வாக்குகளையெல்லாம் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளருக்குத் திருப்பியது. இந்த விஷயத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே "தெளிவான புரிந்துணர்வு' இருந்தது. வாக்குவித்தியாசம் குறைந்ததற்கு திரிணமூல் காங்கிரஸ் சார்பில் பல காரணங்கள் கூறப்படலாம். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்தால் மம்தாவை ஆதரித்துவரும் முஸ்லிம்கள் அவரைவிட்டு விலகிவிடுவார்கள். அவர்களில் கணிசமானவர்கள் மார்க்சிஸ்டுகள் பக்கம் போகத் தொடங்கிவிடுவார்கள். இப்போதே எச்சரிக்கைகள் தெரியவருகின்றன. பஞ்சாயத்துத் தேர்தல் நடக்கும்போது முடிவுகள் இதை வெளிப்படுத்திவிடும். அதனாலேயே திரிணமூல் காங்கிரஸ் கட்சி தேர்தலைத் தள்ளிப்போட முயல்கிறது.

மேற்கு வங்கத்தில் அடுத்து பல அரசியல் நிகழ்வுகள் நடைபெறப்போகின்றன. முதலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்கவே முடியாது என்ற மாயை உடைபடப்போகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடதுசாரி கூட்டணிக்கும் இடையிலான ஆதரவாளர்கள் எண்ணிக்கை ஒரு சதவீதம்தான் வித்தியாசம்.

************************************************

இப்போது எல்லா மாநிலங்களிலும்கூட கூட்டணி ஆட்சிக்கான கூறுகளே அதிகரித்து வருகின்றன. எனவே எல்லா கட்சிகளுமே மத்திய அரசில் இடம்பிடிக்க வாய்ப்புகள் அதிகரித்துவருகின்றன. தேர்தல் எப்போதுமே எளிதாக இருந்ததில்லை, இந்த முறை மேலும் கடுமையாக இருக்கப் போகிறது. நரேந்திர மோடி மத்திய அரசியலுக்குப் புதியவர். செய்தி ஊடகங்கள் வேண்டுமானால் அவரிடம் இல்லாத குணங்கள் எல்லாம் இருப்பதாகப் பிரமாதப்படுத்தலாம். தேர்தல் முடிவுகளை அறிவிக்கும்போதே வாக்குகள் உயர்ந்தது எதனால், சரிந்தது எதனால் என்றும் சொல்லிவிடுகிறார்கள். எனவே மோடியைக் கொண்டு வந்ததால் லாபமா, நஷ்டமா என்று பின்னர் தெரிந்துவிடும்.

இந்தியா என்பது எல்லாவிதமான கூறுகளையும் தன்னகத்தே கொண்ட நாடு. இங்கே நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை ஜாதி, மதம் ஆகியவற்றுக்கும் மக்கள் கொடுக்கிறார்கள் என்பதே உண்மை. இதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மாநிலவாரியாகப் பதவியில் இருக்கும் கட்சிகளையும் அவற்றின் பின்புலங்களையும் மனக்கண்ணால் பாருங்கள், உங்களுக்கே புரியும்.

இமாசலத்திலும் கர்நாடகத்திலும் மோடியின் பிரசாரத்தால் வெற்றி கிடைத்துவிடவில்லை என்பதை ஏற்கெனவே பார்த்துவிட்டோம். அதே சமயம் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி புதிய நிர்வாகிகளைக் களத்தில் இறக்கிவிடுகிறது. மூத்த தலைவர்கள் வெளியேற்றப்பட்டு இளையவர்கள் பொறுப்பில் அமர்த்தப்படுகிறார்கள். மோடியால் இல்லாவிட்டாலும் இதனால் நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும். எனவே எதிர்காலம் குறித்து கருத்துத் தெரிவிப்பதற்கு முன்னால் எச்சரிக்கையாகவே இருக்க விரும்புகிறேன்.

************************************************

இங்கிலாந்தில் நடைபெறும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில் ஆடத் தகுதி பெற்றுவிட்டது. தான் ஆடிய 3 ஆட்டங்களிலும் வென்றுவிட்டது. இந்திய அணியின் வெற்றிகள் நம்மைப் பெருமிதத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் திறமையால் முன்வரிசை பேட்டிங் பலமாக உள்ளது. பின்புலமாக தினேஷ் கார்த்திக் இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா தன்னுடைய கிரிக்கெட் ஆட்டத்தை ரசித்து மகிழ்ந்து விளையாடுவது கண்கொள்ளாக் காட்சி. இவர்கள் அனைவரையும் அரவணைத்து வழிநடத்திச் செல்கிறார் தோனி. இந்த நிலையில் தோனியின் சொத்து மதிப்பு, அவருக்குக் கிடைக்கும் விளம்பர வருமானம் பற்றியெல்லாம் யாராவது கவலைப்படுவார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. அரையிறுதி, இறுதிச்சுற்று ஆகிய 2 முக்கிய போட்டிகளில் நாம் வெற்றிபெற வேண்டும். அணிக்கு வாழ்த்துச் சொல்வோம்.

************************************************

அரசியல்ரீதியாக நாம் முடிக்க வேண்டிய பணிகள் ஏராளம்; உணவு பாதுகாப்பு (உத்தரவாத) மசோதா அதில் முக்கியமானது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் 67 சதவீத மக்களுக்கு உணவு வழங்கக்கூடியது. நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து இதை நிறைவேற்ற முடியாவிட்டால் அவசரச் சட்டம்தான் ஒரே வழி. இது நிச்சயம் அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

கட்டுரையாளர்: அரசியல் விமர்சகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com