ஆணையிடுகிறது ஆர்.எஸ்.எஸ்., அமல்செய்கிறது பாஜக

கடந்த ஒரு வாரத்தில் அரசியலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று பார்க்க வேண்டும்; 2014 மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளில் காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டுமே சில நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

பிகார் மாநிலத்தில் வலுவான அரசியல் சக்தியும் மதச்சார்பற்ற கட்சிகளில் முக்கியமானதும் பாரதிய ஜனதாவின் நீண்டநாள் தோழமைக் கட்சியுமான ஐக்கிய ஜனதா தளம் அந்தக் கூட்டணியைவிட்டு விலகிவிட்டது; இனி எதிர்காலத்திலும் பாரதிய ஜனதாவுடன் சேரும் வாய்ப்பு கிடையாது என்று அந்தக் கட்சியின் தலைவர்கள் அறிவித்துவிட்டனர். இது பாரதிய ஜனதாவுக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவாகும்.

பாரதிய ஜனதா கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிளவால், மாநிலக் கட்சிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. உளவியல் ரீதியாக, காங்கிரஸ் கட்சிக்கு வலு கிட்டியிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் வறட்டு ஹிந்துத்துவக் கொள்கைகளால் அந்தக் கட்சியின் கூட்டணியில் இனி சேரக்கூடிய கட்சிகள் என்று எதுவுமிருக்காது.

காங்கிரஸ் கட்சி தன்னுடைய கட்சி நடவடிக்கைகளில் பொதுச் செயலாளருக்கும் இணைச் செயலாளருக்குமான பொறுப்புகள் என்னென்ன என்று பிரித்து வழங்கிவிட்டது. மத்திய அமைச்சரவையிலும் அமைச்சர்களின் இலாகாக்களிலும் சில மாற்றங்கள் செய்து நிர்வாகம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. கட்சியிலும் ஆட்சியிலும் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அடுத்தபடியாக நடைபெறவுள்ள 4 மாநிலங்களின் சட்டப் பேரவை பொதுத் தேர்தலை மனதில் கொண்டே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநில விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 3 மாதங்களுக்கு முன்பிருந்ததைவிட இப்போது அங்கே நிலைமை மேம்பட்டு காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான அம்சங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

தில்லியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு இருக்கிறது. முதல்வர் ஷீலா தீட்சித் தேர்தல் பிரசாரத்துக்குத் தலைமை தாங்குவார். அவரை எதிர்ப்பது தற்கொலைக்குச் சமமாகும் என்பதை காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் விரைவில் உணருவார்கள்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டதால் மக்களுடைய கோபம் அரசின் மீதும், அனுதாபம் காங்கிரஸ் மீதும் திரும்பியிருக்கிறது. இந்த முறை சத்தீஸ்கரில் வாக்கு சதவீதம் முன்பைவிட அதிகமாக இருக்கப்போவதுடன் ஆட்சி மாற்றமும் நிச்சயம் என்றே எழுதிவைத்துக்கொள்ளலாம். இந்த முறை பாரதிய ஜனதாவுக்கு எதிராகக் களத்தில் நிற்கப்போவது மாநில மக்கள்தான்.

பிகாரில் பாரதிய ஜனதா மேற்கொண்ட நடவடிக்கை ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதுதான்; கடுமையான ஹிந்துத்துவக் கொள்கையை இந்த முறை தேர்தலில் முன்னிறுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைமை தீர்மானித்துவிட்டது. பாரதிய ஜனதாவுடனேயே 17 ஆண்டுகள் நட்புடன் இருந்த முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கு, அடுத்து என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்று தெரிந்துவிட்டது. எனவே தோழமைக் கட்சியை எச்சரிக்கும் விதத்திலேயே கடந்த சில மாதங்களாக பேசிவந்தார்; அவருடைய எச்சரிக்கையை பாரதிய ஜனதா பொருள்படுத்தாததால் திடீரென எதிர் நடவடிக்கையை எடுத்தார். பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரே நாளில் கரிந்து காற்றில் கரைந்துவிட்டது.

கட்சியின் மூத்த தலைவரான லால் கிருஷ்ண அத்வானி அஞ்சியபடியே நடந்துவிட்டது. மிகவும் இக்கட்டான தருணத்தில் கட்சி தவறான நடவடிக்கையை எடுக்கக்கூடாது என்று அத்வானி மேற்கொண்ட முயற்சிகள் தோற்றுப்போயின. அதற்காக அவரை இனி யாரும் குறைசொல்ல முடியாது. நரேந்திர மோடிதான் ஆர்.எஸ்.எஸ். தலைமையால் தேர்வு செய்யப்பட்டவர். பாஜக வெளியேற்றத்தைக் கண்டித்து பிகாரில் நடந்த முழு அடைப்புக் கிளர்ச்சியின்போது நடந்த வன்முறைகளைப் பாருங்கள்.

பிகாரில் இனி அடுத்து நடக்கப்போகும் மக்களவை பொதுத் தேர்தலில் சரத் யாதவ் - நிதீஷ் குமார் கூட்டுத்தலைமைதான் வெற்றிகளைக் குவிக்கப்போகிறது. பாரதிய ஜனதாவுக்கு கடுமையான சோதனைக் காலம் காத்திருக்கிறது.

நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுவிட்டது. அந்தக் கட்சிக்கே உள்ள 118 உறுப்பினர்களுடன் காங்கிரஸ் கட்சியின் 4 உறுப்பினர்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும் சுயேச்சைகள் சிலரும் ஆதரித்து அவரை வெற்றிபெறச் செய்தனர். பாரதிய ஜனதா கட்சி வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது. அது எதிர்பார்த்ததே. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது காங்கிரஸ் கட்சி தந்த ஆதரவுக்காக கட்சியின் தேசியத் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர் நிதீஷ் குமார்.

பாஜக - நிதீஷ்குமார் கூட்டணி முறிவுக்குப் பிறகு பிகாரில் என்ன நடக்கிறது என்று எல்லோருமே ஆர்வமாகக் கவனித்து வருகின்றனர். சரத் யாதவும் நிதீஷ் குமாரும் முதல் சுற்றில் வெற்றிபெற்றுவிட்டனர். அடுத்த சில வாரங்களில் பாரதிய ஜனதா எப்படிச்செயல்படப் போகிறது என்பது முக்கியம். வாக்களிப்பில் கலந்து கொள்ளாததன் மூலம், 6 முதல் 10 எம்.எல்.ஏ.க்கள் வரை தங்களைவிட்டுப் போவதை பாரதிய ஜனதா இப்போதைக்குத் தடுத்துவிட்டது.

பிகாரில் என்ன நடந்தாலும் அது மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜிக்குப் பாடமாக அமையப் போகிறது. மேற்கு வங்கத்தில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம். மார்க்சிஸ்ட் கட்சிக் கூட்டணி எப்போதுமே முஸ்லிம்களுக்கு பாதுகாப்பாளராக இருந்து வந்திருக்கிறது. மம்தாவை நம்பி அவர்கள் கடந்த முறை வாக்களித்தனர். பாரதிய ஜனதாவுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர் கூட்டணி வைக்கிறார் என்று தெரிந்தால், முஸ்லிம்கள் ஆதரவை விலக்கிக்கொண்டுவிடுவார்கள். இது மம்தாவுக்கு பெருத்த சரிவை ஏற்படுத்தும்.

இமாசலப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு பாரதிய ஜனதா ஆட்சியை இழந்த மாநிலம் பிகார். எதிர்காலத்தில் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் இடையே தேர்தல் கூட்டணி உருவாகாது என்றாலும் மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைவதில் நிதீஷ்குமார் இனி முக்கியப் பங்கு வகிப்பார் என்பது மட்டும் நிச்சயம்.

******

இப்போதுள்ள சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த மக்களவை பொதுத் தேர்தலில் 140 தொகுதிகள் முதல் 150 தொகுதிகள் வரை கிடைக்கக்கூடும். சத்தீஸ்கர், பிகார் அரசியல் நிலைமைகளைப் பார்க்கும்போது பாரதிய ஜனதா அணிக்கு அதிகபட்சம் 120 முதல் 125 வரையில்தான் கிடைக்கும். மாநிலக் கட்சிகளுக்கு 260 முதல் 270 வரையில் கிடைக்கும்.

20 ஆண்டுகளுக்கு முன்னதாகக் கையிலெடுத்த ஹிந்துத்துவா கோஷத்தை ஆர்.எஸ்.எஸ். தலைமையின் ஆணைப்படி பாரதிய ஜனதா இந்தமுறை மீண்டும் முன்னிறுத்தப் போகிறது. பிரசாரத் தலைமை நரேந்திர மோடியிடம் விடப்பட்டுள்ளது. இந்த இரு காரணங்களாலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெருத்த பின்னடைவு ஏற்படும்.

சிவ சேனை, அகாலி தளம் தவிர புதிதாக வேறு எந்தக் கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவதற்கான வாய்ப்புகளே இல்லை. காரணம், பாரதிய ஜனதாவின் தேர்தல் கோஷமும் உத்தியும் சிறுபான்மைச் சமூகங்களைச் சீண்டிப்பார்ப்பதாகவே இருக்கப்போகிறது. மிதவாத ஹிந்துக்களும் இதை விரும்பமாட்டார்கள்.

கடந்த 60 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் வெறும் 6 ஆண்டுகள்தான் ஆட்சியில் இருந்திருக்கிறது; அதற்கும் அடல் பிகாரி வாஜ்பாயின் தனிப்பட்ட அரசியல் கவர்ச்சியும், தொலைநோக்குப் பார்வையும், அணுகுமுறையும்தான் காரணம். குஜராத் கலவரத்துக்குப் பிறகு வாஜ்பாய் பிரசாரம் செய்தும்கூட மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.

பாரதிய ஜனதாவின் தலைமையைப் பிடிப்பதில் மூத்த தலைவர்களிடையே போட்டி இருந்ததால் ஆர்.எஸ்.எஸ். உள்ளே நுழைந்து, அதிகாரம் செய்ய முடிந்தது.

சமாஜவாதி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு உத்தரப்பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கில் சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது. வன்செயல்கள் தொடர்வது மிகவும் துரதிருஷ்டவசமானது. 1991 போல 2013 இருக்கப் போவதில்லை.

உத்தரப்பிரதேசத்தின் 80 மக்களவைத் தொகுதிகளில் 50 தொகுதிகளை, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் முலாயமின் சமாஜவாதி கட்சியும் தங்களுக்குள் பங்குபோட்டுக்கொண்டுவிடும். அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தள் உதவியுடனும் முஸ்லிம்களின் ஆதரவுடனும் காங்கிரஸ் கட்சி 13 முதல் 18 இடங்கள் வரையில் வென்றுவிடும். பாரதிய ஜனதாவுக்கு உத்தரப்பிரதேசத்தில் இந்த முறை பெருத்த இழப்பு ஏற்படப்போகிறது.

******

உத்தரகண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சேதம் இதுவரை வரலாறு காணாதது. அந்தச் சேதங்களை விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஏராளமான கிராமங்களும் சிறு நகரங்களும் சுவடே தெரியாமல் அழிந்துவிட்டன. மொத்தம் எத்தனை பேர் இறந்திருப்பார்கள் என்ற ஊக மதிப்பைக்கூட இன்னும் சிறிதுகாலம் கழித்துத்தான் கூற முடியும். இந்தப் பகுதியில் திடீரென ஏற்படும் காட்டு வெள்ளத்தைப் பலமுறை நான் பார்த்திருக்கிறேன். கடும் சேதங்களை விளைவிக்கும் அவற்றையெல்லாம்விட இது மிகப் பெரியது. இதை "இமாலய சுனாமி' என்றே வர்ணிக்கின்றனர்.

ராணுவமும் துணை நிலை ராணுவப்படைகளும் மிகப்பெரிய அளவில் மீட்பு, உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகள் தங்களால் இயன்ற அனைத்தையும் முழு வீச்சில் செய்துவருகின்றன. இப்பகுதியில் உயிரிழப்புகள் நின்று சகஜ நிலைமை விரைவில் ஏற்படவேண்டும் என்று நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

உத்தரகண்ட் மாநிலத்தை மீண்டும் கட்டியெழுப்ப மத்திய அரசில் தனி அமைச்சரையே நியமிக்க வேண்டும். இதற்காகும் செலவுகளுக்கு நம்மாலியன்ற பங்கைச் செலுத்த நாம் அனைவருமே தயாராக இருக்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com