இந்தியர்களின் தனித்தன்மை

மழை, வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்தில் நமது ராணுவம், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப்படை, கடற்படை, விமானப்படை, துணை ராணுவப்படையினர் என ஆயிரக்கணக்கான படை வீரர்கள் துரித கதியில் செயல்பட்டு 90,000-த்துக்கும் மேற்பட்ட மக்களை மீட்டுள்ளனர்.

மழை, வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்தில் நமது ராணுவம், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப்படை, கடற்படை, விமானப்படை, துணை ராணுவப்படையினர் என ஆயிரக்கணக்கான படை வீரர்கள் துரித கதியில் செயல்பட்டு 90,000-த்துக்கும் மேற்பட்ட மக்களை மீட்டுள்ளனர். இதை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். ஆனாலும், மீட்புப் பணியின் போது மோசமான வானிலை காரணமாக மிக் 17-ரக விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது வேதனையளிக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னால் உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சராக நான் இருந்தபோது உத்தரகண்ட் மாநிலத்தின் மலைப் பகுதிகளிலும், சமவெளிப் பகுதிகளிலும் பாதுகாப்புப் படையினருக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சிகளை நேரில் பார்த்திருக்கிறேன். வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டால் அதில் சிக்கித் தவிப்பவர்களை எப்படி மீட்பது என்பது பற்றி பயிற்சி அளிப்பார்கள். அப்போது ஹெலிகாப்டரிலிருந்து வீரர் ஒருவர் கயிற்றில் தொங்கியபடி மீட்புப் பணியில் ஈடுபடும்போது என்ன நடக்குமோ என்று பயமாக இருக்கும். மோசமான வானிலையில் மீட்புப் பணிகளில் கரணம் தப்பினால் மரணம் என்பது போல உயிரைப் பணயம் வைத்துச் செயல்படுவார்கள்.

பத்ரிநாத், கேதார்நாத் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களில் ஆயிரக்கணக்கானவர்களை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினர் மீட்டதாக வெளிவந்த தகவல்கள் குறித்த சர்ச்சையில் ஈடுபட நான் விரும்பவில்லை.

சொகுசு காரில் அதிகாரிகள் சென்று பஸ், விமானம், ஹெலிகாப்டர்கள் மூலம் ஆயிரக்கணக்கானவர்களை மீட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், இது உண்மையாக இருக்குமா என்பது சந்தேகம்தான்.

எனக்குத் தெரிந்து வெள்ளப்பகுதியில் சிக்கிய உள்ளூர் மக்களையும், புனிதயாத்திரை சென்ற சுற்றுலாப்பயணிகளையும் துரிதகதியில் செயல்பட்டு மீட்டு பத்திரமாக அனுப்பிவைத்தது ராணுவத்தினர்தான்.

உத்தரகண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல்வேறு மாநில முதல்வர்களும் தங்களால் இயன்ற உதவியைச் செய்தார்கள். ஆனால், அவர்கள் அதற்காக விளம்பரம் எதையும் தேடிக்கொள்ளவில்லை.

வெள்ளத்தில் சிக்கிய 15,000-த்துக்கும் மேலான குஜராத் மக்களை முதல்வர் நரேந்திர மோடி மீட்டார் என்று சொல்கிறார்கள். உணமையில் ராணுவத்தினரின் கடமை உணர்ச்சியைப் பாராட்டாமல், தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ள முயன்றுள்ளனர்.

இப்படி ஒவ்வொரு மாநில முதல்வர்களும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை விமானம் மூலம் மீட்க முயன்றிருந்தால் என்னவாகியிருக்கும். குழப்பம்தான் மிஞ்சும். மீட்புப் பணிகளில் ராணுவத்தினரின் பங்கு என்ன என்பதை அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மூன்று நாள்கள் உத்தரகண்டில் முகாமிட்டிருந்தார். அவரை எந்த தலைவர்களும் சூழ்ந்துகொள்ளவில்லை; எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொற்றுநோய் பரவியுள்ளதாகவும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அதாவது ஐந்து நகரங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

மறு சீரமைப்புப் பணிகள் என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இந்த விஷயத்தில் மாநில அரசுக்கு மத்திய அரசும், காங்கிரஸ் மேலிடமும் மனமுவந்து உதவ முன்வரவேண்டும்.

ராகுல்காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற வந்தபோது தம்முடன் 107 லாரிகளில் நிவாரணப் பொருள்களையும் கொண்டுவந்தார். ஆனால், அவர் அது பற்றி வலிய வந்து பேட்டி ஏதும் கொடுக்கவில்லை. பத்திரிகைகளும் ஊடகங்களும் எந்த ஒரு விவகாரத்திலும் அவசரப்பட்டு தகவல்களை வெளியிடாமல், உண்மை நிலவரங்களைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். எதிர்மறை சிந்தனையுள்ள சில ஊடகங்கள் ராகுல்காந்தியை குறிவைத்து சில செய்திகளை வெளியிட்ட போதிலும் அற்பமான புகார்களை அவர் காதில் போட்டுக்கொள்ளமால் இருந்தது பாராட்டத்தக்கது.

உத்தரகண்டில் இன்னும் 5 ஆயிரம் முதல் 8 பேர் வரை மீட்கப்படாமல் உள்ளனர். மீட்கப்பட்ட 80,000 பேரில் பலரும் ஒவ்வொரு விதமான அனுபவங்களைப் பெற்றுள்ளனர். ஏராளமானோர் சொல்லமுடியாத துயரங்களை அனுபவித்துள்ளனர்.

பலர் பசி, தாகத்தைப் பொருள்படுத்தாமல் நீண்ட தொலைவு நடந்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். இவர்களுக்கு ராணுவத்தினரும், இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் உதவியதை யாரும் மறக்க முடியாது; மறுக்கவும் முடியாது. இது தவிர நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியுள்ளனர். இந்த ஹீரோக்களின் செயல்களையும் நாம் நன்றி மறக்காமல் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடிந்துவிட்டாலும் இன்னும் மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகள், சீரமைப்புப் பணிகள் ஏராளமாக உள்ளன. மாநில அரசின் உதவிகளையும், மத்திய அரசு மற்றும் வெளிமாநில உதவிகளையும் ஒருங்கிணைத்து உள்துறை அமைச்சகம் மூலம் தனி பிரிவு ஏற்படுத்தியோ அல்லது பேரிடர் மேலாண்மை மையம் மூலமாகவோ செயல்படுத்துவது நல்ல பலனைத் தரும்.

வெள்ளம், நிலச்சரிவால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற உண்மையான நிலவரம் யாருக்கும் தெரியாது. சடலங்களை எரிக்க விமானப்படை ஹெலிகாப்டர்களில் மரக்கட்டைகள் கொண்டுவரப்பட்டதை வைத்துப் பார்க்கும்போது இந்த துயரமான சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கையை நாம் ஊகித்துக்கொள்ள முடியும்.

வெள்ளத்தால் வீடுகளையும் குடும்பத்தினரையும் இழந்த நகரவாசிகள் தங்கள் துயரத்தையும் பொருள்படுத்தாமல் பாதிக்கப்பட்ட இதர மக்களுக்கு உணவும் தங்குமிடமும் அளித்துள்ளனர். இந்தியர்களின் தனித்தன்மை இதுதான்.

************************

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிய ரயில்சேவையை தொடங்கிவைக்க பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியாகாந்தி இருவரும் செல்வதற்கு முதல்நாள் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் நமது ராணுவ ஜவான்கள் 8 பேர் உயிரிழந்தனர்; தவிர 12-க்கும் மேலான வீரர்கள் காயமடைந்தனர். பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தும்போது நாம் அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறோம். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களை முற்றிலும் ஒழிக்க நமது ராணுவம் முனைப்புக்காட்டி வருகிறது. இனி எதிர்காலத்தில் எவரும் காஷ்மீரிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்று பேசமாட்டார்கள்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் ஆதரவு சக்திகளின் செயல்களை இனியும் அரசு சகித்துக்கொள்ளாது. அவர்கள் வேண்டுமானால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சென்று செயல்படட்டும். அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்கட்டும்.

மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொண்டு வருகிறோம். ஆனால், ஜனநாயகத்தில் எதற்கும் ஓர் எல்லை உண்டு. சில சமயங்களில் நாம் கட்டுப்பாட்டுடன் இருந்துள்ளோம். பல சமயங்களில் நாம் பொறுமையுடன் இருந்துள்ளோம். நமது எதிரிகளுடன் சேர்ந்து சதிவேலைகளில் ஈடுபடுபவர்களைவிட நாட்டிற்காக உயிரைக்கொடுக்கும் ஜவான்கள் விலைமதிக்க முடியாதவர்கள் என்கிற உண்மையை நாம் மறந்துவிடவில்லை.

கட்டுரையாளர்: அரசியல் விமர்சகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com