கிரிக்கெட் பிழைத்துக்கொள்ளும்

கடந்த சில நாள்களாகவே பத்திரிகைகளிலும் செய்தி ஊடகங்களிலும் "கிரிக்கெட் சூதாட்டம்' பற்றிய செய்திகள்தான் தொடர்ந்து வருகின்றன.

கடந்த சில நாள்களாகவே பத்திரிகைகளிலும் செய்தி ஊடகங்களிலும் "கிரிக்கெட் சூதாட்டம்' பற்றிய செய்திகள்தான் தொடர்ந்து வருகின்றன. இதுவரை 3 ஆட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 12-க்கும் மேற்பட்ட சூதாட்டத் தரகர்களும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். கிரிக்கெட் அணி நிர்வாகி, ஆட்ட நடுவர் என்று பட்டியல் நீள்கிறது.

எந்த ஒரு விளையாட்டில் பணம் புழங்குகிறதோ அங்கு சூதாட்டமும் இடைத் தரகர்களும் இருப்பது உலக நியதி. கால்பந்து, கூடைப்பந்து, சைக்கிள் ஓட்டம், பேஸ்பால், தட}களப் (அதலடிக்ஸ்) போட்டிகள், குத்துச்சண்டை, பளுதூக்குதல் போன்ற போட்டிகளில் இந்த சூதாட்டங்களுக்குக் குறைவில்லை. கிரிக்கெட்டிலும் பந்தயம் கட்டுவது புதிதல்ல. அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றும் நடந்ததாகச் செய்திகள் வரும்.

"இந்தியன் பிரிமீயர் லீக்' (ஐ.பி.எல்.) நடத்தும் "டுவென்டி-டுவென்டி' போட்டிகளில் பெரும் தொகை சம்பந்தப்பட்டிருப்பதால்தான் இது வெளியே தெரியவந்தது. இதில் தரகர்கள் ஈடுபடத் தொடங்கியதும் நாட்டின் எல்லா மூலைகளிலும் இருப்பவர்கள் பணம் கட்டத்தொடங்கிவிட்டனர். இந்த விளையாட்டுடன் தொடர்புள்ள எல்லா பிரிவினருக்கும் இந்த சூதாட்டத்தில் பங்கு இருக்கிறது என்று தகவல்கள் வெளியானாலும் நான் வியப்படையமாட்டேன். ஆனால் ரசிகர்கள் நம்பிப் பார்க்கும் இந்த விளையாட்டில் இப்படி பணத்துக்காக ஆட்டத்தின் போக்கை மாற்றும் சூதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது.

இந்த சூதாட்டத்துக்காக அங்கும் இங்கும் பிடிபடும் விளையாட்டு வீரர்களைக் குற்றம் சொல்வதில் நியாயமே இல்லை; இவர்களை இயக்கும் சூத்திரதாரி யாரோ, இந்த சூதாட்ட கும்பலின் வளையம் எப்படிப்பட்டதோ, இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் வெளியுலகுக்குத் தெரியும் முகங்களை மட்டுமே சாடுவது சரியாக இருக்காது.

இந்த சூதாட்டம் தொடர்பாக மத்தியப்புலனாய்வுக் கழகத்தையும் (சி.பி.ஐ.), தில்லி போலீஸாரையும் சிலர் குற்றம்சாட்டத் தொடங்கிவிட்டனர். இவ்விரு அமைப்புகளிலும் நம்மில் உள்ளதைப்போல நல்லவர்கள், கெட்டவர்கள், சுமாரானவர்கள் இருக்கின்றனர். எனவே ஒட்டுமொத்தமாகக் குற்றஞ்சாட்டுவது சரியல்ல.

செய்தி ஊடகங்கள், பத்திரிகைகள் இரண்டும் போட்டிபோட்டு இந்த ஊழலைத் தோண்ட ஆரம்பித்திருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பி.சி.சி.ஐ.), இந்தியப் பிரீமியர் லீக் அமைப்பும் (ஐ.பி.எல்.) மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக நேரும்.

அரசியல்வாதிகள், பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் விளையாட்டு இம் மூன்றும் ஓரிடத்தில் சங்கமித்தால் அது "மாலடோவ் காக்டெயில்' எனப்படும் வீரியமிக்க வெடிகுண்டைவிட சேதத்தை அதிகம் ஏற்படுத்தும், எளிதில் வெடிக்கக்கூடிய "கலக்கல் கூட்டணியாக' இருந்துவிடும். எனவே இதில் யாரும் யாரையும் நிதானித்துத்தான் குற்றம்சாட்ட வேண்டும். இப்போது தெரிந்திருப்பதெல்லாம் வெறும் "நுனி' மட்டுமே; "முழுக்கத் தெரிந்தால்' ஒவ்வொரு துறையிலும் முக்கியப் புள்ளியாக விளங்கும் பலர் சிக்குவார்கள். அப்படித் தெரிந்தால் நிலைமை கட்டுமீறிப்போய்விடும்!

இப்போதெல்லாம் விளையாட்டு வீரர்களை அழகிய பெண்கள், போதை மருந்துகள், பணம் ஆகியவற்றைக் காட்டி மயக்கிவிடுகின்றனர். தாங்கள் விரும்பும் அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காகக்கூட இப்படியெல்லாம் செய்கின்றனர். ஆனால் இப்படியெல்லாம் செய்தாலும் பல விளையாட்டுகள் நிலைகுலையாமல் தொடர்கின்றன. கிரிக்கெட்டும் இப்போதைய சூதாட்ட விபத்திலிருந்து தப்பித்து பிழைத்துக் கொள்ளும் என்று நம்புகிறேன்.

விளையாட்டு வீரர்களில் பெரும்பாலானவர்கள் யோக்கியமானவர்கள்; தங்களுடைய உழைப்பின், திறமையின் அடிப்படையிலேயே சாதனை புரிகிறவர்கள். அவர்கள் இந்த சூதாட்டங்கள் பக்கம் தலைவைத்துக்கூட படுப்பதில்லை. பணத்தாசை காரணமாக மிகச் சிலரே இதில் ஈடுபடுகின்றனர்.

கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஐ.பி.எல். இரண்டையும் பார்த்தால் "தேசிய அரசாங்கம்' போல, எல்லா முக்கிய கட்சிகளின் தலைவர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்களுடைய முழுக் கட்டுப்பாட்டில் இந்த விளையாட்டு இருக்கிறது. ஒரு சிலர்தான் மிக அதிகமாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர்; பெரும்பாலானவர்கள் எதையுமே பேசவில்லை. உச்ச நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்; இந்த விவகாரம் விரைவில் முடிவுக்கு வந்தால் கிரிக்கெட் ஆட்டத்துக்கு ஊறு ஏற்படாமல் காக்க முடியும்.

******************************************************

சீனப் பிரதமர் லீ இந்தியாவுக்கு முதல்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். எந்தவிதத்தில் பார்த்தாலும் இது வெற்றிகரமான பயணமே! நம்மிரு நாடுகளும் காலம்காலமாகச் சந்தித்துவரும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தயார் தீர்வு கண்டுவிடமுடியாது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் பெருகிவருவது நல்ல அறிகுறி. சரியான விதத்திலேயே சீனப் பிரதமரும் இந்தியாவுடன் பேசியிருக்கிறார். இன்னும் இருபது ஆண்டுகளில் அமெரிக்கா, சீனா, இந்தியா இம் மூன்றும் உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசுகளாகத் திகழப்போகின்றன. அந்த திசையை நோக்கி நாம் சரியாகவே சென்றுகொண்டிருக்கிறோம். லடாக்கில் சீனப்படை ஊடுருவல் என்று "போர்க்கோலம் பூண்ட' சில செய்தி ஊடகங்கள்தான், எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்று கேள்விக்குறியுடன் பிரச்னையை அணுகுகின்றன; ஒருவேளை அவர்கள் "தங்களுடைய எதிர்காலம் குறித்து' இப்படிக் கவலைப்படுகின்றனரோ?

******************************************************

எந்த இரு நிகழ்வுகளுக்கும் இடையிலான "இடைக்காலம்' என்பது கடப்பதற்கு எளிதானது அல்ல; "எதிர்காலம்' யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக இருக்கலாம். காங்கிரஸ், பாரதிய ஜனதா, மூன்றாவது அணி ஆகியவற்றில் யாருக்கு வாய்ப்புகள் அதிகம் என்று யாராலும் இப்போது கூறமுடியாது. இந்த மூவரைத் தவிர, சமயத்துக்கேற்ப "அங்கும் இங்கும் நகர்ந்து' ஆதரவைத் தரும் அரசியல் கட்சிகளும் உள்ளன. நிச்சயமற்றதன்மை நிலவுவதை நம்மைவிட அரசியல் தரகர்கள் நன்றாக உணர்வார்கள். "அதிகார பலம்' என்பது ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மாறும் தன்மையது. அதே வேளையில், ஆட்சியில் இருக்கும் கட்சியால்தான் ஆதாயத்தை அள்ளிவழங்க முடியும்!

முகலாய சாம்ராஜ்யத்தில் மாமன்னர்களுக்கு இருந்ததைவிட அதிகாரமும் செல்வாக்கும் மத்திய அரசில் ஆட்சியில் இருக்கும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே உண்டு. அவர்கள் விரும்பினால், மத்திய அமைச்சர் பதவியைக்கூட வழங்க முடியும். அதைவிட மிகச்சிறந்த பரிசு ஏதேனும் உண்டா? அடுத்த நிலையில் - மாநில ஆளுநர்கள் பதவி, மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி, அரசுத்துறை நிறுவனங்களின் தலைவர் (சேர்மன்) பதவி, அரசுடைமை வங்கிகளின் இயக்குநர்கள் பதவி - போன்ற பலவற்றை வழங்க முடியும்.

இந்தப் பரிசுகளைப் பெற அரசியல்வாதிகள், அதிகாரிகள், சட்டம் படித்த வழக்குரைஞர்கள், தொழில் அதிபர்கள், பட்டயக் கணக்காளர்கள் (ஆடிட்டர்கள்), வரித்துறை நிபுணர்கள் என நூற்றுக்கணக்கில் வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர். பொதுத் தேர்தலுக்கு முந்தைய ஓராண்டில், அரசு நிர்வாகத்தின் எல்லா நிலைகளிலும்கூட புதிய "அணி சேர்க்கைகள்' ஏற்படுவதுண்டு! இதுவரை பார்த்திராத அரசியல் குட்டிக்கரணங்களை இனி பார்க்கவும் வாய்ப்பு இருக்கிறது.

******************************************************

நாடு முழுக்க நிஜமாகவே "அனல்' பறக்கிறது! 45 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் வெயில் காய்கிறது. குளிர்காலம்தான் உரிய நேரத்தில் முடிவுக்கு வராமல் நீடித்து "கழுத்தை அறுத்தது' என்றால், வெயில் வேறு இப்போது "உயிரை' வாங்கிக் கொண்டிருக்கிறது. நாட்டின் பல மாநிலங்களிலும் கடும் வறட்சி நிலவுகிறது. ஆயினும் பொருளாதாரம் மீட்சி அடைந்துவருகிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை குறைவாகவே இருக்கிறது. தங்கம்தான் நம்முடைய அன்னியச் செலாவணி கையிருப்பைக் கரைத்துக்கொண்டிருக்கிறது.

உரிய காலத்தில் மழை பெய்தால், பொருளாதாரம் நன்றாகிவிடும் என்ற நம்பிக்கை பிறக்கும். இந்த ஆண்டு நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் முதல் 5.5 சதவீதம் வரை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதை இப்படியே பராமரித்தாலே மிகப்பெரிய அதிசயமாகத்தான் இருக்கும்.

எல்லாமே நாட்டு மக்களின் மனோநிலையைப் பொருத்துத்தான் இருக்கிறது. இந்த ஆண்டு நல்ல நம்பிக்கையுடன் மக்கள் செயல்படுவார்கள் என்று கருதுகிறேன். இங்கே ஊழல், அங்கே மோசடி, அங்கே சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, அங்கே பாலியல் பலாத்காரம் என்று தினமும் உள்ளத்தைச் சோர்வடையச் செய்யும் செய்திகளைக் கேட்க மக்கள் விரும்பவில்லை.

"பிரதமரே ராஜிநாமா செய்' என்கிற கோஷத்தைத் தினமும் கேட்டுகேட்டு பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் களைத்துப் போயிருப்பார்.

நாட்டின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) பதவியிலிருந்து ஓய்வுபெற்ற வினோத் ராய்க்கு வாழ்த்துச் சொல்லுவோம். அவருடைய ஓய்வுக்காலம் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் கழியட்டும். புதிதாகப் பதவியேற்றுள்ள சசிகாந்த் சர்மா "அவருடைய வேலையை மட்டும்' பார்ப்பார் என்று நம்புவோம்; இந்த கிரகத்துக்கே பொருந்தாத எண்ணிக்கையில் எல்லாம் ஊழல் நடந்திருப்பதாகவும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் அவராவது அறிக்கை தராமல் தவிர்க்கட்டும்.

நாட்டை நிர்வகிக்கத்தான் அரசுகளை சாமான்யர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பையும் மீறிச் செயல்படுகிறவர்களை மக்கள் தண்டிக்காமல் விடமாட்டார்கள்; எல்லாவித அத்துமீறலும் உரிய நேரத்தில் திருத்தப்படும்.

கட்டுரையாளர்: அரசியல் விமர்சகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com