ஒரு ஊரில் ஒரு விவசாயி

தமிழ்நாட்டில் எந்த ஒரு ஊரிலும் இன்று விவசாயம் செழிப்பாக நடைபெறவில்லை. மாறாக ரியல் எஸ்டேட் தொழில்தான் நன்றாக செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் எந்த ஒரு ஊரிலும் இன்று விவசாயம் செழிப்பாக நடைபெறவில்லை. மாறாக ரியல் எஸ்டேட் தொழில்தான் நன்றாக செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது.

நேற்றுவரை பயிர் செழித்து வளர்ந்து உணவு தந்த பூமி, இன்று மலடாக மாற்றப்பட்டு விட்டது. நகர்ப்புற விரிவாக்கமும், ரியல் எஸ்டேட் பெருக்கமும் ஊரில் இருந்த குளங்களையும், ஏரிகளையும், வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சும் சிறு சிறு கால்வாய்களையும் தூர்ந்து போகச் செய்துவிட்டன. நகர்ப்புறங்களை விரிவாக்குவதால் நாடு விரிவடைவதாக நவீனப் பொருளாதார மேதைகள் சொல்கின்றனர்.

உணவு தரும் நிலங்களை அழித்தோமானால் உணவு என்னாகும்? விவசாயி என்னாவான்? உணவு விஷமாக மாறியதும், விவசாயி இடம்பெயர்ந்து நகரத்தின் தெருக்களில் கூர்க்காவாக மாறியதும்தான் நாம் கண்ட பலன்.

இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு கோடி விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். பதினான்கு கோடி விவசாயிகள் விவசாய நிலங்களை விற்றுவிட்டு விவசாயக்கூலிகளாக மாறியிருக்கிறார்கள்.

ரியல் எஸ்டேட் தொழில், நடுத்தர வர்க்கத்து மக்கள், ஏழை விவசாயிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரை உள்ளடங்கிய சிக்கலான வலையமைப்பைக் கொண்டிருக்கிறது. மிகக்குறைந்த விலையில் விவசாய நிலங்களை வாங்கும் இடைத்தரகர்கள் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் உதவியுடன் வளம் கொழிக்கும் வீட்டு மனைகளாக மாற்றி நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.

தங்களது வாழ்வை மேலும் பிரகாசமாக்கிக் கொள்ள நடுத்தர வர்க்கத்து மக்களும் களத்தில் இறங்குகிறார்கள். ரியல் எஸ்டேட்காரர்களின் தந்திரம் மிக வலியது. வெறும் பொட்டல் காட்டில் சொர்க்கத்தின் கிளை ஒன்று வரப்போவதாகச் சொல்லி, அதைச்சுற்றிலும் வீட்டு மனைகளை உருவாக்குகிறார்கள். தரகர்கள் துணையுடன் நடுத்தர வர்க்க மக்களைக் கவர்கிறார்கள். அந்த மக்கள், சேமித்து வைத்திருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் மனையில் முதலீடு செய்கிறார்கள். சிலர் அம்முதலீடுகளை இழக்கவும் நேரிடுகிறது.

தங்கள் குழந்தைகளின் கல்வியை, உணவை, ஊட்டச்சத்தை, பொழுதுபோக்கை தியாகம் செய்து சேர்த்த சேமிப்புதான் அவர்கள் இழக்கும் தொகை. ஏமாற்றுபவர்களை சட்டப்படி தண்டித்துவிடலாம். ஆனால் ஏமாறுபவர்களை எந்த சட்டத்தாலும் காப்பாற்ற முடியாது.

ரியல் எஸ்டேட் தவிர வேறு பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்களும் விவசாய நிலங்களை வாங்கிக் குவிக்கின்றன. அத்தொழிற்சாலை உறிஞ்சும் தண்ணீர், சுற்றியுள்ள பகுதிகளையும் வறண்ட பகுதிகளாக்கி விடுகிறது. ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் எல்லாருமே இப்படிப்பட்டவர்கள் என்று கூற முடியாது. நேர்மையாக தொழில் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

அதுபோலவே இச்சூழலை எதிர்த்து வெற்றிகரமாக விவசாய வாழ்க்கையை நடத்தும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எங்கள் எதிர்வீட்டு தாத்தா ஒருவர் தேசிய நெடுஞ்சாலைக்குப் பக்கத்திலேயே பல ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக்காரர். அவரது நிலத்தைச் சுற்றி ரியல் எஸ்டேட்காரர்கள் வந்து விட்டாலும் அவர் மட்டும் தன் நிலத்தில் கரும்பு,சோளம் பயிரிடுவதைக் கைவிடவில்லை. நிலத்தை விற்று சொத்துகளைப் பிரிக்கவேண்டும் என்னும் குடும்பத்தாரின் கோரிக்கையையும் அவர் நிராகரித்துவிட்டார். ரியல் எஸ்டேட்காரர்கள் இன்னும் எவ்வளவு நாளைக்கு அவரை விட்டுவைப்பார்கள் என்று தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com