மதுவெனும் அரக்கன்

சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊர் திரையரங்கத்திற்கு சினிமா பார்க்கச் சென்ற அனுபவங்கள் எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது.

சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊர் திரையரங்கத்திற்கு சினிமா பார்க்கச் சென்ற அனுபவங்கள் எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. அத்திரையரங்கத்திற்கு எங்கள் வீட்டிலிருந்து குறுக்காகத்தான் செல்ல வேண்டும். பள்ளிக்கூட மைதானம், குளம், மாதாகோவில் தாண்டியவுடன் ரயில் நிலைய தண்டவாளத்தைக் கடப்பதற்கு முன்னர் ஒரு சாராயக்கடையையும் கடந்தாக வேண்டும். அது பாதையிலிருந்து சற்று ஒதுக்குப்புறமாகத்தான் இருக்கும். ஒவ்வொரு தடவை அதைக் கடந்து செல்லும்போதும் என்னுடைய ஓரக்கண்ணால் அக்கடையைப் பார்ப்பேன்.

இரண்டு அல்லது மூன்று "குடிமகன்'கள் அங்கு நின்று கொண்டிருப்பார்கள். தாடியும் மீசையுமாக, ஒடிசலான அல்லது தடியான தேகத்துடன் அவர்கள் காட்சி தருவார்கள். சிறுவனாக இருந்தபோது சாராயக்கடை எனக்குள் ஏற்படுத்தியிருந்த பிம்பங்கள் இவர்கள் உருவங்கள்தான்.

இம்மனிதர்களை தெருக்களில் பார்க்க நேரிடும்போதெல்லாம் எனக்குள் ஒருவித பயமும் வெறுப்பும் தொற்றிக்கொள்ளும். விரைவாக அவர்களைக் கடந்து சென்றுவிட வேண்டும் என்று வேகமாக நடப்பேன். பின்னர் சில ஆண்டுகள் கழித்து என் தந்தையின் கடைக்கு அடிக்கடி செல்லும்போதெல்லாம் ஆற்றுக்கு அக்கரையில் சாராயக்கடை பெயர்ப்பலகை பளிச்சென்று கண்ணுக்குத் தென்படும். மாலைவேளைகளில் அங்கு வரும் "குடிமகன்'களை விரல்விட்டு எண்ணிவிடலாம். குடிப்பழக்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்போது இருந்தது. இன்று எல்லா இடங்களிலும் அப்பழக்கம் நீக்கமற நிறைந்திருக்கிறது. இப்போதெல்லாம் நமது இளைஞர்கள் கொஞ்சமும் வெட்கப்படுவது கிடையாது. திறந்தவெளிகளில் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க மதுவைக் குடிக்கிறார்கள்.

மதுவின் வாசனையறியாத கடந்த தலைமுறையின் பெரும்பகுதி இத்தலைமுறையை அதிர்ச்சியோடும், வேதனையோடும் பார்த்துக்கொண்டிருக்கிறது. என்ன செய்யப்போகிறோம் என்று குழம்புகிறது.

சமீபத்தில் மதுவுக்கெதிரான ஒரு கலந்துரையாடலை நண்பர்கள் சேர்ந்து நடத்தினோம். அதில் பெண்களும் கலந்துகொண்டனர். அவர்களில் சிலர் விதவைகள்.

அவர்கள் கூட்டத்தில் பேசும்போது குடியினால் தங்கள் குடும்பம் பட்ட வேதனைகளையும், இழப்புகளையும் எடுத்துரைத்ததோடு மதுவை எதிர்த்துப் போராட உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.

காலம் கடந்து கொண்டிருக்கிறது. நமது கண்முன்னேயே நம்முடைய அடுத்த தலைமுறை புதைகுழியில் வீழ்ந்துகொண்டிருக்கிறது. தந்தையை, தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய மகன் மருத்துவமனையில் கல்லீரல் வீங்கிப் படுத்துக்கிடக்கிறான்.

அவனருகில் அவனது தாயும் தந்தையும் மனைவியும் பரிதவித்துக் கிடக்கிறார்கள். அவனுடைய குழந்தைகள் தந்தையை இழக்கப் போகிறோம் என்ற புரிதலின்றி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டை, சமூகத்தை, நட்புகளை, உறவுகளை, குடும்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக இந்த குடி சீரழித்துக் கொண்டிருக்கிறது.

சந்தோஷமோ, துக்கமோ இன்றைய இளைஞன் மதுக்கடைகளை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறான். துளி மது என்பது துளி விஷம் என்பதை அவன் உணரவில்லை. போதைக்கும், மகிழ்ச்சிக்கும் இடையேயான வித்தியாசத்தை அவன் உணர்வதில்லை. அவன் உணரும் நேரம் வரும்போது காலம் கடந்துவிட்டிருக்கும்.

அருகிலிருக்கும் பள்ளிகளைப் புறக்கணிக்கும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிக்கு அருகிலேயே இருக்கும் மதுபானக்கடைகளை பயமின்றி நாடுகிறார்கள்.

கல்விக்கண் திறக்கவேண்டிய ஆசிரியர்கள் சிலரும் பாட்டில்களைத் திறக்கிறார்கள். தங்களது மகள்களையொத்த மாணவியரிடம் தகாத முறையில் நடக்கிறார்கள். எல்லாம் குடியின் போதையின் விளைவால் நடைபெறுகிறது. தந்தை குடிக்கிறார், மாமா குடிக்கிறார், சித்தப்பா குடிக்கிறார், ஆசிரியர் குடிக்கிறார், பிடித்த சினிமா ஹீரோக்கள் குடிக்கிறார்கள். இவர்களின் வழியில் பாவப்பட்ட மாணவனும் இளம் வயதிலேயே மதுவின் மடியில் அடைக்கலமாகிறான்.

இது பற்றி கேட்டால் நாம் நாகரிகம் தெரியாதவர்கள்; பழைய கற்காலத்தவர்கள் என்று பழிக்கப்படுவோம். பண்பாட்டின் கொடி இப்போது தலைகீழாகப் பறந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் ஒருநாள் என் மகளை அழைத்துக் கொண்டு கடைவீதிக்குச் செல்லும்போது மதுபானக்கடை ஒன்றைக் கடந்து செல்லவேண்டியதாயிற்று. "அப்பா இங்கு என்ன இவ்வளவு கூட்டம் என்று கேட்டாள்' மகள். "எல்லோரும் மதுபானம் குடிக்கிறார்கள், இது மதுபானக்கடை' என்றேன். உடனே மகள் சொன்னாள், "அப்பா அது ஒரு படத்தின் பெயர். இந்தக் கடைக்கு வேறொரு பெயர் இங்கிலீஷ்ல சொல்லுவாங்கள்ல' என்றாள். மது பற்றிய சித்திரங்கள் எதிர்காலத் தலைமுறையின் மனங்களில் மிகத் தெளிவாகப் படிந்து போய்விட்டன.

சமீபத்தில் என் ஊருக்குச் சென்றிருந்தேன். என்னுடைய நண்பனின் பதிமூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவன் வீட்டு வாசலில் அவனுடைய படத்தை வைத்திருந்தார்கள். மாணவப் பருவத்திலிருந்து ஆரம்பித்திருந்த அவனுடைய குடிப்பழக்கம் காலப்போக்கில் தீவிரமாகி வெவ்வேறு நோய்களும் அவனை முழுமையாக அடிமைப்படுத்தியிருந்தது. அவன் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த அப்படத்தை ஒருகணம் உற்றுப்பார்த்தேன். அவன் இறந்த அன்று இன்னொரு நண்பனின் தோளில் முகம் புதைத்து நான் அழுதகாட்சி என் கண்முன்னால் வந்துசென்றது. வருங்காலத்தில் இத்தகைய அழுகைக் காட்சிகள் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன் பெருமூச்சு விட்டபடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com