சிரியா: இப்போதைக்கு இடைவேளை

ரஷ்யாவின் வற்புறுத்தலுக்கு இணங்க சிரியா தன்னிடமுள்ள ரசாயன ஆயுதங்களை அழித்துவிடுவதாக உறுதி அளித்திருக்கிறது.

ரஷ்யாவின் வற்புறுத்தலுக்கு இணங்க சிரியா தன்னிடமுள்ள ரசாயன ஆயுதங்களை அழித்துவிடுவதாக உறுதி அளித்திருக்கிறது. அமெரிக்காவும் இப்போதைக்கு அரசியல் தீர்வு காண ஒத்துக்கொள்வதாக இறங்கி வந்திருக்கிறது. சிரியாவில் நிரந்தரமாக அமைதி திரும்புமா என்பது கேள்வியாகத்தான் இருக்கும்.

 அசீரியர்கள், கிரேக்கர்கள், பாபிலோனியர், பாரசீகர் மற்றும மங்கோலியர்களால் ஆளப்பட்ட சிரியாவை 634ல் இஸ்லாமிய அரபியர்கள் கைப்பற்றினர். பின்பு 1516இல் துருக்கியர்கள் சிரியாவைக் கைப்பற்றித் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். காலனியாதிக்கக் காலத்தில் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சிக்காரர்களும் சிரியாவைக் கூறு போட்டனர்.

  இரண்டாம் உலகப் போருக்குப்பின் 1944இல் மேற்கத்திய காலனி ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றது சிரியா.  1970இல் தற்போதைய அதிபர் ஆசாத்தின் தந்தையான ஹப்சல் அல் ஆசாத் இராணுவ அமைச்சராயிருந்து இரத்தமில்லாப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்து குடும்ப ஆட்சியை நிறுவினார். அன்று  முதல் இன்றுவரை சிரியாவில் ஆசாத்தின் குடும்ப ஆட்சிதான் நடந்து வருகிறது. இதுதான் சுருக்கமாக சிரியாவின் சரித்திரம்.

 தற்போதைய அதிபரான பஷார் அல் ஆசாத்துக்கு எதிர்ப்பு ஏற்பட்டதும் சிரியாவை அமைதிவழியில் கூறுபோடத்தான் அமெரிக்கா, ரஷ்யா, ஈரான், துருக்கி போன்ற நாடுகள் திட்டமிட்டன. ஆனால் எதிர்ப்பு கிளர்ச்சியாக மாறி 2011இல் வன்முறையாக வெடித்தவுடன் ஆசாத்தை வெளியேற்றுவதுதான் அமெரிக்காவின் கொள்கை என்று அறிவித்தார் ஒபாமா. இத்துடன் மறைமுகமாக ஐரோப்பாவும், துருக்கியும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்துவந்தன.

  ஆசாத், ஷியா பிரிவின் அலாவைட் உட்பிரிவைச் சார்ந்தவர். எனவே, சன்னி மற்றும் குர்த் பிரிவு மக்களை இவர் ஆட்சி நசுக்கியது. இவருக்கு ஷியாவைப் பின்பற்றும் ஈரானும், பயங்காரவாத அமைப்பாயிருந்து தேர்தல் மூலம் ஆட்சியை லெபனானில் பிடித்து, இஸ்ரேலை அங்கீகரிக்காமல் அழிக்க நினைக்கிற ஹிஸ்புல்லா அமைப்பும் உதவுகின்றன. ஆசாத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான ஹிஸ்புல்லா போர் வீரர்கள் தற்போது கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நவீன ஆயுதங்களோடு போராடுகின்றனர்.

  பனிப்போருக்குப் பின்பும் ரஷ்யா அன்னிய நாடு ஒன்றில் அமைந்திருக்கும் ஒரே கப்பற்படைத் தளம் சிரியாவின் டார்க்டஸ் துறைமுகத்தில்தான் உள்ளது. அதனால்தான்  சிரியாவை ரஷ்யாவும், ஈரானும் தொடர்ந்து நேரடியாகவும், சைனா மறைமுகமாகவும் ஆதரித்து அனைத்து உதவிகளும் செய்து வருகின்றன.

  சிரியாவில் மார்ச் 11, 2011இல் தொடங்கிய உள்நாட்டுப் போரில் இதுவரை ஒரு லட்சத்துக்கும்மேற்பட்டவர்கள்  உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதில் ஆசாத் எதிர்ப்பார்கள் சிரியாவின் வடக்கு எல்லை மலைப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த குர்த் இன மக்களை ஆரவாரமின்றி ஆயிரக்கணக்கில் கொன்று குவித்ததை உலகம் பொருட்படுத்தவில்லை. இத்துடன் சுமார் 10 இலட்சம் பேர் பெரும்பாலும் குழந்தைகளும் இளைஞர்களும் அகதிகளாக ஜோர்டான், ஈராக், ஈரான், லெபனான் மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இரண்டு கோடி மக்களைக் கொண்ட சிரியாவில் சுமார் 40 இலட்சம்பேர் உள்நாட்டிலேயே அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

  மார்ச் மற்றும் ஆகஸ்ட் 21இல் சிரிய அதிபர் ஆசாத்தின் தம்பியான மகீர் அல் ஆசாத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வலிமையான குடியரசுப் படை டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியான ஹவுட்டாவிச்சில் விஷவாயுவைப் பயன்படுத்தி 1421பேரைக் கொன்றதாகவும் இதில் நானூறு பேர் குழந்தைகள் என்றும் 3600 பேர் பாதிக்கப்பட்டதாகவும் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் சிரியாவோ இதை வன்மையாக மறுக்கின்றது.

   விஷவாயுவைப் பயன்படுத்தியது யார் என்ற உண்மை இன்னும் ஐ.நா.வால் உறுதி செய்யப்படவில்லை.   இத்தகைய விஷவாயு, தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டவை அல்ல என்று ரஷ்ய நிபுஷணர்கள் கூறுகின்றனர்.

 மூன்று மாதங்களுக்கு முன்பு துருக்கி எல்லையில் ஆசாத் எதிர்ப்பு அமைப்பான அல்கொய்தா தீவிரவாதிகளிடமிருந்து இரண்டு கிலோ எடையுள்ள விஷவாயுவைத் துருக்கி இராணுவம் கைப்பற்றியுள்ளது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆசாத் எதிர்ப்பாளர்கள்தான் இராசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினர் என்கிறது ஈரான்.

   சதாம் உசேன் தன் நாட்டில் பேரழிவு ஆயுதங்களைத் தன் ஆயுதக் கிடங்கிலும், பதுங்குக் குழிகளிலும், பங்களாக்களிலும், படுக்கை அறைகளிலும், ஏன் படுக்கையின் கீழும் பதுக்கி வைத்திருந்ததாகப் புரளியை அவிழ்த்துவிட்டு சதாமைப் பதவியிலிருந்து இறக்க ஜார்ஜ் புஷ் போர்த் தொடுத்ததும், சூடானில் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றது என்கிற தவறான தகவலின் அடிப்படையில் சூடானில் பில் கிளிண்டன் நடத்திய தாக்குதலும் உலகம் அறிந்ததே. அதனால்தான், அவசரப்பட்டு ஆட்சி மாற்றம் என்ற போர்வையில் ஆசாத்திற்கு எதிராக சிரியா மீது ஒபாமா அரசு நேரிடையாகக் களத்தில் இறங்கிப் போர் தொடுப்பதற்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

  ஜனநாயகப் புரட்சி மூலம் நடந்த ஆட்சி மாற்றத்தால் அமெரிக்கா ஏற்கெனவே தன் ஆதரவு அரசுகளை எகிப்து, டுனிஷியா, பெக்ரைன், ஏமன் போன்ற நாடுகளில் இழந்துவிட்டது. எண்ணெய்வள சிரியாவில் நிலையாமையை உருவாக்கி தன் ஆதரவு பொம்மை அரசை நிறுவுவதன் மூலம் எண்ணெய் வளத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். அதன் மூலம், சிரியாவைத் தொடர்ந்து ஆதரித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலை எதிரி நாடுகளாகக் கருதும் ஈரானைத் தனிமைப்படுத்தவும், பலவீனப்படுத்தி தாக்கவும், ரஷ்யா மற்றும் சீன நாடுகளின் செல்வாக்கைத் தடுத்து அந்நாடுகளுக்குத் தன் பலத்தையும், உறுதியையும் வெளிப்படுத்தவும் அமெரிக்கா திட்டமிடக் கூடும். இஸ்ரேலை அழிக்க நினைக்கும் ஹிஸ்புல்லா அமைப்பைப் பலவீனப்படுத்தி லெபனானைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்ய சிரியாவைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம் என்று அமெரிக்கா கருதுகிறது.

    தள்ளாடிக் கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தை, போர் ஏற்பட்டால் பலப்படுத்த முடியுமோ இல்லையோ, நிச்சயமாக மக்களின் கவனத்தைத் திருப்ப முடியும் என்பதுகூட ஒபாமா அரசின் ராஜதந்திரமாக இருக்கக் கூடும்.

  இங்கிலாந்து பாராளுமன்றம் பிரதமரின் யுத்தக் கரங்களைத் தற்போது கட்டிப்போட்டுள்ளது. அமெரிக்க மக்களின் கருத்துக்கணிப்பும், உலகப் பொதுமக்களின் எதிர்ப்பும், தன் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடாதே என்ற தயக்கமும், ஒபாமாவைத் தற்காலிகமாகப் போரைத் துவக்காமல் தடுத்துக் கொண்டிருக்கின்றது.

  அமெரிக்க மக்களவை, சிரியா மீது போர் தொடுக்கும் முடிவுக்கு ஆதரவு அளிக்காமல் போகும் சூழ்நிலை காணப்படுவது இன்னொரு முக்கியமான காரணம். அதனால்தானோ என்னவோ, மக்களவை சிரியா மீதான குறைந்தபட்சத் தாக்குதலுக்கு அனுமதிகோரும் அமெரிக்க மக்களவை வாக்கெடுப்பை ஒபாமா தள்ளிப் போட்டிருக்கிறார்.

   அமெரிக்க வரலாற்றில் வலிமையான அதிபர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்தார்களே தவிர, காங்கிரசின் அனுமதி பெற்று முடிவெடுக்கக் காத்திருந்ததில்லை என்பது இவர்கள் வாதம்.

  உதாரணமாக, 1983 மற்றும் 1986இல் ரீகன் லிபியா மற்றும் கிரினெடாவைத் தாக்கியது 1995, 1996, 1998இல் பில் கிளின்டன் போஸ்னியா, கொசாவோ, அப்கானிஸ்தான் மற்றம் சூடான் மீது நடத்தின தாக்குதல்கள் காங்கிரஸின் அனுமதியின்றி நடத்தப்பட்டவைதான். அவர்கள் வழியில் நடைபோட ஒபாமா தயங்குகிறார் என்பது தெரிகிறது.

 அமெரிக்கா எதிர்நோக்கும் தர்மசங்கடத்திற்கு வடிகால் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது ரஷ்யா. சிரியா மீதான தாக்குதலை ஏற்றுக் கொள்ளாத ரஷ்யா, சிரியாவைக் சற்று பணிந்து போக வைத்திருக்கிறது. தன்னிடமுள்ள ரசாயன ஆயுதங்களை அழித்து விடுவதாகவும், சர்வதேசப் பார்வையாளர்களின் கண்காணிப்புடன் அதை உறுதிப்படுத்துவதாகவும், அது தொடர்பான வார்சா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகவும் சிரியா வெளிவிவகாரத்துறை அமைச்சர் வாலித் முவாலிம் உறுதியளித்திருக்கிறார்.

 அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் ராணுவ நடவடிக்கையைவிட சர்வதேசத் தலையீட்டின் மூலம் அரசியல் தீர்வு ஏற்படுத்துவதைத்தான் விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

 வர இருக்கும் ஐ.நா. சபையின் பொதுக் குழுக் கூட்டத்தில், பராக் ஒபாமா சிரியா பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார். உடனடியாக சிரியா மீதான தாக்குதலுக்கான வாய்ப்பு இல்லை என்று கூறலாம். ஆனால் இதுவே முடிவான முடிவாக இருக்குமா என்று சொல்லிவிட முடியாது. ஈராக்கிலும் சர்வதேசக் கண்காணிப்பு ரத்து செய்யப்பட்டது. அதனால், படையெடுப்பு பின் தொடர்ந்தது. சிரியாவில்?

 இப்போதைக்கு ரஷ்யாவின் பிடிவாதத்தாலும், புரட்சியாளர்களுக்கு அல் கொய்தாவின் ஆதரவு இருப்பதால் அமெரிக்கா தயங்குவதாலும், சிரியா மீதான ராணுவத் தாக்குதல் போடப்பட்டிருக்கிறது. சிரியா அரசிடமும், புரட்சியாளர்கள் வசமும் இருக்கும் ரசாயன ஆயுதங்களை முழுமையாக அழித்துவிட முடியுமா, அழித்துவிட அவர்கள் சம்மதிப்பார்களா என்கிற கேள்விக்கு விடை கிடைக்காதவரை, ஈரானின் எண்ணெய்க் கிணறுகள் மேலைநாடுகளின் மேலாதிக்கத்தின் கீழ்வராதவரை, ஏற்பட்டிருப்பது தாற்காலிக சமாதானமாகத்தான் இருக்கும்.

கட்டுரையாளர் : பேராசிரியர், புதுவை மத்திய பல்கலைக்கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com