பிட் காயின்: ஓர் எச்சரிக்கை மணி

மந்திய ரிசர்வ் வங்கி, கடந்த 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை மூலம், பிட் காயின்கள் (Bit Coins) பற்றி ஓர் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது. பிட் காயின்கள் எந்த ஒரு பொருளாதார கட்டுப்பாட்டுக்கும் உள்படாத, ஊக வணிகத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட கற்பனை கஜானாவில் பிறந்த நாணய மாற்று முறை.

மந்திய ரிசர்வ் வங்கி, கடந்த 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை மூலம், பிட் காயின்கள் (Bit Coins) பற்றி ஓர் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது. பிட் காயின்கள் எந்த ஒரு பொருளாதார கட்டுப்பாட்டுக்கும் உள்படாத, ஊக வணிகத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட கற்பனை கஜானாவில் பிறந்த நாணய மாற்று முறை.

அந்த நாணய புழக்கத்திற்கு பின்னால், அறிவிக்கப்பட்ட நிஜ சொத்துகள் கிடையாது. அதன் மதிப்பில் ஏற்படும், யூகங்களுக்கு அப்பாற்பட்ட ஏற்ற தாழ்வுகளால்,அந்த நாணய மாற்று முறையை பின்பற்றுபவர்களுக்கு பெருத்த நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதுதான் அந்த எச்சரிக்கையின் சாராம்சம்.

சமீப காலத்தில், இந்தியாவில், பிட்காயின்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 30,000க்கும் மேல் உயர்ந்திருப்பது இந்த எச்சரிக்கைக்கு முக்கிய காரணமாகும். உலகெங்கிலும், சுமார் 1,72,000 அங்கத்தினர்களை கொண்ட திட்டம் இது.

ஒவ்வொரு நாட்டிலும், லீகல் டெண்டர் என்று சொல்லப்படும் தனிப்பட்ட நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அவற்றின் புழக்கம், அந்தந்த நாடுகள் சார்ந்த பொருளாதார விதிகளுக்கு உள்பட்டவை. அம்மாதிரி விதிகளை பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் முறைப்படுத்தி, நாணய புழக்க செயல்பாடுகளை மேற்பார்வையிட்டு வருகின்றன. மேலும், அச்சடிக்கப்படும் நாணய மதிப்பை தங்கம் போன்ற அரசாங்க சொத்துகள், தாங்கி நிற்க வேண்டும். நாணயங்கள், எல்லை தாண்டுவதற்கு பலவிதமான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.

இம்மாதிரி, பாரம்பரிய விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் உடைத்து எறிந்து, சுதந்திரமான சர்வதேச புழக்கத்திற்காக பிறந்ததுதான் பிட் காயின் என்ற நாணய மாற்று முறை. 1998இல் வீடே என்பவரின் கற்பனையில் உதித்த யோசனைக்கு, 2009இல், சதோஷி நகமோட்டோ என்பவர் செயல் வடிவம் கொடுத்து, அதற்கான மென்பொருளை அறிமுகப்படுத்தி, பிட்காயின் டிஜிட்டல் கஜானாவை திறந்து வைத்தார். இந்தத் திட்டத்தில் சேருபவர்களுக்கு தனி கடவு சொல்லும், சங்கேத வார்த்தையும் வழங்கப்படுகின்றன.

அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் நாணயங்களை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தி, அங்கத்தினர்கள் பிட்காயின்களை வாங்கலாம். அவ்வாறு வாங்கப்பட்ட தொகை, ப்ளாக் செயின் என்ற இணைய கணக்குப் புத்தகத்தில் அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, இருப்பிற்கு ஏற்ப, அங்கத்தினர்கள் செலவு செய்து கொள்ளலாம். ஆகவே, இதை ஒரு டிஜிட்டல் நாணயம் என்று சொல்லலாம். ஆரம்ப கணக்குப்படி, அதிக பட்சமாக 21 மில்லியன் பிட்காயின் வரைதான் புழக்கத்தில் இருக்க முடியும். ஆனால், இந்த எண்ணிக்கையை, எளிதாக உயர்த்தி விடலாம்.

தற்போது புழக்கத்தில் இருக்கும் பிட்காயின்களின் முக மதிப்பு 1.5 பில்லியன் டாலர்கள் (சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய்) என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த பணமாற்று முறையை ஏற்றுக்கொண்டுள்ள நிறுவனங்களிடமிருந்து வாங்கும் பொருள்களின் விலைக்கான தொகையை பிட்காயின்கள் வாயிலாக செலுத்தலாம். பெரும்பாலானோர், பிட்காயின்களை ஒரு முதலீடாக கருதி, அதை வாங்கி, தங்கள் டிஜிட்டல் கணக்கில் சேமிக்கின்றனர்.

மற்ற சர்வதேச நாணயங்களைப் போல, பிட் காயின்களின் மதிப்பும் தினந்தோறும் தேவை, புழக்கம் ஆகிய காரணிகளுக்கு உள்பட்டு மாறுபடுகின்றன. அந்த மாறுபாடுகள் கற்பனைக்கு எட்டாத எல்லைக் கோடுகளை தாண்டுகின்றன. 2011ஆம் ஆண்டு துவக்கத்தில், 0.30 அமெரிக்க டாலராக இருந்த பிட்காயின்களின் மதிப்பு, பிற்பகுதியில் 32 டாலராக உயர்ந்து, மீண்டும் 14 டாலராக குறைந்தது.

2012ஆம் ஆண்டில், அதற்கு கிடைத்த மீடியா விளம்பரத்தால், பிட்காயின்களின் அங்கத்தினர் எண்ணிக்கை வெகுவாக கூடியது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சர்வதேச வியாபார நிறுவனங்களும், 20,000க்கும் மேற்பட்ட ஆன் லைன் நிறுவனங்களும், பிட் காயின் நாணய பரிவர்த்தனை முறையை ஏற்றுக் கொண்டுள்ளன.

சமீபத்தில், இந்த பண பரிவர்த்தனை மூலம், போதை மருந்து கடத்தல் நடந்திருப்பதை கண்டுபிடித்த அமெரிக்க புலனாய்வு துறை, 28.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள பிட்காயின்களை பறிமுதல் செய்திருக்கிறது.

ஆனால், இந்த பரிமாற்று முறைக்கு இதுவரை எந்த தடையும் விதிக்கப்பட வில்லை. சீனாவில், 7.2 பில்லியன் சந்தை மதிப்புள்ள 12 மில்லியன் பிட்காயின்கள் புழக்கத்தில் இருக்கின்றன. பிட் காயின்களை ஒரு கமாடிட்டியாகத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை நிதி நிறுவனங்கள் மூலம் பரிவர்த்தனை செய்யக்கூடாது என்பதற்காக, சீன மத்திய வங்கி சமீபத்தில் சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதனால், சீன சந்தையில், 900 டாலராக இருந்த பிட் காயினின் மதிப்பு, தற்போது 700 டாலராக குறைந்திருக்கிறது. 2013ஆம் ஆண்டு முற்பகுதியில் இதன் மதிப்பு 1200 டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ஒவ்வொரு நாட்டு சந்தையிலும் வெவ்வேறு விதமாக மாறிக்கொண்டிருப்பது, இதன் நிலையற்ற தன்மையையும், சீரான மதிப்பீட்டு முறை இல்லாததையும் குறிக்கிறது.

போதை மருந்து கடத்தல் தவிர, 10 சதவீத அளவிலான சர்வதேச பிட் காயின் பண பரிவத்தனை, ஆன் லைன் சூதாட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பல பாதுக்காப்பு வளையங்களையும் மீறி, பிட் காயின் கஜானாவில் சேமிக்கப்படும் தொகைகள், இணையதள கடத்தல் மூலம் களவு போய்க்கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்கும் குறைவில்லை. உலகின் பல்வேறு பகுதிகளில் முளைத்த எக்úஸஞ்சுகள் இந்த பணபரிமாற்று முறைக்கு இடைத்தரகர்களாக செயல்படுகின்றன.

இது போன்ற கட்டுப்பாடில்லாத பண பரிவர்த்தனைகள், பல நாட்டு அரசாங்கங்களின் கவனத்தை ஈர்த்து, பல்வேறு நடவடிக்கைகளுக்கு தற்போது வழி வகுத்திருக்கின்றன. இந்த நாணய பரிவர்த்தனை முறையை தாய்லாந்து தடை செய்திருக்கிறது. ஃபின்லேன்ட் அரசு, இந்த பரிவர்த்தனை மூலம் ஈட்டப்படும் லாபத்திற்கு புதிய வரி அறிவித்திருக்கிறது. எந்த விதமான சட்டதிட்டங்களுக்கும் உள்படாத இந்த பரிவர்த்தனை முறையைப் பற்றி, சிங்கப்பூர் அரசாங்கம் தன் கவலையை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், பெங்களூரு மற்றும் மும்பாயில் உள்ள சில வணிக நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருள்களுக்கு செலுத்த வேண்டிய தொகைக்கு பதிலாக பிட் காயின்களை செலுத்தலாம் என்று அறிவித்திருக்கின்றன. இந்த அறிவிப்பு, பிட் காயின் திட்டத்தில் புதிய அங்கத்தினர்களை சேர்க்கும் உத்தியாக கருதப்படுகிறது.

கடந்த காலத்தைப் போல, பிட் காயின்களின் மதிப்பு பல மடங்கு உயரும், தற்போதைய விலையில் வாங்கி விற்றால், பல மடங்கு லாபம் ஈட்டலாம் என்ற தவறான எண்ணத்தில் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள், ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை மணிக்கு செவி சாய்க்க

வேண்டும்.

பிட் காயின் வியாபாரத்தை பல நாடுகள் முழுவதுமாக அங்கீகரிக்கவில்லை. அதன் மூலம் நடக்கும் பண பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்த, முறையான நிர்வாக அமைப்பு இல்லாததால், யாரிடமும் முறையிட்டு, தீர்வு காணமுடியாது. இந்த நாணயத்தின் மதிப்பீடு, எந்தவொரு பொருளாதார சூத்திரத்திற்கும் உள்பட்டதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, எதிர்பாராத சில காரணங்களினால், திட்ட செயல்பாடுகள் முடக்கப்பட்டால், போட்ட முதலீடுகள் கடலில் கரைத்த பெருங்காயமாகி விடும்.

இம்மாதிரி முதலீடு சம்பந்தப்பட்ட விஷயத்தில், பேராசைகளை புறம் தள்ளி, விவேகத்தை முன்னிறுத்தி செயல்பட்டால்தான், பெருத்த நஷ்டங்களிலிருந்து தப்பிக்க முடியும் என்பதை அனைவரும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

லாபம் என்ற பசுந்தழைகளுக்கு கீழ், பெரிய நஷ்டக் குழிகள் இருக்கும் என்பதை உணர்ந்து, அவற்றினுள் விழாமல் நம்மை பாதுகாத்துகொள்ளத்தான், இம்மாதிரி பொது நல எச்சரிக்கை மணிகள் அடிக்கப்படுகின்றன. அவற்றுக்கு செவி சாய்த்தால், பொருளாதார பேரிழப்புகளிலிருந்து நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ளலாம்.

கட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com