பண்டைய இந்திய மருத்துவம்

இந்தியாவில் பழங்காலம் தொட்டே ஒரு மருத்துவ முறை இருந்து வருகிறது. இது ஆயுர்வேதம் என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் பழங்காலம் தொட்டே ஒரு மருத்துவ முறை இருந்து வருகிறது. இது ஆயுர்வேதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மருத்துவ முறையை வளர்த்தெடுத்தவர்களில் சரகர், சுசிருதர் ஆகிய இருவரும் பிரபலமானவர்கள். முன்னவரது நூல் "சரக சம்ஹிதை' என்றும், பின்னவரது நூல் "சுசிருத சம்ஹிதை' என்றும் அழைக்கப்படுகிறது. சம்ஹிதை என்றால் விரிவான தொகுப்பு என்று பொருள்.

இவர்களது பல கருத்துகள் இன்றும் பொருத்தமாக இருப்பதைக் காண முடிகிறது. ஆயுர்வேதம் என்பது ஆரோக்கியமானவர்களது உடல் நலத்தினைப் பேணுவதும், நோயாளிகளைக் குணப்படுத்துவதும் ஆகும். "மருத்துவம் என்பது உத்தி அல்லது பகுத்தறிவு சார்ந்ததாக இருக்க வேண்டும்' என்று சரகர் கூறுகிறார்.

மருத்துவர்களிடையே கருத்துப் பரிமாற்றம் இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

பலதரப்பட்ட கருத்துகள் மருத்துவர்களிடையே இருக்கலாம். ஆனால் அவர்களுக்குச் சில பொது அடிப்படைகள் உள்ளன. அவை (1) காரண - காரிய விதி (2) நோயின் உண்மையை ஏற்றுக் கொள்ளுதல் (3) குணப்படுத்தக்கூடிய நோயினைக் குணப்படுத்தும் சாத்தியம்.

விஞ்ஞானத்தில் முக்கியமானது உற்றுநோக்கல் என்பது. இதனை சரகர் வலியுறுத்துகிறார். "நமது நேரடி உற்றுநோக்கல்களின் மூலம் நிறுவப்பட்ட விதிமுறைகளை நாம் பின்பற்றுகிறோம்'. போலி மருத்துவர்களைக் கண்டிக்கிறார். "நடிக்கும் ஒரு போலி மருத்துவர் துணிச்சலாகச் செயல்படும்பொழுது பலரது மரணத்திற்குக் காரணமாகிறார்'.

தெளிவான விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன் சரகரும், சுசிருதரும் இருந்தனர். சரகரது நூலில் பின்வரும் பகுதிகள் உள்ளன.

1. மருத்துவ விஞ்ஞானத்தின் வரலாறு பொது விதிகள்; கொள்கை அடிப்படை. 2. பல்வேறு நோய்களும், காரணங்களும், குறிகளும். 3. பொருள்களின் இயல்பும், பண்பும், உடலில் அவை மாறும் முறையும். 4. மருத்துவர்களின் நடத்தை விதிகள். 5. உடற்கூறு இயலும், கருவி இயலும். 6. மருந்தியலும், சிகிச்சையும்.

நல்ல சிகிச்சையின் அம்சங்கள் பற்றி அவர் கூறுகிறார். "ஒரு மருத்துவருக்கு மருத்துவ விஞ்ஞானம் பற்றிய தெளிவான அறிவும், பரந்த அனுபவமும் வேண்டும். மருந்துகளின் குணம், அளவு ஆகியவற்றினை அறிந்து மருந்தைக் கொடுக்க வேண்டும்.

செவிலியர்கள் சிகிச்சையளிக்கும் உத்திகளைத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் நோயாளிகளிடம் அன்பு காட்ட வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும்'.

அதேசமயத்தில் நோயாளி எப்படி இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். ஒரு நோயாளிக்கு நல்ல நினைவாற்றல் இருக்க வேண்டும். அவர்களது நோயை விவரிக்கும் திறன் இருக்க வேண்டும். மருத்துவர்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். துணிச்சல் இருக்க வேண்டும்.

மருத்துவர்களது பண்புகளை சரகர்

அழகாக விரிவுபடுத்திக் கூறுகிறார். "பணத்திற்காகவோ புலன்கள் சார்ந்த திருப்திக்காகவோ தொழில் செய்யாமல் மனிதர்கள் மீதான கருணையினால் தொழில் செய்யும் மருத்துவரே தலைசிறந்தவராவார்'.

"மற்றப் பண்டங்களை விற்பது போன்று மருத்துவத் திறமையை வருமானத்திற்காக விற்பவன் தங்கப் புதையலை விட்டு விட்டு குப்பைகளின் பின்னால் வருபவனாகிறான்'. "ஜீவ ராசிகளின் மீது கருணை கொண்டு சிறந்த கடமையாக மருத்துவத்தினைப் பின்பற்றும் ஒருவன் உண்மையிலேயே அவனது லட்சியத்தினைப் பூர்த்தி செய்கிறான்'.

சரகரைப் போன்றே சுசிருதரும் சிறந்த மருத்துவர் ஆவார். அவர் பல் அறுவை சிகிச்சைக் கருவிகள் பற்றிக் கூறியுள்ளார். அவற்றைப் பயன்படுத்தும் முறை பற்றியும் கூறியுள்ளார்.

அவர் கூறுகிறார் "ஒரு அறுவை சிகிச்சையாளனுக்கு மிகச் சிறந்த கருவி அவனது கரங்கள் ஆகும். அவன் தொழில் திறமையைவிட வேறு எதுவும் முக்கியமில்லை'.

இது போன்று பல விவரங்கள் இந்த இருவரது நூல்களில் பரவிக் கிடக்கின்றன. இவை இன்றும்கூட பொருத்தமாக இருப்பது வியப்பிற்கு உரியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com