தேசியமயமான திருப்புமுனை நிகழ்வு!

இந்திய வரலாற்றில் வங்கித்துறை நீண்ட நெடிய பாரம்பரியத்துக்குச் சொந்தமானது.

இந்திய வரலாற்றில் வங்கித்துறை நீண்ட நெடிய பாரம்பரியத்துக்குச் சொந்தமானது. நாம் இன்று காணும் நவீன வங்கிகள் அனைத்தும் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனியாரின் பங்களிப்பில் உருவானவையே. விடுதலைப் போராட்டத்தினூடே உருவான சில சுதேசி வங்கிகளும் தனியாரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.

1947-இல் கிடைத்த தேச விடுதலை, தனியார் வசம் இருந்த வங்கிகளின் செயல்தன்மையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. 1950-ஆம் ஆண்டு திட்டமிட்டப் பொருளாதார வளர்ச்சிக்கான ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டபோதுதான் அதற்கான ஆதார மூலதனத் தேவை அரசால் உணரப்பட்டது.

ஆனால் மக்களின் சேமிப்பில் மிகப்பெரிய மூலதனத்தைக் கொண்டிருந்த வங்கிகள், லாபம் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு, நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவிட மறுத்தன. எனவே, அரசு 1955-ஆம் ஆண்டு அன்றைய "இம்பீரியல் வங்கி'யை "பாரத ஸ்டேட் வங்கி'யாக மாற்றி வங்கியின் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

வங்கித் துறையில் ஆரோக்கியமான இந்தத் தொடக்கம், ஊரகப் பகுதிகளில் வங்கிக் கிளைகள் உருவாகவும், விவசாயத் தேவைக்கான கடன்கள் வழங்கவும் வழிவகுத்தது. ஆனால், எதிர்பார்ப்பையும் தேவையையும் நோக்கும்போது இது போதுமானதாக இல்லை என்பதை உணர முடிந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அனைத்து தனியார் வங்கிகளையும் அரசுடைமையாக்கக் கோரியதுடன், நாட்டு நலனில் முக்கியமானதாகக் கருதப்பட்ட "வங்கி தேசியமய'க் கோரிக்கையை வென்றெடுக்க உறுதியானப் போராட்டங்களை மேற்கொண்டது.

இந்தப் பின்னணியில் அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் உறுதியான சோஷலிச நடவடிக்கை காரணமாக 14 மிகப் பெரிய தனியார் வங்கிகள் அவசரச் சட்டம் மூலம் அரசுடைமையாக்கப்பட்டன.

ஆனால், இச்சட்டத்தை எதிர்த்து இவ்வங்கிகளின் அன்றைய உரிமையாளர்களான பெருமுதலாளிகள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 10.02.1970 அன்று அவசரச் சட்டத்தை ரத்து செய்தது. இதை எதிர்த்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் உடனடியாகப் போராட்டக்களத்தில் இறங்கியதன் விளைவாக, மைய அரசு 14.02.1970 அன்று மீண்டும் ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் வங்கிகளை தேசியமயமாக்கியது.

இதைத் தொடர்ந்து 24.03.1970 அன்று மக்களவையில் கொண்டுவரப்பட்ட வங்கி தேசியமய மசோதா இரவு 10.30 மணி வரை விவாதிக்கப்பட்டு நிறைவேறியது. வங்கிகள் தேசியமயம் ஆனது நமது வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கப் பதிவு. சக்தி வாய்ந்த முதலாளிகளின் பிடியிலிருந்து பெரிய வங்கிகள் விடுவிக்கப்பட்டது, இந்திய வங்கிகளின் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமாகும்.

வங்கி அரசுடமை சட்டம் 1970, வங்கிகள் தேசியமயத்துக்கான காரணங்களையும் நோக்கத்தையும் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது:

வங்கிகளின் செயல்முறை, கோடிக்கணக்கான இந்திய மக்களைத் தொடும் வகையில் அவர்களின் சமூக பயன்பாட்டுத் தேவை மற்றும் தேசிய முக்கியத்துவ நோக்கங்களான விரைவான விவசாய வளர்ச்சி, சிறு தொழில் மற்றும் ஏற்றுமதி, கூடுதலான வேலைவாய்ப்பு, தொழில் முனைவோருக்கான ஊக்கம், பிற்பட்ட பகுதிகளின் வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்தச் சமூகத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அரசே நேரடியாகப் பொறுப்பேற்று வங்கிச் சேவையை விரிவுபடுத்தவும் தேவையான திசையில் திருப்பி விடவும் தகுந்த வகையில் வங்கிச் செயல்பாட்டினை செறிவுமிக்கதாக ஆக்கிட வேண்டும்.

1947இல் தேச விடுதலையின்போது இந்திய வங்கிகளின் மொத்த வைப்புத் தொகை ரூ.1,019 கோடி; மொத்த கடன் ரூ.424 கோடி மட்டுமே.

1969-இல் 8268ஆக இருந்த வங்கிக் கிளைகள் 2014இல் 1,08,000 ஆனது. அதுபோல், ஊரக மற்றும் நகர்ப்புற வங்கிகள் 1833-இல் இருந்து 44,000 ஆகவும், வைப்புத்தொகை ரூ.4,646 கோடியிலிருந்து ரூ.80 லட்சம் கோடி ஆகவும், கடன் ரூ.3599 கோடியிலிருந்து ரூ.62 லட்சம் கோடி ஆகவும், விவசாயக் கடன் ரூ.162 கோடியிலிருந்து ரூ.6,90,000 கோடி ஆகவும், மொத்த ஊழியர்கள் 1,65,000 பேரிலிருந்து 10,68,000 பேர் ஆகவும், மக்கள் தொகை - வங்கி விகிதம் 65,000:1-லிருந்து 15,000:1 ஆகவும் உயர்ந்திருக்கிறது.

ஒரு சிலருக்காக மட்டுமே செயல்பட்டு வந்த வங்கிகள், அனைத்து மக்களுக்குமான வங்கிகளாக பெருமளவு மாற்றப்பட்டன. இன்றைக்கு சாதாரண ஏழை எளிய மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைதிருப்பது தேசியமயமானதின் விளைவே.

விவசாயம் மற்றும் முன்னுரிமைத் துறைகளுக்கு வங்கிக்கடன் கிடைப்பதுடன் புறக்கணிக்கப்பட்டு வந்த சிறு தொழில்களுக்கும் வங்கிக்கடன் கிடைக்க வழி ஏற்பட்டது.

படித்த இளைஞர்கள் 10 பேர் லட்சத்துக்கும் மேற்பட்டோர் இன்று வங்கித்துறையில் பணியாற்றும் வகையில் வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. பசுமைப்புரட்சி, வெண்மைப் புரட்சி ஏற்பட்டு உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற்றதும் வங்கி தேசியமயமானதின் விளைவுதான்.

தேசியமய வங்கிகளின் செயல்பாடும் சாதனைகளும் சந்தேகமின்றி பாராட்டுக்குரியது என்றாலும், இன்னும் செய்யவேண்டியப் பணிகள் ஏராளமாக உள்ளன. இந்திய மக்களில் 50 கோடி பேர் இன்றைக்கும் வங்கிக் கணக்கு இல்லாது உள்ளனர். ஐந்து லட்சத்துக்கும் மேலான கிராமங்களில் எந்த வங்கிக்கிளையும் இல்லை. மக்களின் சேமிப்பு இன்னும் முழுமையாக வங்கிகளால் ஈர்க்கப்படவில்லை.

வங்கிக் கடன்களின் பெரும் பகுதியை கார்ப்பரேட் நிறுவனங்களும் பெரும் முதலாளிகளுமே அனுபவிக்கின்றனர். முன்னுரிமைத் துறைகள் அதன் முழுக்கடன் அளவை எட்டாமலேயே உள்ளன. வங்கிக்கடன் - மொத்த உள்நாட்டு உற்பத்தி (எஈட) விகிதம் குறைவாகவே உள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாமல் வங்கிகளை சுரண்டிக் கொழுப்பதும், சட்டமும் அதற்கு சாதகமாக இருப்பதையுமே இன்றைக்கு காண முடிகிறது. இதையெல்லாம் தாண்டி வங்கி தேசியமயமானதின் நோக்கம் நிறைவேற நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.

மத்தியில் ஆளும் எல்லா அரசுகளுமே வங்கிச் செயல்பாடுகளை சீரமைத்து வங்கிகளை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லவேண்டும் என்று கூறிக் கொண்டு, வங்கி விரோதச் செயல்களையே முன்னிறுத்துகின்றன.

பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க வேண்டும், வங்கிகளை இணைத்து எண்ணிக்கையில் குறைவானாலும் பெரிய வங்கிகளாக்க வேண்டும் என்பதே நோக்கம். தனியார் தொழில் நிறுவனம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கிகள் துவங்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னுரிமைத்துறை மற்றும் சமூக நோக்கில் வழங்கப்படும் கடன்களின் அளவைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நகரத்தை மையப்படுத்தியே வங்கிச்சேவையை முன்னிறுத்தவும், லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ளும் வகையில் வங்கிச் செயல்பாடுகளை மாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

வங்கிகள் ஈட்டும் லாபத்தின் பெருமளவை கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக்கடனை சரிசெய்ய ஒதுக்குவதும், நிரந்தர ஊழியர்களைத் தேவைக்கேற்ப பணியமர்த்தாமல் அயற்பணி மூலமே ஆட்களை பணியமர்த்துவதும் வாடிக்கையாகி விட்டது. 1969க்கு முந்தைய கால கட்டத்துக்கு வங்கிகளைக் கொண்டு செல்வதே பிரதான நோக்கமாகி விட்டது.

பிற்போக்குத்தனமான வங்கிச்சீரமைப்பு கொள்கைகளைக் கைவிட்டு, மக்களுக்கான வங்கிக் கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். மக்களின் சேமிப்பு மக்களுக்கே என்ற அடிப்படையில் மக்கள் நலத்திட்டங்களுக்கு வங்கிகள் உதவிட வேண்டும்.

தேசத்தின் சேமிப்பு தேச வளர்ச்சிக்கே தவிர கார்ப்பரேட் நிறுவனங்கள் சுரண்டுவதற்கு அல்ல. வங்கிக்கடன் மக்கள் முன்னேற்றத்தை நோக்கியதாகவே இருக்க வேண்டும். வங்கிச்சேவை மக்களின் அடிப்படை உரிமையாக ஆக்கப்படவேண்டும். பொதுத்துறை வங்கிகளை உறுதிப்படுத்துவதுடன் சமமான பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின் பரவலான முன்னேற்றத்திற்கும் உத்தரவாதம் தரப்படவேண்டும்.

கிராமங்கள் தோறும் வங்கிக் கிளைகள் திறக்கப்பட வேண்டும். பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளை அவ்வங்கியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். விவசாயத்துறைக்குக் கூடுதலாக கடன் வழங்குவதுடன் முன்னுரிமைத்துறை தன்னிறைவு அடையவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வறுமையை அகற்றிடவும், ஊரகப்பகுதிகள் வளர்ச்சி காணவும், மகளிர் முன்னேற்றம் உறுதிப்படவும், அடிப்படை கட்டமைப்புகளை விரிவுபடுத்தவும் வங்கிகள் வழிகாண வேண்டும்.

இவையே இன்றைய முக்கியத் தேவை. வாராக்கடன் வசூலில் உறுதி காட்டுவதுடன் வங்கிக்கடனைத் திரும்ப செலுத்தாமல் திட்டமிட்டு ஏமாற்றுவோரைக் கிரிமினல் குற்றவாளிகளாக அறிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுத்துறை வங்கிகள் நமது தேசிய கட்டமைப்பின் மிகவும் இன்றியமையாத அமைப்பு என்பதால், அவை மேலும் உறுதியாக்கப்பட வேண்டும். வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட 45}ஆம் ஆண்டு நிறைவு நாளில் இதுவே நமது தலையாய கோரிகையாகும்.

கட்டுரையாளர்: பொதுச் செயலாளர், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com