இப்படிச் செய்தால் என்ன?

பள்ளிகள் திறந்துவிட்டன. ஏராளமான பெற்றோர், நல்ல பள்ளிக்கூடம் எது என்று தேடி அலைந்து தங்கள் குழந்தைகளைச் சேர்க்கிறார்கள்.

பள்ளிகள் திறந்துவிட்டன. ஏராளமான பெற்றோர், நல்ல பள்ளிக்கூடம் எது என்று தேடி அலைந்து தங்கள் குழந்தைகளைச் சேர்க்கிறார்கள். எவ்வளவு பணம் செலவானாலும் அதனைக் கடன் வாங்கியாவது சமாளிக்கிறார்கள். அவர்கள் படும் கஷ்டங்கள் பற்றியெல்லாம் ஊடகங்களில் விலாவாரியாக எழுதியாகிவிட்டது.

தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை, ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்புப் பாடங்களை நடத்துவது, பதினோறாம் வகுப்பில் பன்னிரெண்டாம் வகுப்புப் பாடங்களை நடத்துவது, அரசு விதிமுறைகளைப் புறக்கணிப்பது, தனிப் பயிற்சி என்ற பெயரால் காலையில் ஒன்பது மணிக்குப் பள்ளிக்கு வந்த மாணவ - மாணவியரை இரவு ஒன்பது மணி வரை படிக்க வைப்பது, நல்ல மார்க் வாங்கும் மாணவர்களுக்கு ஒரு கவனிப்பு, சுமாரானவர்களுக்கு ஒரு கவனிப்பு என்று செயல்படுவது சமச்சீர் கல்வியைப் புறக்கணிப்பது என்று பல விஷயங்கள் பற்றி தொலைக்காட்சியிலும், ஊடகங்களிலும் விவாதங்கள் நடத்தியுள்ளார்கள்.

இன்றைக்கு நாம் பெறும் கல்வி வெள்ளைக்காரர்கள் அறிமுகப்படுத்திய ஒன்று. ஆரம்ப காலத்தில் கல்விக்கான தேவை குறைவாகவே இருந்தது. வெள்ளைக்காரர்களது அரசாங்கத்தில் எழுத்தர் வேலைக்கு மட்டுமே அதிக தேவை இருந்தது. தொழில்துறை வளரவில்லை. எனவே குறைந்த அளவினரே படித்தனர். வேலைக்கும் சென்றனர்.

மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகள் அதிகம் பிரபலமாகவில்லை. வெள்ளை அரசாங்கம் ஒரு கல்வித் திட்டத்தை வகுத்து, அதற்கு உட்பட்டு பள்ளிகள் நடத்த தனியார் வசமே பொறுப்பினை ஒப்படைத்தது. இந்தக் கல்வியானது ஓரளவு வசதியுள்ள மேல் ஜாதியினருக்கு மட்டுமே கிடைப்பதாக இருந்தது. பெரும்பாலோர் படிக்காமலே இருந்தனர். காலம் மாறியது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கல்விக்கூடங்கள் அதிகரித்தன. தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டிலும் காமராஜர் காலத்தில் கல்வியில் மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டது. படிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. எல்லா ஜாதியினரும் படிக்க முன் வந்தனர். அதனால் படிப்பவர்கள் எண்ணிக்கை பெருகியது. நிறைய பள்ளிக்கூடங்கள் தேவைப்பட்டன.

இப்பொழுது கல்வியில் இரண்டு பிரச்னைகள் உருவாயின. ஒன்று இவ்வளவு மாணவர்களுக்குக் கல்வி அளிக்க அரசு பள்ளிகளில் இடம் உண்டா என்பது. மற்றொன்று அப்படியே இடம் இருந்தாலும் அதற்குரிய கட்டமைப்புகளை எப்படி உருவாக்குவது என்பது!

இந்த இரு பிரச்னைகள் குறித்து அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. எனவே சந்தைப் பொருளாதார நிலைக்கு கல்வி தள்ளப்பட்டது. அரசால் சமாளிக்க முடியாத இந்தத் தேவையை தனியார்கள் சமாளிக்க முன்வந்தனர். இதனை யாரும் திட்டமிட்டு செய்யவில்லை. இது தானாகவே நடந்த ஒன்று. இதன் விளைவாக ஏராளமான கல்வி நிறுவனங்கள் தோன்றின; தோன்றிக் கொண்டிருக்கின்றன.

படிக்க முன்வரும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு இவை ஒரு வடிகாலாக அமைந்துள்ளன என்பது உண்மை. மேலும் படித்து வேலையின்றி இருக்கும் பல பட்டதாரிகளுக்கு இது ஓரளவிற்கு வேலை தரும் களமாகவும் உள்ளது. இங்கு தரம் பற்றிப் பேச வேண்டியதில்லை.

தேவை காரணமாக இந்தத் தனியார் பள்ளிகள் தோன்றின என்பது நிதர்சனமான உண்மை. இந்த யதார்த்தத்தினைப் புறக்கணித்துவிட்டு இப் பள்ளிகளின் செயல்கள் பற்றி விமர்சனம் செய்து கொண்டேயிருநதால் அது விமர்சனமாக மட்டுமே இருக்கும். அதனால் பலன் எதுவும் இருக்காது.

இந்தப் பள்ளிகள் தேவை. ஆனால் இவற்றின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமா? வேண்டும். இதற்கு நமக்கு முன் அனுபவம் உள்ளது. ஆரம்பத்தில் வெள்ளையர் அரசாங்கம் தனியார் வசமே கல்வியை ஒப்படைத்திருந்தது. ஆனால் பின்னர், அந்தக் கல்வி நிறுவனங்களை படிப்படியாக அரசு தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

தனியார் பள்ளிகளுக்கு அரசு மானியம் வழங்கியது. பின்னர் அரசாங்கமே நேரடியாக பள்ளிகளைத் திறந்தது. இதனை காங்கிரஸ் அரசு விரிவாக்கியது. இப்பொழுதும் இது நடைமுறையில் உள்ளது. அரசு மானியம் பெறும் பள்ளிகள், அரசின் பள்ளிகள் என்ற இரு வகைப் பள்ளிகள் இன்றும் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை குறைவு.

இப்பொழுது சுய நிதிப் பள்ளிகளையும், இந்த மானியத் திட்டத்திற்குள் கொண்டு வந்தால் என்ன என்று யோசிக்க வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

அவ்வாறு செய்யும்பொழுதுதான் அரசின் ஆணைகள் அனைத்தையும், இந்தப் பள்ளிகள் நிறைவேற்றுகின்றனவா என்பதை கண்காணிக்க முடியும். பாடத்திட்டங்களை ஒரே சீராக வைத்திருக்கவும் முடியும். தரம் பற்றியும் பேச முடியும். சந்தைப் பண்டமாக மாற்றம் பெறும் கல்வியை அறிவு உலக விஷயமாக மாற்ற முடியும். சமுதாயத்தின் நன்மைக்காக இது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com