மனிதன் என்னும் விலங்கு

சார்லஸ் டார்வின் ஒரு இயற்கை விஞ்ஞானி. ஆய்வு செய்வதற்காக எச்.எம்.எஸ். பிகேல் என்ற கப்பலில் இங்கிலாந்தை விட்டுச் சென்றார்.

சார்லஸ் டார்வின் ஒரு இயற்கை விஞ்ஞானி. ஆய்வு செய்வதற்காக எச்.எம்.எஸ். பிகேல் என்ற கப்பலில் இங்கிலாந்தை விட்டுச் சென்றார். கிழக்கிந்தியத் தீவுகளில் இருக்கும்பொழுது அவர் மூன்று அபூர்வமான பூச்சிகளைக் காண நேரிட்டது. அவற்றில் இரண்டை இரு கைகளிலும் பிடித்துக் கொண்டார். மூன்றாவதைப் பிடிக்க வேண்டும்.

ஒரு யோசனை தோன்றியது. ஒரு பூச்சியை வாயால் கெளவிக் கொண்டு, மற்றொன்றையும் பிடித்தார். அவருக்கு உடல் உபாதை ஏற்பட்டது. கவலைப்படவில்லை. பிடித்தவற்றை பத்திரமாக ஆய்வுக்கூடத்திற்கு எடுத்துச் சென்றார். இதேபோன்று அவர் உலகம் முழுவதிலும் சுற்றி ஏராளமான விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றைச் சேகரித்தார்.

இவை அனைத்தையும் இங்கிலாந்தில் உள்ள ஆய்வுக்கூடத்தில் சேர்த்து, அவற்றைத் வகைப்படுத்த வேண்டும். ஆனால் அவர் உயிரியியல் படித்ததில்லை. அவர் ஒரு மதபோதகருக்கான கல்வியையே பெற்றிருந்தார்.

இருப்பினும், தாவரவியல், விலங்கியல் ஆகியவற்றைக் கற்று, கிடைத்த விவரங்களை ஒழுங்கு செய்தார். பலரது ஆலோசனைகளைக் கேட்டார்.

நீண்டகால உழைப்பிற்குப் பின்னர் அவருடைய ஆய்வு முடிவுகளை நூல்களாக எழுதி வெளியிட்டார். அவர் எழுதிய நூல்கள் குறைவு.

அதில் முக்கியமானவை "உயிரினங்களின் தோற்றம்' என்பதும் "மனிதனின் தோற்றம்' என்பதும் ஆகும். இந்த நூல்கள் உலக சிந்தனை வரலாற்றை மாற்றி அமைத்த நூல்கள் ஆகும்.

முதலில் வீட்டு விலங்குகளில் ஏற்படும் மாறுதல்கள் பற்றி டார்வின் ஆராய்ந்தார். இவை செயற்கையான தேர்வு மூலம் பல மாறுதல்களை அடைகின்றன.

உதாரணமாக காட்டு நாய்களிடம் இல்லாத பண்புகள் வீட்டு நாய்களிடம் உள்ளன. இவற்றை மனிதன் செயற்கையாகத் தேர்வு செய்ததன் மூலம் ஏற்பட்டவை என்று அவர் விளக்கினார்.

இதேபோன்று இயற்கையில் தேர்வு இடம் பெறுகிறது. சூழ்நிலை மாறும் பொழுது அதன் தாக்கம் காரணமாக விலங்குகளும், தாவரங்களும் மாறுகின்றன. மாற முடியாதவை அழிகின்றன. மாறக் கூடியவை சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து தங்கள் இனத்தைத் தொடர்ந்து வளர்க்கின்றன.

இதில் தகுதியுள்ளவை தாக்குப் பிடிக்கின்றன. தகுதியற்றவை படிப்படியாக அழிகின்றன. இன்றைக்குக்கூட, சூழ்நிலை மாறுதலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத எத்தனையோ உயிரினங்கள் அழிவதை நாம் காண்கிறோம். இது டார்வினது விளக்கம். உயிரினங்களின் தோற்றத்தை அவர் இயற்கைத் தேர்வு என்ற கொள்கை அடிப்படையில் விளக்கினார்.

இந்த முறையைப் பின்பற்றி மனிதனது தோற்றத்தை அவர் விளக்கினார். மனிதனும் மற்ற விலங்குகளைப் போன்றவைதான். விலங்கு உலகில் ஏற்பட்ட மாறுதல் காரணமாகத் தோன்றியவன் மனிதன் என்று அவர் கூறினார்.

சாதாரணமாகக் கூறினால் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று கூறுவார்கள். குரங்கு இனத்தைச் சேர்ந்த ஏதோ ஒரு வகைக் குரங்கு பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகி கடைசியில் மனித வடிவம் பெற்றது என்று அவர் கூறுகிறார்.

சூழ்நிலை மாறுபாடு, அது உடலில் ஏற்படுத்தும் மாறுதல், தேவையான பண்புகள் நிலை பெறுதல், தேவை மற்றவை மறைதல் அல்லது அழிதல், தேவையானவை மரபணுக்களில் இடம்பெறுதல் போன்ற உயிரியியல் செயல்முறை மூலம் இது இடம் பெறுகிறது என்று அவர் கூறினார்.

டார்வின் வெளியிட்ட கொள்கையை உலகம் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லா விஞ்ஞானக் கொள்கைகளையும் எதிர்த்ததுபோல இக்கொள்கையையும் அறிஞர் உலகம் எதிர்த்தது. குறிப்பாக மதவாதிகள் எதிர்த்தனர்.

அவர்களைப் பொறுத்தமட்டிலும் மனிதனைப் படைத்தவர் கடவுள். சகல ஜீவராசிகளையும் படைத்தவர் கடவுள். இக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் நம்பிக்கை சார்ந்த அவர்களது கொள்கைக்குத் தோல்வி ஏற்படும். எனவே டார்வினுக்கு நெருக்கடிகளைக் கொடுத்தனர்.

ஆனால் டார்வினைப் பல விஞ்ஞானிகள் ஆதரித்தனர். அவர்களில் ஏர்னஸ்ட் ஹெக்கல் என்பவர் ஒருவர்.

டார்வினின் கொள்கையைப் பரப்புவதற்கு அவர் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார். டார்வின் கொள்கை வெற்றி பெற்றது இன்றைக்கு அது விரிவாக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com