அனுபவம் என்னும் கல்வி

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்குச் செல்கிறோம். அங்கு சுவாமி சந்நிதியின் நுழைவாசலில் நிறையத் தூண்கள் உள்ளன.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்குச் செல்கிறோம். அங்கு சுவாமி சந்நிதியின் நுழைவாசலில் நிறையத் தூண்கள் உள்ளன. இவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை. நல்ல காலம் இவற்றின் மீது விபூதி, குங்குமம் ஆகியவற்றைக் கொண்டு போடுவதுமில்லை. ஆனால் இந்தத் தூண்கள் இசைத் தூண்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தத் தூண்களைத் தட்டிப் பார்த்தால் இசை ஒலி கேட்கும்.

  சற்று விவரம் தெரிந்தவர்கள் தட்டிப் பார்த்தால், ஒரு தூணில் மிருதங்க ஒலி கேட்பதையும், மற்றொன்றில் மேள ஒலி கேட்பதையும், இன்னுமொன்றில் வீணை, தம்புரா ஒலிகேட்பதையும் கண்டு கொள்ள முடியும். இதை வடித்தவன் ஒரு கல் தச்சன். அவனுக்கு இசை ஞானம் உண்டா என்ற கேள்வி எழலாம். அவர்களுக்கு இசை ஞானம் இல்லாவிடிலும் இசை ஞானம் உள்ளவர்களை அருகில் வைத்துக் கொண்டு இவற்றை அவர்கள் உருவாக்கியிருக்க வேண்டும்.

  இதனைச் செய்தவர்களுக்கு ஒலி அலை, ஒலி அதிர்வு, அதன் நீளம், வேகம் என்பன பற்றி ஒன்றும் தெரிந்திருக்காது. இன்றைய இயற்பியல் பேராசிரியர்களைப் போன்று "எக்ஸ்', "ஒய்' என்று எழுதி குழப்பவும் தெரியாது. நடைமுறையில் இந்தக் கல்லை இந்த அளவுக்கு இழைத்தால் இப்படிப்பட்ட ஒலி எழும் என்பது மட்டும் தெரியும். அவர்கள் இந்தத் தூண்களில் சப்த சுரங்கள் வருமாறு இழைத்துள்ளார்கள்.

  இவர்களுக்கு ஏட்டுப் படிப்பு இல்லை. நடைமுறை ஞானம் மட்டுமே உண்டு. இந்த ஞானத்தின் உதவியால் ரதங்கள் செய்தார்கள்; தேர்கள் செய்தார்கள்; அன்றைக்குத் தேவையான அணிகலன்களைச் செய்தார்கள்; ஆடைகள் உற்பத்தி செய்தார்கள்.

இதனை இன்னும் சற்று விரிவாகக் கண்டால் எல்லா இடங்களிலும் இந்த நடைமுறை அறிவின் மூலம் பல அற்புதமான படைப்புகளை உருவாக்கியுள்ளதை அறிய முடியும். நமது பெண்கள் கோலம் போடுவதைக் கவனித்தால், அதில் வட்டம், சதுரம், முக்கோணம், நீள் சதுரம், சாய்தளம், கூம்பு என்று எல்லா வரைகணித வடிவங்களும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

   இன்று நமது மாணவர்கள் கருவிகளின் உதவியுடன்கூட வரைவதற்குத் திணறும் வடிவங்கள் பலவற்றை நமது கிராமத்துப் பெண்கள் கோல மாவின் உதவியுடன் கரடுமுரடான தரையில் ஒரு நொடியில் போடுவதை நாம் காண முடியும். புள்ளிகள் எண்ணிக்கை மனப்பாடம். கோலம் போடும் முறையும் மனப்பாடம்.

அந்தக் காலத்தில் வெள்ளிக் கோல் என்ற ஒரு தராசு இருந்தது. கிராமத்திலிருந்து காய்கறி கொண்டு வந்து விற்பனை செய்யும் பெண்கள் இதனை வைத்திருப்பார்கள். இது லேசான மரத்தால் சுமார் 2 அடி நீளமுள்ள கம்பு ஆகும். இதன் ஒரு முனையில் தராசு தட்டு தொங்கும். அந்த முனையில் இருந்து கம்பின் நடுப்பகுதி வரை வெள்ளை நிறத்தில் வளையக் கோடுகள் இருக்கும். இவை அளவைக் குறிப்பவை.

   இக்கம்புடன் நகர்த்தும் முறையில் ஒரு கயிறு இருக்கும். இதனைக் கையால் பிடித்துக் கொண்டு, தட்டில் காய்களை வைத்து இக்கயிறை தேவையான அளவிற்கு முன் நகர்த்த வேண்டும். கம்பு சமநிலை வந்தவுடன் அந்த அளவும் சமம் என்பது பொருள். இது மணங்கு, வீசை என்ற அளவைக் கொண்டது. இது நெம்புகோல் முறையை அடிப்படையாகக் கொண்டது என்று அந்த காய்கறி விற்கும் பெண்களுக்கும் தெரியாது, வாங்குபவர்களுக்கும் தெரியாது.

சில கோயில்களில் சூரிய ஒளி கர்ப்பக்கிரகத்தில் உள்ள சுவாமி மீது விழுமாறு அமைத்திருப்பார்கள். இதில் மர்மம் எதுவுமில்லை. நடைமுறை சார்ந்த கணித அறிவு, சூரியன் வரும் திசை பற்றிய அறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட ஒன்றுதான் இது. ஆனால் இது பற்றி நமது சிலர் கூறும் கற்பனைக் கதைகளுக்கு அளவே இல்லை.

தென்காசி கோயிலில் கோபுர வாசல் தாண்டிய உடன் காற்று நம் மீது நேராக வீசுமாறும், சிறிது நேரம் சென்ற பின் பின்னிருந்து வீசுமாறும் அக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. காற்று வீசும் திசையைத் துல்லியமாகக் கண்டு அதற்கு ஏற்ப கட்டடத்தை அமைக்கும் முறை இது.

  இந்த வாஸ்து சாஸ்திரம் இன்று மூட நம்பிக்கை நிறைந்ததாக மாறி விட்டது வருந்தத்தக்கது. எகிப்தின் பிரமிட்டை உலக அதிசயங்களின் ஒன்று என்று கூறுகிறோம். நமது நாட்டில் எத்தனை கோபுரங்கள் உள்ளன. இவை பிரமிட்டுகளையே விழுங்கிவிடும் தன்மை உள்ளவை.

ஆனால் இவற்றைச் செய்தவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. இவர்களது படிப்பு நடைமுறை சார்ந்தது. இது மட்டும் தங்குதடையின்றி வளர்ந்திருக்குமானால் இந்தியாவில் ஒரு நியூட்டனும், ஐன்ஸ்டைனும் தோன்றியிருப்பார்கள்.

இதனை மனதில்  கொண்டுதான் அன்று மகாகவி பாரதியார் கூறினார்: "பாரத நாடு பழம் பெரும் நாடு, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com