மீண்டும் வந்தே மாதரம்

நமது நாடு விடுதலையடைந்து 67 ஆண்டுகள், குடியரசாகப் பிரகடனம் செய்து 64 ஆண்டுகள் ஆகிவிட்டன. 200 ஆண்டுகளுக்கு

உலக நாடுகள் பலவற்றைப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆள்கிறார்கள். சிலவற்றைச் செனட்டர்கள் ஆள்கிறார்கள். இன்னும் சிலவற்றை இராணுவத்தலைவர்கள் ஆள்கிறார்கள். இரண்டொரு நாடுகளைத் தீவிரவாதிகள் - அதி தீவிரவாதிகள் - பயங்கரவாதிகள் ஆள்கிறார்கள்.

அந்த வகையில், வடமேற்கு பாகிஸ்தானில் அமைந்துள்ள அழகிய இடமான சுவாத் பள்ளத்தாக்கை, அதிகாரப்பூர்வமாக ஆள்பவர்கள்தாம், தலிபான் கூட்டத்தார்.  ஆண்டவன் ஆனந்தமாக இருக்கும்போது படைத்த பள்ளத்தாக்கு. அந்த இடத்தின் இன்றைய நிலை என்ன தெரியுமா?

அந்தப் பள்ளத்தாக்கில் தொலைக்காட்சிக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இசை முதலிய எந்தக் கலை நிகழ்ச்சிக்கும் அங்கு இடம் கிடையாது. எந்தப் பெண்ணும் பள்ளிக்கூடத்துக்குப் போகக்கூடாது. கடைத்தெருக்களுக்கும் போகக்கூடாது.

தகப்பன், சகோதரர்களைத் தவிர, வேறு எந்த ஆடவனுடனும் பெண்கள் பேசக்கூடாது. எந்தப் பெண்ணும் நாள்குறிப்பு எழுதக்கூடாது. ஏற்கனவே கட்டப்பெற்ற 400 பள்ளிக்கூடங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

அப்படிப் பற்றி எரியும் தீப்பந்தங்களுக்கு இடையே, ஒரு மல்லிகைக் கொடியும் வேர்விட்டது. மலாலா யூசெப்பை என்ற பெண் தோன்றினாள். அப்பெண்ணின் தந்தை எதேச்சதிகாரத்தை எதிர்க்கும் எரியீட்டியாய்த் திகழ்ந்தார். அவர் பெயர் ஜியாவுதீன் யூசெப்பை. சிறந்த கல்விமான், கவிஞர். மருத்துவம்தான் படிப்பேன் என்று மனவுறுதி கொண்டிருந்த மலாலாவை, அரசியலுக்குத்தான் போகவேண்டும் என்று மடைமாற்றம் செய்தார் அத்தந்தை.

பள்ளிக்குச் செல்லும் பெண் பிள்ளைகள், தலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தலிபான்களுக்குப் பயந்து பாகிஸ்தான் அரசும், பெண்கள் கல்வி கற்கும் உரிமைக்குத் தடை விதித்தது.

மலாலா, தன் முக்காட்டுக்குக் கீழே புத்தகங்களை மறைத்துக்கொண்டு, பள்ளிக்கூடம் சென்று வந்தாள். பி.பி.சி-யினுடைய வலைப்பூக்களிலே, தலிபான்களின் பயங்கரவாதத்தை "குல்மகாய்' எனும் புனைப்பெயரில் (தமிழில் "சோளப்பூ' என்று பொருள்) எழுதி வந்தாள். 

பெண்கள் கல்வி கற்பது பிறப்புரிமை என்பதையும், தலிபான்கள் அதற்குத் தடையாய் நிற்பதையும் எடுத்துரைத்த அவளுடைய எழுத்துகளின் வீரியம், "டைம்' போன்ற புகழ்வாய்ந்த ஏடுகளால், அவளை வெளிச்சத்திற்குக் கொணர்ந்தது.

2011-ஆம் ஆண்டு பன்னாட்டுக் குழந்தைகளுக்கான அமைதிப்பரிசு அவளுக்கு வழங்கப்பட்டது. அதே ஆண்டு பாகிஸ்தானும் இளைஞர்களுக்கான அமைதிப்பரிசை அவளுக்கு வழங்கிப் பெருமைப்படுத்தியது.

மலாலாவின் வீரத்தையும், விவேகத்தையும் கண்ட பெஷாவர் பத்திரிகையாளர்கள் மலாலாவை அழைத்து, கல்வி கற்கும் அடிப்படை உரிமையை இந்தத் தலிபான்கள் எப்படித் தடுக்கலாம் எனுந் தலைப்பில் பேச வைத்தார்கள். அப்படிப் பேசிவிட்டு, மறுநாள் பள்ளிக்குச் சென்று திரும்பிய மலாலாவைக் கொலைவெறி கொண்ட தலிபான் ஒருவன், இடது பக்க நெற்றியின் பக்கம் குறிவைத்து மூன்றுமுறை சுட்டான். அக்குண்டுகள் சற்றுக் குறிமாறி அவளுடைய முகத்தையும், குரல்வளையையும் துளைத்தன.

உயிர் ஊசலாடும் நிலைமையில், ராவல்பிண்டி மருத்துவமனை சிகிச்சை பலன்தராது போகவே, அவள் இலண்டனிலுள்ள பர்மிங்ஹாம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாள். இதில் கொடுமை என்னவென்றால், அவளைச் சுட்டவர் 23 வயதுடைய அட்டா உல்கா கான் எனும் பெயருடைய பி.எஸ்.சி. படித்த பட்டதாரி. ராவல்பிண்டி மருத்துவமனையில், மூன்று மணி நேர அறுவை சிகிச்சை நடந்து, குண்டுகள் அகற்றப்பட்டன. அதற்குப்பிறகு அவளுக்குப் பர்மிங்ஹாம் மருத்துவமனையில் ஐந்து மணி நேர அறுவை சிகிச்சை நடந்தது. 09.10.2012 அன்று சுடப்பட்ட அந்தப் பிஞ்சு உடலுக்கு 17.09.2013 அன்றுதான் நினைவு திரும்பியது. இடைப்பட்ட நாள்கள் கோமாவில்.

மலாலா தன்னுடைய 14 வயதிலேயே "மலாலா கல்வி அறக்கட்டளை' எனும் அமைப்பைத் தொடங்கி, படிப்பதற்கு வசதியில்லாத ஏழைப்பெண்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கினாள். பி.பி.சி.யில் நேரடியாகத் தோன்றி, "உலகம் எங்கும் வாழும் பெண்களுக்கு கல்வி வழங்கப்பட வேண்டும்' என முழங்கினாள்.

மலாலா சுடப்பட்டச் செய்தியைச் செவிமடுத்த 2 மில்லியன் பாகிஸ்தானியர்கள், தடை செய்யப்பட்ட பெண் கல்வியை மீண்டும் கொண்டுவர வேண்டுமென்று, கையெழுத்திட்டு அதிபருக்கு அனுப்பினர்.

விண்ணப்பங்கள் சென்ற உடனேயே, தடை செய்யப்பட்ட கல்வி உரிமைச்சட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டது. மலாலா சுடப்பட்டச் செய்தியைச் செவிமடுத்த இங்கிலாந்தினுடைய அன்றைய பிரதமர் கார்டன் பிரெளன் பர்மிங்காம் மருத்துவமனைக்கு வந்து, மலாலாவை நலம் விசாரித்தார். 

உலகக் கல்விக்குச் சிறப்புத் தூதராக ஐ.நா-வால் நியமிக்கப்பட்ட கார்டன் பிரெளன் மலாலாவின் பெயரில், உலக நாடுகளுக்கு ஒரு வேண்டுகோளை வைத்தார். "எதற்காக மலாலா வெகுவாகப் போராடினாரோ, அந்தப் பெண் கல்வியை 2015-க்குள் எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் கொடுத்தாக வேண்டும். மலாலா "ஐ ஆம் மலாலா' என எழுதிய சுயசரிதையின் தலைப்பை, நாம் உறுதிப் பொருளாக ஏற்க வேண்டும்' என ஓர் உரிமை முழக்கம் செய்தார்.

மலாலா என்ற 16 வயது சிறுமி இலண்டனிலுள்ள பெண்கள் மையத்தில் பேசும்போது, "தொன்மம் என்பது சொர்க்கத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒன்றன்று அது கடவுளிடமிருந்து அனுப்பப்பட்ட ஒன்றும் அன்று.

நாம்தான் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் உருவாக்குகின்றோம். அதனை மாற்றுவதற்குரிய உரிமையும், கடமையும் நமக்குண்டு' என்று ஆணி அடித்தாற்போன்று பேசினாள். அன்று இரண்டாவது எலிசபெத் மகாராணி, அவரை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைத்துப் பாராட்டினார்.

ஹார்வேடு பல்கலைக்கழகம் இந்தச் சின்னஞ்சிறு பெண்ணை அழைத்து, அத்தனைப் பேராசிரியர்களுக்கும் மத்தியில் பேச வைத்தது. ஹாலிபேக்சில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் கிங்ஸ் கல்லூரி, மலாலாவிற்குக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

கனடா அரசு, மலாலாவிற்குக் கெளரவ குடியுரிமையை வழங்கியது. "டைம்' பத்திரிகை மலாலாவை அட்டைப் படத்தில் போட்டு, "உலகத்தில் புகழ்பெற்ற 100 பேர்களில், மலாலாவும் ஒருவர்' எனப் பாராட்டுரை வழங்கியது.

ஐக்கிய நாட்டுச் சபை மலாலாவை அவருடைய 16-ஆவது பிறந்தநாளான 12.07.2013 அன்று பேச அழைத்தது. 500 இளைய கல்வி வல்லுநர்கள் குழுமியிருந்தனர். 

"பயங்கரவாதிகள் என்னுடைய குறிக்கோளையும், இலட்சியத்தையும் மாற்றிவிடலாம் என நினைத்தார்கள். ஆனால், என்னை எந்த விதத்திலும் அவர்களால் அசைக்க முடியவில்லை.  செத்தவை பலவீனமும், அச்சமும், நம்பிக்கையின்மையும் மட்டுமே. பிறந்தவை வலிமையும், சக்தியும், தைரியமும். நான் யாரிடத்தும் பகைமை பாராட்டுவதில்லை. நான் இங்கு வந்திருப்பது ஒவ்வொரு பெண் பிள்ளைக்கும் கல்வி கற்கும் உரிமை வேண்டும் என வேண்டுவதற்குத்தான்.

தலிபான் போன்ற பயங்கரவாதிகளின் குழந்தைகளுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை' என மலாலா பேசி முடித்தவுடன், பலமுறை அவையினர் எழுந்து நின்று கைதட்டினர். அந்த நாள் "மலாலா நாள்' என்று அறிவிக்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த மலாலா, "மலாலா நாள் என்பது என்னுடைய நாள் அன்று. இது ஒவ்வொரு பெண்ணினுடைய நாள் ஆகும். ஒவ்வொரு மாணவ, மாணவியினுடைய நாளும் ஆகும். கல்வி கற்கும் உரிமை வேண்டும் வேண்டும் எனக் குரல் உயர்த்துவோர் ஒவ்வொருவருடைய நாளும் ஆகும்' எனக்கூறியது, அனைவரையும் அதிசயிக்க வைத்தது. 

ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான்-கி-மூன் அதனைக் கேட்டு, "மலாலா நம் எல்லோருக்கும் வீராங்கனை. ஒரு சின்ன பள்ளிக்கூடத்திற்குச் சென்றதின் மூலம், மலாலா உலகத்திற்கே ஆசிரியர் ஆனார். வீரமும், பெருந்தன்மையும் மிக்க கல்வித்தூதர் அவர்' என வியந்து பாராட்டினார். அமெரிக்க குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா, மலாலாவைத் தன் விருந்தினராக அழைத்து, மனைவி, மகளுக்கு அறிமுகப்படுத்தினார்.

மலாலாவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டச் செய்தியைச் செவிமடுத்த பாகிஸ்தான் பிரதமர் நவாப் ஷெரிப், "மலாலா பாகிஸ்தானின் பொக்கிஷம். பாகிஸ்தானுக்கே ஒரு கம்பீரத்தையும், பெருமையையும் தேடித்தந்தவர். அவருடைய சாதனை இணையற்றது' எனப் பெருமைப்பட்டார்.

பரிசுச் செய்தியைப் பெற்றவுடன், மலாலா சொன்னது "எனக்கு எத்தனை சோதனைகள் ஏற்பட்டாலும் பாகிஸ்தான்தான் என்னுடைய தாய்நாடு.

இந்தப் பரிசு வழங்கப்படும்போது, பாகிஸ்தான் பிரதமர் நவாப் ஷெரிப்பும், இந்தியப் பிரதமர் மோடியும் சேர்ந்து வருகை தந்தால் பெரிதும் மகிழ்வேன்' என்பதாகும்.

கட்டுரையாளர்: பேராசிரியர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com