தொழிலாளர்களின் "குரு'

தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் பிறந்து, கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பட்டம் பெற்றவர் கே. குருமூர்த்தி,.

தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் பிறந்து, கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பட்டம் பெற்றவர் கே. குருமூர்த்தி,. இளைஞர் காங்கிரஸ் செயலாளராக நியமிக்கப்பட்டு, 1942 ஆகஸ்ட் 9 "வெள்ளையனே வெளியேறு' பேரியக்கத்தில் தீவிர பங்கு கொண்டு, வேலூர் சிறையில் ஆறு மாதங்கள் இருந்தவர்.
 ÷மும்பையில் உள்ள உறவினர் உதவியால் "தொலைபேசி' அலுவலகத்தில் பணியாற்றியவர், தந்தை இறந்த பின், குடும்பச் சூழ்நிலை காரணமாக சென்னை திரும்பி, "சிம்சன் குழுமத்தில்' கணக்குப் பிரிவில் சேர்ந்தார். அங்குள்ள தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன், காங்கிரஸ் கட்சியில் முழுநேரத் தொண்டராகப் பதிவு செய்த பின், கே. குருமூர்த்தியை சங்கத்தின் பொறுப்பாளராக நியமித்தார். தொழிற்சங்க, சட்ட, திட்டங்களை, வரலாற்றினைக் கற்றார்.
 ÷ஆங்கிலேய நிர்வாகத்தினரின் ஆளுமைக்கு உள்பட்ட குழுமத்தில் எஸ். அனந்தராமகிருஷ்ணன் செயலாளராக செயல்பட்டார். தொழிலாளர் நலன்களில் அக்கறை கொண்டதனால், குருமூர்த்தியுடன் சுமுகமான நட்புடையவராக இருந்தார். இதன்விளைவாக, எவ்வித ஆர்பாட்டங்களுக்கும் இடம் இன்றி, ஊதிய உயர்வும், சலுகைகளும் தொழிலாளர்களுக்குக் கிடைத்தன.
 ÷நம் நாடு விடுதலைபெற்ற பின், சிம்சன் குழுமத்தின் தலைவராக அனந்தராமகிருஷ்ணனை சட்டப் பூர்வமாக நியமித்து, ஆங்கிலேயர்கள் தங்கள் தாயகம் சென்றனர். அதன் பின், தொழிற்சங்க உறவு நெருக்கமானது. தொழிலாளர்களுக்காக கூட்டுறவுச் சங்கங்கள் திறக்கப்பட்டன. "கல்பத்தரு' என்ற பெயரில் சிறப்பு அங்காடியும், பல்லாவரத்திற்கு பக்கத்தில் உள்ள பம்மலில், "கிருஷ்ணா நகரில்' வீடு கட்டிக் கொள்ள குறைந்த வட்டியில் கடன் கொடுக்கப்பட்டது. அங்கு ஆலயமும், ஆரம்பப் பள்ளியும், மருத்துவமனையும் ஆரம்பிக்கப்பட்டன. சென்னையில் முதன்முதலாக, தொழிலாளர் நலன்களின் மேம்பாட்டுக்கு வழி வகுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 ÷சங்கத்தை, அகில இந்திய அடிப்படையில் இயங்கும் தொழிலாளர் சம்மேளனங்களுடன் இணைக்காது சுதந்திர அமைப்பாக செயல்பட விதிகளை வகுத்தார். 1953-இல் கும்பகோணத்தில் ஸ்ரீராமவிலாஸ் சர்வீஸ் தொழிலாளர் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, இவரது வளர்ச்சியை விரும்பாதவர்கள், கல்வீச்சில் இறங்கியதன் காரணமாக, ஓரு கண்ணின் ஒளியை முற்றிலும் இழந்தார். இறுதிவரை குணப்படுத்த முடியாது, மிக சிரமத்துடன் வாழ்ந்தார்.
 ÷பல்வேறு துறைகளில், உற்பத்தியை ஊக்குவிக்க, அம்பத்தூர், கிண்டியில் தொழிற்பேட்டைகளை அமைக்க காரண கர்த்தாக்களாக இருந்தார்கள் கே. காமராஜ், ஆர். வெங்கட்ராமன், கே. குருமூர்த்தி ஆகிய மூவரும். குருமூர்த்தி "லாபத்தில் பங்கு' என்ற கோரிக்கையை வலியுறுத்தும்போது, ""முதன்முதலில் ஆலைத் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் "தீப ஒளி' திருநாளை சிறப்பாக கொண்டாட, லாபத்தில் ஒரு பங்கை முன்னதாகவே வழங்கிட, குஜராத்தில் அன்றைய முதலாளிகளின் குரு கைலாஸ் பிரகஸ்பதி பிரம்மச்சாரி 1916, செப்டம்பர் 13-இல் உபதேசித்ததை, தொழில் அதிபர்கள் ஏற்றனர். அதுவே, இன்று "போனசாக' பிறப்பெடுத்தது,'' என்று கூறியதைக் கேட்டு வியந்த அனந்தராமகிருஷ்ணன், உடனே அதை அங்கீகரித்தாராம்.
 ÷குருமூர்த்தியை, 1967 தேர்தலில் தென் சென்னை நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளராக காமராஜ் அறிவித்தார். தி.மு.க.வின் சார்பாக சி.என். அண்ணாதுரை போட்டியிட்டார். குருமூர்த்தி வெற்றி வாய்ப்பினை இழந்தார். இதனால் இவரது தொழிற்சங்கத் தொண்டுக்குப் பின்னடைவு உருவாகி, 1971-இல் சங்கத்தை விட்டே வெளியேறும் நிலை ஏற்பட்டது. பெரும்பாலான தொழிலாளர்கள் இதனை விரும்பாது, மாற்றுச் சங்கம் துவங்கிட வேண்டினர். ஆனால் குருமூர்த்தி, தொழிலாளர் ஒற்றுமையை சீர்குலைக்க விரும்பவில்லை. அதுதான் குருமூர்த்தி.
 ÷நிர்வாகக் குழுவின் தலைவராக ஸ்ரீசைலம் இருந்தபோது 1.11.1978-இல் "வீல் அண்ட் ரிம்' தொழிற்சாலை மூடப்படும் நிலையில் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்காமல் மெüனமாக இருப்பதை விரும்பாது தொழிலாளர்கள் தவித்தனர். அந்தச் சமயத்தில் சங்கத்தின் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதைப் பயன்படுத்திய தொழிலாளர்கள், ஊர்வலமாக குருமூர்த்தி இல்லம் சென்று, சங்கத்தின் தலைமையை ஏற்க வலியுறுத்தினர். 1.7.1979-இல் பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடியவர், நிர்வாகத்துடன் பேசி முடிவு எடுக்க விரும்பியபோது, கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் கொதித்தெழுந்த தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக 9.7.1979 முதல் 5.9.1979 வரை வேலைநிறுத்தம் செய்த பின், நிர்வாகம் பணிந்தது. தொழிலாளர்கள் வேலை இழப்பிலிருந்து தப்பினர்.
 ÷குரூமூர்த்தி மாநில, மத்திய அரசு அமைத்த தொழிலாளர் நலக் குழுவில், அங்கம் வகித்து பலர் பாராட்டும்படி செயலாற்றினார். மேலை நாடுகளின் அழைப்பை ஏற்று, சென்று வந்தவர், ஒரு கூட்டத்தில் பேசும்போது, ஆஸ்திரேலியாவில் தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் "தொட்டிலில்' உறங்கும் குழந்தைப் பருவத்திலிருந்து கல்லறையில் அடக்கம் செய்யும் வரை, ஊதியத்துடன் அலவன்ஸ் பெற்று வருகின்றனர். இதனைக் கண்டு வியந்தேன்,' என்றார். "எப்போது இந்நிலையை இந்தியா அடையும்'? என்று நிருபர் ஒருவர் கேட்டபோது, "என்று தொழிலதிபர்கள் அறங்காவலர்களாகவும், அரசின் தலையீடு இல்லாமலும், தொழிலாளர்கள் கடமை உணர்வோடு, கட்டுப்பாட்டுடன், உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்ற தாரக மந்திரத்தை மனதில் பதித்து, உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை மேம்படுத்துகிறார்களோ அன்று சாத்தியமாகும்,' என்றார்.
 ÷குருமூர்த்தியின் தன்னலமற்ற தொழிற்சங்கத் தொண்டினைப் பாராட்டி "ஸ்ரீ எஸ். குருசுவாமி நினைவு அறக்கட்டளை', 26.9.1982 அன்று கெüரவித்தது.
 ÷குருமூர்த்தியின் ஆன்மா, உடலை விட்டு, அமைதியாக, 28.1.2000 அன்று வெளியேறியது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com