சட்டங்களை அமல்படுத்த...

வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதை சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் கட்டாயமாக்கியிருக்கிறது.

வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதை சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் கட்டாயமாக்கியிருக்கிறது. இச்சட்டம் எந்த அளவுக்குத் தமிழ் மக்களிடையே வெற்றி பெறும் என்பது மிகுந்த ஐயத்துக்கு உரியது.
 சில காலத்துக்கு முன்பு, வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போது செல்லிடப்பேசியில் பேசக் கூடாது என்று ஆணையிட்டார்கள். இன்றும் அந்த ஆணை, ஆணை அளவிலேயே இருக்கிறது. சாலையில் பயணம் செய்வோர் கவனித்திருக்கலாம். கார், லாரி முதலான ஓரளவு பாதுகாப்புடைய நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மட்டுமன்றி, மிகுந்த ஆபத்தினூடே வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள், மிதிவண்டி ஓட்டிகள் உள்பட கையில் செல்லிடப்பேசி இல்லாமல் செல்வதே இல்லை.
 ஒரு காலத்தில் மது விலக்குச் சட்டம் இருந்தபோது, கள்ளச் சாராயமும், கள்ள மதுவும் காய்ச்சிக் குடிப்பதும், குடித்துவிட்டு ரகளை செய்வதும் மிக இயல்பாக இருந்தன. காவல் துறையினருக்குக் கூடுதலாக வருமானமும் கிடைத்துக் கொண்டிருந்தது.
 ராஜாஜி கொண்டு வந்த மது விலக்குச் சட்டத்தை கருணாநிதி தன் ஆட்சியில் நீக்கியபோது, "மது விலக்குச் சட்டம் மதிக்கப்படுவதே இல்லை. எனவே, அச்சட்டத்தை நீக்குகிறேன்' என்றுதான் அறிவித்தார். உண்மையில் மது விலக்கை நீக்கியதன் மூலம், மது விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.26 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. இன்றைய அரசை இயக்குவதே மதுக் கடை வருமானம்தான். எனவே, அரசே மதுக் கடையைத் திறந்து விற்பனை செய்து வருகிறது.
 கள்ளுண்ணாமை என்ற அதிகாரம் திருவள்ளுவரால் எழுதப்பட்ட பூமி இதுதான். தமிழில் எழுதப்பட்ட நீதி இலக்கியங்கள் அனைத்தும் கள் உண்ணாமையையும், புலால் உண்ணாமையையும் பேசாமல் இருப்பதே இல்லை. வேடிக்கை என்ன என்றால், இவை பின்பற்றப்படுவதே இல்லை. நம் அற இலக்கியத்தில் பட்டியலிடப்பட்ட இனியவை நாற்பதும், இன்னா நாற்பதும் இலக்கிய ஏடுகளாக இருக்கின்றனவே தவிர, அவை நடைமுறையில் ஏறத்தாழ எதுவுமே இல்லை.
 எனவே, ஒன்றை முடிவு செய்யலாம். தமிழர்கள் பொதுவாக சட்டங்களுக்கும், நீதிகளுக்கும் கட்டுப்படுவதே இல்லை. ஆனால், இதனைத் தாண்டி நாடு ஓடுகிறது, ஆண்டவன் புண்ணியத்தால்.
 சட்டப்படி நடக்காதது தமிழர்களின் குற்றம் என்று முடிவு செய்துவிடலாமா என்றால், அப்படியும் முடிவு செய்ய முடியாது. காரணம், இதே தமிழர்கள்தாம் சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் இன்ன பிற நாடுகளிலும் இருக்கிறார்கள். அங்கே சட்டத்தைச் சிறிதுகூட மீறுவதில்லை. காரணம், சட்டத்தை மதிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று அர்த்தமல்ல. சட்டத்தை மீறினால், ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதமும், சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
 இதிலிருந்து ஒன்றை ஊகிக்கலாம். சட்டம், தண்டனை ஆகியவற்றின் மூலம்தான் தமிழர்களைச் சரிப்படுத்த முடியும். அவ்விரண்டையும் சிறிதுகூட நெகிழாமல் நடைமுறைப்படுத்தும் காவல் துறையும், நீதித் துறையும் சேர்ந்து இயங்க வேண்டும்.
 மேற்கத்திய நாடுகளில் சட்டங்கள் பொதுவாக மீறப்படுவதே இல்லை. அவை கடவுளின் கட்டளைகள். ஒருவழிப் பாதை என்றால், ஒரு வாகனம்கூட அதை மீறி வராது, போகாது. வலது பக்கம் வழியாகப் போகிற வாகனங்கள் போக வேண்டும், இடது பக்கம் வழியாக வருகிற வாகனங்கள் வர வேண்டும். அப்படியே பின்பற்றப்படும்.
 அதுமட்டுமல்ல, மாடிப் படிகளிலும், பாலங்களிலும் நடந்து செல்வோர்கூட வலம், இடம் விதியை அப்படியே பின்பற்றுவார்கள். மேனாடுகளிலும், ஜப்பான் முதலான நாடுகளிலும் இது எப்படி முடிகிறது? இங்கே ஏன் முடிவதில்லை? எளிய ஒரே விடை, பழக்கப்படுத்தப்பட்டதுதான்.
 நம்மூரில் சாலை சிக்னல்கள் அவமதிக்கப்படுகின்றன. சாலையில் யாரும் இல்லை என்றாலும், இரவு நேரம் என்றாலும் சிக்னல்கள் மதிக்கப்படுவதே இல்லை. நேர்மாறாக, அயல்நாடுகளில் சிவப்பு சிக்னல் எக்காரணம் கொண்டும் மீறப்படுவது இல்லை. குறுக்கே வாகனங்கள் வராவிட்டாலும்கூட நாம் போகலாம் என்று சிவப்பு சிக்னலை மீறிப் போகவே மாட்டார்கள். காவலரே இல்லாத இடத்திலும் சட்டத்தை மீறாத பண்பை அங்கே சாதாரணமாகக் காணலாம்.
 பழக்கப்படுத்துதல் என்று சொல்லும்போது, ஒரு நாடு சுதந்திரம் முதலான மிகப் பெரிய அரசியல் மாற்றத்தைச் சந்திக்கும்போது அந்த அரசியல் மாற்றத்தைக் கொண்டுவரக் காரணமாக இருந்தோர் தம் நாடும், மக்களும் எந்தெந்த நெறிகளைப் பின்பற்ற வேண்டும் என்று தீர்மானிப்பார்கள்.
 தேசியப் பண்பு (நேஷனல் கேரக்டர்) தலைவர்களுக்கு உள்ளே கட்டியமைக்கப்படும். அந்தத் தேசியப் பண்பை எப்படி மக்களிடையே முதல் நாள் முதலே நடைமுறைப்படுத்துவது என்று திட்டமிடுவார்கள். இதற்குச் சான்று சீனா. நம்மைப் போலவே 1948 வாக்கில் சீனா முழு விடுதலை பெற்றது. விடுதலை பெற்றவுடன், தலைவர்கள், சீனாவை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்று தீர ஆலோசித்தார்கள். அவர்கள் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லர், சீன சமூகத்தின் தலைவர்கள்.
 அவர்கள் முடிவு எடுத்தவற்றுள் மிக முதன்மையானவை: 1. எக்காரணம் கொண்டும் நாம் அமைக்கிற அரசியல் சாசனம் மேற்கு ஐரோப்பிய நாடுகளையோ, அமெரிக்க ஐக்கிய நாடுகளையோ பின்பற்றக் கூடாது. அங்குள்ள ஜனநாயக உரிமையை அப்படியே நாம் காப்பியடிக்கக் கூடாது. கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயக உரிமைகளை (டிசிப்பிளின்ட் டெமாக்ரசி) நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் வாக்கு, அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ., எம்.பி., அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் அரசு என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
 பொதுத் தொண்டர்கள், நல்லவர்கள், சான்றோர்கள் ஆகியோர் அடங்கிய சபையே சீனாவை ஆள வேண்டும். மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கலாம். அது கிராம அளவில் நிறுத்திக் கொள்ளப்படும். ஒவ்வோர் ஊரிலும் இருக்கிற கிராம சபைக்கு உரிய உறுப்பினர்களை மக்கள் ஒவ்வொருவரும் வாக்களித்துத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இன்றும் சீனாவில் உள்ள கிராம சபை உலகப் புகழ் பெற்றது. மிகச் சிறப்பாக இயங்குகிறது. அந்த நாட்டை இயக்குகிறது.
 இந்தியாவில் இப்படித் திட்டமிட்டோமா? நம்மைவிடப் பல நூறு ஆண்டு காலம் முன்பே வளர்ந்துவிட்ட ஆங்கிலேயர்கள் தமக்கு என அமைத்துக் கொண்ட அரசியல் சாசனத்தை அப்படியே காப்பியடித்தோம்.
 ஒன்று சொல்வார்கள்: உலகப் பெரும் போர் வந்துற்றபோது எல்லையில் உயிர் கொடுத்துப் போராடும் வீரர்களுக்குச் சர்க்கரை தேவைப்பட்டதாம். இதனை அறிந்த பொதுமக்கள் அனைவரும் தாம் வாங்குகிற சர்க்கரையை விட்டுக் கொடுத்து ராணுவத்துக்கு அப்படியே அனுப்பி வைத்தார்கள். அப்பேர்ப்பட்ட மக்கள்!
 நம் நாட்டில் இத்தகு கட்டுப்பாடுகள், ரேஷன் முறை நடைமுறைக்கு வந்தபோதெல்லாம், தடுக்கப்பட்ட பொருள்களை கள்ளத்தனமாகவும் நல்லத்தனமாகவும் பொதுமக்கள் வாங்கி வீட்டில் மறைத்து வைத்திருப்பார்கள். வியாபாரி மறைத்து வைத்து வியாபாரம் செய்வார். வியாபாரம் செய்தார்.
 இந்தியா விடுதலை அடைந்தபோது, இந்திய மக்களின் தேசியப் பண்பு எப்படி இருக்க வேண்டும் என்று பலர் ஆலோசித்து முடிவு செய்து பட்டியலிட்டு அதற்குத்தக சட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த முயற்சி செய்யவே இல்லை. அப்படியே பிரிட்டனின் மாதிரியைப் பின்பற்றி நடைமுறைப்படுத்தினார்கள்.
 ஒரு சின்ன விஷயம். இந்தியாவில் ஒரு தடவைக்கு மேல் பிரதமராகவோ, முதல்வராகவோ வரக் கூடாது என்று விதி வகுக்க யாரும் தயாரில்லை. ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம் என்று அமைத்தார்கள். இந்த அமைப்பு அப்படியே அந்த நபரைச் சர்வாதிகாரத்தை நோக்கித்தான் அழைத்துச் செல்லும். அவ்வாறுதான் அழைத்துச் செல்கிறது.
 கி.பி. 9-ஆம் நூற்றாண்டில், தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட கிராம சபைகளில் சபைக்கு நிற்கும் உறுப்பினர் இரண்டாவது முறை நிற்க முடியாது. அதுமட்டுமன்றி, அந்தக் குறிப்பிட்ட கிராம சபை உறுப்பினரைத் தொடர்ந்து அவருடைய நெருங்கிய உறவினர் யாரும் தொடர்ந்து பதவிக்கு வர முடியாது, வரக் கூடாது. கல்வெட்டுகளிலேயே பதித்து வைத்தார்கள்.
 கிராம சபைக்கு நிற்போருடைய தகுதி, வருமானம், பொது வாழ்க்கை முதலான அனைத்தும் பற்றித் தெளிவாக ஒழுக்க விதிகள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக, அப்போது ஒழுக்க மீறலே தமிழகத்தில் நிகழவில்லை.
 ஆங்கிலேயர் கீழ் இருந்த சிங்கப்பூர் 1965-இல் சுதந்திரம் பெற்றது. அரசியல் சாசனம் வகுக்கப்பட்டது. நெறிமுறைகள் மீறப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சாலைகளில் பேருந்துப் பயணத் தகராறுக்காகக் கலவரம் செய்தார்கள். கலவரம் செய்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். கூட இருந்தவர்கள் வங்க நாட்டைச் சேர்ந்தவர்கள். அத்தனை பேரும் மூட்டைக் கட்டப்பட்டு பாய், பையோடு அவரவர் நாட்டுக்கு அனுப்பப்பட்டார்கள்.
 நம் நாட்டில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். சட்ட மீறல் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஒழுக்கநிலை பிறழ்ந்தால் உரிய தண்டனை வந்தே தீர வேண்டும். இந்தச் சூழ்நிலை இந்திரா காந்தி 1975-இல் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியபோது பேரளவு நடைமுறையில் இருந்தது. அது நீக்கப்பட்டவுடன் எல்லாம் ஒருசேர நீக்கப்பட்டுவிட்டன என்பதே உண்மை, உண்மையிலும் உண்மை.
 
அயல்நாடுகளில் சிவப்பு சிக்னல் எக்காரணம் கொண்டும் மீறப்படுவது இல்லை. குறுக்கே வாகனங்கள்
வராவிட்டாலும்கூட நாம் போகலாம் என்று சிவப்பு சிக்னலை மீறிப் போகவே மாட்டார்கள். காவலரே
இல்லாத இடத்திலும் சட்டத்தை மீறாத பண்பை அங்கே சாதாரணமாகக் காணலாம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com