பண்பாட்டை நோக்கிய பயணம்

கத்தோலிக்கர்களின் தலைநகரான வாட்டிகனில் இருந்து போப் பிரான்சிஸ் கடந்த ஜூன் 18-ஆம் தேதி தெரிவித்த கருத்து:

கத்தோலிக்கர்களின் தலைநகரான வாட்டிகனில் இருந்து போப் பிரான்சிஸ் கடந்த ஜூன் 18-ஆம் தேதி தெரிவித்த கருத்து: மற்ற எல்லாவற்றையும்விடப் பண்பாட்டு வளர்ச்சியே முக்கியம். நாம் பொருளாதாரத்தில் வளர்ந்திருக்கிறோம். வளர்ந்துகொண்டும் இருக்கிறோம்.
 ஆனால், இது போதாது. உயர் குணங்களை உடைய மனிதர்களைப் பெற்றிருக்கும் உயர் பண்பாட்டை நோக்கி நாம் நகர வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
 ஸ்காட்லாந்து கடற்கரையோரம் உள்ள ஒரு தீவில் கன்னா என்ற பெயருடைய கடை ஒன்று உள்ளது. அந்தத் தீவில் உள்ள ஒரே கடை அதுதான். கடையின் சொந்தக்காரர் பெயர் ஜூலி மெக்காப். அன்பளிப்புப் பொருள்கள், கைத்தொழில் பொருள்கள், சில மளிகைக் பொருள்கள் உள்ளிட்டவை அங்கு விற்கப்பட்டன. இருபத்து நான்கு மணி நேரமும் அந்தக் கடை திறந்திருக்கும்.
 தீவில் உள்ள மக்கள் பெரும்பாலோர் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டவர்கள். கடைக்கு வரும் சிலர் அவர்களே காபி போட்டு குடிக்கவும் வசதி செய்யப்பட்டிருந்தது.
 பொருள் வாங்க வருவோர் தங்களுக்கு வேண்டிய பொருள்களை எடுத்துக் கொண்டு என்னென்ன பொருள் எடுத்தோம், ஒவ்வொன்றின் விலை ஆகியவற்றைக் கூட்டி பெருக்கி, உரிய பணத்தைக் கல்லாப்பெட்டியில் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.
 அங்குள்ள மக்கள் தொகை 96 பேர். அந்தத் தீவில் குற்றங்கள் எதுவும் நடப்பதில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளாகக் குற்றப் பதிவு எதுவும் இல்லை. தனிக் காவல் நிலையமும் இல்லை. ஒரு போலீஸ்காரர்கூட அந்தத் தீவில் பொறுப்பு வகிக்கவில்லை.
 இத்தகைய தீவில் உள்ள அந்த ஒரே கடையில் திருட்டு ஒன்று நடந்துவிட்டது. அங்கு இருந்த இனிப்புகள், சாக்லேட்டுகள், பிஸ்கெட், பேட்டரிகள் முதலானவற்றைச் சிலர் எடுத்துச் சென்றுவிட்டார்கள். இதுபோன்ற ஒரு தவறு 1960-ஆம் ஆண்டு அங்கு நடந்திருந்தது.
 மரத்தால் ஆன தட்டு ஒன்று அங்கிருந்த ரூ என்ற மாதா கோவிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது. திருடப்பட்ட பொருள்களின் மதிப்பு இருநூறு டாலர் இருக்கும். நீண்ட காலமாக திருட்டே இல்லாத அந்தத் தீவில் ஒரு திருட்டு நடந்துவிட்டதே என்று அவர்களுக்கு மிக வருத்தம்.
 இந்த நிகழ்வை மனத்துள் கொண்டு நம் நாட்டையும் நாம் நோக்குதல் வேண்டும். நம் நாட்டில் தமிழ் உள்பட சில மொழி ஏடுகளில் இன்று நடந்த திருட்டுகளின் விவரம், இன்று நடந்த குற்றங்களின் விவரம் என்று நாள்தோறும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கொஞ்ச காலத்துக்கு முன்பு ஓர் ஆங்கில நாளேடு தமிழ்நாட்டில் நடக்கும் அன்றாடக் குற்றங்களின் விழுக்காட்டைப் பட்டியல் போட்டுக் காட்டிக் கொண்டே வந்தது.
 நம் நாட்டிலும் குற்றங்கள் நடக்கின்றன. அவற்றில் 50 சதவீதம் பொருளாதாரக் குற்றம் என்றால், 50 சதவீதம் ஆண் - பெண் உறவு தொடர்பான குற்றங்கள்.
 முதலாவது குற்றம் பொருளாதார ஏற்றத் தாழ்வால் நிகழ்வது. இரண்டாவது வகையான குற்ற நிகழ்வுகள், மனம் இன்னும் இங்கே பண்படவில்லை என்பதையே காட்டுகின்றன. இவை ஆண் -பெண் உறவுச் சிக்கலால் நேர்வது.
 நம் நாட்டின் தலைநகரமான புது தில்லி பாலியல் வன்புணர்வுக் குற்றங்களின் தலைநகரம் என்றே கருதப்படும் அவல நிலை தோன்றிவிட்டது. சில காலம் முன்பு பேருந்தில் சென்று கொண்டிருந்த பெண் பலரால் வன்புணர்வு செய்யப்பட்ட கொடும் செய்தி எங்குப் பார்த்தாலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
 அண்மையில் மிகப் பரவலாக, குழந்தை முதல் குடுகுடு கிழவர் வரை, வறியவர் முதல் செல்வந்தர் வரை எல்லோரது கைகளிலும் தவழ்ந்து கொண்டிருக்கும் செல்போன் எனும் செல்லிடப்பேசி வன்புணர்வுக் குற்றங்களுக்கு மிக உதவியாக இருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
 நாம் வளர்ச்சி என்று கருதுகின்ற பல பொருள்கள் பண்பாட்டு அளவில் நம் சமுதாயத்தில் பெரும் வீழ்ச்சியைப் பெருக்குகின்றன என்பது மறுக்கவியலாத உண்மையாகும்.
 அயல்நாட்டிலிருந்து ஒரு பொருளோ, புதிய பழக்கமோ இந்தியாவில் தொலைக்காட்சிகளாலும், வெளிநாடு சென்று வருவோராலும் பரப்பப்படும்பொழுது உள்நாட்டு அரசோ, மக்களோ எச்சரிக்கையோடு இருப்பதில்லை.
 சான்று: கடந்த நூற்றாண்டின் பாதி வரை, உலகத்தின் பல பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயர்கள், சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கிரிக்கெட் விளையாட்டை இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர்.
 இந்த விளையாட்டு 50-க்கும் மேற்பட்ட நாடுகளை உடைய ஐரோப்பா கண்டத்தில் இங்கிலாந்தைத் தவிர எங்கும் விளையாடப்படவில்லை. உலகின் மிகப் பெரும் செல்வந்த நாடாகிய அமெரிக்காவிலும் விளையாடப்படவில்லை. சீனாவை நோக்கிக் கொண்டு வந்தபொழுது சீன அரசு இவ்விளையாட்டை உள்ளே விடவே இல்லை.
 பிரிட்டனின் அடிமை நாடுகளாக இருந்த சிலவற்றில் மட்டுமே இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது. தலைமையில் இருப்போர் ஒரு புதிய பழக்கத்தால் தம் நாட்டு மக்களுக்கு நன்மையா, தீமையா என்று ஆராய்ந்து தீமை என்று சொன்னால், தொடக்கத்திலேயே அதனைக் கிள்ளி எறிந்து விடுகிறார்கள்.
 ஆனால், நமது நாட்டில் கிரிக்கெட்டை வளரவிட்டதால், கோடிக்கணக்கான இளைஞர்களின் நேரம் வீணாவதுடன் இன்று சூதாட்டத்தில் சிக்கி அந்த விளையாட்டு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும், அதன் மோகத்தில் இருந்து இந்தியர்கள் விடுபடுவார்களா என்பது கேள்விக்குறியே.
 தங்களுக்குத் தேவை இல்லை என்று ஒன்றை நினைத்தால், அதை அந்த நாட்டின் தலைமை தடுத்து நிறுத்திவிடும் என்பதற்கு வரலாற்றில் பேசப்படும் ஜப்பானிய சம்பவம் ஒன்று இங்கே நினைவு கொள்ளத்தக்கது.
 அரசர் ஆட்சியில் ஜப்பான் 15-ஆம் நூற்றாண்டில் செழித்திருந்தபோது அங்கே வந்த நெதர்லாந்துக்காரர்கள் தங்கள் கடவுளைப் பற்றிய பிரசாரத்தை ஜப்பானில் மெற்கொள்ள அனுமதி கேட்டார்கள். அனுமதி மறுக்கப்பட்டது. அதனால்தான், ஏனைய நாடுகளில் கிறிஸ்தவம் பின்பற்றப்படுவதைப் போல் ஜப்பானில் பின்பற்றப்படவில்லை.
 கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்ட உலகின் பல நாடுகள் ஆங்கிலேயர் ஆட்சிக்கும், பிரெஞ்சுக்காரர் ஆட்சிக்கும், இன்னபிற மேற்கு ஐரோப்பிய நாடுகளின் ஆட்சிக்கும் தளைப்பட்டனர்.
 உலகிலேயே ஐரோப்பாவால் அடிமைப்படுத்தப்படாத ஒரே நாடாக ஜப்பான் விளங்குகிறது. இன்று உலகப் பொருளாதாரத்துக்கு அறைகூவல் விடும் நாடாக அது வளர்ச்சி பெற்றுள்ளது.
 பொருளாதார வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், அந்த நாட்டில் மக்களின் பண்பாடு எப்படி என்பதுதான் மிகவும் முதன்மையானதாகும்.
 உலகில் இதுவரை இரண்டு உலகப் பெரும் போர்கள் நிகழ்ந்துள்ளன. இரண்டுக்கும் காரணம் ஐரோப்பியர். குறிப்பாக, ஜெர்மானியரும், இத்தாலியரும். ஹிட்லர் ஜெர்மானியத் தலைவர் என்பதும், முசோலினி இத்தாலித் தலைவர் என்பதும், இருவரும் கொடுமை வாய்ந்த சர்வாதிகாரிகள் என்பதும் உலகம் அறிந்த ஒன்று.
 ஐரோப்பா முழுதும் போர்க்களத்தில் நின்றபோதும் அவர்கள் ஒரு நாட்டை மட்டும் தீண்டவே இல்லை. திட்டமிட்டே தீண்டவில்லை. அந்நாடுதான் சுவிட்சர்லாந்து.
 கடிகாரத்தையும், நாணயத்தையும், வங்கிகளையும் நம்பி ஒரு நாடு மிகச் செழிப்பாக இருக்கிறது என்பதற்குச் சாட்சிதான் சுவிட்சர்லாந்து. இன்றும் உலக நாடுகளில் தனிப்பெரும் சுற்றுலாத் தலமாக இயங்கி வருகிறது.
 இந்த வரலாற்று நிகழ்வுகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்: பொருளாதாரத்தில் முன்னேறுவோம். அதற்கு இணையாக அதற்கு மேலும் பண்பாதாரத்தில் நாம் முன்னேற வேண்டும்.
 இந்தியா என்றாலோ சென்னை என்றாலோ, உடனே பிக்பாக்கெட், திருட்டு, ஏமாற்று, பொய், புறம் பேசுதல் என வெளிநாட்டுக்காரர்கள் விமானத்தைவிட்டு இறங்குவதற்கு முன்பே பட்டியலிடுகிறார்கள். அதற்கு ஏற்ப நம் நாட்டு மக்களும் வெள்ளைக்காரர் என்றால் அவரிடம் எல்லாம் இருக்கும் என்று திருடுகிறார்கள். அவர்கள் பொருளை எடுத்துச் செல்கிறார்கள். பொய் சொல்லி ஏமாற்றுகிறார்கள்.
 ஒரு சமயம் வெள்ளையர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் இறங்கி நகருக்குச் செல்ல டாக்ஸி பிடித்தபோது டாக்ஸிக்காரர் ஊர் உலகமெல்லாம் சுற்றிக் காண்பித்துவிட்டு இறங்குமிடத்தில் ஆயிரக்கணக்கில் பணம் கறந்ததைச் செய்தி ஏடுகள் வருத்தத்தோடு வெளியிட்டன.
 பண்பாடுதான் இந்தியாவின், தமிழர்களின் ஆதாரமாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்தது. அந்த நிலையை மீண்டும் ஏற்படுத்த நாம் ஒவ்வொருவருமே பங்காற்ற வேண்டிய கடமை உள்ளது.
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் துணைவேந்தர்,
 மனோன்மணீயம் சுந்தரனார்
 பல்கலைக்கழகம்.
 மற்ற எல்லாவற்றையும்விடப் பண்பாட்டு வளர்ச்சியே முக்கியம். நாம் பொருளாதாரத்தில் வளர்ந்திருக்கிறோம். வளர்ந்துகொண்டும் இருக்கிறோம். ஆனால், இது போதாது. உயர் குணங்களை உடைய மனிதர்களைப் பெற்றிருக்கும் உயர் பண்பாட்டை நோக்கி நாம் நகர வேண்டும் - போப் பிரான்சிஸ்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com