கூட்ட உணர்வா? கூட்டு உணர்வா?

வேடன் விரித்த வலையில் மாட்டிக் கொண்ட பறவைகள், ஒரே நேரத்தில் உயரே எழும்பிப் பறந்து சென்று தப்பித்தன என்ற

வேடன் விரித்த வலையில் மாட்டிக் கொண்ட பறவைகள், ஒரே நேரத்தில் உயரே எழும்பிப் பறந்து சென்று தப்பித்தன என்ற புகழ்பெற்ற கதை நாம் அறிந்ததே. இந்தக் கதை வெறும் விளையாட்டுக் கற்பனை அல்ல. மனிதர்களுக்கு அறிவுரை சொல்வதற்காகச் சொல்லப்பட்ட கதை.
 உலகில் ஜப்பானியர்களைக் கூட்டுணர்வு (டீம் ஸ்பிரிட்) மிகுதியாக உடையவர்கள் என்று சமூக உள இயலாளர்கள் குறிப்பார்கள். ஒன்று சேர்ந்து செயல்புரிவதிலும் செயலை முடிப்பதிலும் ஜப்பானியர்கள் முன்னணியில் நிற்பவர்கள்.
 அவர்களைப் பற்றி ஒரு வரலாறு உண்டு. உலகத்தில் சராசரி மனிதரின் வேலை நேரம் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம். சில நாடுகளில் பன்னிரண்டு மணி நேரம். ஆனால், ஜப்பானில் பதினான்கு மணி நேரம்.
 முதல் உலகப் போர் நேரத்தில் ஜப்பானில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு உலகச் சந்தையில் மதிப்பு இல்லை. ஐரோப்பியர்களை பார்த்துக் காப்பியடித்து மிகவும் தரக் குறைவான பொருள்களை ஜப்பானியர்கள் உற்பத்தி செய்வதாகப் பழித்தார்கள்.
 இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சிறந்த கடிகாரம், சிறந்த தொலைக்காட்சிப் பெட்டி, சிறந்த செல்லிடப்பேசிகள், சிறந்த மின்னணுப் பொருள்கள், சிறந்த கார்கள் என பல பொருள்கள் ஜப்பானில் மிகத் தரமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றுக்கு உலகமெங்கும் கிராக்கி இருக்கிறது. பணக்கார நாடாகச் சொல்லப் பெறும் அமெரிக்காவில் ஜப்பானியர் பொருள்களுக்கு மிகுந்த மதிப்பு. அங்குள்ள பல பல்கலைக்கழகங்களில் அமெரிக்க இளைஞர்களுக்கு ஜப்பானிய மொழி கற்பிக்கப்படுகிறது.
 ஜப்பானியர்களைப் பற்றிய மேலும் ஒரு வரலாறு வருமாறு: மேற்கு ஐரோப்பாவிலிருந்து புறப்பட்டவர்கள் ஆசிய நாடுகளுக்கு உள் சென்று தம் கடவுள் பிரசாரத்தைச் செய்ய விழைந்தார்கள். பசிபிக் தீவுகளில் நெதர்லாந்துக்காரர்கள் முன்னணியில் இருந்தார்கள். ஜப்பானியத் தீவுகளை அவர்கள் அடைந்து உள்ளூர் அரசனிடம் தங்கள் கடவுளைப் பற்றி மக்களிடையே பரப்புவதற்கு அனுமதி கேட்டனர். ஜப்பானிய அரசர் அனுமதி தர மறுத்துவிட்டார். நெதர்லாந்துக்காரர்கள் தங்கள் மண்ணில் கால் வைக்க அவர் உடன்படவில்லை. விளைவு மேற்கு ஐரோப்பியக் கடவுள் பிரசாரம் ஜப்பானில் நிகழவே இல்லை. இவ்வாறு தப்பிய இன்னோர் ஆசிய நாடு தாய்லாந்து.
 இந்தியா, மியான்மர், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளும், ஆப்பிரிக்கக் கண்டமும், உலகின் பல பகுதிகளில் உள்ள நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் கடவுள் பிரசாரத்துக்குத் தலையசைத்து முடிவில் மேற்கு ஐரோப்பிய காலனி நாடுகளாக அடிமையானது
 வரலாறு.
 பிரெஞ்ச் ஆப்பிரிக்காவில் புகழ் பெற்ற கவிஞரான செங்கோர், சஹா எனும் தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். சஹா என்பவன் தென் ஆப்பிரிக்காவில் ஒரு நாட்டுக்கு அரசன். அவன் ஐரோப்பியரை நோக்கிச் சொல்வதாக அந்தக் கவிதையில் வருகிறது: நீங்கள் எங்கள் நாட்டில் கால் எடுத்து வைக்கும்போது உங்கள் கைகளில் வேதப் புத்தகம் இருந்தது. எங்கள் கால்களில் எங்கள் நாடு இருந்தது. இப்போது எங்கள் கைகளில் உங்கள் வேதப் புத்தகம் இருக்கிறது. உங்கள் கால்களில் எங்கள் நாடு இருக்கிறது.
 இந்தியா காலனி ஆதிக்கத்திலிருந்து சில நூறு ஆண்டுகள் கடந்த பின்புதான் 1947-இல் விடுதலை பெற்றது. இந்த வரலாறு நம் மனத்தில் இன்று அல்ல, என்றும் நிற்க வேண்டும்.
 ஒன்றை ஏற்பதோ, எதிர்ப்பதோ அதனைக் கூட்டாகச் செய்ய நாம் பழகிக் கொள்ள வேண்டும். கூட்டமாகச் செய்ய அல்ல. நம்மிடையே பரவியுள்ள கட்சிகளும் இன்னபிற இயக்கங்களும் நம்மிடையே கூட்ட உணர்வை மட்டும்தான் பெருக்குகின்றன. கூட்ட உணர்வுக்கும் கூட்டு உணர்வுக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது.
 ஒரு பெரும் கூட்டத்தில் கலந்து கொள்கிற ஒருவருக்குத் தன் பக்கத்தில் அமர்ந்திருக்கிற ஆளைப் பற்றிக் கவலையில்லை. அவரளவில்தான் அவருக்குத் தெரியும். ஏதேனும் விபத்து, வேகம் என்றால் அவர் மட்டும்தான் அங்கிருந்து தப்பி ஓடப் பார்ப்பார். தேவைப்பட்டால் தன் நலத்துக்காக அருகில் இருந்தவரையும் உதறித் தள்ளிவிட்டு ஓடப் பார்ப்பார். ஒருவருக்கு ஒருவர் அறிமுகமான கூட்டுணர்வு உடையவராக இருந்தால், இது நடக்காது.
 எனவே, இந்திய அரசியல் கட்சிகள் இந்தியர்களிடையே கூட்ட உணர்வை வளர்ப்பதை முற்றுமாக விட்டுவிட வேண்டும். ஊரில் நடக்கும் திருவிழாவில் அந்த ஊரில் உள்ள நடுத் தெரு, கீழத் தெரு, மேலைத் தெரு மக்கள் கலந்து கொள்கிறார்கள். ஒரு தெருவில் உள்ள மக்களுக்கு இன்னொரு தெருவில் உள்ள மக்களை நெருக்கமாகத் தெரியும். இதுபோன்று, ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து கொள்கிற அமைப்புகளையே நாம் மக்களிடையே வளர்த்தெடுக்க வேண்டும்.
 கூட்டுணர்வு வளர்க்கப்பட வேண்டிய மக்களுக்கு சிறு சிறு குழுவாகத் தனிப் பயிற்சி அளித்தல் வேண்டும். தனிப் பயிற்சி அளிக்கும்போது பொது இலக்கைத் தெளிவுபடுத்திவிட வேண்டும். பொது இலக்கை அடைவதற்கு என்னென்ன செய்தல் வேண்டும் என்பதை விளக்க வேண்டும். முடிந்தால் மாதம் ஒரு முறையோ, வாரம் ஒரு முறையோ குழுவில் உள்ளவர்கள் பொது இடத்தில் கூடவேண்டும்.
 சான்றாக, வெள்ளிதோறும் இஸ்லாமியப் பெருமக்கள் தர்காவில் கூடுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் கிறித்துவப் பெருமக்கள் தேவாலயங்களில் கூடுகிறார்கள். வாரந்தோறும் அவர்களிடையே நிகழும் கூட்டம் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்ளவும், நலம் விசாரிக்கவும், நட்பையும், உறவையும் பெருக்கிக் கொள்ளவும் உதவுகின்றன. வழிபடும் கடவுள், வழிபடக் கூடும் இடம் ஆகியன பொதுவாக இருப்பதாலும், தவறாமல் குறித்த நாளில் சந்திப்பதாலும் கூட்ட உணர்வு மறைந்து கூட்டுணர்வு பல்குகிறது.
 இத்தகு கூட்டு உணர்வு வளர்வதை வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடையே பார்க்கிறோம். அங்கே சிறுபான்மை சமுதாயமாகத் தமிழர்கள் இருப்பதால், கோயில் கூட்டங்களிலும், பிற குழுக் கூட்டங்களிலும் சந்தித்துக் கொள்கிறார்கள். இத்தகு சந்திப்பு நிகழும்போது குடும்பத் தலைவர் மட்டும் சந்திப்பதுடன் அல்லாமல், மனைவி, குழந்தைகள் என அனைவரும் ஒருங்கு கூடவேண்டும். இத்தகு கூடுதலை வெளிப்புலங்களில் வாழும் சீக்கியர்கள் தவறாமல் செய்து வருவதைப் பார்க்கலாம்.
 விருந்துக்கு அழைப்பது, திருமணம் முதலான மங்கள நிகழ்வுகளில் சந்திப்பது, இறப்பு, உடல்நலக் குறைவு நேரும்போது கூடுவது, துன்பத்தைப் பகிர்ந்து கொள்வது, ஒருவருக்கு ஒருவர் தொழிலிலும் முடிந்தால், பணம் கொடுத்தலிலும் பகிர்ந்து கொள்வது ஆகியன கூட்டுணர்வை வளர்க்கும்.
 தமிழரிடையே இருந்துவரும் ஜாதி உணர்வையும், மத உணர்வையும், வட்டார உணர்வையும் மெல்ல மெல்ல முற்றாக விலக்கிக் கொள்ள வேண்டும். நாம் அனைவரும் தமிழர் என்ற நினைவோடு செயல்படுவார்களேயானால், வெற்றி உறுதி.
 ஒரு சமுதாயம் முழு வெற்றி பெற வேண்டுமானால், அது கட்டுக்கோப்பு உடையதாக இருத்தல் வேண்டும். அதற்குத் தக சமுதாயத்தின் ஒவ்வொரு தளத்திலும் கூட்டுணர்வு வளர்க்கப் பெறுதல் வேண்டும். யூதர், ஜப்பானியர் ஆகியோரிடையே வளர்க்கப் பெற்ற கூட்டுணர்வே அவர்களின் வெற்றிக்குப் பெரும் காரணம் ஆகும்.
 "தமிழர், தமிழ் மானுடர்' எனும் குவியத்தில் ஒன்றுபடாமல் ஜாதி, மதம், கட்சி, வட்டார அடிப்படையில் தமிழர்கள் தொடர்ந்து பிளவுபடுத்தப் பெறுகின்றனர். இந்தப் பிளவு முயற்சி தொடர்ந்து தமிழகத்தில் இன்றும் நிகழ்ந்து வருகிறது. ஜாதி, சமயம், கட்சி ஆகியன அகமுகமாகத் திரும்பித் தமக்குள்ளே கூட்ட உணர்வை மட்டுமே வளர்த்துக் கொள்ளும்.
 ஜாதி, சமய, கட்சி அமைப்புகள் கூட்டுணர்வுக்குப் பதிலாகக் கூட்ட உணர்வை உரம் போட்டு வளர்ப்பதுடன் தமிழருடைய உடல் சார்ந்த உணர்ச்சிகளைத் தொடர்ந்து தூண்டுவதில் கவனமாக இருக்கின்றன. உணர்ச்சிக் கூறுகள் வளர்க்கப் பெறுவதால் உண்மையை எடை போட்டுப் பார்க்கும் அறிவுக் கூறுகள் மழுங்கடிக்கப்படுகின்றன. எனவேதான், அறிவார்ந்த இயக்கங்கள் தமிழ்நாட்டில் தமிழரிடையே செழிப்பதில்லை.
 உடல் உணர்வுக்குத் தீனியிடும் விடுதிகள், திரைப்படங்கள், ஏடுகள் பெருகுகின்றன. வாய் உணர்வுக்குத் தீனியிடும் மது வகைகள், சிகரெட்டுகள் முதலான இறக்குமதித் தீனிகள், குடிப்பான்கள் மிகுதியாகின்றன.
 கண்ணுக்குத் தீனியிடும் திரை, தொலைக்காட்சிப் படங்கள், இதழில் இடம் பெறும் கவர்ச்சிப் படங்கள், சுவரொட்டிகள், வெட்டுருவங்கள் பல்குகின்றன. செவியுணர்வுக்கு இரைபோடும் கொச்சைப் பாடல்களும், மூக்குணர்வுக்கு பொடி, போதை மருந்து வகைகளும் மிகுதியான பழக்கத்துக்கு வருகின்றன.
 ஏனைய பொறிவழி உணர்வுகளைவிட கண்வழிப் பொறி உணர்வு மிகுந்த ஆற்றல் வாய்ந்தது என்பதால், தமிழகத்தில் தத்துவக் கட்சித் தலைவர்கள் தலைமை இடத்துக்கு வருவதைவிடக் காட்சித் தலைவர்களே கட்சித் தலைவர்களாக வருகின்றனர். இதில் திரைப்படத்தின் பங்கு மிகப் பெரியதாகும்.
 1970-களுக்குப் பிறகு தமிழக அரசியலில் திரைப்படச் சோதனைகள் பொய் புனைவுகள் மிகுதியாக இருந்து வருவதற்குக் காரணம் உணர்ச்சி ஊட்டி வளர்க்கப் பெற்றதே ஆகும். உணர்ச்சி அறிவை மறைக்கும், உண்மையை மறைக்கும் என்பதால் ஊழல் செய்யும் தலைவர்களின் பொய்க் கோலம் மக்களுக்குத் தெரியாமல் இருக்க உணர்வூட்டம் திட்டமிட்டு வளர்க்கப் பெறுகிறது.
 இந்த நிலை மாற வேண்டுமெனில், தமிழன் என்பதையும், மானுடன் என்பதையும் முன்னிறுத்தி ஒரு தாய்ப் பிள்ளை உணர்வு வளர்க்கப் பெறுதல் வேண்டும்.
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் துணைவேந்தர்,
 மனோன்மணீயம் சுந்தரனார்
 பல்கலைக்கழகம்.
 ஒரு சமுதாயம் முழு வெற்றி பெற வேண்டுமானால், அது கட்டுக்கோப்பு உடையதாக இருத்தல் வேண்டும். அதற்குத் தக சமுதாயத்தின் ஒவ்வொரு தளத்திலும் கூட்டுணர்வு வளர்க்கப் பெறுதல் வேண்டும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com