தொழிலாளர்களின் தொண்டர்

இந்திய தேசியத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஜி. ராமானுஜம் நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இந்திய தேசியத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஜி. ராமானுஜம் நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய கேரள முதல்வர் உம்மன் சாண்டி, அதிகார அரசியலை அறவே வெறுத்து, காந்தியடிகளின் நெறிமுறைகளைத் தனது வாழ்வில் கடைப்பிடித்து, எங்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர் ராமானுஜம் என்று புகழாரம் சூட்டினார்.
 ராமானுஜம், தமிழகத்தின் தென் கோடியிலுள்ள ராமநாதபுரத்தை அடுத்த "எதிர்கொட்டல்' என்ற சிற்றூரைச் சேர்ந்தவர். 1915-ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி பிறந்தார். அவரால் பள்ளியிறுதி வகுப்பு வரைதான் படிக்க முடிந்தது. ஏதேனும் ஒரு பணியில் சேர வேண்டிய குடும்பச்
 சூழ்நிலை.
 விருதுநகரில் விளைபொருள்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியிடம் பணிக்குச் சேர்ந்தார். நாளடைவில் அந்தப் பணி அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே, பணியை விட்டு விலகினார்.
 பெற்றோர் அனுமதியுடன் ஹரித்வார் சென்றபோது, பின்னாளில் பாரதத்தின் தாற்காலிகப் பிரதமராக இரு முறை தேர்வான குல்சாரிலால் நந்தாவை அங்கு சந்தித்தார்.
 ராமானுஜத்தை குல்சாரிலால் நந்தா சபர்மதி ஆஸ்ரமத்துக்கு அழைத்துச் சென்றார். இவர் அங்கு சென்ற நேரத்தில் தொழிலாளர்களுக்கான அமைப்பொன்றை உருவாக்குவதில் காந்திஜி தீவிரமாக ஈடுபட்டிருந்தார். தொழிற்சங்கம் அமைய வேண்டும். அந்த அமைப்பு தொண்டுள்ளத்துடன் வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றெல்லாம் மகாத்மா காந்தி கொள்கை வகுத்தார்.
 அப்படி உருவான அமைப்புதான் ஹிந்துஸ்தான் மஸ்தூர் சேவா சங்கம். இதன் வழிகாட்டிகளாக காந்தி மூன்று பேரை நியமித்தார். அந்த மூன்று பேர்: குல்சாரிலால் நந்தா, கந்துபாய் தேசாய், ஜி. ராமானுஜம் ஆவர்.
 தொழிலாளர்கள் மத்தியில் இந்த சங்கம் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருந்த நிலையில், குல்சாரிலால் நந்தா, கந்துபாய் தேசாய் இருவரும் காங்கிரஸ் கட்சியின் முழுநேர ஊழியராகத் தங்களைப் பதிவு செய்து கொண்டு, சங்கத்தை விட்டு விலகினர்.
 கட்சி அரசியலை விரும்பாதவர் ராமானுஜம். அதனால், அவர் தன்னந்தனியாக மஸ்தூர் சேவா சங்கத்தை வலுப்படுத்த உழைத்தார்.
 தொழிற்சங்க இயக்கம், கட்சிகளின் கட்டுப்பாடுகள் இன்றி சுயேச்சையாய் செயல்பட வேண்டுமென்ற கருத்துடைய என்.எம். ஜோஷி என்று அழைக்கப்படும் நாராயண் மல்ஹார் ஜோஷி 31.10.1920இல் "அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ்' (ஏ.ஐ.டி.யூ.சி.) அமைப்பை நிறுவினார். தொழிற்சங்க அமைப்பில் சிதறிக் கிடந்த தொழிலாளர்கள் இதில் இணைந்தனர்.
 பொதுவுடைமை சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட தலைவர்களின் ஆதிக்கத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளானதை விரும்பாதவர்கள் ஒருங்கிணைந்தனர். அவர்கள் "இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ்' (ஐ.என்.டி.யூ.சி.) என்ற புதிய அமைப்பை 3.5.1947-இல் தொடங்கினர். இதன் தலைவராக ஆசார்ய ஜே.பி. கிருபளானி இருந்தார்.
 கட்சி அரசியலோடு எவ்விதத் தொடர்பும் கொள்ளக் கூடாது என்ற ராமானுஜத்தின் நிபந்தனையை காங்கிரஸ் கொள்கை அளவில் ஏற்ற பின், பொறுப்புகளை ஏற்றார். ஐ.என்.டி.யூ.சி. அமைப்பின் வளர்ச்சிக்காகத் தன்னலமற்று, கூட்டுத் தலைமையின் ஆதரவோடு உழைத்த பெருமை இவருக்கு உண்டு. தலைவராக, பொதுச் செயலாளராக செயல்பட்டவர்.
 உற்பத்தி பாதிக்க இடம் கொடுக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர். அதேநேரம், கோரிக்கைகள் குறித்த போராட்டங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டவர். வேலை நிறுத்தத்தைக் கடைசி ஆயுதமாகவே பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். எதிலும் நிதானத்தை வலியுறுத்தியவர்.
 தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தின் நலனை மனதில் பதித்து வாழ வேண்டும் என்றும் போதித்தார். அவர்களின் உன்னத மூலதனம் உழைப்பு, உழைப்பு, உழைப்பு மட்டுமே.
 தொழிலாளர்கள் பிச்சை எடுப்பவர்கள் அல்லர்; உழைத்து ஊதியம் பெற்று, தன்மானத்துடன் சமூகத்தில் கெüரவமாக வாழ்பவர்கள். முதலாளிகள் இதை முற்றிலும் உணர்ந்து, உரிய உரிமைகளும், ஊதிய உயர்வும், லாபத்தில் பங்கும் வருடம்தோறும் அளித்தால், தொழில் வளர்ச்சி பெருகும் என்பதை வலியுறுத்தியவர்.
 தொழிலாளர் நலச் சட்டங்களை ஆழ்ந்து அறிந்தவர். இவரை ரிசர்வ் வங்கி, ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம், ஹிந்துஸ்தான் இயந்திரக் கருவிகள் உற்பத்தி நிறுவனம், நெய்வேலி நிலக்கரி மையம் ஆகிய அமைப்புகளுக்கு இயக்குநராக மத்திய அரசு நியமித்தது.
 தேசிய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்துடன் இணைந்த தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவராக பல ஆண்டுகள் இருந்தவர். தொழிற்சாலையில் அமைதி நிலவ பாடுபட்டவர் என்பதால் டாக்டர் ஜஹாங்கீர் சாண்டி விருதும், மத்திய அரசின் பத்ம பூஷண் விருதும் 1985-இல் பெற்றார்.
 தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் அவரது பெயரில் நிரந்தர இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
 அகில உலகத் தொழிலாளர் மாநாடுகளில் கலந்து கொண்டவர் ராமானுஜம். தொழிலாளி - முதலாளி உறவுகள் பற்றி ஆங்கிலத்தில் ஆறு நூல்களும், தமிழில் இரண்டு நூல்களும் எழுதியிருக்கிறார்.
 ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் தேர்தலில் தொழிலாளர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட தொகுதிகளை, சுதந்திரம் பெற்று 1952-இல் நடைபெற்ற முதல் தேர்தலில் ரத்து செய்ததை எதிர்த்தார். பின்னாளில், கோவா, ஒடிஸô மாநிலங்களின் ஆளுநராகப் பணியாற்றியவர்.
 தொழிலாளர்களின் தொண்டன் என தன்னடகத்துடன் எளிமையாக வாழ்ந்த கோபால ராமானுஜம் 26.6.2001இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com