தொழிலாளருக்காக வாழ்ந்தவர்

தமிழகத்தின் தொழிற்சங்க வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் ஆர். ராமநாதன்.

தமிழகத்தின் தொழிற்சங்க வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் ஆர். ராமநாதன். இவர் சிறு வயதில் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு போராட்டத்தில் பங்கு கொண்டு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.

நாவன்மை படைத்த ராமநாதனை மலேயா பகுத்தறிவு ஆய்வு மையம் அழைத்து, பிரசாரம் செய்ய வேண்டியது. இவரும் ஆர்வமுடன் ஏற்று, சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தொழிலாளர்களோடும் அவர்களின் குடும்பத்தினரோடும் பழகியபோது, அவர்கள் படும் சிரமங்களையும் துன்பங்களையும் ராமநாதன் நேரில் அறிந்தார்.

மலேயா அப்போது ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தில் இருந்ததால், அங்கு தொழிலாளர்கள் அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். இதனைப் போக்க வேண்டுமென ராமநாதன் முடிவெடுத்தார்.

சங்கங்கள் நிறுவி, அவர்களை ஒன்றுபடுத்த முயற்சித்தார். இதனை ஒற்றர்கள் மூலம் அறிந்த அரசு, ராமநாதனைக் கண்காணிக்க காவலர்களை நியமித்தது.

இதனை அறிந்த ராமநாதன், இரவு நேரத்தில், மாறுவேடத்தில் காவலர்களைச் சந்தித்து அவர்களின் பயத்தை நீக்கினார்.

"ஓர்க்கர்ஸ் லீக்' என்ற அமைப்பை உருவாக்கி, அதன் வாயிலாக, தோழமை உணர்வோடும் தொண்டு உள்ளத்தோடும் வாழக்கை நடத்த வழிகாட்டும் "சமுதாய ஊழியன்' என்ற இதழை இலவசமாக வெளியிட்டார்.

தொழிலாளர்கள் மனதில் நீறு பூத்த நெருப்பாக இருந்த விடுதலை உணர்வு கொழுந்து விட்டு எரியத் தொடங்கும் நேரத்தில், அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டுகிறார் என்று குற்றம் சாட்டி ராமநாதனை மலேய அரசு அந்நாட்டிலிருந்து வெளியேற்றியது.

அவர் பாரதம் திரும்பாமல் அங்கிருந்து நேராக சிங்கப்பூர் சென்றார். அங்கு தொழிற்சங்கங்கள் இயங்க அரசு அனுமதித்திருந்ததால், அவர் அங்கு தனது பணியினைத் தொடர்ந்தார். அங்கு நகராட்சி கடைநிலை ஊழியர்களுக்காகவும் போக்குவரத்துத் துறை பணியாளர்களுக்காகவும் சங்கம் அமைத்தார்.

அவர்களது கோரிக்கைகளுக்காக ஆர்பாட்டம் நடத்தியதோடு, ஒன்றுமையாகத் திரண்டு நின்ற தொழிலாளர்களின் அணிவகுப்பை, தனது தலைமையில் நகரத்தில் நடத்தினார். இதனைச் சற்றும் எதிர்பாராத சிங்கப்பூர் அரசு திகைத்தது.

ராமநாதனை உடனே இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. அவர் தேசப் பாதுகாப்புச் சட்டப்படி ஆந்திர மாநிலத்திலுள்ள ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்களில் விடுவிக்கப்பட்டார்.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தொழிலாளர் இயக்கங்களை ஏற்படுத்தியதோடு, அரசுக்கு அறைகூவலாக "சென்னை தொழிலாளர் காங்கிரûஸ'யும் நிறுவினார். 1946-இல் அதன் முதல் மாநாட்டை மதுரையில் நடத்தினார்.

அந்த மாநாட்டில் இவர் தொழிலாளர் காங்கிரஸின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு பேசும்போது தொழிலாளர்களின் உரிமைகளைக் குறிப்பிட்டதோடு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, அல்லும் பகலும் அயராது உழைக்கப்போவதாக சபதமெடுத்தார். கோரிக்கைகள் நிறைவேறாவிடில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை விரைவில் தொடங்கப் போவதாக முழக்கமிட்டார்.

இதனால் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்பட்டார்.

பொதுவுடைமை ஆட்சியிலும், அதன் அங்கமான அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸிலும் ராமநாதன் உழைத்தார். ஆயினும், இரண்டின் செயல்பாடுகளிலும் அதிருப்தியுற்றிருந்த பலருடன் தாமும் வெளியேறி, 1948-இல் கல்கத்தாவில் ஐக்கிய தொழிற்சங்க காங்கிரûஸ நிறுவினார். அதன் முதல் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாடு முழுதும் அடிப்படை உரிமைகள் கூட இல்லாமல் உழலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, கட்டடத் தொழிலாளர்களுக்கு, கப்பலில் சரக்குகளை ஏற்றி இறக்குவோர்களுக்கு, கடலில் இயற்கையின் சீற்றத்தை எதிர்த்து மீன் பிடிப்போர், கைத்தறி, காதி நெய்வோர், அவற்றை விற்பனை செய்வோர், கைவினை பொருள்கள் செய்வோர் ஆகியவர்களுக்கு நியாயமான வருமானம் கிடைக்கப் போராடினார்.

தொழிலாளர்களின் ஊர்வலங்களுக்குத் தலைமை தாங்கி, ராணுவக் கட்டுப்பாடோடு ஊர்வலங்களை நடத்திய பெருமை இவருக்கு உண்டு.

தொழிலாளர் நல சட்டங்களை உருவாக்க அரசுக்கு உதவியவர். "லேபர் கோர்ட்' என்று அழைக்கப்படும் தொழிலாளர் நீதிமன்றத்தை முறையாக பயன்படுத்தியவர் இவரே.

மத்திய } மாநில அரசுகளின் "முத்தரப்பு கூட்ட'ங்களில் தொழிலாளர் பிரதிநிதியும் பங்கு பெற வேண்டும் என்கிற கட்டாயத்தை ஏற்படுத்தியதோடு இவரே அதில் பங்கு பெற்றார்.

1952-இல் சிறந்த தொழிலாளர் தலைவராக இவரைத் தேர்ந்தெடுத்த சீன அரசு, "பெய்ஜிங்'கில் நடைபெற இருந்த தொழிலாளர் மாநாட்டில் கலந்து கொள்ள இவருக்கு சிறப்பு அழைப்பிதழ் அனுப்பியது.

இதனை அறிந்த, சிங்கப்பூர் அரசு, இவர் செல்லும் விமானம் தங்கள் நாட்டின் வழியாக செல்லக் கூடாது என்று தடை விதித்தது.

இதனால் அஞ்சாத ராமநாதன் வேறு வழியாக சீனா சென்று அந்த மாநாட்டில் பங்கேற்றார்.

சென்னை தாம்பரத்தில் வாடகை வீட்டில் வாழ்ந்து, நாள்தோறும் நெரிசல் மிக்க மின் தொடர் வண்டியில் பயணம் செய்து, ஏழைத் தொழிலாளர்கள் வாழ்வு வளம் பெற உழைத்து உழைத்து உருக்குலைந்தார்.

இவர் தனது குடும்பத்தினருக்கு அன்பைத் தவிர வேறு எதையும் அளிக்கவில்லை. தொழிலாளர்களின் வாழ்வை உயர்த்த வாழ்நாளெல்லாம் பாடுபட்ட அவர் வாழ்வு 1.10.1992 அன்று முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com