ஏமாற வேண்டாம்

இன்றையக்கு விளம்பரம் இல்லாத எந்தப் பொருளும் விற்பனை யாவதில்லை. முன்பெல்லாம் சிகரெட், புகையிலை போன்ற வெகு சில பொருள்களுக்கு மட்டுமே விளம்பரம் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்றைக்கு குண்டூசி முதல் செல்போன் வரை அனைத்துக்கும் விளம்பரம் தேவைப்படுகிறது.

இன்றையக்கு விளம்பரம் இல்லாத எந்தப் பொருளும் விற்பனை யாவதில்லை. முன்பெல்லாம் சிகரெட், புகையிலை போன்ற வெகு சில பொருள்களுக்கு மட்டுமே விளம்பரம் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்றைக்கு குண்டூசி முதல் செல்போன் வரை அனைத்துக்கும் விளம்பரம் தேவைப்படுகிறது.

அண்மையில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் குளிர்பான விளம்பரங்களை நாம் பார்த்திருப்போம். இதே போன்றதொரு விளம்பரத்தை நம்பி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மொட்டை மாடியிலிருந்து கயிற்றைக் கட்டிக் கொண்டு பறக்க முயன்ற ஒரு சிறுவன் சாலையில் விழுந்து உயிரிழந்த நிகழ்வை யாரும் மறந்திருக்க முடியாது.

இதற்கு முன்பு கூட தொடர்களில் வரும் "சக்திமான்', "ஸ்பைடர் மேன்' போன்ற கதாபாத்திரங்கள் செய்யும் சாகசங்களால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் வந்து தம்மை காப்பாற்றுவார்கள் என்று நம்பி சாகசங்களில் ஈடுபட்டு சிறுவர்கள் உயிரைப் பறி கொடுத்த சம்பவங்களும் உண்டு.

சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிதி நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு உருவாகின. ஒரு நிறுவனம் டெபாசிட்டுக்கு 12 சதவீதம் வட்டி என்று அறிவித்தால், மற்ற நிறுவனங்கள் 14,16,18 என சதவீதத்தின் அளவை அதிகரித்து விளம்பரத்தை அள்ளி வீசின.

ஒரு கட்டத்தில் நிதி நிறுவனங்களுக்குள் கடுமையான போட்டி ஏற்பட்டு 24 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது.

அதெப்படி 24 சதவீதம் வட்டி தர முடியும் என்று கொஞ்சம்கூட யோசிக்காமல், கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தையெல்லாம் நிதி நிறுவனங்களில் ஏராளமானோர் டெபாசிட் செய்தனர். விளைவு? இரண்டு, மூன்று மாதங்களுக்கு வட்டி வழங்கிய நிறுவனங்கள் அதன் பிறகு லேசாகத் தடுமாறின.

வட்டிக்காக வழங்கப்பட்ட காசோலைகள் வங்கியில் பணமில்லை என்று திரும்பி வந்த போதுதான், வாடிக்கையாளர்களுக்கு லேசாக பயம் வந்தது. உடனே கூட்டமாக நிதி நிறுவனங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.

ஒரே நேரத்தில் எல்லோரும் போட்ட பணத்தை திரும்பக் கேட்டால் எப்படி கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நிதி நிறுவனங்கள், எவ்வளவு வேகமாக வந்தார்களோ அதை விட வேகமாக கடையை மூடி விட்டுப் போய்விட்டனர்.

நடுத்தரப் பிரிவு மக்களை குறி வைத்துத்தான் பெரும்பாலான விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன. காரணம், அவர்கள்தான் ஏதாவது புதிய பொருளை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பவர்கள்.

கடன் வாங்கியாவது புதிய பொருள்களை வாங்கிச் சேர்க்க வேண்டும் என்ற நடுத்தர மக்களின் எண்ண ஓட்டத்தை இந்த விளம்பர நிறுவனங்கள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றன.

சாதாரண பிஸ்கெட்டாக இருந்தாலும் சரி, விலை உயர்ந்த செல்போனாக இருந்தாலும் சரி, பெண்கள், குழந்தைகளின் விருப்பத்திற்குதான் முன்னுரிமை.

வாங்கிய பொருள்களை பயன்படுத்தாமல் ஒரு மூலையில் போட்டு மூடி வைத்திருந்தாலும் பரவாயில்லை, அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தால் தன் வீட்டிலும் இருக்க வேண்டும் என நடுத்தர குடும்பத்து பெண்கள் கருதுகிறார்கள்.

எனவே, சோப்பு, சீப்பு, பேஸ்ட், எண்ணெய் என எல்லா பொருள்களுக்கும் நடுத்தர மக்கள்தான் விளம்பர நிறுவனங்களின் இலக்கு. குறிப்பிட்ட சில பிரபல நிறுவனங்கள் விளம்பரங்களுக்காக பல நூறு கோடி ரூபாயை வாரி இறைத்துள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நிறுவனங்களின் விளம்பர பட்ஜெட் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனாலும் அந்த நிறுவனங்களின் மொத்த விற்பனை வருவாயில் இது 10 சதவீதத்துக்கும் குறைவுதான். அதிலும் 70 சதவீதம் அளவுக்கு டி.வி. விளம்பரங்களுக்காகவே ஒதுக்கப்படுகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆக்ரமிக்கும் அளவுக்கதிகமான விளம்பரங்களே இதற்கு சாட்சி. அதிலும் குறிப்பாக இந்திய மக்களை தங்கள் வசம் ஈர்ப்பதற்காக பிரத்யேகமாக உரு வாக்கப்பட்ட விளம்பரங்களே அதிகம்.

சில விளம்பரங்களை மக்கள் ரசிக்கவே ஆரம்பித்து விட்டனர் என்பதுதான் உண்மை. கடந்த சில ஆண்டுகளில் இந்திய நிறுவனங்கள் விளம்பரங்களுக்காக செலவிடும் தொகையின் அளவு கிட்டத்தட்ட 300 மடங்கு அதிகரித்திருக்கிறது.

பெரியவர்களை விட சிறியவர் கள்தான் இன்றைக்கு தொலைக்காட்சி பெட்டிக்கு அடிமையாகி இருக்கிறார்கள். அதனால்தான், கிட்டத்தட்ட 75 சதவீதம் விளம்பரங்கள் சிறுவர்களை இலக்காக வைத்தே தயாரிக்கப்படுகின்றன.

குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நுகர்வோர் ஆய்வு மையம், சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் எட்டு முக்கிய பிராண்டுகளின் சாக்லேட் வகைகளை ஆய்வு செய்துள்ளது.

சுவையின் அடிப்படையில் முதலிடம் பிடித்த ஒரு பிராண்டு கொழுப்பு மற்றும் சர்க்கரையை (ஊஹற் ஹய்க் ள்ன்ஞ்ஹழ்) உடலில் அதிக அளவு சேர்த்து விடுகிறதாம். ஒரு சில பிராண்டுகளில் இரண்டு மடங்கு கூடுதலாக கொழுப்புச் சத்து இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இவற்றை குழந்தைகள் அதிகம் சாப்பிட்டால் உடல் பருமன், பற்சிதைவு, கவனக் குறைவு போன்றவை ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

விளம்பரங்களை மட்டுமே வைத்து வாழ்க்கையின் தேவைகளை முடிவு செய்யும் நிலைக்கு பொதுமக்களைத் தள்ளும் நிறுவனங்கள், லாபம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுவது நியாயம்தானா?

மக்களின் வருமானத்தில் பிழைப்பு நடத்தும் நிறுவனங்கள், அந்த மக்களின் நலனுக்கும் எதிர்கால சந்ததியின் நலனுக்கும் எதிராக செயல்படுவது நியாயமா?

இந்த நிறுவனங்களுக்கு சமூகப் பொறுப்புணர்வு என்பதே கிடையாதா? எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விளம்பரம் செய்யலாமா?

இந்த அவல நிலை இனியும் தொடரவேண்டுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com