தொழிலாளர்களின் வழிகாட்டி

தத்தாத்ரேய பாபுராவ் (எ) தத்தோபந்த் டெங்கடி, மராட்டிய மாநிலத்தின் வார்தாவுக்கு அருகிலுள்ள

தத்தாத்ரேய பாபுராவ் (எ) தத்தோபந்த் டெங்கடி, மராட்டிய மாநிலத்தின் வார்தாவுக்கு அருகிலுள்ள ஆர்வி எனும் சிற்றூரில் 10.11.1920-இல் பிறந்தவர். இளம் வயதில் கல்வி கற்கும்போதே, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில்
 (ஆர்.எஸ்.எஸ்.) இணைந்த அவர் பட்டப் படிப்புக்குப் பின்னர் அதன் முழு நேர ஊழியராக இணைந்தார்.
 தொழிலாளர்கள் மத்தியில் தேசிய எண்ணங்களை விதைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்.ஸின் இரண்டாவது தலைவர் மாதவ சதாசிவ கோல்வல்கரின் (குருஜி கோல்வல்கர்) அறிவுரைப்படி தொழிலாளர்கள் மத்தியில் பணிபுரிந்தார்.
 ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் முழுநேர ஊழியராக இருந்தபோதிலும், தொழிலாளர் நலனுக்காக பிற அமைப்புகளோடு இணைந்து பணியாற்றத் தயங்கவில்லை. அதேவேளையில், தமது தனிப்பட்ட கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டதில்லை.
 1950-ஆம் ஆண்டில் இந்திய தேசிய வர்த்தக காங்கிரஸ் யூனியனின் ஒருங்கிணைப்புச் செயலாளராக அவர் செயல்பட்டார். இதேபோல், கம்யூனிஸ ஆதரவுடன் இயங்கிய ரயில்வே ஊழியர்களுக்கான தொழிற்சங்கத்துடனும் அவர் தொடர்பில் இருந்தார்.
 டெங்கடியைப் பொருத்தவரை தாம் எந்த இயக்கத்தில் பணியாற்றுகிறோம் என்பது முக்கியமல்ல. தொழிலாளர் நலன் ஒன்றே அவரது குறிக்கோள்.
 இதன் தொடர்ச்சியாக, பல்வேறு தொழிற்சாலைகளுக்குச் சென்று, தொழிலாளர்களை சந்தித்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற, "சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்' எனும் தாரக மந்திரத்தை முதன்முதலில் முழங்கி, மக்களிடையே தேசிய எழுச்சியை ஏற்படுத்திய லோகமான்ய பால கங்காதர திலகரின் பிறந்த தினமான ஜூலை 23-இல் (1955) பாரதிய மஸ்தூர் சங்கத்தை (பி.எம்.எஸ்.) நிறுவினார்.
 தொழிலாளர்களை தேசியமயமாக்க வேண்டும், தொழிற்சாலைகளை தொழிலாளர்மயமாக்க வேண்டும், தேசத்தை தொழில்மயமாக்க வேண்டும் - இதுவே பி.எம்.எஸ். அமைப்பின் தாரக மந்திரம்.
 தில்லியில் 1967-இல் நடைபெற்ற முதல் தேசிய மாநாட்டில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 அப்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை 2,36,902-ஆக இருந்ததை, தனது அயராத உழைப்பின் மூலம் 31,17,324-ஆக பெருக்கி, மத்திய அரசின் தொழிலாளர் நல வாரியம், ஆணை எண் எல்.60011/2/84 ஐ.ஆர்.1 மூலமாக 26/27.12.1996-இல் நாட்டின் மிகப் பெரிய தொழிலாளர் அமைப்பு பி.எம்.எஸ். என்கிற அங்கீகாரம் பெறச் செய்தார்.
 தொழிற்சங்கம் என்றாலே இடதுசாரிகள் மட்டுமே என்பதை முறியடித்தவர் டெங்கடி. "தேசத்தின் நலனே தொழிலாளர் நலன்' என்பதை பாரதிய மஸ்தூர் சங்கத்தின் கொள்கையாக்கினார்.
 "பிரம்மா' உயிரினங்களைப் படைத்தவர் என்றால், விஸ்வகர்மா எனும் சிற்பி, கலை நிபுணர், நாடு, நகரங்களை நிர்மாணித்தவர். அவர்தான் முதல் தொழிலாளி. அதனால்தான் பி.எம்.எஸ். தேசிய தொழிலாளர் தினமாக செப்டம்பர் 17-ஐ தேர்ந்தெடுத்ததோடு, அதன் காவி நிறக் கொடியில் மனித உழைப்பை சின்னமாகச் சித்திரித்
 திருக்கிறது.
 அப்போது முதல் இப்போது வரை பி.எம்.எஸ். சுதந்திரமான அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. நியாயமான கோரிக்கைகள், பேச்சுவார்த்தையில் ஏற்கப்படாவிட்டால், ரகசிய வாக்கெடுப்பின் வாயிலாக தொழிலாளர்களின் விருப்பத்தை அறிந்தே, வேலைநிறுத்தத்துக்கான முயற்சியை மேற்கொள்ளும். மாற்று சங்கங்கள் இதனை கடைப்பிடித்து, வேலைநிறுத்தத்தைத் தொடங்கும் என்றால், அதற்கு எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ஆதரவு அளிக்கும்.
 மத்திய அரசின் கொள்கைகள் தொழிலாளர் நலனுக்கு எதிரானது என்று கருதினால், பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்தாலும் போராட்டம் செய்ய பாரதிய மஸ்தூர் சங்கம் தயங்குவதில்லை.
 விவசாயிகளை ஒருங்கிணைப்பதற்காக பாரதிய கிஸôன் சங்கம், சுதேசிப் பொருள்களையே அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக சுதேசி விழிப்புணர்வு இயக்கம் (சுதேசி ஜாகரண் மஞ்ச்) ஆகியவற்றை டெங்கடி நிறுவினார்.
 1964 முதல் மாநிலங்களவைக்கு இரண்டு முறை டெங்கடி தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் அங்கம் வகித்தவர். தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டவர்.
 முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975-இல் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தபோது, அதற்கு எதிரான போராட்டங்களில் டெங்கடி தம்மை இணைத்துக் கொண்டார்.
 அவர் எழுதிய "நேஷனல் ரினாய்சென்ஸ்', "டாக்டர் அம்பேத்கர்', "ஸ்பெக்ட்ரம்' போன்ற வரலாற்று ஆய்வு நூல்கள், ஆராய்ச்சியாளர்களின் பெட்டகமாக இருந்து வருகிறது.
 தன்னைவிடப் பொருத்தமான நபர்கள் நிறையப் பேர் உள்ளனர் என்று கூறி பத்மபூஷண் விருதை ஏற்க மறுத்தவர். முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து, செயலாற்றிய, தன்னம்பிக்கையும், தொண்டு உள்ளமும் மிக்க டெங்கடி 14.10.2004-இல் "புணே'யில் அமரத்துவம் அடைந்தார்.
 "டெங்கடியின் எழுத்துகளை அனைவரும் படிக்க வேண்டும். அவை நீண்ட காலத்துக்கு நமக்கு வழிகாட்டும்' என்று அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் புகழாரம் சூட்டியுள்ளதே டெங்கடியின் பெருமையைப் பறைசாற்றும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com