ஆபத்தை எதிர்நோக்கும் கடலோரப் பகுதிகள்!

கடற்கரை ஓரங்களில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகள் பல வழிகளில் மீறப்படுவதால்,

கடற்கரை ஓரங்களில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகள் பல வழிகளில் மீறப்படுவதால், மக்கள் நெருக்கம் அதிகமுள்ள கடற்கரை கிராமங்களுக்குப் பெரும் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
 கடற்கரை மண்டலமானது நிலமும், கடலும், காற்றும் இணையும் மிக முக்கியமான பகுதியாகும். இங்குதான் பல சூழல் நிகழ்வுகளும், பல வளங்கள் உருவாவதற்கான காரணங்களும், பல உயிரினங்களின் வாழ்விட மற்றும் வளர்ச்சி நிலைகளும் அடங்கியுள்ளன. வளர்ச்சியின் தாக்கம், நகரமயமாக்கல் போன்ற விளைவுகளால், பாதுகாக்கப்பட வேண்டிய கடற்கரை சுற்றுச்சூழல் அமைவு, பாதிப்புக்குள்ளாகி பல அச்சுறுத்தல்களை உருவாக்குகின்றன.
 குறிப்பாக, கடல் மாசு, மணல்திட்டு அழிவு, நிலச்சரிவு, கடல்நீர் உள்புகுதல், நிலங்களில் உப்பு நீர் கலப்பது, கடல் சீற்றம் போன்ற பல விளைவுகள் இதனால் ஏற்படுகின்றன. இத்தகைய பாதிப்புகளைக் குறைத்து கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என 1981-இல் மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
 இதில், கடல்நீர் ஏற்றம்பெறும் இடத்திலிருந்து 500 மீட்டர் நிலப் பகுதிகளில் எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. இருப்பினும், மக்கள் தொகைப் பெருக்கத்தால் இப்பகுதிகளில் பல வழிகளில் பாதிப்புகள் ஏற்பட்டன.
 இதன் காரணமாக, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-இன் கீழ், 1991 பிப்ரவரியில் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் ஓர் அறிவிக்கையை வெளியிட்டது. இதில், கடல்நீர் ஏற்றம்பெறும் இடத்திலிருந்து 500 மீட்டர் நிலப்பகுதி மற்றும் சிற்றாறு, கழிமுகங்கள், ஆறுகள் கடலோடு இணையும் 100 மீட்டர் அளவு பகுதிகள் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பகுதிகளில் பல வளர்ச்சிப் பணிகள் தடை செய்யப்பட்டதாக அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 இந்தக் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் நான்கு பகுதிகளாக அவற்றின் சிறப்புத் தன்மைகளின் அடிப்படையில் மண்டலம் I, II, III, IV என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 மண்டலம் ஐ-இல் அடங்கும் பகுதிகள் சூழலியல் மென்மையான (Ecological Sensitive) பகுதியும், முக்கியமானதுமாகும். இப்பகுதிகளில் தேசியப் பூங்காக்கள், கடற்பூங்காக்கள் (marine parks), சரணாலயங்கள், சிறப்புக் காடுகள், விலங்குகள் வாழும் காட்டியல்புடைய பகுதிகள் (wild habitat), அலையாத்திக் காடுகள், பவளப்பாறை மற்றும் அதன் பகுதிகள், மீன் மற்றும் கடல் உயிரினங்கள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பகுதிகள், இயற்கை அழகு நிறைந்த பகுதிகள் (Out Standing natural beauty), வரலாற்று மற்றும் பாரம்பரிய சிறப்புமிக்க பகுதிகள், உயிரின வளங்கள் நிறைந்த பகுதிகள் மற்றும் உலக வெப்பமயமாதலால் உருவாகும் கடல்மட்ட உயர்வால் கடல்நீர் உட்புகும் பகுதிகள், கடல்நீர் ஏற்ற இறக்கம் பெறும் இடைப்பட்ட பகுதிகள் முதலியவை அடங்கும்.
 மண்டலம் II பகுதிகள் ஏற்கெனவே வளர்ச்சிப் பணிகள் உருவாக்கப்பட்ட பகுதிகள் (Developed Area) ஆகும். இந்தப் பகுதிக்குள் நகராட்சி, பிற நகரமயமாக்கப்பட்ட பகுதிகள் அடங்கும். இங்கு புதிய கட்டுமானங்கள், மறுசீரமைப்புப் பணிகள் முதலியவற்றை பல கட்ட அனுமதிகளுக்குப் பிறகே செயல்படுத்த முடியும் (Town & Country planning regulation and FIS  FAR).
 மண்டலம் III பகுதிகள், இதுவரை பயன்படுத்தப்படாத பகுதிகள் (Undisturbed Area). இப்பகுதிகள் மண்டலம் I மற்றும் II-க்குள் அடங்காதவை. இவை நகராட்சி, நகரப் பகுதிகளுக்குள் இருக்கலாம். கடல் ஏற்றம்பெறும் இடத்திலிருந்து 200 மீட்டர் வரையுள்ள பகுதிகள், வளர்ச்சி அனுமதிக்கப்படாத பகுதிகள் (No development Zone) என வரையறுக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் விவசாயம் செய்யவும், தோட்டம், பூங்கா, விளையாடும் பகுதிகள், காடு, உப்பளங்கள் முதலியவை அமைக்கவும் அனுமதிக்கப்படும்.
 கடல் ஏற்றம்பெறும் பகுதிகளிலிருந்து 200 மீட்டர் முதல் 500 மீட்டர் வரையுள்ள மண்டலம் III-க்குள் வரும் பகுதிகளில் கட்டடங்கள், தங்கும் குடில்கள், சுற்றுலாப் பயணிகள் தாற்காலிகமாகத் தங்கும் பகுதிகள் போன்றவற்றை சுற்றுச்சூழல், வன அமைச்சகத்தின் அனுமதிக்குப் பின் அமைக்கலாம்.
 மண்டலம் IV-இல் அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத் தீவுகள், சிறுசிறு தீவுகளின் கடற்கரைப் பகுதிகளில் மண்டலம் I, II, III பகுதிகளுக்கு உள்படாத பகுதிகள் அடங்கும். வளர்ச்சிப் பணிகள் அனுமதிக்கப்படாத இந்தப் பகுதிகளில் ஒரு சில கட்டுமானங்களுக்கு சுற்றுச்சூழல், வன அமைச்சகம் அனுமதி வழங்கலாம்.
 கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்துக்குள் பல வளர்ச்சிப் பணிகளுக்கு அனுமதியில்லை. புதிய தொழில்களுக்கோ அல்லது ஏற்கெனவே உள்ள தொழிற்சாலைகளை விரிவாக்கவோ அனுமதியில்லை. இருப்பினும், கடல்நீர் சார்ந்த, கடற்கரைப் பகுதிக்கு மிகத் தேவையான தொழிற்சாலைகள் அனுமதிக்கப்படும்.
 இப்பகுதிகளில், ஆபத்தை விளைவிக்கும் பொருள்களை உற்பத்தி செய்யவோ, பயன்படுத்தவோ, கொட்டவோ அனுமதியில்லை. மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் பண்டகச்சாலை (ware house) நிறுவவோ அல்லது விரிவாக்கவோ அனுமதியில்லை. இருப்பினும், மீன் பொரிப்பகங்கள், மீன் காயப் போடுவதற்குப் பயன்படும் கட்டுமானங்களுக்கு அனுமதி உண்டு.
 தொழிற்சாலைகள், வீடுகள், நகரம் மற்றும் மாநகரங்களிலிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை இந்தப் பகுதிகளில் வெளியேற்றத் தடையுண்டு. திடக்கழிவுகளை இந்தப் பகுதிகளில் கொட்டவோ, சேமித்து வைக்கவோ, நீர், நில அமைப்புகளை மாற்றவோ (land reclamation) அனுமதியில்லை.
 இருப்பினும், கடலரிப்பு, கடல்நீர் உட்புகாமல் தடுக்கும் பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும். இந்தப் பகுதிகளில் மணல், பாறைகளில் இருந்து கனிமப் பொருள்களைப் பிரித்தெடுக்கும் பணிகளுக்கு அனுமதியில்லை. இருப்பினும், இந்தத் தனிமங்கள் பிற பகுதிகளில் இல்லாமல் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தில் மட்டுமே இருப்பின் இந்தப் பணிகள் இங்கு அனுமதிக்கப்படும்.
 கடல் ஏற்றம்பெறும் இடத்திலிருந்து 200 மீட்டர் பகுதிகளில் கிணறு அமைத்து நீர் எடுக்க அனுமதியில்லை. இருப்பினும், 200 - 500 மீட்டர் பகுதிகளில் கிணறுகளிலிருந்து குடிப்பதற்கோ, விவசாயத்துக்கோ, தோட்டங்களுக்கோ, மீன் வளர்ப்பு போன்றவற்றுக்கோ இயந்திரமின்றி தண்ணீர் எடுக்க அனுமதி உண்டு.
 சூழலியல் மென்மைப் பகுதிகளில் எந்தக் கட்டுமானங்களுக்கும் அனுமதியில்லை. கடல்நீர் ஏற்ற இறக்கம் (LTL & HTL) பெறும் இடைப்பட்ட பகுதிகளில் எந்தக் கட்டுமானங்களுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் அனுமதியில்லை. இருப்பினும், சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை வெளியேற்றவும், எண்ணெய், எரிவாயுக் குழாய்கள் அமைப்பதற்கும், மணற்திட்டுகளை மாற்றியமைப்பதற்கும் வேறு சில சிறப்புப் பயன்பாடுகளுக்கும் இந்தப் பகுதிகளில் அனுமதி பெறலாம்.
 பல வரைமுறைகள் இந்த அறிவிக்கைகளில் விதிக்கப்பட்டிருந்தும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்களை மத்திய அரசு சந்திக்க வேண்டியிருந்தது. இதன் அடிப்படையில் மிகத் தெளிவான மேலும் ஓர் அறிவிக்கையை 2010 செப்டம்பரில் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் மத்திய அரசிதழில் வெளியிட்டது. இருப்பினும், பல அரசியல் காரணங்களால் இவை நடைமுறைக்கு வரவில்லை.
 இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள குமரி மாவட்டத்தில் 71.5 கி.மீ. தூரம் கடற்கரை உள்ளது. இந்தக் கடற்கரை ஓரங்களில் 60 கடற்கரை வசிப்பிடங்கள் உள்ளன. அவற்றில் 50 மேற்குக் கடற்கரையான அரபிக் கடலை தழுவியது. 10 கிழக்குக் கடற்கரையான மன்னார் வளைகுடாவை நோக்கியது.
 பெரும்பாலான கிராமங்கள், வசிப்பிடங்களில் மக்கள் நெருக்கமாக வசிப்பதும் மீன் தொழில் தொடர்பான பணிகளில் ஈடுபடுவதுமாக உள்ளனர். தற்போது சுமார் 35,000-க்கும் அதிகமான மீனவர்கள் கடலில் மீன் பிடித்து வருகின்றனர்.
 தமிழகம் முழுவதுமே கடற்கரை கிராமங்களில் வீடுகள், கட்டுமானங்கள், ஹோட்டல்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் போன்றவை கடற்கரை ஒழுங்கு முறை மண்டலத்துக்குள் அமைக்கப்பட்டுள்ளன.
 கடற்கரை மேலாண்மை விதிமுறைகளுக்குப் புறம்பான பல வளர்ச்சிப் பணிகள் கரையோரங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளன. கடற்கரைப் பகுதிகளில் இத்தகைய விதிமீறல்களால் 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் உயிர் சேதங்கள் ஏற்படக் காரணமாயிருந்தும், இத்தகைய விதிமீறல்கள் தொடர்ந்து நடந்தேறி வருகின்றன.
 சில தன்னார்வ நிறுவனங்கள், சில தனி நபர்களின் முயற்சியால் ஒரு சில விதிமீறல்கள் தடுக்கப்பட்டாலும், பல நிகழ்வுகள் இன்றும் சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியிலும், பல கடற்கரைக் கிராமங்களிலும் நடந்தேறி வருகின்றன.
 கடற்கரை ஒழுங்குமுறை விதிமுறைகள் குறித்து பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பல சுற்றுச்சூழல் காரணங்களால் கடற்கரை கிராமங்களுக்கு ஆபத்துகள் பெருகிவரும் சூழலில், இதுகுறித்து போர்க்கால அடிப்படையில் பல முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் பல குழந்தைகள் உயிரிழக்கக் காரணமான இந்த விதிமீறல்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
 
 கட்டுரையாளர்:
 இயக்குநர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு -
 சுகாதார அமைப்பு.
 சில தன்னார்வ நிறுவனங்கள், சில தனி நபர்களின்
 முயற்சியால் ஒரு சில விதிமீறல்கள் தடுக்கப்பட்டாலும், பல நிகழ்வுகள் இன்றும் கன்னியாகுமரியிலும்,
 பல கடற்கரைக் கிராமங்களிலும் நடந்தேறி வருகின்றன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com