தொழிலாளர்களின் "அண்ணாச்சி'

"அண்ணாச்சி' என அனைவராலும், எஸ்.ஆர்.எஸ். என்று நெருங்கிய நண்பர்களாலும், தமிழ் ஆர்வலர்களால் சு.ரா.சு. எனவும், "எங்கள் தலைவர்' என

"அண்ணாச்சி' என அனைவராலும், எஸ்.ஆர்.எஸ். என்று நெருங்கிய நண்பர்களாலும், தமிழ் ஆர்வலர்களால் சு.ரா.சு. எனவும், "எங்கள் தலைவர்' என தொழிலாளர்களாலும் அழைக்கப்பட்ட எஸ்.ஆர். சுப்பிரமணியன், ஜூன் 1915-இல் புதுச்சேரியில் பிறந்தார். தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் கல்வி கற்றுத் தேர்ந்தார்.
 படிப்பறியா பாமரர்கள், மது அரக்கனுக்கு அடிமையாகி, குடும்பத்தின் சீர்குலைவுக்குக் காரணமாக இருப்பதிலிருந்து விடுபட்டு, உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை இருபாலரிடமும் உருவாக்க, காந்திய சித்தாந்தமான நிர்மாணத் திட்டங்களை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் எஸ்.ஆர்.எஸ்.
 பாமரர்களின் வாழ்வாதாரத்துக்கு கைத்தொழில்களைக் கற்பித்து, ராட்டையில் நூல் நூற்றல், நெசவுத் தொழில், தையல், மெழுகுவர்த்தி செய்தல் ஆகியவற்றில் பயிற்சி அளித்திடவும் ஆவன செய்ததின் மூலம், இன்றும் அவர்கள் குடும்பத்தினரின் இதயத்தில் இடம் பெற்றுள்ளார்.
 1934-இல் ஆலைத் தொழிலாளர்கள், அன்றாடக் கூலிகளாக உழைப்பதை மாற்ற, பேச்சுவார்த்தைக்கு உடன்படாத நிர்வாகத்தினரின் நிராகரிப்பைச் சுட்டிக்காட்ட புதுச்சேரி ஆளுநர் பரோன் குரோச்சியிடம் அதற்கான தீர்வு காணச் சென்றார் எஸ்.ஆர்.எஸ்.
 அவரை காந்தி குல்லாயுடன் கண்டதும், விரைந்து வந்து குல்லாயை தட்டிவிட்டார் ஆளுநர். இதனை சற்றும் எதிர்பாராத எஸ்.ஆர்.எஸ். எடுக்க முயன்றபோது, வெகுண்டு தடுக்க முற்பட்ட ஆளுநர், தடுக்கி தரையில் விழுந்தார். அதனால், மேலும் சினம் கொண்டு கைது செய்ய உத்தரவிட்டார்.
 இந்த இழிநிலையைச் செய்த, களங்கம் கற்பித்த ஆளுநர் மாற்றப்படும் வரை காந்தி குல்லாய் அணியேன் என சூளுரைத்ததை நிருபர்கள் வாயிலாக அறிந்த, கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் "அமிர்த பஜார்', ஆளுநரின் அராஜக செயலைக் கண்டித்து அவர் தண்டிக்கப்பட தலையங்கம் தீட்டியது.
 இதைப் படித்த காந்திஜி, பிரெஞ்சு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். உலக அரங்கிலுள்ள பத்திரிகைகளும் அதை ஆதரித்தன. ஆளுநர் விடுவிக்கப்பட்டு பாரிசுக்கு அழைக்கப்பட்டார். இதனால், உலக அரங்கில் எஸ்.ஆர்.எஸ். பாராட்டப்பட்டார்.
 அடுத்து, ஆலைத் தொழிலாளர்களின் பணி நிரந்தரமாக்கப்பட்டு, எட்டு மணி நேரம் வேலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று தோழர் வி. சுப்பையாவுடன், அகில உலக தொழிலாளர் அமைப்பின் மூலம் மனு அனுப்பி, அதை பிரெஞ்சு அரசை ஏற்கச் செய்து, வரலாற்றில் இடம் பெற்றார்.
 அரசுப் பள்ளிகளில், பிரெஞ்சு, ஆங்கில ஆசிரியர்களுக்கு இணையாக தமிழ் ஆசிரியர்களுக்கு ஊதியமும், சிறப்பு சலுகைகளும் பெற்றுத் தந்த பெருமை இவரைச் சேரும்.
 முதன்முதலில், இளம் கவிஞர்களை ஊக்குவிக்க "கவிதா மண்டலம்' எனும் இதழை பாரதிதாசனை ஆசிரியராகவும், தன்னை அச்சிடுவோராகவும் கொண்டு பிரசுரித்தவர்.
 அகில இந்திய சோஷலிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டார். 1952 முதல் தேர்தலில் தோல்வியைத் தழுவிய கட்சியில் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கின.
 ஒற்றுமையை நிலைநிறுத்த முயன்ற அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயப்பிரகாஷ் நாராயண், மனம் உடைந்து அரசியலை விட்டு, ஏப்ரல் 1954-இல் புத்தகயாவில் நடந்த சர்வோதய சம்மேளனத்தில் இணைந்தார். அவருடன் சென்றவர்களில் எஸ்.ஆர்.எஸ்.ஸும் ஒருவர்.
 ஆச்சார்யா வினோபாஜியுடன், தமிழகம் முழுதும் பூமிதானம் பெற பாத யாத்திரை செய்தார். 1963-இல் புது தில்லியிலிருந்து பெய்ஜிங் வரை செல்ல இருந்த "அமைதிக் குழு'வில் இடம் பெற்றார்.
 1971-இல் தமிழ் இன மக்கள் மீது "மது' அரக்கன் பாய்ந்தான். இதனைக் கண்டித்து எஸ்.ஆர்.எஸ். காலவரையற்ற உண்ணா நோன்பை மேற்கொண்டார்.
 "குதூகலமாக இருக்கும் குடும்பத்தினரை "குடி' குழப்பத்தில் ஆழ்த்திவிடும் என எச்சரித்தார். இவரைப்போல் நாடெங்கிலும் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
 மக்களிடம் "விழிப்புணர்வை' ஏற்படுத்த 29.7.1985 அன்று சென்னை மயிலையில், காந்தி அமைதி நிலையத்திலிருந்து நீண்ட நடைப் பயணம் தொடங்கி, 25.5.1986 அன்று முக்கூடல் கன்னியாகுமரியில், காந்தி ஸ்தூபியில் நிறைவு செய்தார்.
 எஸ்.ஆர்.எஸ். ஆகஸ்ட் 1942 "வெள்ளையனே வெளியேறு' என்ற பேரியக்கத்தில் மூன்று ஆண்டுகளும், புதுச்சேரி விடுதலைக்காக விட்டு விட்டு பல முறைகளும், மக்களின் கருத்தை, விருப்பத்தை அறிய நடந்த தேர்தலில் பம்பரம் போல் கூட்டங்களில் பேசியதன் பலனாக புதுச்சேரி 1.11.1954 அன்று சுதந்திரம் பெற்றது.
 பிரதமர் இந்திரா காந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையின்போது, ஜூன் 25, 1975 நள்ளிரவு கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் இருந்தார்.
 ஆற்றல் மிக்க, கேட்போரை ஈர்க்கும் சக்தி படைத்த மேடை பேச்சாளர். ஆங்கிலத்தை அருமையாக, பொருள் சிதையாமல், மொழிபெயர்ப்பதில் வல்லுநர். அறிவுக்கு விருந்தளிக்கும் நூல் நிலையத்திற்கு உரிமையாளர்.
 தனது தேவைகளைத் தானே செய்து கொள்பவர். எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதவர். சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றின் வடிவமாகவே திகழ்ந்தார்.
 "வயோதிகத்தில், உடல் வியாதிகளுக்கு விளைநிலம்' என்பர். இதற்கு அவர் விதிவிலக்கல்ல. சில நேரங்களில் உடல் உபாதைகளுக்கு ஆள்பட்டார். சர்வோதய தொண்டர்கள் கவனித்துக் கொண்டனர்.
 தேனீயைப் போன்ற சுறுசுறுப்பும், சிற்றெறும்பைப்போல பேருழைப்பும் பூண்டவர் என்று கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியால் பாராட்டப்பட்ட எஸ்.ஆர்.எஸ்.ûஸ 29.2.1992-இல் காலன் கவர்ந்து சென்றான். "அண்ணாச்சி' அமரரானார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com