மீட்டெடுங்கள், அழிய விடாதீர்கள்...

இந்தியாவின் மிகப்பெரிய பலமும் செல்வமும் அதன் மனித வளம்தான். இந்திய இளைஞர்களில் 12 முதல் 15 சதவீதம் பேர் உயர் கல்வி படிப்புக்காகக்

இந்தியாவின் மிகப்பெரிய பலமும் செல்வமும் அதன் மனித வளம்தான். இந்திய இளைஞர்களில் 12 முதல் 15 சதவீதம் பேர் உயர் கல்வி படிப்புக்காகக் கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். இந்த மாணவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தில் உயர் கல்வி படிப்புக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம்.
 தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட புரட்சி காரணமாக, உலகெங்கும் சென்று பணியாற்றி வெற்றிக் கொடி நாட்டியது பொறியியல் கல்வி பயின்ற மாணவ, மாணவியர்கள்தான். இந்திய இளைய சமுதாயத்தின் இத்தகைய மனித வளத்தைக் கண்டுதான் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் வியந்து நிற்கின்றன.
 இந்தியாவில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலானவை தனியார் கல்லூரிகள்தான். தமிழ்நாட்டில் கூட 10 அரசு பொறியியல் கல்லூரிகள், மூன்று அரசு உதவி பெறும் கல்லூரிகள், அரசு பல்கலைக்கழகங்கள் நடத்தும் பொறியியல் கல்லூரிகள் உள்பட மொத்தம் 30 கல்லூரிகளில் 14,670 மாணவ, மாணவிகள் ஆண்டுதோறும் படிக்கின்றனர். மீதமுள்ள 530-க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளில்தான் ஆண்டுதோறும் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேர்ந்து பயில இயலும்.
 இந்தச் சூழலில், அண்மைக் காலமாக பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை, தேர்வில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு, தனியார் கல்லூரிகளின் தரம் குறைவு, தனியார் கல்லூரி மாணவர்களுக்கு வேலைக்குத் தகுந்த திறமைகள் இல்லை, அங்கு தரமான ஆசிரியர்கள் இல்லை என்று பல குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
 பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 2.5 லட்சம் இடங்களில், 1.75 லட்சம் விண்ணப்பங்கள்தான் பெறப்பட்டன. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.48 லட்சம். அதில் சேர்ந்தவர் எண்ணிக்கை ஒரு லட்சம் மட்டும்தான்.
 பொறியியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் இடங்கள் ஒரு லட்சத்தைத் தாண்டும் என்று ஊடகங்கள் அடிக்கடி புள்ளி விவரங்களைத் தொடர்ந்து கூறிவருவதால் பொறியியல் படிப்பதால் பயனில்லை என்கிற எண்ணம் ஏற்படுத்தப்படுகிறது. அதனால், பொறியியல் படிப்புகளில் சேரத் திட்டமிட்டிருந்த மாணவர்கள் கூட, மனதை மாற்றிக் கொண்டு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் நிலை உருவாகியுள்ளது.
 தமிழகத்தில் மட்டும் பொறியியல் படித்தவர்களில் ஆண்டுதோறும் சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் மாணவர்கள் வரை பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்குச் சேருகின்றனர். 20 சதவீதம் பேர் மேல்படிப்புக்கும், 20 முதல் 25 சதவீதம் பேர் சுயதொழில் முனைவோராகவும் உருவாகிறார்கள். வெறும் 30-க்கும் குறைவாக உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை வைத்துக் கொண்டு இத்தனை பெரிய மனித வளத்தை உருவாக்க முடியுமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
 கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதேநேரத்தில், பெயர் பெற்ற பழைய கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நன்றாக உள்ளது. கட்டணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு அங்கு சேரும் நிலை காணப்படுகிறது.
 பொறியியல் கல்லூரிகளின் நோக்கம் நல்ல கல்வியைக் கொடுத்து, திறன்களை வளர்த்து, மாணவரை சிறந்த பொறியாளராக உருவாக்குவதுதான். வேலை தேடிக் கொடுப்பது பொறியியல் கல்லூரியின் வேலை அல்ல. ஆனாலும் பெயர் பெற்ற பழைய கல்லூரிகள் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி வளாக நேர்முகத் தேர்வு என்ற பெயரில் வேலை பெற்றுக் கொடுக்கின்றனர். இதனால், பல புதிய பொறியியல் கல்லூரிகளில் அதாவது, கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட கல்லூரிகளில் திறமையான மாணவர்கள் இருந்தபோதிலும் அவர்களுக்கு வேலைக்கான வாய்ப்பு கிடைப்பதில்லை.
 வளாக நேர்முகத் தேர்வு நடத்தும் கல்லூரிகள் தாங்கள் வேலை வாங்கிக் கொடுத்த புள்ளி விவரத்தைக் காட்டி அடுத்த ஆண்டு பிளஸ் 2-வில் நல்ல மதிப்பெண் பெற்ற திறமையான மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்கின்றனர். அதனால், அதிக சிரமப்படாமலேயே தேர்வுகளில் நல்ல தேர்ச்சி விகிதத்தையும் கொடுக்க முடிகிறது.
 புதிய கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களின் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஏ.ஐ.சி.டி.இ. முன்பெல்லாம் எவ்வளவு பழைய கல்லூரியானாலும், பெரிய கல்லூரியானாலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் மாணவ, மாணவியர்களின் சேர்க்கை இடங்களுக்கு அனுமதி அளிப்பதில்லை.
 ஆனால், இப்போது மாணவர்கள் அதிகம் விரும்பும் பாடமான எந்திரவியல் போன்ற துறைகளுக்கு கல்லூரிகளில் மிக அதிகமாக இடங்கள் என ஒரு வரைமுறை இல்லாத எண்ணிக்கையில் இடங்களை வழங்குகிறது. இதனால், அக்கல்லூரிகளில் அதிக அளவில் மாணவர்களின் சேர்க்கை நடைபெறுவதால் புதிய கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களின் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது.
 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஏ.ஐ.சி.டி.இ.யின் கட்டுப்பாட்டுக்குள் வருவதில்லை. ஆகவே, அவர்கள் அவர்களின் விருப்பத்துக்கு அல்லது தேவைக்கு ஏற்ப கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கையை அவ்வப்போது உயர்த்திக் கொள்வதால் புதிய கல்லூரிகள் மேலும் பாதிப்புக்குள்ளாகின்றன.
 இது போதாததற்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் ஒன்றை வெளியிட்டு வருகிறது. அந்த தரவரிசைப் பட்டியலில் முன்னணியில் இருக்கும் பழைய கல்லூரியில், 198-க்கு மேல் கட்-ஆஃப் மதிப்பெண் வாங்கிய ஒரு மாணவர் சேரும்போது, அங்குள்ள ஆய்வகம், நூலகங்களை வைத்துப் படித்து நல்ல மதிப்பெண் பெற்று கல்லூரிக்கு 100 சதவீத தேர்ச்சியைப் பெற்று வளாக தேர்வுகளிலும் நல்ல வெற்றி பெற்று நல்ல ஊதியம் கிடைக்கும் வேலைக்குச் செல்வார். இந்த வாய்ப்பும், நிலைமையும் கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட கல்லூரிகளில் இல்லை.
 எனவே, வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதற்குப் பொதுவான வேலை வாய்ப்பு தகுதித் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்குத் தர வரிசை அடிப்படையில் தனியார் நிறுவனங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் வேலை வழங்க அரசும், தொழில் நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் புதிதாகத் தொடங்கப்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை உறுதிப்படுத்தப்படுவதுடன், வேலைவாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வழியேற்படும்.
 அடுத்ததாக, பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வேலைக்குத் தகுந்த படிப்பை தருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எப்போதோ உருவாக்கப்பட்ட பாடத் திட்டத்தை வைத்துக் கொண்டு மாணவனை எந்த வேலைக்குத் தயார் செய்கிறோம் என்பதே தெரியாமல், மொத்தமாக ஒரு பாடத் திட்டத்தைப் பல்கலைக்கழகங்கள் கொடுத்து அவனை வேலைக்குத் தகுதியானவனாக மாற்றுவது என்றால் எப்படி சாத்தியமாகும்?
 எனவே, முதலில் மாணவர்களுக்கு பாடத் திட்டத்தை மாற்றி, பிறகு எந்த வேலைக்கு அவர் ஆர்வமாக இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு, அந்த வேலைக்கு அவர் தயார் செய்யும் வகையில் நடைமுறைப் பயிற்சி இருப்பிட பயிற்சியாக அளிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்ப பாடத் திட்டத்தையும், தேர்வு முறைகளையும் மாற்றியமைக்க வேண்டும்.
 கல்லூரிகள் தன்னாட்சி அதிகாரம் பெற வழிவகை செய்ய வேண்டும். அவ்வாறு தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகள் வேலைக்குத் தேவையான பொறியாளர்களை உருவாக்க ஒரு பாடத் திட்டத்தை அவர்களே வகுப்பார்கள்.
 இதனால், அக்கல்லூரிகள் தொழில்சாலைகளுக்கு ஏற்றவாறு குறிப்பாக அந்தந்த கல்லூரிகளின் பகுதியில் அமைந்துள்ள தொழில்சாலைகளுக்கு ஏற்ப பொறியாளர்களை திறன் வாய்ந்தவர்களாகவும், தகுதியானவர்களாகவும் உருவாக்க இயலும். இதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகுவதோடு மனித வளமும் பயனுறும்.
 ஏ.ஐ.சி.டி.இ.யும், பல்கலைக்கழகமும் கொஞ்சமும் சிந்திக்காமல் ஒரு மாவட்டத்தின் மக்கள்தொகைக்கேற்ப எத்தனை கல்லூரி தேவை என்பதைக் கணக்கெடுத்து அதற்கு மட்டும் அனுமதி கொடுத்திருக்க வேண்டும். இந்தியாவில் இருக்கும் 3,600-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் நாடு முழுவதற்கும் பரவலாக இருந்திருந்தால் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை நன்றாகவே இருந்திருக்கும்.
 தமிழகத்துக்கு மிகவும் அதிக அனுமதி வழங்கப்பட்டதால் வந்த புதிய கல்லூரிகள், அதாவது கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட கல்லூரிகள், பழைய கல்லூரிகளுடன் போட்டியிட முடியாத பரிதாப நிலையில் உள்ளன.
 புதிதாக தொடங்கப்பட்ட சில கல்லூரிகளை மூடும் எண்ணத்துக்கு வந்துள்ள அதன் நிர்வாகிகள், அதைத் தொடங்குவதற்கு ஏராளமான கடனைப் பெற்றிருக்கும் நிலையில் கடனையும், வட்டியையும் திருப்பித் தர முடியாமல் திகைத்து நிற்கின்றனர். அரசு செய்ய வேண்டிய கல்விப் பணியையும், நாட்டின் மனித வளத்தையும் பெருக்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரிகள் செய்த பாவம் என்ன? அரசுக்கு செலுத்தும் பல்வேறு வரி, மின் கட்டணம், பல்கலைக்கழகக் கட்டணம், ஏ.ஐ.சி.டி.இ. கட்டணம் உள்பட எதிலும் சலுகைகள் வழங்குவதில்லை.
 எனவே, தனியார் பொறியியல் கல்லூரிகளின் இந்த நிலைமை மாற கல்வி நிறுவனங்கள் பெற்ற கடனையெல்லாம் குறைந்த வட்டி விகிதத்தில் நீண்ட கால அளவு கடன்களாக மாற்றிக் கொடுக்கும்படி வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்க வேண்டும்.
 ஒரு பொறியியல் கல்லூரியை அரசே தொடங்கி நடத்துகிறது என்று வைத்துக் கொண்டால், நிலம் இல்லாமல் கட்டடங்கள், உள் கட்டமைப்பு வசதிக்காக மட்டும் சுமார் ரூ.50 முதல் 70 கோடி வரை செலவிட வேண்டும். அதன் பிறகு ஆய்வகங்கள், நூலகங்கள் உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் உள்ளன.
 மேலும், 6-ஆவது ஊதியக் குழு அளவுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு பார்த்தால் 530-க்கு மேற்பட்ட கல்லூரிகளை அரசு தொடங்க குறைந்தது ரூ.26,000 கோடி முதல் 30,000 கோடிக்குமேல் முதலீடு செய்ய அரசுக்கு பணம் தேவைப்படும். எனவே, தனியார் பொறியியல் கல்லூரிகள் வெறும் லாப நோக்குடன் மட்டுமே செயல்படுகின்றன என்று கூறுவதைத் தவிர்த்து, அதை எப்படி சரி செய்யலாம் என மத்திய, மாநில அரசுகள் யோசிக்க வேண்டும்.
 நாட்டின் மனித வளத்தை உருவாக்கக் காரணமாக இருக்கும் பொறியியல் கல்லூரிகளை குறிப்பாக சுய நிதி பொறியியல் கல்லூரிகளை குறை கூறி அழிய விடுதல் மூலம் நாட்டின் பெரும் செல்வமான மனித வளம்தான் வீழ்ச்சியடையும்.
 நமது நாட்டின் மனித வளத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் பொறியியல் கல்லூரிகளை, தரமான கல்லூரிகளாகவும், வளமான கல்லூரிகளாகவும் மாற்ற அரசு பல்கலைக்கழகங்கள், கல்வியாளர்கள், ஊடகங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும்.
 
 கட்டுரையாளர்:
 இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com