ஆமிர் கானின் சொல் வன்முறை!

விரல்விட்டு எண்ணக்கூடிய மிகப் பிரபலமான நம் நாட்டின் நடிகர்களில் ஒருவர், தொலைக்காட்சி நிகழ்ச்சியான

விரல்விட்டு எண்ணக்கூடிய மிகப் பிரபலமான நம் நாட்டின் நடிகர்களில் ஒருவர், தொலைக்காட்சி நிகழ்ச்சியான "ஸத்தியமேவ ஜயதே' மூலமும் லகான் மற்றும் ரங்தே பஸந்த் போன்ற திரைப்படங்கள் மூலமும் பொது மக்கள் மனதில் நாட்டுப்பற்றின் அடையாளமாகத் திகழ்ந்து, தனக்கென்று ஒரு தனியிடத்தை உருவாக்கியிருப்பவர்.
 பீ.கே. திரைப்படத்தில் அவர் வேண்டுமென்றே ஹிந்து தெய்வங்களை அவமானப்படுத்திவிட்டார் என்ற எதிர்ப்பு எழுந்தபோது, பொதுமக்களின் ஆதரவையும், ஊடகங்களின் ஆதரவையும் பெற்றவர். அப்படிப்பட்ட ஆமிர் கானைச் சுற்றி இன்று ஒரு புயல் கிளம்பிவிட்டதற்குக் காரணம் என்ன?
 எத்தனையோ பிரபலமான எழுத்தாளர்கள் விருதுகளைத் திருப்பிக் கொடுத்தார்கள். உலகம் முழுவதிலும் இது குறித்து பேசப்பட்டது. சகிப்புத்தன்மை விவாதங்களில் வாதங்களும், பிரதிவாதங்களும் உச்சியைத் தொடும்போதும்கூட விமர்சனங்களைப் புறக்கணித்த பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூரில் பேசியபோது ஆமிர் கானுக்குப் பதில் அளிக்கும் விதமாக, "எதையாவது கூறி பிரஸித்தி (புகழ்) பெறலாம். ஆனால் ஸித்தி (நிரந்தரமான சாதனை) பெற தவம் செய்ய வேண்டும்' என்பதைத் தன் பேச்சில் சேர்க்கும் அளவுக்கு அவரைத் தூண்டியது எது?
 நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்று ஷாரூக் கான் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கூறியது போல் சொல்லவில்லை ஆமிர் கான். அவர் ஒரு விருதுகள் வழங்கும் விழாவில் பேசினார். அந்த விழாவில் அமர்ந்திருந்த அமைச்சர்கள் மீது சொல்லப்பட்ட நேரடியான குற்றச்சாட்டு அது.
 அத்துடன், ஒரு ஜனநாயக நாட்டில் எந்தளவுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு நம் நாட்டில் இல்லை என்று பொதுப் பேச்சாகச் சொல்லவில்லை அவர். கடந்த சில மாதங்களில் நாட்டில் ஒரு பய உணர்வு உருவாகிவிட்டது என்று பல மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூறுவது வெறும் ஓர் அபிப்பிராயம் அல்ல. இது ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைப் பற்றி ஒரு மிகப் பெரிய குற்றச்சாட்டு.
 ஆமிர் பய உணர்வோடு மட்டும் நிற்கவில்லை. நாட்டை விட்டு ஓடிவிடலாம் என்கிற அளவுக்குப் பய உணர்வு கூடிவிட்டதாகச் சொன்னார். அந்த உணர்வை எடுத்துரைத்தவர் ஹிந்துவாக இருக்கும் அவர் மனைவி.
 அதாவது, "ஒரு முஸ்லிமைக் கல்யாணம் செய்திருக்கும் ஒரு ஹிந்து பெண்ணுக்கும், அவர் குடும்பத்திற்கும் இந்நாட்டில் பாதுகாப்பு இல்லை. இந்த மோசமான நிலையை ஏற்படுத்தியிருப்பது தற்போதைய அரசு' - இதுதான் ஆமீர் கான் சொன்னதன் பொருள்.
 ஒரு ஜனநாயக நாட்டில், வெளிப்படையாகக் கூறுவதில் என்ன தவறு என்ற கேள்வி எழுப்பப்படலாம். ஒருவிதத்தில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ஆமிர் கானின் கூற்று திடீர்த் திருப்பத்தைக் காட்டுகிறது. "இன்கிரெடிபிள் இண்டியா'வின் நாயகனாக நேற்றுவரை வெளிநாட்டினரை, இந்தியாவை வந்து பார்க்கும்படி அன்பாக அழைத்தவர், இன்று, இது ஓர் அபாயகரமான நாடு என்பதுபோல் பேசுவதுதான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது.
 ஒரு சிறிய துளை போட்டு உடலுக்குள் இருக்கும் கல்லை வெளியே எடுக்க வேண்டிய அறுவைச் சிகிச்சை நிபுணர், பெரிய கீறலாகக் கீறி உடலையே நாசம் செய்துவிடும் மருத்துவரைப்போல், "இந்தியாவில் இருப்பதே பயமாக இருக்கிறது' என்கிற அளவுக்குப் போய்விட்டார் ஆமிர். இது ஒருவிதமான வன்முறை.
 ஆமிர், இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவராக இருந்தாலும், ஹிந்துக்களும், முஸ்லிம்களும் அவரை பொதுவானவராகத்தான் பார்த்தனர். பீ.கே. படத்தில் அவர் ஹிந்து மதத்தைப் பற்றிப் பேசியதை பெரும்பாலான மக்கள் விமர்சனம் செய்யவில்லை.
 1947-இல் நாடு மத அடிப்படையில் இரண்டாகப் பிரிந்த பிறகு, ஹிந்து - முஸ்லிம் என்கிற இருமுனைவாக்கல் (polarization) ஒரு நோயைப் போலவே நம் நாட்டை விரட்டி வருகிறது. சிலர் ஒவ்வொரு சூழ்நிலையையும் ஹிந்து - முஸ்லிம் என்ற பிரிவினை கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்கள்.
 இரண்டு மதத்தினராலும் மதிக்கப்படும் ஆமிர் கான் போன்றோர் நாட்டு ஒற்றுமைக்கு ஒரு மிகப் பெரிய சொத்து. அவர்கள் இவ்வாறு பேசுவதால் சூழ்நிலை கெட்டுப் போகிறது.
 பாகிஸ்தானிய தொலைக்காட்சிகளில், முஸ்லிமாக இருக்கும் இந்திய நாயக - நாயகிகளைப் பற்றி பேசும்போது, நம் நாயகர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். ஆக, பாகிஸ்தான் இந்தியாவில் ஹிந்து - முஸ்லிம் இருமுனைவாக்கலை ஊக்குவிப்பதில் தயக்கம் காட்டுவதில்லை. இவ்வாறு இருக்க, ஆமிர் கானின் கூற்று பாகிஸ்தானிய முயற்சிக்குத் தீனி போட வல்லது.
 ஆமிர் கான் பேச்சுத் திறன் வல்லுநர். அவர் யோசிக்காமல் எதுவும் பேசக்கூடியவர் அல்ல. தாத்ரியில் நடந்த தாக்குதலும், குறிப்பிட்ட சிந்தனையை ஆதரிக்கும் எழுத்தாளர்கள் விருதுகளைத் திருப்பிக் கொடுப்பதும், சில பொறுப்பில்லாத தலைவர்கள் வாய்கிழியப் பேசியதும் நாட்டை விட்டுப் போய்விடும் அளவுக்கு நிலைமை மாறியதற்கான அறிகுறிகளா?
 ஆமிரின் பேச்சு எல்லைகளைக் கடந்து விட்டது என்று அவரை நேசிப்பவர்கள் உணர்கிறார்கள். அவர்கள் மதச்சார்பற்ற ஒரு சுத்த இந்தியரை நேசித்தனர். அந்த நம்பிக்கையை ஆமிர் உடைத்துவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள்.
 2008-இல் அவர் வாழும் மும்பையிலேயே எத்தனையோ பேர் கொல்லப்பட்டபோது, அச்சம் காட்டாதவர், இன்று ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் தாத்ரியில், அவர் மதத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டபோது பயப்படக் காரணம் என்ன? ஆமிர் நீங்கள் இழைத்தது ஒருவிதமான சொல் வன்முறை.
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் டி.ஜி.பி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com