இந்தியத் தன்மையுடைய விதிமுறைகளே தேவை!

சென்ற முறை நான் எழுதிய கட்டுரையில் திறன் வளர்ச்சிக்குரிய செயல்திட்டம் பற்றி, அடுத்த கட்டுரையில் எழுதுவதாக உறுதியளித்திருந்தேன்.

சென்ற முறை நான் எழுதிய கட்டுரையில் திறன் வளர்ச்சிக்குரிய செயல்திட்டம் பற்றி, அடுத்த கட்டுரையில் எழுதுவதாக உறுதியளித்திருந்தேன். சமீபகாலத்தில் சில விஷயங்களைப் பற்றிய விவாதங்கள் மனதை நெருடுவதால், திறன் வளர்ச்சியைப் பற்றி அடுத்தக் கட்டுரையில் எழுதலாம் என்று முடிவெடுத்தேன்.
 இம்முறை நான் எழுதப்போகும் விஷயம் விவாதத்துக்குரியதாகிவிடுமே என்று பலரும் நினைக்கலாம். ஆனால், அதுபற்றி எழுதாமல் இருந்தால், வரப்போகும் இழப்பு கடுமையாக இருக்கும். இந்தியாவின் எதிர்காலம், அதன் அறக்கோட்பாட்டின் (value System) ஓடுபாதையில்தான் உள்ளது.
 வருங்காலச் சந்ததியினரின் வாழ்வாதாரமும், நேர்மையும், தூய்மையும், வாய்மையின் நேர்கோட்டுப் பாதையில்தான் அமைகின்றன. இந்தியாவின் கடந்தகாலம் பெருமைக்குரியதாக இருப்பதால், அதன் எதிர்காலமும் அவ்வாறே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 கடந்தகாலப் பெருமையையும், பெருமிதத்தையும் சரியாகப் புரிந்து கொள்வது நல்லது. அது தேவையும்கூட. பார்வையில் தெளிவும் நடுநிலையும் இருக்க வேண்டும். உலகக் குடிமக்களாக ஆக வேண்டும் என்பதற்காகப் பழைமையின் பெருமையை ஒதுக்கிவைக்கக் கூடாது.
 மதிப்பு என்பது ஒருமதிப்பு. அந்த மதிப்பின் மதிப்பை மதிப்புடையது என்று ஒருவர் மதித்தால் அதுவே மதிக்கத்தக்கது என்பது சுவாமி தயானந்த சரஸ்வதியின் மந்திரமாகும். காலத்தால் அழிக்க முடியாத, என்றுமே சாஸ்வதமான பேருண்மைகளை மேற்கோள்களாக, சுவாமி தயானந்த சரஸ்வதி போன்ற மகான்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
 அண்மையில் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்று, மாணவர்கள் எவை எவற்றைச் செய்யக் கூடாது என்று ஒரு பட்டியலைத் தயாரித்ததாகக் கூறப்பட்டது. கல்லூரி வளாகத்தில் மாணவர் மத்தியில் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு பற்றிய செயல்பாடு குறித்த பட்டியலே அது.
 மேலும், மகளிர் தங்கும் விடுதிகளில் விதிகள் குறித்து பிஞ்ரா டோட் (PINJRA TOD) எனும் தலைப்பில், சமூக ஊடகம் மூலமும் தொலைக்காட்சித் தொடர் மூலமும் ஒரு தேசிய அளவிலான சர்ச்சைக்குரிய கருத்தை ஏற்படுத்தியது அது.
 சமூக ஊடகத்தில் கொடுக்கப்பட்ட பட்டியலைப்பற்றி அச்சென்னைக் கல்லூரி நிராகரித்த பொழுதும், அதைக் கடுமையாக விமர்சிக்க பலரும் தவறவில்லை. எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்தன. மின்னணுவியல் ஊடக ஒளிபரப்பிற்கு இப்படியொரு விவாதமும் தாக்கமும், ஏவுகணை வேகத்தில் அல்லவா உள்ளது.
 கல்லூரிகளில் விதிகளை உருவாக்கும்போது எந்தச் சிந்தனையின் அடிப்படையில் செய்கிறார்கள் என்பதைச் சரியாகப் புரிந்து கொள்கிறோமா என்ற ஐயங்கள் நமக்குள் எழுகின்றன. பல்வேறு ஊடகங்களிலிருந்து திரட்டப்பட்ட தரவுகளைக் கொண்டு பார்த்தால் இல்லையென்பதுதான் பதிலாகக் கிடைக்கிறது.
 கல்லூரிகளில் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் கட்டிக்காக்க சட்டதிட்டங்கள் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. அத்தகைய விதிமுறைகளின் நியாயம் பொதுத் திட்டவரையறையைப் பொருத்து (Common Value Denominator) அமைய வேண்டும்.
 உலகக்குடிமை எனும் பெயரில் ஒழுங்கு மற்றும் ஒழுக்கம் குறித்த மதிப்பு உலகமயமாக்கப்படுகிறது. அப்படிப் பொதுமைப்படுத்தும்போது, இந்தியாவின் அடிப்படை அறமதிப்புக் கோட்பாடுகள், காலத்திற்கேற்றவையாக இல்லை என்றும், பொருட்படுத்தத் தக்கதல்ல என்றும் ஒதுக்கித் தள்ளலாமா? எது சந்தேகிக்கப்படாத ஒன்றோ அதனை நிரூபணத்திற்கு உள்படுத்தத் தேவையில்லை என்ற பிரெஞ்சு தத்துவஞானி டெனிஸ் டிடரோ (Denis Diderot)-வின் கூற்றுக்கு இது முரண்பாடாக இல்லையா?
 அறமதிப்புக் கோட்பாட்டின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த செய்முறைக் கண்டுபிடிப்பு முறையை ஒரு கருவியாக வற்புறுத்துவது ஏற்கத்தக்கதாகத் தோன்றவில்லை. அப்படிச் செய்தால், இந்தியாவின் நாகரிகச் சொத்தான இந்த அறவியல் மதிப்பு, போகப்போகக் குறைவாக மதிப்பிடப்பட்டுவிடும். இது எதன் அடிப்படையில் கட்டப்பட்டது என்பது மிக முக்கியம்.
 அரசியல், சமூக, பொருளாதார, சமய, தத்துவக் கோட்பாடு மற்றும் பிற அடிப்படை மூலங்களின் பின்னணியில் கட்டப்பட்ட உறுதியான கட்டடமாகும். அலங்காரம் மற்றும் அபிநயங்களின் பின்னணியில் உள்ள விளம்பர மாயாஜாலத்தால் புதுமை பாரதம் என்று முத்திரை குத்துவது கவர்ச்சியாக இருக்கும். அது நமக்குத் தேவையில்லை.
 இதில் மறுக்க முடியாத உண்மை என்னவென்றால் மேலைநாட்டவர்கள் ஓர் அறமதிப்புக் கோட்பாட்டை ஏற்படுத்த பகீரதப்ரயத்தனம் செய்கிறார்கள். இந்தியப் பாணியை ஆழ்நிலையாகக் கொண்டு அமைக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக அவர்கள் உள்ளனர். இந்தப் பின்னணியின் அடிப்படையில்தான், நம்முடைய விவாதங்களையும், கலந்துரையாடல்களையும் முடுக்கிவிட வேண்டும்.
 இந்தியச் சூழலுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழக விதிமுறைகள் ஒத்துவராது என்பதுதான் என் வாதம். பணிபுரியும் இடங்களில் ஜீன்ûஸ ஏன் அனுமதிக்கக்கூடாது என்று வரன்முறைப்படுத்துபவர்கள் கேட்கிறார்கள். பணிபுரியும் இடங்களில் ஆடை அணிவது தங்கள் உரிமை என்று வாதிப்பது, பணியின் புனிதத்திற்கே களங்கம் விளைவிப்பதாகும்.
 தேசிய குற்றப்பதிவு ஆவண அமைப்புப் புள்ளிவிவரம் தந்த தகவல்களின்படி இந்தியாவில் பெண்களைவிட ஆண்களுக்கெதிரான குற்றங்கள்தான் மிகுந்திருப்பதாகவும், எனவே ஆடவர்களுக்குத்தான் பாதுகாப்புத் தேவை என்று ஆச்சரியமான வாதத்தை முன்வைத்தார்.
 தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தன் வாதத்தை நியாயப்படுத்த ஒரு பெண்மணி முன்வைத்த காரணம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கவர்ச்சிகரமாக உடையணிந்த பெண்ணைப் பார்த்து வகுப்பறையில் ஒரு மாணவன் வைத்தகண் வாங்காமல் பார்த்தான் என்றால் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரைத்தான் பொறுப்பாளியாக்க வேண்டும்.
 அவரிடம் வகுப்பைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இல்லாமையாலும், மாணவர்கள் கவனத்தை வேறுபக்கம் திருப்பமுடியாத அளவிற்கு கற்பிக்கும் திறனும் இல்லாதவராக உள்ளதால் இத்தகைய குளறுபடிகள் நடக்கின்றன என்றார் அந்தப் பெண்மணி. கவனத்தைப் பாடம் நடத்துவோர் பக்கம் திருப்புவதை விட்டுவிட்டு, உடையணிவதற்கு ஏன் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி, இப்படிப்பட்ட புதுமை நாட்டச் சிந்தனைவாதிகளின் (விதண்டாவாதிகளின்) போக்கினை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தவறுகளை நியாயப்படுத்தும் இவர்களுடைய போக்கு அப்படித்தான் இருக்கும்.
 இந்த வக்கிரச் சிந்தனையாளர்களின் வாதங்களை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் உலக அரங்கில் இந்திய அறவியலுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் சிந்தையில் கொள்ள வேண்டும்.
 பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேரும் மாணவர்களிடம் கடந்த பத்து ஆண்டுகளாக உரையாடி வருகிறேன். பெற்றோர்களைப் பார்த்து ஒவ்வொரு முறையும் தவறாமல் கேள்வி ஒன்றைக் கேட்பது வழக்கம். உங்களில் எத்தனை பேர் மகளிர் விடுதியில் தங்கிப் படிக்கும் உங்கள் பெண் குழந்தைகளுக்கு விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
 அவர்கள் விருப்பம்போல் வெளியே செல்லவும், நேரம் கழித்து விடுதிக்கு வர அனுமதி தேவையா? என்பதுதான் அந்தக் கேள்வி. என் பத்தாண்டுக் கால அனுபவத்தில் பெற்றோர் எவரும் எந்தவிதமான விதிச்சலுகையும் வேண்டும் என்று இன்றுவரை கேட்கவில்லை.
 எங்கள் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கிப்படித்த மாணவி ஒருவரின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அவருடைய பாட்டனார், மகளிர் விடுதியின் காப்பாளர் (warden) குறித்து அக்கறையோடு விசாரித்தார். பல்கலைக்கழகத்தில் எத்தனையோ பேர் இருக்க விடுதிக் காப்பாளரை மட்டும் ஏன் கேட்கிறார் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவருடைய பதில் என்னிடத்தில் புத்தொளியையும் உற்சாகத்தையும் அளித்தது.
 அவர் சொன்ன பதில் இதுதான், நீங்கள் என்ஜினியரிங் கல்வியை மட்டும் என் பேத்திக்குக் கொடுக்கவில்லை. திருமணத்திற்குப் பின் ஒரு பெண்ணிற்குத் தேவையான வாழ்வியல் திறன்களையும் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள்.
 புகுந்த வீட்டில் ஒரு கோட்பாட்டிற்குள்ளே வாழ்வது எப்படி என்ற ஒரு வாழ்வுமுறையை என் பேத்திக்குத் தங்கள் விடுதி வரன்முறைகள் மூலமாக எடுத்துக்காட்டினீர்கள் என்றார்.
 இந்த இரு அனுபவங்களும் நமக்கு எதைப் போதிக்கின்றன? மாணவர்களைவிட மாணவிகள் விஷயத்தில் சட்டதிட்டங்கள் ஏற்படுத்தும்போது கடுமையாக இருப்பதுபோல் தோற்றமளித்தாலும் காலப்போக்கில் அவை கொடுக்கும் பயன் நல்லனவாக உள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது.
 சில ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூருவில் வனப் பகுதிக்கு அருகில் அமைந்த சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவியை, நள்ளிரவில் கயவர் கூட்டம் மிருகத்தனமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய செய்தியைப் படித்தபோது எனக்குள் நான் கேட்டுக் கொண்ட கேள்வி இதுதான்..
 இக்கல்லூரியின் விடுதிக் காப்பாளர் அம்மாணவியை வெளியே அகால வேளையில் போகக் கூடாது என்று தடுத்து நிறுத்தியிருந்தால் இச்சம்பவம் நிகழ வாய்ப்பில்லையே?÷விடுதிகளில் பல விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் மேம்போக்காகப் பார்ப்பதற்குக் கடுமையாகவும், கண்டிப்புள்ளதாகவும் தோற்றமளிக்கும். அவற்றின் பின்னே ஆழ்ந்த தத்துவம் ஒன்று இருக்கிறது.
 நம் நாட்டின் பண்பாடு, இறையாண்மை, பாரம்பரியம் ஆகியவற்றைப் புரிந்து கொண்டு நேர்வழியில் சட்டதிட்டங்களை வகுக்கப் பாடுபடுவோம்.
 இத்தகைய விவாதங்களை மேம்போக்காக நடத்தக் கூடாது. ஆழ்நிலைச் சிந்தனைத்திறம் வாய்ந்த வல்லுநர்கள் அமர்ந்து கருத்துப் பரிமாற்றம் செய்து முடிவெடுக்க வேண்டிய ஒன்றாகும்.
 ஒரு பொது மதிப்புத் திட்டவரையறை (Common Value Denominator) உருவாக்கப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது. அது உலகளாவியதாகவும், ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவும் இருக்க வேண்டும். அது இந்தியத் தன்மையுடையதாக இருப்பது உசிதமானது.
 ஏனெனில், உலகமே இந்தியாவை இத்தகைய விஷயங்களில் ஓர் எடுத்துக்காட்டு நாடாக பாவிக்கின்றன. நாம் உலகத்தை ஏமாற்றலாமா?
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com