அகப்பசியும் ஆயுதப்பசியும்!

ஆங்கிலேய ஆட்சியின் கீழ் ஒட்டுமொத்த இந்தியாவும் அடிமைப்பட்டுக் கிடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

ஆங்கிலேய ஆட்சியின் கீழ் ஒட்டுமொத்த இந்தியாவும் அடிமைப்பட்டுக் கிடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி. புரட்சிக் குரல்கள் அனைத்தும் ஒடுக்கப்பட்டு, எதிர்ப்பவர்கள் எவருமே இல்லை என்று ஆங்கிலேய ஆதிக்கம் செம்மாந்திருந்த நேரம்.
 பசுமை தவழ்ந்திருந்த தமிழகத்தின் வயல்வெளிகளில் வெறும் பருத்திகள் மட்டுமே பூத்திருந்தன. பட்டினியால் மடிந்த உழவர்களின் உடல்கள் நெற்களஞ்சியமாய் விளங்கிய வரப்புகளில் சிதறிக் கிடந்தன.
 இரக்கமே இல்லாமல் மண்ணையும், மனிதர்களையும் சுரண்டிய அன்னியராட்சி ஒருபுறத்தில், எஞ்சியிருந்த உயிரை சாதிக் கழுகுகள் பருகிக் குடித்துக் கொண்டிருந்த காட்சிகள் மறுபுறம். இவர்களிடையே, விதியை எண்ணிக் கதறிய மக்களின் கண்ணீரைத் தொட்டு, புது வரலாற்றை எழுதிக் கொண்டிருந்த சமயவாதிகள்.
 இன்பத் தமிழ் நிலம் தன்னிலை கெட்டுச் சிதிலமாகிச் சிதைந்து கொண்டிருந்த பொழுதில் ஓங்கி ஒலித்தது அந்தக் குரல். உருத் தெரியாமல் அழிந்து கொண்டிருந்த மக்களின் இதயங்களில் இரக்கத்தின் ஊற்றாய்ச் சுரந்த அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் திரு அருட்பிரகாச வள்ளலார்.
 பெறுதற்கரிய மானிடப் பிறவி, பெரும் பஞ்சத்தாலும், பசிப் பிணியாலும் ஆயிரக்கணக்கில் மடிவதைக் கண்டு மனந்தாளாமல் உருகிய அப்பெருந்துறவி, வெறும் விதிப் பயனை அதற்குக் காரணம் காட்டி ஓய்ந்திடவில்லை. மாறாக, மக்களின் துயர்கண்டு கொதித்த தம் உள்ளத்திலிருந்து சுடர் ஒன்றெடுத்து, பசிநோய் தீர்க்கும் பாதையைத் திறந்து வைத்தார்.
 பஞ்சத்தில் மாய்ந்திடும் உயிர்களை, நெஞ்சத்தில் சுரந்த பேரிரக்கத்தால் வாழ்வித்த துறவி ஒருவரை வரலாறு அன்றுதான் முழுமையாய் தரிசித்தது. சமயம் என்பது வெறும் தத்துவம் மட்டுமே அல்ல, தனிப் பெருங்கருணையும்கூட என்னும் புதிய சித்தாந்தத்தை ஆன்மிக வெளியில் ஆழமாய் விதைத்தார் வள்ளலார்.
 நோய்களால் வாடும் உயிர்களைக் காக்க, தன் வாழ்நாளைப் பரிசோதனைக் கூட ஆய்வுகளில் கழிக்கும் மருத்துவ விஞ்ஞானியைப் போல, மானிடப் பிறவியை ஈடேற்ற, மெய்ஞ்ஞானப் பரிசோதனைகளில் தம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் வள்ளல் பெருமான். அந்தப் பரிசோதனைகளின் சிகரமாய் மலர்ந்த அற்புதத் தத்துவமே "சமரச சுத்த சன்மார்க்கம்'.
 ஆன்மிகம் என்பது தன்னை மட்டும் மேம்படுத்திக் கொள்ளும் சுயநலப் பாதை அல்ல, அது எல்லா உயிர்களையும் அரவணைத்துச் செல்லும் எல்லையிலா அனுபவம் என்ற புதிய தடத்தைச் சன்மார்க்க நெறி போதித்தது.
 எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உவக்கின்றார் உள்ளமே இறைவன் நடமிடும் அம்பலம் என்று தீந்தமிழில் அடிகளார் தீட்டிய தமிழ்ச் சித்திரம், இருண்டு கிடந்த உள்ளங்களிலெல்லாம் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சி நின்றது.
 பக்தி இயக்கங்கள் போதித்த அறப்பாதையிலிருந்து முற்றாக நழுவிச் சென்று விட்ட இன்றைய கார்ப்பரேட் ஆன்மிகச் சூழலில், வள்ளலார் வகுத்தளித்த அருட்பாதை நமக்குள் பல ஆச்சரியக் கதவுகளைத் திறந்து விடுகின்றன.
 மனிதகுல மேன்மைக்காக, இலக்கியம், சமய ஆய்வு, சமூகத் தொண்டு, மருத்துவம், மனித உடல் குறித்த ஆய்வுகள், பத்திரிகை, உரைநடை, பதிப்புத் துறை என்று அவரின் தேடல்கள் தடங்களைப் பதித்தன. இறைவனைப் பரிபூரணமாக அடைவதற்கான முதல் படிக்கட்டு எளிமை என்பதை தன் வாழ்வின் ஒவ்வோர் அசைவிலும் அவர் உணர்த்தினார்.
 தன் பெயருக்கு முன்னால், புகழ்பாடும் முன்னொட்டு, பின்னொட்டுப் பட்டங்களைச் சூடிக் கொள்ளாமல் இராமலிங்கம் என்று மட்டும் கையெழுத்திடும் மெய்த்துறவு அவரிடத்தில் குடி கொண்டிருந்தது.
 அவர் வாழ்ந்த காலகட்டத்தை ஆராய்ந்து பார்த்தால், எளிய ஒரு துறவியால் இந்த அளவுக்குச் சமூகச் சீர்திருத்தங்களை மேலெடுத்துச் செல்லவியலுமா என்று பெருவியப்பு நம்முள் தோன்றுகிறது. தங்களின் எண்ணத்துக்கு எதிராகச் சிந்திப்பவர்கள் எவரானாலும், அவர்களை வேரோடு அழித்தொழித்த கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக் காலத்தில்தான், அவர் அச்சமின்றித் தன் பணிகளை நடத்திக் காட்டினார்.
 பட்டினியால் வாடும் மக்களைக் கசக்கி வரி வசூலித்த ஆங்கிலேய நிர்வாகத்தை, கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக என்று பாடிடும் துணிவு அவரிடத்திலிருந்தது. மனுமுறை கண்ட வாசகம் என்னும் அவரது நூல் முழுவதுமே ஆங்கிலேய ஆட்சியின் அவலங்கள் குறித்த படப் பதிவு என்பதில் ஐயமில்லை.
 பத்தொன்பதாம் நூற்றாண்டில் மட்டும் தமிழகத்தை 12 பெரும் பஞ்சங்கள் உலுக்கியெடுத்தன. காணும் திசைகளிலெல்லாம் மரணங்களும் ஓலங்களுமே நிறைந்திருந்தன. தங்கள் நிர்வாகத்தின் கீழிருந்த மக்களை அவலத்திலிருந்து காப்பாற்ற வேண்டிய ஆங்கிலேய நிர்வாகமோ அவர்களைக் காலனி நாடுகளுக்குக் கூலிகளாக ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் மூழ்கிக் கிடந்தது.
 இந்தச் சூழலில்தான், ஓர் அரசு செய்ய வேண்டிய சேவையைத் தனி மனிதராக வள்ளலார் கையிலெடுத்தார். தன்னிடத்தில் அளிக்கப்பட்ட பணங்காசினைக் குப்பைமேட்டில் வீசியெறிந்த அப்பெருந்துறவி, ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு உணவளித்துக் காத்த அதிசயம் நிகழ்ந்தது.
 வெறும் உபதேசக் குருவாக அவர் எப்போதுமே இருந்ததில்லை என்பதற்கான கால சாட்சியம் அவரது சத்திய ஞானத் தரும சாலை.
 அழியும் தன்மை கொண்டது இந்த உடல் என்று சித்தர்கள் நேரடியாகவே எச்சரித்தனர். ஆனால், வள்ளலாரோ வாழும் முறைமையில் வாழ்ந்தால், மனிதனே உனக்கு மரணமில்லை. மரணம் இல்லாப் பெருவாழ்வு உறுதியாக வாய்க்கும் என்று மனிதனை மாமனிதனாக்க வித்திட்டார்.
 இறப்பு குறித்து எப்போதும் ஒருவித அச்ச உணர்வைக் கொண்டிருக்கும் மனித உள்ளங்களில் புதிய நம்பிக்கைகளை வள்ளலாரின் இவ்வாக்கியம் ஏற்படுத்தியது என்பதே உண்மை. வாழ்க்கையின் மிகப் பெரிய தத்துவங்களை எல்லாம் இயல்பான மக்கள் மொழியிலேயே விளக்கிய வித்தியாசமான துறவி அவர்.
 இம்மண்ணில் தோன்றும் மனித உயிர்கள் யாவும் வள்ளலாரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய உயர்ந்த பண்புகள் சகிப்புத்தன்மையும், எவரையும் புண்படுத்தா பேருள்ளமும். தன் வாழ்நாளில் அவர் எந்தச் சமயத்தையும், சமயப் பீடங்கள், தனி மனிதரையும் தாழ்த்திப் பேசியதோ, எழுதியதோ இல்லை. தன் கருத்தை ஏற்றவர்கள், எதிர்ப்பு தெரிவித்தவர்கள் என அனைவரும் அவருக்கு ஒன்றே.
 மறந்தும் இன்னோர் உயிரைப் புண்படுத்திவிடலாகாது என்பதில் அந்தப் புண்ணியருக்குப் பெரும் கவனம் இருந்து கொண்டேயிருந்தது. அதனால்தான், "நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனா ஏழைகள் வயிறு எரியச் செய்தேனா பசித்தோர் முகத்தைப் பாராது இருந்தேனா' என்று ஆத்ம பரிசோதனை செய்து கொள்ளும் துணிச்சலை அவரின் பாடல்கள் வெளிப்படுத்தின.
 தன் பிரார்த்தனைகள் எல்லாவற்றிலும், எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று மட்டுமே இறைவனிடம் மன்றாடும் இரக்கவுள்ளம்தான், அவரது வாழ்க்கை நமக்குத் தரும் மகத்தான செய்தி.
 அன்பைப் போதிக்கத் தோன்றிய சமயங்கள் பலவும் தங்களுக்குள் செய்து வந்த பூசல்களும், சச்சரவுகளும் இன்று போர்களாக வெடித்துப் பரவியுள்ளன. மாற்றுச் சமயத்தவரை மாய்த்திடுவதுடன், சொந்தச் சமயத்திலுள்ள மாற்றுப் பிரிவினரையும் இரக்கமின்றிக் கொன்றிடும் அதிஉயர் தொழில்நுட்ப யுகத்தில் நாம் வாழ்கிறோம்.
 எல்லையில்லாப் பரம்பொருளின் பெயரால் மோதிக் கொள்ளும் மனிதர்களுக்கு வள்ளலார் காட்டிய பாகுபாடற்ற பாதையே சோதி வழிபாடு. இருளகற்றும் ஒளிவடிவாக விளங்குபவனே இறைவன் என்று எல்லாச் சமயத்தினருக்கும் பொருத்தமான அவருடைய தீர்வு உலக ஆன்மிகத்தில் ஒரு புதிய உச்சம்.
 இலக்கியத்தை எளியவர்களின் இதயத்தில் ஆடும் ஊஞ்சலாக்கித் தந்தவரும் வள்ளலாரே. தமிழில் புதிய சாளரங்களைத் திறந்துவிட்ட பிதாமகர் அவர்தான்.
 சிந்து, கண்ணி என்று அவர் பயன்படுத்திய இலக்கிய வடிவங்களில் மண் மணம் வீசிய ஆன்மிகம் பிறந்தது. இரக்கம், சமூகத்தின் மீதான காருண்யம் ஆகியவை பொங்கிப் பிரவாகிக்கும் கடலான திருவருட்பாப் பாடல்கள் இன்று பூமிப்பந்தின் பல்வேறு பகுதிகளில் இசைக்கப்பட்டு வருகின்றன.
 இராமலிங்க வள்ளலார், சமரச சுத்த சன்மார்க்க நெறியை இவ்வுலகுக்கு வழங்கிச் சரியாக 150 ஆண்டுகள் நிறைவெய்துகின்றன. எல்லா உயிரையும் தம்முயிர் போல் எண்ணும் சன்மார்க்கத்தின் தேவை இன்றைய உலகுக்கு மிகுதியும் தேவைப்படுகிறது.
 உயிரின் மதிப்பை மனிதச் சமூகத்துக்கு ஓங்கியொலிக்கும் உன்னத நதியாய்த் ததும்பி நிற்பது சன்மார்க்கம். அந்த நதியில் பூத்துக் குலுங்கும் ஜீவகாருண்ய மலர்களை எடுத்து உலகின் சிரசில் சூட வேண்டிய பொன்னான தருணம் இதுவே.
 கணினி யுகத்தில் காலம் இன்று எட்டாத உயரத்தில் நிமிர்ந்து நின்றாலும், மனிதநேயம் மட்டும் மீளாப் பள்ளத்தாக்கில் வீழ்ந்து கிடக்கிறது. வாடிய பயிரைக் கண்டாலே வாடுகின்றது என் நெஞ்சம் என உருக்கம் கசிந்த மண் இது. சமயத்தின் பெயரால் சக மனிதனின் சிரங்களைக் கருணையின்றிக் கொய்திடும் கொடுஞ்செயல்கள் கூசாமல் நடைபெறுகின்றன. அக்காட்சிகளைப் படமாக எடுத்து உலகமெங்கும் பரவச் செய்யும் பாவமனங்கள் விசுவரூபம் எடுத்து நிற்பதுதான் கொடுமையின் கொடுமுடி.
 இக்கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண்மூடிப் போக வேண்டுமெனில், ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும் என்னும் பெருங்கருணையின் தேசிய கீதம் உலகம் எல்லாம் பரவிட வேண்டும்.
 உணவு, தண்ணீர் ஆகிய இரண்டையும் மையமிட்டு மூன்றாம் உலகப் போர் மூளப்போகிறதென்ற எச்சரிக்கை மணிகள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. அந்த மணியோசைக்கான பதில் தமிழகத்தின் சிறு கிராமம் ஒன்றில் ஒன்றரை நூற்றாண்டுகளாய் எரிந்து கொண்டிருக்கும் அணையா அடுப்பின் செந்தணலில் உள்ளது.
 பேரிரக்கத்தின் தாயாக வந்த வள்ளல் பெருமான் ஏற்றிய அக்கருணைக் கனல்களில் சில துளிகளை எடுத்து, பூமியெங்கும் அடுப்புகள் மூட்டுவோம். அக்கருணைக் கனலில், அகப்பசியும், ஆயுதப்பசியும் கரைந்து மறையும் காலம் பூத்திடும்.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com