உண்மையைச் சொல்லமாட்டாயா?

எழுபதாண்டுகளாகக் கோப்புகளுக்குள் சிறை வைக்கப்பட்டிருந்த ரகசியப் பறவைகளின் சிறகுகள் மீது முதல்முறையாக வெளிச்சம் பாய்ந்திருக்கின்றது.

எழுபதாண்டுகளாகக் கோப்புகளுக்குள் சிறை வைக்கப்பட்டிருந்த ரகசியப் பறவைகளின் சிறகுகள் மீது முதல்முறையாக வெளிச்சம் பாய்ந்திருக்கின்றது. முடிவில்லாக் கேள்வியாய் நீண்டு கொண்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய மர்மங்களுக்கான விடையின் விலாசக் கதவுகளைச் சற்றே திறந்து விட்டிருக்கின்றார் மேற்கு வங்க முதல்வர்.
 இந்த நாட்டை மனம் - மெய் - மொழிகளால் நேசிக்கும் மெய்யான இந்தியர்கள் அனைவரும் இத்தனை ஆண்டுகளாய்த் தவமிருந்தது, இத்தருணத்திற்காகவே. ஆனால், இது ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே.
 நிதர்சனம் என்னவென்றால், ரகசியத்தின் குழந்தையே இப்போதுதான் இந்தியாவின் கிழக்கில் பிரசவமாகியிருக்கின்றது. ஆனால், அதன் தாய் முகத்தைக் காட்டாமல் தில்லியின் தந்திரபூமியில் இன்றும் மறைப்பில் வைக்கப்பட்டுள்ளாள். தாயின் அடையாளம் தெரியாமல், குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு அலையும் விசித்திரமான சூழலில் நிற்கின்றது, இந்தியா.
 தற்போது வெளியிடப்பட்டுள்ள பன்னிரண்டாயிரத்துக்கும் அதிகமான பக்கங்களில், வரலாற்று ஆய்வாளர்கள் பூதக்கண்ணாடிகளுடன் தங்களின் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். இத்தனைக் காலமாக முறிக்கப்பட்டுக் கிடந்த சிறகுகள் படபடத்து எழுகையில், சில உண்மைகளோடு வரலாற்றை மறைத்துக் கிடந்த அதிர்ச்சியூட்டும் பல தூசுகளும் சேர்ந்து பறக்கலாம். அதில் இந்நாடு எத்தனை முகங்களையும், முகமூடிகளையும் ஒருசேர தரிசிக்கப் போகின்றதோ தெரியவில்லை.
 ஆனால், எதிர்காலத் தேர்தல் களத்தில் காமதேனுவாக இந்த ஆவணங்கள் சுற்றி வரப்போவதற்கான கல்யாணக் குணங்கள் எல்லாம் இப்போதே பரவலாகத் தென்படுகின்றன. மேலும், ஏதாவது சம்பவம் நிகழாதா எனச் சமூகக் கரைகளில் வாடி நிற்கும் பெரிய - சின்னத்திரைக் கொக்குகளுக்கு நேதாஜி ஆவணங்கள் வசமான வேட்டைதான்.
 தேச விடுதலைக்காகச் செந்நீரும், கண்ணீரும் சிந்திச் சென்ற சுவடுகளின் வலிகளை அறிந்திடாமல் தலைமுறைகள் பல கடந்து செல்லும் கண்மூடிப் பழக்கம்தான், இந்நாட்டின் சுதந்திர நாளாக மாறி விட்டது.
 எவ்வாறிருப்பினும் நவீன இந்தியாவின் அதிஉயர்த் தொழில்நுட்ப யுகத்தில் மிதக்கும் தலைமுறையின் கைகளில், இப்பொன்னாட்டின் விடுதலைக்காக மண், கடல், மலையென ஓடித்திரிந்த ஒரு மகத்தான தலைவரின் மறைக்கப்பட்ட வாழ்க்கையின் ஒரு பகுதி, இப்போதாவது சென்று சேர்ந்துள்ளதே என்று ஆறுதல் அடைந்து கொள்ளலாம்.
 நேதாஜி பற்றிய உண்மைகளை அறிவதற்காகக் காத்துக் கிடப்பவர்கள் இந்திய நாட்டு மக்கள் மட்டும்தானா என்ற பெரிய கேள்வியும் இங்கே சேர்ந்து எழுகின்றது.
 அவருடைய வாழ்க்கை பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள 70 ஆண்டுகளாகக் காத்துக் கிடப்பவர்கள், இந்திய நாட்டு மக்கள் மட்டும் அல்ல, கிழக்காசிய நாடுகளில் வாழும் லட்சக்கணக்கான இந்திய வம்சாவளியினரும் தான் (குறிப்பாகத் தமிழர்கள்). நேதாஜி என்ற ஆளுமையின் முடிவு பற்றி இந்தியர்களுக்குத் தேவை விடை மட்டும்தான். ஆனால், கிழக்காசியாவின் இந்தியர்களுக்குத் தேவை, எழுதி முடிக்கப்பட வேண்டிய வீரயுகத்தின் மீதி வரலாறு.
 ஜெர்மனியில் ஹிட்லரின் திட்டங்களுக்கு மறுப்புத் தெரிவித்து தைரியமாக வெளியேறி ஜப்பான் வந்தார் நேதாஜி. அங்கிருந்து சிங்கப்பூருக்கு நீர்மூழ்கிக் கப்பலின் மூலம் கடலுக்கடியில் 90 நாள்கள் பெரும் சாசகப் பயணத்தை மேற்கொண்டார்.
 சிங்கப்பூரில் அவருக்காக ஜப்பானிய ராணுவம், போர்க் கைதிகளாக பிரிட்டிஷ் - இந்தியப் போர் வீரர்களையும், கப்பல்களில் ஆயுதங்களையும் குவித்து வைத்திருந்தது. ஆனால், தன் உயிரைப் பணயம் வைத்து, பெருங்கடல் பரப்பினைக் கடந்து நேதாஜி சிங்கப்பூர் வந்தது, வெறும் ராணுவத் தளவாடங்களையும், போர்க் கைதிகளையும் நம்பி அல்ல, இதயத்தில் இந்திய விடுதலைக்கான சுடரை ஏற்றி வைத்துக் கடல்புரத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான இந்தியத் தமிழர்களின் இணையில்லாத் தேசப்பற்றை நம்பியே அம்மண்ணில் கால் பதித்தார்.
 சிங்கப்பூர் சதுக்கத்தில் நின்று முதல் முறையாகப் பேசிய நேதாஜி, "நீங்கள் உங்களின் ரத்தத்தினை எனக்குத் தாருங்கள், நான் உங்களுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தருகிறேன்' என்று முழங்கியபோது, ஓடி வந்தவர்கள் ரப்பர்த் தோட்டத் தமிழர்களும், கூலித்தொழில் செய்த தமிழர்களும், பிற இந்தியர்களும்தான்.
 நேதாஜியின் எழுச்சியுரையைக் கேட்டு, அவரின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்த இந்தியத் தமிழர்களில் 75 சதவீதம் பேர், அதற்குமுன் இந்தியாவைக் கண்ணால் பார்த்ததுகூட இல்லை. அவர்களின் மூதாதையர்களும், பாட்டன்மார்களும் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு மலாயாவுக்கும், பர்மாவுக்கும் பஞ்சம் பிழைக்கச் சென்றவர்கள். செம்பனையையும், ரப்பரையும் நடும் போதே, இந்தியப் பற்றையும் சேர்த்து தம் குழந்தைகளிடம் அந்த அயலகத் தமிழர்கள் விதைத்திருந்தனர்.
 அப்பெரும் நேசம்தான், ரப்பரில் பாலாகவும், இதயத்தில் இந்தியாவாகவும் திரண்டு வழிந்தது. அதனால்தான், இந்தியாவின் தவப்புதல்வனாக வந்து நேதாஜி நின்றபோது, ஆயிரக்கணக்கில் இந்தியத் தமிழர்கள் ஓடிச் சென்று மூவர்ணக் கொடி ஏந்தினர்.
 ஆடவர்களோடு போட்டியிட்டுக் கொண்டு பெண்களும் நேதாஜியின் ராணுவத்தில் இணைந்தனர். எந்தப் பெண்ணும் எளிதில் இழக்க விரும்பிடாத கருங்கூந்தலை, தங்களின் நாட்டுச் சுதந்திரத்திற்காக வெட்டி எறிந்தனர்.
 ராணுவச் சீருடையும், தோளில் துப்பாக்கியும் ஏந்திய அந்த ஜான்சி ராணி ரெஜிமெண்ட் தான், உலகிலேயே முதல்முறையாகப் பெண்களைக் கொண்டமைந்த விடுதலைப்படை என்னும் பெருமையைச் சூடி நின்றது.
 வீரத்திற்குப் பெயர் பெற்ற சமுராய்களான ஜப்பானியர்களே வியந்து போற்றிய தீரச்செயல்களை மலாயா - சிங்கப்பூர் - பர்மாத் தமிழர்கள் களத்தில் ஆற்றினர். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய விசாரணை ஆவணங்களில் தெள்ளத் தெளிவாக இத்தியாகம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 ஏறத்தாழ இரண்டாண்டுக் காலம், கிழக்காசியாவின் தமிழர்களும் ஏனைய இந்தியர்களும் தங்களின் பணத்தைக் கொடுத்தும், உயிரை ஈந்தும் இந்தியத் தேசிய ராணுவத்திற்கு வெற்றிகளை ஈட்டித் தந்தனர்.
 பரம ஏழைகளாய் விளங்கிய கூலித் தொழிலாளிகள்கூட, தம் சொற்ப சம்பளத்தை மறைக்காமல் நேதாஜியின் காலடியில் குவித்தனர். ஏழைத் தாய்மார்கள், ஆடுமாடுகளை விற்று அப்பணத்தை நேதாஜியிடம் நீட்டியபோது, எதற்கும் அஞ்சாத அந்த வங்கத்துச் சிங்கம் கூடச் சிந்தை கலங்கி நின்றார்.
 சிங்கப்பூர் முதல் மலாயா, தாய்லாந்து, பர்மா வழியாக ஆயிரக்கணக்கான மைல் தொலைவு காடுகள், பள்ளத்தாக்குகள், பெரு நதிகளைக் கடந்து, பசியும் பட்டினியும் சுமந்து நேதாஜியின் படைவீரர்கள் சென்ற வரலாறு எவரின் இதயத்தையும் கசிந்துருகச் செய்திடும்.
 ஆகாயம் - தரை - கடல் என எல்லா மார்க்கத்திலுமிருந்து தாக்கிய பிரிட்டிஷ் - அமெரிக்கப் படைகளை வெறும் துப்பாக்கியால் சந்தித்த நெஞ்சுரம் மிக்க ஆயிரக்கணக்கான தமிழர்களின் கதைகளை வெறும் வார்த்தைகளால் எழுதிவிட இயலாது. உண்ண உணவின்றி, காடுகளில் கிடந்த சருகுகளை விழுங்கி, களத்தில் நின்ற தமிழ் வீரர் - வீராங்கனைகளின் கீர்த்திகளை ஜப்பானிய தளபதிகள் போர்க்காலக் குறிப்புகளில் எழுதி வைத்துள்ளனர்.
 ஆழங்காண முடியாத ஆறுகளையும், துயரங்களையும் கடந்து, அவ்வீரர்கள் மணிப்பூர் எல்லையில் மூவர்ணக் கொடி நாட்டி, இந்திய மண்ணை முத்தமிட்டுக் கதறியழுதக் காட்சியைக் கண்டு, ஜப்பானிய வீரர்கள் திகைத்து நின்றனர்.
 விதியின் கரங்களில் சிக்கி இரண்டாம் உலகப்போரின் போக்கு தடம் மாறியபோது, வேறு வழியின்றி வெற்றி பெற்ற இடங்களிலிருந்துகூட இந்திய தேசிய ராணுவம் பின்வாங்கியது.
 தன் கனவுக்கு உருவம் கொடுக்க முன்வந்த வீரர்களை, குறிப்பாக வீராங்கனைகளைப் பர்மா போர்முனையிலிருந்து மீண்டும் பல ஆயிரம் மைல் தொலைவு பாதுகாப்பாக அழைத்துச் சென்று பாங்காக்கில் ரயில் ஏற்றி சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார் நேதாஜி. பிரிட்டிஷ் படையிடம் சிக்கிக் கொண்ட வீரர்களில் பலர் தில்லி செங்கோட்டையில் தூக்குக்கயிற்றில் தொங்கவிடப்பட்டனர்.
 பாங்காக்கில் விடை தந்து அனுப்பிய இந்திய தேசிய ராணுவ வீரர்களிடம், நேதாஜி இறுதியாகக் கூறிச் சென்ற வாசகம், "காத்திருங்கள், மீண்டும் வருவேன்' என்பதுதான். தங்கள் தலைவன் சொன்ன அந்த ஒற்றை வாசகத்திற்காக நம்பிக்கையோடுக் காத்திருக்கும் நூற்றுக்கணக்கான இந்திய தேசிய ராணுவத்தின் முதிய வீரர்கள் - வீராங்கனைகளை இன்றும் கூட இந்தியா, மலேசியா, பர்மா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் காண முடியும்.
 இன்னுயிரைக் கொண்டெழுதிய அவ்வீரவரலாற்றின் முடிக்கப்படாத நிறைவுரையைத் தங்களின் காலத்திற்குள் எழுதி விடும் தவிப்புடன் உலகின் வெவ்வேறு மூலைகளில் உயிர் சுமந்து வாழ்கின்றனர்.
 மரணத்திற்கு மிக அருகிலிருந்தபடி, இந்திய தேசிய ராணுவத்தின் உயிர்மூச்சான "டெல்லி சலோ' என்னும் மந்திரப் பாடலை இன்னமும் அவர்கள் நம்பிக்கையோடு பாடிக் கொண்டுள்ளனர். அந்தப் புனித ஆன்மாக்களிடம் இப்போதாவது உண்மையைச் சொல்லமாட்டாயா என்னருமைத் தாய்நாடே..!
 பாங்காக்கில் விடை தந்து அனுப்பிய இந்திய தேசிய ராணுவ வீரர்களிடம், நேதாஜி இறுதியாகக் கூறிச் சென்ற வாசகம்,
 "காத்திருங்கள், மீண்டும் வருவேன்' என்பது தான்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com