தமிழில் வருமா குறுந்தகவல்கள்?

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பெரும்பாலான இடங்களில் புழக்கத்தில் கணினியில் பயன்படுத்தப்படும் மொழிகளில் தமிழ் தன்னிகரில்லா இடத்தைப் பெற்றுள்ளது என்றே கூறவேண்டும்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பெரும்பாலான இடங்களில் புழக்கத்தில் கணினியில் பயன்படுத்தப்படும் மொழிகளில் தமிழ் தன்னிகரில்லா இடத்தைப் பெற்றுள்ளது என்றே கூறவேண்டும்.

தமிழ்ச் சான்றோர், தமிழ் ஆர்வலர்கள், கணினிப் பொறியாளர்களின் முயற்சியால் ஆங்கிலம் உள்ளிட்ட அன்னிய மொழிகள் பலவற்றுக்கும் இணையாகத் தமிழ் மொழியும் கணினிப் பயன்பாட்டில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது தமிழ் வளர்ச்சியை அதிகரிக்கவில்லை என வாதிட்டாலும், அழிவிலிருந்து மீட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இணையதளத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையிலான தொலைத்தொடர்புகளிலும் தமிழ் இல்லாதத் துறை இல்லை என்றே கூறலாம். இணையதளத்தில் கூகுள், முகநூல் (ஃபேஸ்புக்), ஜி-மெயில், கூகுள் பிளஸ், வரைபடம் என அனைத்திலும் உலகளாவிய வகையில் தமிழ் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதற்கேற்ற வகையில், மென்பொருள்களைக் கண்டறிந்து உலக நாடுகள் அனைத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அதன் மூலம்தான் அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்வதுடன் தொடர்புகளையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

அதற்கேற்ற வகையில், தமிழ் மொழியில்லாமல் வரும் புதிய செல்லிடப்பேசிகளில்கூட அதற்கான மென்பொருளைப் பதிவிறக்கம் செய்து தமிழ் மொழியை தாராளமாகப் பயன்படுத்த வழிவகையும் செய்யப்பட்டுள்ளது. மேலும், சில செல்லிடப்பேசி நிறுவனங்கள் தமிழ் மொழியையும் இணைத்தே புதிய தயாரிப்புகளை வெளியிட்டுள்ளன.

இருந்தும் அரசுத் துறைகள் சிலவற்றில் தமிழ் மொழிப் பயன்பாடு மேம்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது. இதனால், தமிழ் மொழிப் பயன்பாட்டை அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் கட்டாயமாக்க வேண்டும் என ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குறிப்பாக, வங்கிகள், எரிவாயு நிறுவனங்கள் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் பலவற்றிலும் தமிழ்ப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் வேண்டுகோள்.

கல்வியறிவு பெற்றவர்கள் என்றில்லாமல், அனைவரிடத்திலும் செல்லிடப்பேசி பயன்பாடு அதிகரித்துள்ளது. அதற்கேற்ற வகையில் அதில் தமிழ் மொழியின் பயன்பாட்டையும் அதிகரிக்க வேண்டும். தற்போது வங்கிச் செயல்பாடுகள் அனைத்தும் செல்லிடப்பேசி மூலம் குறுந்தகவலாக அனுப்பப்பட்டு வருகிறது.

வங்கியில் பணம் எடுத்தாலும், செலுத்தினாலும், அது குறித்த விவரங்கள் அனைத்தும் ஆங்கில மொழியில்தான் இடம்பெறுகின்றன. ஆனால், செல்லிடப்பேசி வைத்துள்ள அனைவரும் இதைப் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை. எனவே, இவற்றை தமிழில் அறியும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதேபோல, எரிவாயு உருளைப் பதிவு செய்தல், பெறுதல் உள்ளிட்ட தொடர்புடைய பல்வேறு விவரங்களும் ஆங்கிலத்தில்தான் இடம்பெறுகின்றன. தற்போது கூடுதலாக அதற்கான மானியம் பெறுவது தொடர்பான தகவல்களும் செல்லிடப்பேசி மூலம் குறுந்தகவல்களாக அனுப்பப்பட்டு வருகின்றன.

இவை தமிழில் இருந்தால் ஊரகப் பகுதியில் வசிக்கும் பெண்கள், குறைவான கல்வித் தகுதியை உடைய குடும்பத் தலைவர்கள், குடும்பத்தில் உள்ள மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் குறுந்தகவலில் வரும் விவரங்களை அறிய முடியும்.

"இது பரிசீலிக்கக்கூடிய விஷயம்தான், ஆனால், பொதுவாகவே ஹிந்தியைப் பயன்பாட்டு மொழியாகப் பயன்படுத்தாத பல்வேறு மாநிலங்களில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் ஆங்கில மொழிதான் தொடர்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே, அதன் வழியாகவே ஆங்கிலம் மூலம் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பரிந்துரையோ அல்லது வேண்டுகோள்களோ அதிகரிக்கும்பட்சத்தில் மாநில மொழிகளிலும் குறுந்தகவல்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்படும்' என்று இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.

பொது மக்களின் நலன் கருதி இதை மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து, இவற்றிலும் ஹிந்தியைத் திணித்து பிரச்னையை பூதாகரமாக்காமல் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழ் மொழியிலும் குறுந்தகவல்களை அனுப்ப ஏற்பாடு செய்வது லட்சோப லட்ச பொதுமக்களுக்கு பயன் தரும் விஷயமாகும்.

அதேபோல, வங்கி நடைமுறைகள் குறித்த விவரங்களையும் தமிழில் அறிவிப்பது அனைத்துத் தரப்பினரும் எளிதில் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

மேலும் வருமான வரி, மின் கட்டணம், வங்கிக் கடன் செலுத்துதல், ரயில், பேருந்து, விமான டிக்கெட்டுகள் முன்பதிவு - இருக்கை விவரங்கள் ஆகிய அனைத்துத் தகவல்களும் செல்லிடப்பேசியில் ஆங்கில மொழியில்தான் வருகின்றன. அவற்றையும் தமிழில் அளிக்கும்போது பொது மக்கள் புரிந்துகொள்ள ஏதுவாகும்.

தமிழ் செம்மொழி ஆக்கப்பட்டுள்ளதில் கிடைத்த மகிழ்ச்சியைவிட இதுபோன்று அனைத்துத் தொடர்புகளிலும் தமிழைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் மகிழ்ச்சி தமிழை மேலும் செம்மைப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com