Enable Javscript for better performance
காந்தி சகாப்த உதயம்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  காந்தி சகாப்த உதயம்!

  By லா.சு. ரங்கராஜன்  |   Published On : 09th January 2015 01:34 AM  |   Last Updated : 09th January 2015 01:34 AM  |  அ+அ அ-  |  

  இருபத்து மூன்று வயதில் ஒரு முஸ்லிம் நிறுவனத்தில் சட்ட உதவியாளராகப் பணியேற்று 1893 மே 23 அன்று தென்னாப்பிரிக்கா சென்று, தென்னாப்பிரிக்க இந்தியர் உரிமைகளுக்காகப் போராட்டங்கள் நடத்திய "புனிதர்' பாரிஸ்டர் காந்தி 1914 வரை கோட்டும் சூட்டும் டையுமாக நவநாகரிக உடையில் வளைய வந்தார்.

  தமது மனைவி கஸ்தூரிபாவுடன் தமது 46-ஆம் வயதில் 1915 ஜனவரி 9 அன்று (சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்) பம்பாய் துறைமுகத்தில் இறங்கியபோது உடையில் அடியோடு உருமாறியிருந்தார். தழையத் தழையக் கச்சமிட்டுக் கட்டிய மில் வேட்டி, தொள தொள ஜிப்பா, அங்கவஸ்திரம், தலையில் பெரிய முண்டாசு சகிதம் ஒரு கத்தியவாரி விவசாயி உடையில் காட்சியளித்தார்.

  அப்பல்லோ பந்தர் துறைமுகத்தில் இறங்கிய காந்தி - கஸ்தூரிபா தம்பதி வெளியே வந்தபோது ஒரு கோலாகல வரவேற்பளிக்க, மிதவாத அரசியல் தலைவர் கோபாலகிருஷ்ண கோகலே ஏற்பாடு செய்திருந்தார். மேல் விரிப்பு திறந்த மோட்டார் காரில் காந்தியையும் அவரது மனைவியையும் அமரச் செய்து ஊர்வலமாக இட்டுச் சென்றார்.

  இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மூன்றாம் நாள், 1915 ஜனவரி 12 அன்று பம்பாய் பெட்டார் சாலையில் மவுண்ட் பெடிட் வளாகத்தில் காந்திஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

  பம்பாயிலிருந்து, காந்திஜி புறப்பட்டு ஜனவரி 15 அன்று ராஜ்கோட்டுக்கும் போர்பந்தருக்கும் சென்று அங்குள்ள தமது உறவினர்களை சந்தித்தார். ராஜ்கோட்டில் தாம் இளமையில் பயின்ற ஆல்ஃபிரட் உயர்நிலைப் பள்ளிக்கு ஜனவரி 22 அன்று தமது மனைவியுடன் விஜயம் செய்தார். அங்குள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுடன் சேர்ந்து ஒரு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.'

  காந்திஜியும் கஸ்தூரிபாவும் 1915 பிப்ரவரி 17 அன்று சாந்திநிகேதன் சென்று அங்கு ஒரு சில நாள்கள் தங்கி, ரவீந்திரநாத் தாகூரை சந்திக்கக் காத்திருந்தனர். அதற்கு சில நாள்களுக்கு முன்னர்தான் தாகூர் எதிர்பாராத விதமாக கல்கத்தாவை விட்டுப் புறப்பட்டுச் சென்றிருந்தார்.

  அச்சமயம் காந்திஜியின் அறிவுரையாளர் கோபாலகிருஷ்ண கோகலே புணேவில் திடுமென இறந்துவிட்டார் என்று பிப்ரவரி 19-ஆம் தேதி தந்திச் செய்தி வந்தது. தமது அரசியல் ஆசான் கோகலேயின் ஈமச்சடங்கில் கலந்து கொள்வதற்காக காந்திஜி அவசர அவசரமாக புணே புறப்பட்டுச் சென்றார்.

  கோகலேயின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் புணேவில் கிஸ்லோஸ்கர் அரங்கில் மார்ச் 3 அன்று (1915) பம்பாய் கவர்னர் வில்லிங்டன் பிரபு தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கு இரங்கல் தீர்மானத்தை காந்திஜி முன் மொழிந்தார்.

  புணேயிலிருந்து காந்திஜி மார்ச் 5 (1915) அன்று சாந்திநிகேதன் சென்றார். அங்கு அவரை அன்புடன் வரவேற்க தாகூர் காத்திருந்தார். அதுவே அவ்விருவரின் முதல் சந்திப்பு. பின்னர், அதுவே ஒருவருக்கொருவர் மரியாதை கலந்த பாசத்துடன் வாழ்நாள் முழுவதும் நீடித்த நட்புறவாக மலர்ந்தது.

  1915 ஏப்ரல் முதல் வாரத்தில் காந்திஜி தன் மனைவி கஸ்தூர்பாவுடன் மதராஸ் வந்தார். அவரை வரவேற்க சென்ட்ரல் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழுமியிருந்த மக்களுக்கு முதலில் ஏமாற்றம். ரயில் வந்து நின்றதும் அவர்கள் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் அவரைத் தேடினர். எங்கும் காணோம். அவர்கள் வரவில்லை என்றெண்ணி சோர்வுற்றனர்.

  அச்சமயம் அங்கு வந்த ரயில்வே கார்டு, "மிஸ்டர் மற்றும் மிஸஸ் காந்தி இந்த ரயிலில்தானே வந்தார்கள். கடைசி கோச்சுகளில் தேடிப்பாருங்கள்' என்று கூறவே, ஜனங்கள் கடைசிப் பெட்டிகளை நோக்கி ஓடோடிச் சென்றனர். அங்கு ஒரு மூன்றாம் வகுப்புப் பெட்டியில் மிஸ்டர் காந்தியும் மிஸஸ் காந்தியும் உட்கார்ந்திருப்பதைக் கண்டு திகைத்தனர்.

  "மிஸ்டர் காந்தி நீடூழி வாழ்க!' "மிஸஸ் காந்தி நீடூழி வாழ்க!', "வந்தே மாதரம்' என்ற கோஷங்கள் ஒலித்தன. அவர்களது வரவேற்பை ஏற்கும் வகையில் மிஸ்டர் காந்தி தலை வணங்கினார்.

  காந்திஜி அதுகாறும் பிரிட்டிஷ் அரசு மீது நல்லெண்ணம் கொண்டவராகவே இருந்தார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிரஜைகளோடு இந்தியர்கள் சம உரிமை பாராட்ட முடியும் என்பதே அன்னாரது எண்ணம்.

  ஆகவேதான் மதராஸ் வழக்குரைஞர் குழாம், சட்டத் தொழில் சார்ந்தோரின் வருடாந்திர சிறப்பு விருந்தில் கலந்து கொள்ள அவரை அழைத்தபோது, அதை அவர் உடனடியாக ஏற்றார். மதராஸ் பீபிள்ஸ் பார்க்கை ஒட்டிய விசாலமான திடலில் திறந்த வெளி விருந்து ஏப்ரல் 24 (1915) அன்று அட்வொகேட் ஜெனரல் தலைமையில் நடைபெற்றது.

  அக்கூட்டத்தில் காந்திஜி பேசும்போது, எனது ராஜ விசுவாசம் சுயநலம் சார்ந்தது! சாத்விக எதிர்ப்பாளராகிய நான் ஒன்று கண்டு கொண்டேன். அதாவது, சத்தியாக்கிரக இயக்கங்களுக்குப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அனுமதிக்கும் தாராளமான சுதந்திரம் வெறேந்த நாட்டிலும் கிடையாது என்று தெரிந்துகொண்டேன். பிரிட்டிஷ் அரசாட்சியின் ஒருசில லட்சியங்களின் மீது நான் மையல் கொண்டுள்ளேன்.

  தேசியத் தலைவராக உருவாகக் கூடிய காந்தி இவ்வாறு அப்பட்டமாக பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாகப் பேசியது குறித்து மதராஸ் மாகாண செய்தித் தாள்களில் கண்டனக் கடிதங்கள் வெளியாயின.

  1915 ஜூன் 16 அன்று பிரிட்டிஷ் பேரரசு காந்திஜிக்கு "கெய்ஸர்-ஐ-ஹிந்த்' தங்கப் பதக்கம் வழங்கி கெüரவித்தது.

  இந்திய அரசியல் அரங்கில் 1919-ஆம் ஆண்டு அடுத்தடுத்துச் சூறாவளியாய் எழுந்த நாடு தழுவிய தேசிய மல்லாட்டங்கள் அதுகாறும் பிரிட்டிஷ் அபிமானியாக இருந்துவந்த காந்திஜியை பிரிட்டிஷ் ஆட்சியின் தீவிர எதிர்ப்பாளராக உருமாற்றின. "இந்த சாத்தான் அரசை திருத்துவோம் அல்லது தீர்த்துக் கட்டுவோம்' (ரங் ஹழ்ங் ஹப்ப் ம்ங்ய்க் ர்ழ் ங்ய்க் ற்ட்ண்ள் ள்ஹற்ஹய்ண்ஸ்ரீ எர்ஸ்ங்ழ்ய்ம்ங்ய்ற்) என்ற தீர்மானத்துடன் காந்திஜி தீவிர அரசியலில் அடிவைத்தார்.

  1919 மார்ச் மாதம் அமலுக்கு வந்த ரெüலட் சட்டமும், அதையடுத்து நிகழ்ந்த ஜாலியன்வாலாபாக் படுகொலையும் அதனைத் தொடர்ந்து பஞ்சாபில் ராணுவ சட்டத்தின் கீழ் தலைவிரித்தாடிய அரசின் அதிக்கிரமங்களும் இந்த எதிர்பாராத திடீர்த் திருப்பத்திற்கு காரணங்களாக அமைந்தன; இந்தியரின் தன்மானத்திற்கு பெரும் சவாலாக ஆயின.

  அதுகாறும் ஓரளவு அரசியல் உரிமைகளைப் படிப்படியாக வேண்டிப் பெறுவதன் பொருட்டு சட்ட திட்டங்களுக்கு உள்பட்ட மிதவாத எழுச்சியாக இருந்துவந்த நிலைமை மறைந்து, அன்னிய ஆட்சிக்கு எதிராக உருபெற்ற பெரும் போராட்டமாக மாற்றம் கண்டது.

  இந்த கால கட்டத்திலேதான் இந்திய முஸ்லீம்களும் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். அதற்கான எழுச்சியே கிலாஃபத் இயக்கம் எனப்படுவது. அவ்வியக்கத்திற்கு இந்துக்களின் ஆதரவைப் பெற முஸ்லிம்கள் விழைந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, 1919 நவம்பர் 3 அன்று டில்லியில் கூடிய அகில இந்திய கிலாஃபத் மாநாட்டில் கலந்து கொண்டு தலைமை வகிக்க காந்திஜி இசைந்தார்.

  இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு வழிவகுக்க அதுவே கிடைப்பதற்கரிய வாய்ப்பு என்று நம்பிய காந்திஜி, அந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கி இட்டுச் செல்லவும் ஒப்புக்கொண்டார். ஜாலியன்வாலாபாக் படுகொலையை அடுத்து அமலுக்கு வந்த பஞ்சாப் ராணுவச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற அட்டூழியப் பிரச்னை, கிலாஃபத் அநீதி ஆகிய இரண்டையும் சாமர்த்தியமாக இணைத்து, அன்னிய ஆட்சிக்கு எதிராக ஒன்றுபட்ட ஒத்துழையாமை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.

  அரசு அமைப்புகள், சட்டப்பேரவை, நீதிமன்றங்கள், அரசுக் கல்லூரிகள் ஆகியவற்றை ஒருங்கே பகிஷ்கரிப்பதே அந்த ஒத்துழையாமை இயக்கத்தின் செயல் திட்டம்.

  இவ்வாறு அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்க வைத்தால் ஒரே ஆண்டில் சுயராஜ்யம் கிட்டும் என்று காந்திஜி ஆங்காங்கே கூட்டம் போட்டு மக்களை உற்சாகப்படுத்தினார். அவரும், கிலாஃபத் தலைவர் முகமதலியும் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றினர்.

  நாடு தழுவிய ஒத்துழையாமை இயக்கம் 1920 ஆகஸ்ட் முதல் தேதி துவக்கம் பெறும் என்று அறிவிக்கப்பட்டது. நிகரற்ற தீவிர தேசியத் தலைவராகத் திகழ்ந்து வந்த பாலகங்காதர திலகருக்கு அந்த இயக்கத்தில் நாட்டம் இல்லை. இந்திய சுதந்திர லட்சியத்திற்கும், எங்கோ துருக்கி சுல்தானின் அதிகாரப் பறிப்புக்கும் என்ன சம்பந்தம் என ஒதுங்கிவிட்டார். தீவிர நோய்வாய்ப்பட்டுக் கிடந்த திலகர் 1920 ஜூலை 31 நள்ளிரவில் காலமானார்.

  இந்த திடீர்த் திருப்பத்தில் காலியாகக் கிடந்த தேசிய தலைமைப் பீடத்தில் காந்திஜி அமர வாய்ப்புப் பெற்றார். 1920 செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸின் சிறப்பு மாநாட்டில் காந்திஜியின் அகிம்சாபூர்வமான ஒத்துழையாமை இயக்கம் பலத்த சர்ச்சைகளுக்கிடையே அரைமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

  1920 ஆகஸ்ட் 31 அன்று காந்திஜி காதி பிரதிக்ஞை எடுத்துக் கொண்டு அதனை இவ்வாறு எழுத்தில் பதித்தார்: "இன்றைய தினத்திலிருந்து நான் கையால் நூற்ற கதர் ஆடையையும், கதர்க் குல்லாவையும் மட்டுமே அணிவேன்'.

  1921 செப்டம்பர் 22 அன்று காலையில் மதுரையில் நெசவாளர் கூட்டத்தில் உரையாற்ற வந்தபோது காந்திஜி, வெற்று மார்புடனும் இடுப்பில் முழங்காலுக்குமேல் வரிந்து கட்டிய அரை வேட்டியுடனும் மேடையில் தோன்றினார்.

  "கந்தல் அரை வேட்டி அல்லது கோவனத்துடன் உழலும் கோடிக்கணக்கான இந்திய ஏழை மக்களுடன் ஒற்றுமை காண்பதற்காகவே நான் அரை வேட்டிக்கு மாறினேன்' என்று பல ஆண்டுகளுக்குப்பின் அந்நிகழ்வை நினைவுகூர்ந்து "யங் இந்தியா'வில் விளக்கம் அளித்துள்ளார்.

  ஆம்! மதுரையில் 1921 செப்டம்பர் 22 அன்று பூண்ட ஆண்டிக் கோலத்தில் காந்திஜி தமது தோற்றத்திலும் பூரண மகாத்மாவாகத் தலையெடுத்தார்.

  மக்களின் உள்ளங்கவர் அறச்சீல அரசியல் தலைவராகத் திகழத் தொடங்கிய மகாத்மா காந்தி, படித்தவர், படிக்காதவர், எளியோர், பெரியோர் அனைத்து தரப்பு மக்களையும் ஒரு சேர அரவணைத்து, இந்திய மக்களை சுதந்திரப் பாதையில் இட்டுச் செல்லலானார்.

  காந்தி சகாப்தம் உதயமானது.

   

  கட்டுரையாளர்: காந்திய அறிஞர்.


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp