தரையில் வீழ்ந்த நட்சத்திரம்!

ஒரு மாஞ்சோலையின் வழியாகச் சென்று கொண்டிருந்தது அந்தச் சாலை. கறுப்புக் குதிரையின் மீது கம்பீரமாக அமர்ந்து சென்று கொண்டிருந்தார் அரசர்.

ஒரு மாஞ்சோலையின் வழியாகச் சென்று கொண்டிருந்தது அந்தச் சாலை. கறுப்புக் குதிரையின் மீது கம்பீரமாக அமர்ந்து சென்று கொண்டிருந்தார் அரசர். அந்தப்புரத்திற்குச் செல்வதாக இருந்தால் வேகமாகச் செல்லும்படி குதிரையை விரட்டியிருப்பார்.
 ஆனால், இப்போது அவரது மனம் அரசியலை நோக்கிக் குவிந்திருந்தது. ஒன்றும் அவசரமில்லை என்பதால் குதிரையும் ஒய்யாரமாக நடைபோட்டுக் கொண்டிருந்தது. பரிவாரங்கள் பத்து அடி தள்ளி தொடர்ந்து கொண்டிருந்தன.
 திடீரென அவர் தலையில் கல் ஒன்று வந்து விழுந்தது. திடுக்கிட்டார் அரசர். எறிந்தது யார் எனச் சுற்றும் முற்றும் பார்த்தார். கண்ணில் யாரும் அகப்படவில்லை. குதிரையை நிறுத்தினார். அரசர் நின்றதும் பரிவாரங்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தன. கடுங் கோபத்தில் இருந்த அரசர், கல்லெறிந்தவனைக் கண்டுபிடியுங்கள் எனக் கர்ஜித்தார். அவர் கண்ணில் கனல் பறந்தது.
 எட்டுத் திசையிலும் சிப்பாய்கள் ஓடினார்கள். ஒரு மரத்தின் பின் ஒளிந்திருந்த சிறுவனை கையைக் கட்டி அரசர் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
 "ஏன் கல் எறிந்தாய்?' என்று சீறினார் அரசர்.
 "அரசே! உங்களைக் குறி வைத்து எறியப்பட்டதல்ல அந்தக் கல். அதோ அங்கு தொங்குகிறது பாருங்கள், மாங்கனிகள். எட்டாத உயரத்தில் இருக்கும் அவற்றை நோக்கி எறிந்தேன். அது குறி தவறி உங்கள் தலையில் விழுந்து விட்டது. மன்னியுங்கள். என்ன தண்டனை வேண்டுமானாலும் அளியுங்கள் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அதற்கு முன் உண்பதற்கு ஏதாவது கொடுங்கள், பசிக்கிறது' என்றான் சிறுவன்.
 "அவனை விட்டு விடுங்கள்,' என்று சொன்ன அரசன், யோசனையில் ஆழ்ந்தான். ஒரு சாதாரண மரம் கூட கல்லால் அடிப்பவனுக்குக் கனி கொடுக்கிறது. மனிதர்களாகிய நாம் நம்மை சொல்லால் இடிப்பவர்களுக்கு என்ன கொடுக்கிறோம்?
 அசோகச் சக்கரவர்த்தியையோ, மராட்டிய மன்னர் மாவீரன் சிவாஜியையோ குறித்து - யார் எனச் சரியாக நினைவில்லை - என் பள்ளி ஆசிரியர் சொன்ன கதை. பாத்திரம் நினைவில்லை. ஆனால் பாத்திரத்தில் இருந்த பண்டத்தின் சுவை, அதுதான் கதை, நினைவில் நின்று விட்டது. ஆசிரியர் இந்தக் கதையைச் சொன்னது சகிப்புத்தன்மையை உணர்த்த. அந்தச் சொல்லைப் பொறையுடைமை எனத் திருவள்ளுவர் எழுதுகிறார்.
 இது போன்ற கதைகளும், பொறையுடைமையைப் போதிக்கும் குறளும் பூத்த பூமி இந்தியா.
 ஆனால், இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது என்று சொல்வது இப்போது ஒரு ஃபாஷன் ஸ்டேட்மெண்ட்.
 நீங்கள் எவ்வளவு நவீனமாக அல்லது முற்போக்காக இருக்கிறீர்கள் என்பதைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் அடையாளம். நவீனமானவராக இருந்தால், நீங்கள் நாடு உங்களுக்கு அளித்த விருதுகளை வீசியெறிய வேண்டும். நீங்கள் அதி நவீனமானவராக இருந்தால், "ஐய்யய்யோ, தாங்க முடியவில்லை, நாட்டை விட்டே நான் போகிறேன் சாமி,' என்று அறிவிக்க வேண்டும்.
 முன்பு, அவரது சொந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்த போது கமல்ஹாசன் தமிழ்நாட்டை விட்டுப் போய்விடுகிறேன் என்று அறிவிப்புச் செய்தார். ஆனால் பட வெளியீடு பாதிக்கப்பட்டபோது, "மதவெறி கொண்ட மாநிலமாக' இருந்த தமிழ்நாடு, அவரது வியாபாரத்திற்கான முட்டுக்கட்டைகள் நீங்கியதும், "பகுத்தறிவுப் பண்ணையாகி' விட்டது. ஆழ்வார்பேட்டையே அவரது வாழ்விடமாயிற்று.
 இப்போது, ஆமிர் கானின் முறை. "நாட்டில் பெருகி வரும் சகிப்பின்மை, பாதுகாப்பு இல்லாத உணர்வை அளிக்கிறது. குழந்தைகள் நலன் கருதி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனக் கேட்கிறார் என் மனைவி' என்று தில்லியில் பத்திரிகையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஆமீர் கான் பேசியிருக்கிறார்.
 பாதுகாப்பு இல்லாத இடத்தில் எவர்தான் இருக்க முடியும்? அதுவும் குழந்தைகளோடு புறப்பட்டுவிட வேண்டியதுதான்!
 ஆனால், பாதுகாப்பான இடம் எது? இருபது லட்சம் பேர் இறந்து போனார்கள், 70 ஆயிரம் பேர் விதவைகளானார்கள், பத்து லட்சம் குழந்தைகள் அகதி முகாம்களில் வளர்கின்றன, 35 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியிருக்கிறார்கள் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட அறிக்கை (அக்டோபர் 15, 2015 பக்கம் 54) குறிப்பிடுகிறதே அந்த ஆஃப்கானிஸ்தானா?
 அல்லது ஒருவேளை, 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், 130 குழந்தைகள் கொல்லப்பட்டார்களே அந்தப் பாகிஸ்தான், குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இடமாக இருக்குமோ?
 பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காக்க, எஃப் 16 போர் விமானங்களை வாங்க, அமெரிக்காவுடன் இந்த அக்டோபர் 22-ஆம் தேதி ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிற பாகிஸ்தான் அமைதிப் பூங்காவாகத்தான் இருக்க வேண்டும்!
 பக்கத்து நாடான பாகிஸ்தான் வேண்டாம், சற்றுத் தள்ளிப் போகலாம் என நினைப்பீர்களோ..? அப்படியானால், "எகிப்து அதிக அளவில் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள இடம் (High threat of terrorism). ஆபத்தான பகுதி. பயணம் செய்வதைத் தவிர்க்கவும்' என இங்கிலாந்து அரசின் அயல் மற்றும் காமன்வெல்த் அலுவலகம் இந்த நவம்பர் 17-ஆம் நாள் எச்சரிக்கைச் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறதே...
 சிரியா. ஒரு கோடியே 70 லட்சம் குடிமக்களைக் கொண்ட அந்த நாட்டிலிருந்து இதுவரை 40 லட்சம் பேர் வெளியேறியிருக்கிறார்கள். 80 லட்சம் பேர் சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கிறார்கள்.
 கண்டம் விட்டுக் கண்டம் தாண்டலாமா? ஆனால் நைஜீரியாவில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தூங்கிக் கொண்டிருந்த, 11 முதல் 18 வயது வரை உள்ள 59 குழந்தைகளைக் கொன்று, அவர்கள் பள்ளியின் 24 கட்டடங்களையும் தீக்கிரையாக்கி, அக்கம் பக்கத்து வீடுகளில் குண்டு வீசிப்போன போக்கோ ஹராம் இயக்கத்தை நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது. அந்த இடம் உங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எந்தக் குழந்தைக்கும் பத்திரமானதல்ல.
 நெருக்கடி நிலையை அறிவித்திருக்கும் பிரான்úஸா, உணவு உண்ண வந்தவர்கள் பிணக்கைதிகளாகச் சிறை வைக்கப்பட்ட ஆஸ்திரேலியாகூட இன்றையத் தேதியில் பாதுகாப்பு இல்லாதவைதான்.
 இலங்கை உள்நாட்டுப் போரில் இறந்து போனவர்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கணக்குப்படி 70 ஆயிரம் பேர். காணாமல் போனவர்கள் உலக வங்கியின் கணக்குபடி ஒரு லட்சம் பேர்.
 பாவம்! ஆமிர் கான். பாதுகாப்பான இடம் தேடி நீங்கள் எங்குதான் போவீர்கள்?
 ஆமிர் கானையும், அவரது குடும்பத்தையும் வாழ வைத்த இந்தியா, அவருக்குப் புகழும் பணமும் தேடிக் கொடுத்த இந்தியா, அமைதிப் பூங்கா இல்லைதான். அறிக்கைப் போர்களும் அக்கப் போர்களும் நிறைந்த தேசம்தான். அங்கொன்றும், இங்கொன்றுமாக அவ்வப்போது புகைச்சலும் பூசலும் எழுந்து அடங்குகிற தேசம்தான். ஆனால், இங்கு மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ உள்நாட்டு யுத்தம் நடந்து, ரத்தம் பெருகி, அன்றாட வாழ்க்கை ஆட்டம் கண்டு விடவில்லை.
 குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு கூடாரத்தைக் காலி செய்துவிட்டு ஓடுகிற அளவிற்கு நிலைமை உருவாகிவிடவில்லை. ஆயிரம் ஆதங்கங்கள் இங்கு உண்டு. ஆனால், அஞ்சி ஓடுகிற அளவிற்கு அவை பிரமாண்டமானவை அல்ல. குறைகள் கொண்ட தேசம்தான், ஆம் கொசுக்கடிக்கு நடுவில்தான் வாழ்கிறோம். ஆனால், ஆட்கொல்லும் சிங்கங்களுக்கு நடுவில் அல்ல.
 கரப்பான் பூச்சிகளைக் கண்டு கதிகலங்குகிற அதிவீர ஆமிர் கான்கள், அவர்கள் பாதுகாப்பானதாகக் கருதும் எங்கு வேண்டுமானாலும் போகட்டும். அது அவர் உரிமை. ஆனால், போகிற போக்கில்.. அவருக்கு இத்தனை நாள் வாழ்வளித்த இந்தியர்கள் மீது சேற்றை வாரிப் பூசிவிட்டுப் புறப்பட வேண்டாம்.
 எவர் வீசிய சாபமோ? இல்லை.. எங்கள் தவறுகள் தானோ? இன்றைக்கு சின்னச் சின்னதாக சில பிணிகள் எங்கள் தாய்நாட்டைத் தொட்டுப் பார்க்கின்றன. என் அம்மா நோய்வாய்ப்பட்டால், அதற்கு அவளே காரணமாக இருந்தால் கூட, அவளைக் காப்பாற்றக் கடைசிவரை போராடுவேன். காரணங்கள் ஏதோ சொல்லி, கைவிட்டு ஓடிவிட மாட்டேன்.
 இந்த அசட்டுணர்வு ஆமிர் கான்களுக்குப் பொருந்துமா? அவர்கள் அறிவுஜீவிகள் அல்லவா?
 
 கட்டுரையாளர்:
 கெளரவ ஆசிரியர், புதிய தலைமுறை.
 இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது என்று சொல்வது இப்போது ஒரு ஃபாஷன் ஸ்டேட்மெண்ட்.
 நீங்கள் எவ்வளவு நவீனமாக இருக்கிறீர்கள் என்பதைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் அடையாளம்.
 நவீனமானவராக இருந்தால், நீங்கள் நாடு உங்களுக்கு அளித்த விருதுகளை வீசியெறிய வேண்டும். நீங்கள் அதி நவீனமானவராக இருந்தால், "நாட்டை விட்டே நான் போகிறேன் சாமி,' என்று அறிவிக்க வேண்டும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com