நாம் ஏன் கடைப்பிடிப்பதில்லை?

இலத்தீன் மொழியில் "சட்டம் பெருகின் குற்றம் பெருகும்' என்று ஒரு சொலவடை உண்டு. இந்தியச் சூழலில் அதிலும் குறிப்பாகத் தமிழகச் சூழலில் இம்மொழி பெரிதும் பொருந்துமோ என்று கருதவேண்டி உள்ளது.

இலத்தீன் மொழியில் "சட்டம் பெருகின் குற்றம் பெருகும்' என்று ஒரு சொலவடை உண்டு. இந்தியச் சூழலில் அதிலும் குறிப்பாகத் தமிழகச் சூழலில் இம்மொழி பெரிதும் பொருந்துமோ என்று கருதவேண்டி உள்ளது.

தமிழில் பிற இந்திய மொழிகளைவிட அற இலக்கியங்களும் பக்தி இலக்கியங்களும் மிகக் கூடுதல் என்று சொல்வார்கள். அதனைப் பெருமையாகவும் குறிப்பார்கள். நீதி இலக்கியம் கூடுதலாக இருப்பது பெருமையா என்பது ஆராயத்தக்கது. அனுபவத்தை வைத்துப் பார்க்கும்பொழுது பெருமை இல்லை என்றே கருதவேண்டி உள்ளது.

காலம்தோறும் நீதி இலக்கியங்களும் அதன் ஒரு வடிவமான பழமொழிகளும் தமிழில் சொல்லப்பட்டு வருகின்றன. சொல்லப்பட்டு வருவதாலேயே போற்றப்பட்டு வருகின்றன என்று கொள்ள இயலாது. சொல்லாமலேயே போற்றப்படுதல் உண்டு.

சான்றாக, அகிம்சை, சத்தியம் என்ற இரண்டும் அண்ணல் காந்தி வரை மிகப் பெரிதாக எடுத்துப் பேசப்படுகின்றன. எதார்த்தத்தில் இரண்டும் நடைமுறையில் இல்லை என்பதுதான் உண்மை.

உயிர் கொல்லுதல் கூடாது என்பதை மையமாக வைத்தே கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு அளவில் ஜைன மதம் தோன்றி இந்தியா முழுதும் பரவியது. மகாவீர வர்த்தமானர் நடந்தே பயணம் செய்தார். முழுமையாக இல்லாவிட்டாலும் ஏறத்தாழ இவர் கருத்தைத் தாங்கிய கெளதம புத்தரும் இந்தியா முழுதும் இக்கருத்தைப் பரப்பினார். புத்தருடைய கருத்துகள் இந்திய எல்லையைத் தாண்டி இலங்கை முதலான நாடுகளுக்கும் பரவியது. சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் விரிவடைந்தது.

ஆனால், உலகில் அனைத்து உலகப் போர்களுக்கும் மூல நாடாக ஜப்பான் விளங்கியது. இன்றும் உலக அமைதிக்கு அறைகூவல் விடுக்கின்ற நாடாக சீனா விளங்குகிறது.

கருத்துகள் கேட்கப்பட்டு பரவலாகப் பேசப்பட்டு சித்தாந்தமாகி மத உருவம் பெற்று வளர்வதற்கும் வாழ்வதற்கும் இவை சான்றாக இருக்கின்றன. இவை மக்களால் பின்பற்றப்படுகின்றன என்று வாதிட முடியாது.

மக்களால் பின்பற்றப்படுவதில்லை என்ற சமூகத்தில் பிற்காலத்தில் அரசு முதலான அமைப்புகள், ராணுவம், காவலர் முதலான துணைப் படைகள் வந்தபோதும் இக்கருத்துகள் மக்களிடையே முழுமையாகப் போற்றப்படுவதில்லை என்பதே உண்மை.

அதனால் தொடர்ந்து மக்களைக் கண்காணிக்க நாட்டாண்மை அமைப்பும் தண்டனை வழங்க நீதித்துறை அமைப்பும் நடைமுறைப்படுத்த காவல்துறையும் வேண்டியிருக்கின்றன.

இந்த அளவு தேவை எல்லா நாடுகளிலும் இருப்பதில்லை. மிகுதியாக நீதி இலக்கியங்கள் படைக்கப்பட்டு, பேசப்பட்டு வந்த தமிழ்நாடு, இந்தியா போன்ற நாடுகளிலேயே நீதி உரைகளைப் பற்றிய உரத்த கூப்பாடு பல்வேறு முறைகளில் சொல்லப்படுகிறது.

இது தொடர்ந்து சொல்லப்படுவதாகவே இருக்கும்வரை எத்துணை சிறந்த கருத்துகளாக இருப்பினும் அதனால் பயனில்லை. சான்று: மதுவிலக்கு. நமக்குத் தெரிய திருவள்ளுவர் காலம் தொடங்கி, மதுவை எதிர்த்துப் பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் பின்பற்றப்படுவதில்லை.

ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில் மதுவிலக்கு சட்டப்படி நடைமுறைப்படுத்தப்பட்டது. காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு வந்தது. அண்ணல் காந்தியை நாட்டின் தந்தை என்று போற்றப்பெறும் நாட்டில் அவர்தம் கருத்தே முற்றுமாக இன்றுவரை புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சாலைகளில் போவோரெல்லாம் இடப்பக்கமாகப் போக வேண்டும். எதிரே வருவோரெல்லாம் வலப்பக்கமாக வரவேண்டும் என்ற போக்குவரத்துத் துறையில் பொதுவாக விதி இருந்து வருகிறது. ஆனால், இது கடைப்பிடிக்கப்படுவதில்லை. எதிரும் புதிருமாக வரும் வாகனங்கள் மோதிக் கொள்வதற்கு இந்த விதி பின்பற்றப்படாமை மிகப்பெரிய காரணம்.

வளர்ந்த ஐரோப்பிய நாடுகளில் பாலத்தைக் கடந்து செல்வோர்கூட மாடிப்படிகளில் ஏறி இறங்கி வருவோர்கூட, இடம், வலம் வருவது போவது என்ற முறையைக் கண்ணை மூடிக்கொண்டு அனிச்சைச் செயலாகப் பின்பற்றுகிறார்கள். அதுபோல அவர்கள் பின்பற்றும் இன்னொரு நெறிமுறை எங்கு கூட்டம் சேர்ந்தாலும் வரிசையாகத் தாமாகவே நின்று விடுவது.

நம் நாட்டில் சில இடங்களில் ஒருவழிப் பாதையை மீறுவோரைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்துகிறார்கள். இத்தகு ஒருவழிப் பாதையில் மீறக்கூடாது என்ற மிகச்சிறிய நெறிமுறை கூட நம் மக்களால் பின்பற்றப்படுவதில்லை.

தவறும் அத்தவற்றுக்குரிய தண்டனையும் உடனுக்குடன் நிகழவேண்டும். தள்ளிப்போகுமானால், தவிர்க்கப்படுமானால், அத்தவறுகள் தொடர்ந்து நீடிக்கும்.

சிலப்பதிகாரத்தில் கோவலன் கொலை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ந்த கண்ணகி அரசனைச் சந்தித்து நீதி கேட்கிறாள். "கள்வனைக் கொல்லுதல் கடுங்கோல் அன்று' என்று அரசன் பதிலிறுக்கிறான். இதிலிருந்து அக்காலத்தில் கள்வர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை மரண தண்டனை என்று தெரிகிறது.

இச்சிலப்பதிகாரப் பகுதியிலிருந்து கோவலன் குற்றமிழைத்தவனா என்று விசாரித்திருக்க வேண்டும் என்பதுதானே தவிர, திருடியிருந்தால் மரண தண்டனை பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்துக்கு மறுப்பில்லை. இத்தகு நிலை எந்த நாட்டில் எந்தச் சமுதாயத்தில் விதிவிலக்கின்றி கடைப்பிடிக்கப்படுகிறதோ அந்தச் சமுதாயம்தான் வெற்றி கொள்ளும்.

காசிருந்தால் நீதிமன்றத்தைத் தீர்மானிக்கலாம். நீதியைத் தீர்மானிக்கலாம். அகப்படாமல் விடுதலை பெறலாம். அனைத்துச் சுகங்களையும் குற்றம் செய்த பிறகும் அனுபவிக்கலாம் என்ற நிலை நீடிக்கும் வரை இந்நாட்டில் நீதியை நிலைநாட்டுவது என்பது குதிரைக்கொம்பே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com