சிந்தித்தால் தீரும் சிக்கல்!

மிகப்பெரிய நெருக்கடிகளையெல்லாம் ஊதித்தள்ளிவிடும் ஆற்றல்கொண்ட

மிகப்பெரிய நெருக்கடிகளையெல்லாம் ஊதித்தள்ளிவிடும் ஆற்றல்கொண்ட பலர் மிகமிக எளிய, சின்னச் சிக்கல்களைத் தீர்க்க வழிதெரியாமல் விழிப்பதும் உண்டு. பல நேரங்களில் உடனடித் தேவைகளை உணர்ந்தாலே போதும், வழி திறந்துவிடும்.

கடுமையான கோடைநேரத்து நண்பகலில் ஒருவர் இருசக்கரவண்டியில் கொஞ்சதூரம் சென்றுதிரும்ப வேண்டிய சூழலில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். தலைக்கவசம் கைவசமில்லை தொப்பியும் இல்லை. உச்சிவெயிலில் இருந்து எப்படித் தன்னைக் காப்பது என்பது ஒரு சிக்கல்தான். ஒரு மணித்துளி கடந்தபின் அவருக்குப் பதில் தெரிந்தது. தன் காற்சட்டைப் பையிலிருந்து கைக்குட்டையை எடுத்துத் தலையைச் சுற்றிக் கொண்டு பயணப்பட்டார்.

இதுபோலத் தாற்காலிகத் தீர்வுகள் ஒரு பக்கம். மூக்குக் கண்ணாடியை ஓரிடத்தில் வைத்துவிட்டு அலுவலகம் முழுவதும், வீடு முழுவதும் தேடித்தேடி அலைபவர்களையும் காண முடியும். யாரோ ஒரு தனிநபரின் சிந்தையில் ஒரு பாதை புலனானது. மூக்குக் கண்ணாடியின் இருபுறமும் நீண்டு செவிகளின் மடல்மேல் அமரும் நுனிப்பகுதிகள் இரண்டையும், இடையே போதிய இடைவெளியுடன் கூடிய கயிற்றால் இணைத்தார்.

படிக்கும்போது மூக்குக் கண்ணாடி, மூக்கின்மீதும் காதுமடல்கள் மீதும் அமர்ந்துகொள்ளும். தேவையற்றபோது கழுத்தில் - ஒரு சங்கிலியைப்போலத் - தொங்கவிடப்பெறும். இரவுமட்டும்தான் உரியவரை அது பிரிந்திருக்கும்.

ஏனைய நேரங்களில் தேட வேண்டியப் பணியை மேற்கொள்ள வேண்டிய சூழல் மறைந்தே போகும். இப்படிச் சின்னச் சிக்கல்களுக்குச் சிக்கலற்ற வழிகள் உருவாகும் இடங்கள் மறுபுறம்.

பல்கலைக்கழகப் பணிக்காகத் தென்தமிழகத்திலுள்ள கல்லூரி ஒன்றிற்குப் போக நேர்ந்தது. என்னை வரவழைத்த பேராசிரியர் முதல்வரைப் பார்த்துவிட்டு வரலாம் என்று கூறி என்னை முதல்வர் அறைக்கு அழைத்துப் போனார். அவர் மேசைமீது எழுதுபொருள் பேழைக்கு (Pen Stand)  அருகில் நீளநீளமாக - நாடா நறுக்குகளைப் போல - மெல்லிய அட்டைகள் இருந்தன.

வெளியே வந்ததும் அழைத்துச் சென்ற பேராசிரியரிடம் காரணம் கேட்டேன். படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களின் பக்கங்களை அடையாளம் காண அந்த இடங்களில் வைக்கப்படும் அட்டைகள் அவை. புத்தகப் பக்கங்களின் மூலைகளை மடித்து வைத்தால் முதல்வருக்குக் கோபம் வரும். அதற்காகக் காசுகொடுத்து பக்க இடை அடையாள அட்டைகளை (Book Marker)  வாங்குவதுமில்லை.

கடந்த மாதம் அல்லது கடந்த வாரம் நடந்துமுடிந்துபோன நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களே அவை. தாளைவிடக் கனமாகவும் இருப்பதால் கிழியாது. எதிரிலிருப்பவரிடம் ஒரு புத்தகத்தைக் கொடுக்கும்போது கூடுதலாக இரண்டு மூன்று அட்டைகளையும் உடன்வைத்தே முதல்வர் தருவார் என்றார்.

படித்து நிறுத்திய பக்கங்களை எப்படி அடையாளங்காணுவது என்பது மிகச் சாதாரணமான சிக்கல். புத்தகங்கள் பலவற்றில் மடிப்புக்குள்ளாகி மீண்டும் மடிப்புகள் நிமிர்த்தப் பெறாமலேயே காணப்படும் பக்கங்கள் நிறைய. காலப்போக்கில அவை கிழிந்துபோகும். மடிப்பின் பரப்பு அதிகமாக அமையின் பக்க எண் உட்படச் சொற்கள்கூடக் காணாமற்போகும்.

குப்பைக் கூடைக்குப் போக வேண்டிய அழைப்பிதழ் அட்டைகள் அடையாளப் பொருளாகும் நேரத்தில் புத்தகப் பக்கங்களின் மூலைப்பகுதிகள் மடிப்புக் காயம் பெறாமல் நிம்மதிப் பெருமூச்சு விடுவதை உணரலாம்.அட்டைக் கீற்றுக்கு அலையவும் வேண்டியதில்லை.

ஆண்களைப்போலப் பெண்களும் இப்படிச் சின்னச்சின்ன வழிகளைக் கண்டறிந்துள்ளனர். அன்றாடம் தேதிகாட்டும் நாட்காட்டி (Daily sheet Calender). என் உறவினர் வீட்டில் நாள்தோறும் நாள்காட்டும் சிறுதாள் அன்றன்று கிழிக்கப் பெறுவதில்லை.

மாறாக, அத்தாளை மேற்புறம் திருப்பி வைத்து, ஒரு மெல்லிய கயிற்றால் கீழே விழாதவாறு கட்டிவைப்பர்.

ஆண்டு முடிந்ததும் அத்தாள் கற்றையை மேலட்டையில் இருந்து கழற்றியெடுத்து இரண்டு பகுதிகளாகப் பிரித்தெடுப்பர். ஆலயங்களுக்குப் போகும்போது ஒவ்வொரு கற்றையை ஒவ்வொரு கோயிலில் உண்டியலருகில் அல்லது சன்னதிகளின் முகப்பில் வைத்துவிடுவர்.

திருநீறு, குங்குமம் போன்றவற்றை அர்ச்சகரிடம் பெறுவோர் இந்தத் தாளடுக்கிலிருந்து ஒரு தாளைக் கிழித்து அந்தத் தாளில் அந்தப் பொருட்களை வைத்து மடித்துக் கொள்வர்.

ஒவ்வொரு தாளாகத் தினந்தோறும் கிழிப்போமேயானால் மேற்காட்டியவாறு செயல்பட இயலாது. அன்றாடம் அச்சிறுதாள் குப்பைக் கூடையில் மட்டுமே விழும். அந்த உறவினரிடம் எப்படி உங்களுக்கு இப்படியெல்லாம் தோன்றியது என்ற வினாவிற்கு அவர்தந்த விடைதான் குறிக்கத்தக்கது.

பல நேரங்களில் இப்படிப் பொருட்களை மடித்தெடுத்துவரச் சிறுதாள் இல்லாமல் பலரும் சிக்கலில் தவித்தனர். அப்படித் தவித்தவர்களில் என் மனைவியும் ஒருவர்.

ஒருநாள் வேறுவழியின்றித் தன் சேலை முந்தானையில் பிரசாதப் பொருட்களை வைத்து எடுத்துவந்தார். அன்றுதான் இப்படி ஓர் எண்ணம் எழுந்தது. அவருக்கும், அவரைப் போலத் திண்டாடும் பலருக்கும் காலாவதியான நாட்காட்டித் தாள்கள் கருவிகளாயின.

இதைக் கேட்டதும் எங்கோ படித்த ஒரு நாடக நூலின் பக்கங்கள் நினைவில் மின்னின. வேலைவாய்ப்பகத்தின் வெளியே பதிவகத்தின் அருகே காலைமுதல் நீண்ட வரிசை காணப்பெறும். இரண்டு மூன்று மணிநேரம்கூட அவ்வரிசையில் நிற்கவேண்டிவரும். காலையில் உணவருந்தாத காரணத்தாலோ அல்லது உடல்நலக்குறைவாலே ஒருவருக்கு மயக்கம் வரும்போலிருந்தது.

அந்த நேரம் ஒருநபர் தேநீர்க் கலயத்துடனும் கோப்பைகளுடனும் உள்நுழைந்தார். பலரும் பயன்கொண்டனர். மயக்கம் வருமோ என்ற பயத்தில் இருந்தவர் "நல்ல வேளையப்பா நீ வந்த இல்லேன்னா நாங்க மயக்கம்போட்டு விழுந்திருப்பம்' என்றார். பலரும் தலையாட்டி ஆமாம் ஆமாம் எனச் சொல்லாமல் சொல்லி ஆமோதித்தார்கள்.

தேநீர் கொணர்ந்தவர் புன்முறுவல் பூத்தபடியே மெதுவாகக் கூறியவை வருமாறு: "எட்டு ஆண்டுகளுக்கு முன் ஒங்களெப் போல நானும் இங்கே வரிசையிலே நின்னுகிட்டு இருந்தேன். திடீர்னு மயக்கம்போட்டு விழுந்திட்டேன்.

ரெண்டு நாளைக்கப்புறம் சடார்னு ஒரு யோசனை. நம்மளமாதிரி மயக்கம் வர்றவங்களுக்கு இடையிலே தேநீர் வித்தா என்னன்னு யோசிச்சேன். இப்ப நானும் என் தம்பி மவனும் வெவ்வேறு எடங்களில் தேநீர் வியாபாரம் செஞ்சிட்டு இருக்கோம்.

காசு ஒருபுறம். ஒங்களுக்கும் உதவியா இருக்க முடியுது' - இப்படிச் சொந்த அனுபவங்களால் தனக்கும் பிறருக்கும் பயன்படுமாறு அமையும் தீர்வுகளால் சின்னச் சின்னச் சிக்கல்களை வென்றுள்ளதைப் பல இடங்களில் காணலாம்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு வார எட்டின் ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் வலது மூலையில் பயனுள்ள குறிப்புகள் என்ற தலைப்பிட்டு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு செய்தியை வெளியிட்டு வந்தனர்.

எடுத்துக்காட்டாக, பல்துலக்கப் பயன்படும் பல்குச்சக் கற்றையை (Tooth Brush)  வெகுநாள் பயன்பாட்டிற்குப் பின் தூக்கி எறிந்துவிடாதீர்கள் உங்கள் காலணிகளுக்கு மெருகுமை (Polish)  தீட்டுவதற்குப் பயன்படுத்தலாம். வீடு கூட்டும் துடைப்பத்தை இல்லம் வருவாரின் கண்களிலிருந்து மறைக்க வேண்டுமானால் கதவுகளின் பின்பக்கம் அவற்றைத் தொங்கவிட்டு அக்கதவைச் சுவர்ப்புறம் சார்த்திவைக்கலாம் போன்றவை.

தொடர்ந்து இப்படி வெளியிட்டுக் கொண்டிருந்த இதழுக்கு ஒரு கடிதம் வந்தது. இப்படி வாரம் ஒன்றாகக் குறிப்புகள் வருவதை எப்படி நினைவில் கொள்ள முடியும் இந்தக் குறிப்புகளுக்காக வார ஏடுகள் அனைத்தையும் எப்படிப் பாதுகாக்க முடியும் அதற்கொரு வழியிருந்தால் தாருங்களேன் என்பது அந்த மடலின் செய்தி. அந்த இதழாளர்கள் எதுவும் கூறவில்லை.

மாறாக வாசகர்களில் ஒருவர் அந்தக் குறிப்புகளை வாரந்தோறும் இதழிலிருந்து வெட்டியெடுத்து, ஒரு கையேட்டில் அல்லது பெரிய ஏட்டில் ஒட்டிக் கொண்டே வாருங்கள். நல்ல தொகுப்பொன்றே உருவாகுமே என எழுதினார். இதனையும் அந்த ஏடு பயனுள்ள குறிப்புகள் பகுதியிலேயே வெளியிட்டுப் பயனைத் தந்தது.

இப்படிச் சின்னச் சின்னச் சிக்கல்களுக்குச் சிக்கலில்லாத தீர்வுகள் பக்கத்திலேயே அமைந்திருக்கும். அந்தத் திசையில் நம் பார்வையைச் செலுத்தினால் தீர்வுகள் யாவும் சிக்கலில்லாமலேயே நம் வசப்படும்.

இப்படிப்பட்ட சிக்கல்கள் தீர்க்கப்பெறும்போது பெரிய பணச்செலவுகள், நேர இழப்பு, கடுமையான உடல் உழைப்பு என எதுவுமே இருக்காது என்பதனையும் கவனிக்க வேண்டும். இவை யாவும் போகிற போக்கில் செயலாக்கப்பெறக் கூடியவையே.

சிக்கல்களைப் போக்குவதும் வாய்ப்பான வழிகளைத் தேடுவதும் களைகளை நீக்கிப் பயிர்களைப் பாதுகாத்தற்கு நிகர் என்பது உண்மைதானே?

கட்டுரையாளர்: பேராசிரியர். அ. அறிவுநம்பி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com