பெற்றவள் பிரசவ வலி பிள்ளைகளுக்கு தெரியுமா என்பதுபோல் உள்ளது நமது சுதந்திர தின கொண்டாட்டம். தன்னலமற்ற தலைவர்களும், பல்லாயிரக்கணக்கானோரும் கண்ணீரும் செந்நீரும் சிந்தி, சொத்து - சுகங்களை இழந்து பெற்ற சுதந்திரத்தை அதன் மகிமை தெரியாமல் அல்லது தெரிந்துகொள்ள ஆர்வமில்லாமல் ஏதோ கடமைக்காக சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்.
அன்று விடுமுறை கிடைக்கிறது என்பது மட்டுமே மகிழ்ச்சி. கடந்த சில ஆண்டுகளாக சுதந்திர தினம் குறித்த பெரும்பாலானோர் உணர்வு இப்படித்தான் உள்ளது.
சுதந்திர தினத்தன்று பள்ளியில் தேசியக்கொடியேற்றி ஒரு சாக்லேட் கொடுப்பார்கள் இதற்காக பள்ளிக்கு போக வேண்டுமா என்ற சலிப்பு மாணவர்களிடமும், அதிகபட்சம் ஒரு மணி நேரம் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சிக்காக விடுமுறையை அனுபவிக்காமல் அலுவலகத்துக்குச் செல்லவேண்டுமா என்ற அலட்சியம் அலுவலர்களிடமும் அதிகரித்து வருகிறது. இதை சில அலுவலகங்களிலும் பள்ளிகளிலும் காணலாம்.
ஒவ்வொரு புத்தாண்டின்போதும் நாள்காட்டி (காலண்டர்) வாங்கியதும் சுதந்திர தினம் எந்த கிழமையில் வருகிறது என பார்ப்பதும், அது வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வந்தால், ஒரு நாள் விடுமுறை போச்சே என புலம்புவதும், வேலை நாள்களில் வந்தால் கூடுதலாக ஒரு விடுமுறை என சந்தோஷப்படுவதும்தான் பெரும்பாலானோரின் எண்ணமாக உள்ளது.
வார விடுமுறை நாளையொட்டி சுதந்திர தினம் வந்தால், சேர்த்தாற்போல் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சந்தோஷம்தான் மேலோங்குகிறதே தவிர அடிமை விலங்கை அறுத்தெரிந்த நாள் என்ற மகிழ்ச்சி ஏற்படுவதில்லை.
குறிப்பாக, நமது தாய்நாட்டின் 70-ஆவது சுதந்திர தினம் திங்கள்கிழமை வந்தததால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏன் ஆசிரியர்களுக்கும்கூடத்தான் இரட்டிப்பு மகிழ்ச்சி. காரணம் சனி, ஞாயிறு, திங்கள் என தொடர்ந்து மூன்று நாள்கள் விடுமுறை கிடைக்கிறதே.
இதில் வேதனைதரும் விஷயம் என்னவென்றால் சில பள்ளிகளில் ஆசிரியர்களும், அலுவலர்களும் மூன்று நாள் விடுமுறையை பயன்படுத்தி உறவினர்கள் வீட்டுக்கோ, சுற்றுலாத் தலங்களுக்கோ செல்ல திட்டமிட்டு, சுதந்திர தினத்தை இரண்டு நாள்களுக்கு முன்னதாக அதாவது வெள்ளிக்கிழமையன்றே கொண்டாடியதுதான்.
ஒழுக்கத்தையும் தேசிய உணர்வையும் ஊட்டவேண்டிய பள்ளிகளே இப்படி இருந்தால் மாணவர்களிடம் தேசிய உணர்வு எப்படி வளரும்? இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க இனி சுதந்திர தினத்தன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காமல் காலை முதல் மாலை வரை செயல்படும்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதாவது, சுதந்திர தினத்தன்று பள்ளிகளில் வழக்கமான பாட வகுப்புகளை நடத்தாமல் அன்று முழுவதும் சுதந்திரப் போராட்டம் தொடர்பான கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கலாம்.
அந்தந்தப் பகுதிகளில் உள்ள தியாகிகளை பள்ளிக்கு அழைத்து வந்து, சுதந்திரப் போராட்டம் குறித்த தங்களது அனுபவங்களையும், தன்னலமற்ற தலைவர்களின் தியாகத்தையும் எடுத்துக்கூற சொல்லலாம். இதன்மூலம் சுதந்திரப் போராட்டதை அறிந்துகொள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படும்.
இது ஒருபுறமிருக்க, பொதுமக்களிடையேயும் தேசிய உணர்வு தேய்ந்து வருகிறது என எண்ணத் தோன்றுகிறது. காரணம், சுதந்திர தினத்தன்று மத்திய - மாநில அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தொலைகாட்சி சேனலை பார்ப்பவர்கள் மிகமிக குறைவு.
அன்று சிறப்பு நிகழ்ச்சியாக சில சேனல்களில் ஒளிபரப்பப்படும் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளையும், நடிகர் - நடிகைகளின் பேட்டிகளையும் பார்ப்பவர்களே அதிகம்.
ஆண்டு முழுவதும் பார்க்கின்ற திரைப் படம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒதுக்கிவைத்துவிட்டு சுதந்திர தினத்தி லாவது நம் நாட்டைப் பற்றியும் தலை வர்களை பற்றியும் ஒளிபரப் பப்படுகின்ற அரிய தகவல்களையும் காட்சிகளையும் நாம் பார்த்து நம் நாட்டைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டாமா?
தேசிய உணர்வை மக்களிடையே அதிகப்படுத்த வேண்டுமென தில்லியில் ராணுவ வீரர்களின் கம்பீர அணிவகுப்பு, நவீன கண்டுபிடிப்புகளின் அணிவகுப்பு, நாட்டின் ராணுவப் பலத்தை பறைசாற்றும் ஆயுதங்களின் அணிவகுப்பு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் நமது நாட்டின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் என பல கோடி ரூபாய் செலவில் கொண்டாடப்படும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியைத் தொலைகாட்சியில் பார்ப்பவர்கள் எத்தனை பேர்? 125 கோடி பேரில் கால்பங்கு மக்கள்கூட பார்ப்பதாக தெரியவில்லை.
தொடர் பார்க்கும் பெண்கள் அதை தவிர மற்ற நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆர்வம் கொள்வதில்லை. இளைஞர்களுக்கு திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிதான் பிடிக்கும்.
இதுபோன்ற அவலத்தை தடுக்க இனிவரும் ஆண்டுகளில் தில்லியில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறும்போது அந்த நிகழ்ச்சியை அனைத்து தொலைகாட்சிகளும் கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என சட்டம் கொண்டுவர வேண்டும்.
சுதந்திர தின நிகழ்ச்சி நிறைவு பெற்ற பிறகுதான் அவரவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும் அப்போதுதான் தேசிய உணர்வு தேய்வதை தடுக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.