ஏற்பது இகழ்ச்சி

அவனும் அவளும் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே பழக்கம். பின்பு

அவனும் அவளும் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே பழக்கம். பின்பு கல்லூரியில் தொடர்ந்தது.. வேறு வேறு பணிக்கு சென்றாலும், காதல் பயணம் தடைபடாமல் சென்று... இறுதியில் ஒரு வழியாய் வீட்டிற்கு யார் மூலமோ தெரிந்து இரு குடும்பங்களும் அரைகுறை மனதுடன் சம்மதம் தர... சந்தோஷத்தில் திக்கு முக்காடி... நண்பர்களுக்கு மகிழ்ச்சியாக பார்ட்டி வைத்துக் கொண்டாடி... இதற்கு மேல் ஆக வேண்டிய காரியங்களை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு... றெக்கை கட்டிப் பறந்தன அந்த இளஞ்ஜோடிகள்...

திருமணம் என்ற நிகழ்வு இப்போது வழக்கமான தடத்தில் செல்ல ஆரம்பிக்கிறது..

"சின்னஞ்சிறுசுகள் என்னவோ ஆசைப்பட்டுருச்சு.. நாம இதுக்கு தடை சொல்ல வேண்டாம்னு பெரிய மனசு பண்ணி ஒத்துக்கிட்டோம்.. எல்லாம் சரிதாம்.. இருந்தாலும், கட்டுன்னு சில விஷயங்களை பெரியவங்க உண்டாக்கி வச்சுருக்காங்கல்ல..' என்று ஆரம்பித்து, கல்யாண மண்டபத்தில் தொடங்கி, (அந்த ஊரிலேயே அதுதான் மிகப் பெரிய கல்யாண மண்டபம்) மாப்பிள்ளை அழைப்பிற்கு சாரட் ஊர்வலம், சாப்பாட்டு மெனு, வைர நெக்லஸ் என முடிந்து..

"வரதட்சணை என்றெல்லாம் எதுவும் வேண்டாம்.. எங்க பையனும் அதை விரும்ப மாட்டான்' என்று தாராள மனசுடன் பேச்சுவார்த்தை முடிவடைந்தது.

பெண்ணின் பெற்றோர் கலவரமடைந்தார்கள். இதென்ன.. இதுவா காதல் திருமணம்? பெண்ணை தனியாய் அழைத்து "மண்டபம் மாதிரியான சமாச்சாரங்களைகூட ஏற்று கொள்ளலாம்.. வைர நெக்லஸ் எல்லாம் நம்ம தகுதிக்கு மீறிய விஷயமாக தெரிகிறதே.. நீ கொஞ்சம் அந்தப் பையனிடம் பேசக்கூடாதா?' என்று கேட்டபோது, அவள் சொன்ன பதில் தான் அதிர்ச்சியாய் இருந்தது.

"இந்த வீடு எதுக்கு இருக்கு.. அதை விற்று செலவு பண்ண வேண்டியதுதானே. எனக்கான துணையை நானே செலக்ட் பண்ணி உங்களுக்கு எவ்வளவு வேலையை மிச்சம் பண்ணியிருக்கேன்.. உங்க பெண்ணுக்காக இதைக்கூட ஏத்துக்கக்கூடாதா? நீங்க ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செஞ்சாலும் இந்த செலவை எல்லாம் பண்ணுவீங்கதானே?' பெற்றோர் வாயடைத்துப் போனார்கள்.

இன்னும் சில வீடுகளில், பையனுக்கு கார், மைனர் செயின் 15 பவுன், பிரிட்ஜ், ஏசி, கட்டில் மெத்தை எனவும் உடன்படிக்கை ஏற்படுகிறது. காதலர்கள் இந்த விஷயத்தில் தலையிடுவதில்லை.

தங்கள் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததே பெரிய விஷயம் என்று கல்யாண அழைப்பிதழ் போன்ற சமாச்சாரங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுகின்றனர்..

இனம், மொழி, மதம் கடந்து ஏற்படும் காதல் உணர்வு திருமணத்தில் முடியும்போது, அதற்காக இழக்க வேண்டிய விஷயங்களும் சமரசம் செய்ய வேண்டியவையும் ஏராளம் இருக்கின்றன. இருவரும் வெவ்வேறு பண்பாட்டு சூழலில் வாழ்ந்தவர்கள். அன்றாடம் சாப்பிடும் சாப்பாட்டில் இருந்து வேறுபாடுகள் துவங்குகின்றன.

அவன் அம்மா வைக்கும் சாம்பாருக்கும், அவள் வைக்கும் சாம்பாருக்கும் வித்தியாசம் இருக்கும். அவள் சார்ந்த சமூகத்தில் அவளின் அம்மா வைக்கும் சமையல் முறை அப்படி.

திருமண சடங்குகளில் வெவ்வேறு சமூகங்களில் உள்ள கட்டுக்கள் வேறு வேறாக இருப்பதைப்போல, இதர சாஸ்திர சம்பிரதாயங்களும் மாறுபடும்.

தலை தீபாவளி, தலைப் பொங்கல் என எத்தனை எத்தனை கட்டுக்கள்.. வேறு மதம் எனில் அதற்கு தகுந்த சடங்குகள் இருக்கும்.

ஒரு புதிய பண்பாட்டு சூழலுக்குள் நுழையும் இளம் தம்பதி, பூஜ்யத்தில் இருந்து வாழ்வை தொடங்க வேண்டும். வீட்டுக்கு வேண்டிய பொருட்களை தங்களின் சொந்த உழைப்பில் இருந்து வாங்குவதில் இருக்கிறது மகிழ்ச்சியான வாழ்க்கை முறை.

கட்டிய புடவையோடு வா.. என்று சொன்ன காலம் போய், கட்டிய வீட்டோடு வா.. என்று சொல்லும் காலமாய் மாறி விட்டதோ என எண்ண தோன்றுகிறது.

திருமணத்திற்கு முன்பே ரெடிமேடான சொந்த வீட்டில், ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கும் புதிய கார் அல்லது பைக், பிரிட்ஜ், அகன்ற திரை கொண்ட டிவி, வாஷிங் மெஷின், கட்டில் மெத்தை என எல்லாமே மாமனார் தயவில் வாங்கி விட்டால், வாழ்வு எந்த வகையிலும் இனிக்கப் போவதில்லை. உங்கள் வீட்டில் ரெடிமேடாக குரோட்டன்ஸ் செடிகளை வைத்திருந்து அழகு பார்ப்பது போல..

வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் புதிய விதைகள் போட்டு, புதிதாய் தளிர் விடும் செடிகளையும், அதில் முளைக்கும் வெண்டைக்காய், தக்காளியை பார்க்கும் பரவசம் தான் வாழ்க்கை..

ஒரு புதிய டிவி வீட்டிற்கு வந்து இறங்கும்போது, மனைவியோ, குழந்தையோ உற்சாகம் பொங்க வாசலில் வந்து கூடமாட உதவி செய்வதுதான் வெற்றிகரமான வாழ்வின் இனிய அம்சம்.

ஏனெனில், இவை யாவும் உங்கள் இருவரின் சம்பாத்தியத்தில் வாங்கிய சாதனங்கள்.. உங்களுக்கு ஆத்ம சந்தோஷத்தைக் கொடுக்கும் நிகழ்வுகள் இவைதாம்.

ஆர்.டி. கணக்கு துவங்கி பணம் சேமித்து, பொருட்கள் வாங்கிய காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது. இ.எம்.ஐ.யில் வாழ்வை நகர்த்தும் நுகர்வுக் கலாசாரத்தில் இன்றைய தலைமுறை சிக்கிக் கொண்டு விட்டது.

தவிர்க்க முடியாத இந்த இ.எம்.ஐ. சமாச்சாரங்களை குடும்பத்தில் இருவரும் கலந்து பேசி, எது அவசியம் எது மிகவும் அவசியம் என்பதை முடிவு செய்து வாங்குவது புத்திசாலித்தனம். வாழ்வின் சுவாரசியமும் அதில்தான் இருக்கிறது.

இன்னொருவர் உழைப்பில் ஈட்டிய பணத்தில் வாங்கப்பட்ட பொருள்கள் உங்கள் வீட்டில் நிறைந்து கிடந்து உங்களுக்கு உறுத்தலை உண்டாக்க வேண்டாம். ஏனெனில், இது உங்களின் வீடு. உங்களின் உலகம். உங்களின் மகிழ்ச்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com