ந பூதோ ந பவிஷ்யதி

ஜெயலலிதா இப்போது இல்லை. இந்த உண்மையை அஇஅதிமுக-வின் கோடிக்கணக்கான தொண்டர்களும், அக்கட்சியின் பிற தலைவர்களும் ஏற்றுக் கொள்வது மிகவும் கடினம்தான்.

ஜெயலலிதா இப்போது இல்லை. இந்த உண்மையை அஇஅதிமுக-வின் கோடிக்கணக்கான தொண்டர்களும், அக்கட்சியின் பிற தலைவர்களும் ஏற்றுக் கொள்வது மிகவும் கடினம்தான். அவரது இழப்பால் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வெற்றிடம் இனி எப்போதும் நிரப்பப்படப் போவதில்லை.
ஜெயலலிதா சக்திவாய்ந்த அரசியல் தலைவர் மட்டுமல்ல. அரசியலில் இதற்கு முன்பு எந்தத் தலைவரும் சந்தித்திராத பல்வேறு நெருக்கடிகளில் இருந்தும், மோசமான சூழ்நிலைகளில் இருந்தும் புத்தெழுச்சியுடன் மீண்டு வந்த பெருமைக்கு உரியவரும் ஆவார்.
அவரைப் போன்ற ஒருவர் இதற்கு முன்பும் இல்லை, இனிமேலும் உருவாகப் போவதில்லை. இந்திய அரசியல் வரலாற்றில் தனக்கென்று ஒரு தனித்துவத்தைக் கொண்டவர் ஜெயலலிதா மட்டுமே.
ஜெயலலிதாவுடன் எனக்கு பெரிய அளவில் அறிமுகம் கிடையாது. 2010-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவரை ஒருமுறை சந்தித்தேன். அதற்கு முன்பும், அதற்குப் பின்னரும் அவரை நான் சந்தித்தது இல்லை.
ஜெயலலிதாவுடன் தொடர்பில் இருந்த எனது உறவினர் ஒருவர், எனது கட்டுரைகள் சிலவற்றை அவர் பாராட்டியிருப்பதாக என்னிடம் தெரிவித்துள்ளார். எனினும், எனது அரசியல் நிலைப்பாடுகளில் ஆர்வமுடைய எனது நண்பர் சோ ராமசாமி, நான் ஜெயலலிதாவைச் சந்திக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். அதன் காரணமாகவே அந்த ஒரே சந்திப்பு நிகழ்ந்தது.
ஜெயலலிதாவுடனான எனது சந்திப்பு இனிமையான காபியுடன் தொடங்கியது. 2011-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் உத்திகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். அப்போது, அவரது எண்ணங்கள் அனைத்தும் எவ்விதத் தயக்கமும் இன்றி வார்த்தைகளாக வெளிப்பட்டதையும், அவர் தனது நோக்கத்தில் தெளிவாக இருக்கிறார் என்பதையும் என்னால் உணர முடிந்தது.
அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக, அரசு இயந்திரத்தையும், "திருமங்கலம் ஃபார்முலா' என்ற பெயரில் வாக்குக்குப் பணம் அளிக்கும் திட்டத்தையும் தனக்கு எதிராகப் பயன்படுத்துவது மிகப்பெரிய சவாலாக உள்ளதை விளக்
கினார்.
மேலும், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு தேர்தல் ஆணையத்தை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நியாயமற்ற வகையில் பயன்படுத்தி வருவதாகவும் ஜெயலலிதா கூறினார்.
எனினும், எனது ஆலோசனைகள் அவர் கூறிய சவால்களை எதிர்கொள்ளப் போதுமானதாக இல்லை என்பதே ஜெயலலிதாவின் கருத்தாக இருந்தது. எனினும், எனது யோசனைகள் மீது ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி ஆர்வம் காட்டினார். ஜெயலலிதா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
ஜெயலலிதாவைப் பொருத்தவரையில் அவரது அரசியல் அணுகுமுறை என்பது, வெற்றியை எட்டிப்பிடிக்கும் விளையாட்டாகவே இருந்தது. எனவே, எனது ஆலோசனைகளில் இருந்து அவரது எண்ணங்கள் முற்றிலும் வேறுபட்டதாகவே இருந்தன. அரசியல் உத்திகளை வகுப்பதில் எனது தேவை அவருக்கு அத்துடன் முடிந்துவிட்டது என்றாலும் அரசியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களையும் அப்போது நாங்கள் பேசினோம்.
தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவர் நிறைய பேசினார். "எனது வாழ்வில் நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் நான் ஒரு குறிப்பிட்ட உயரத்தை எட்டிவிட்டேன். ஆனால், இவை இரண்டுமே விதிப்படிதான் நடந்தது.
நான் எனது விருப்பத்துக்கு மாறாகத்தான் திரைப்பட நடிகையாக உருவானேன். எனது தாயார் என்னை அப்படி மாற்றினார். அடுத்ததாக, எனது இயல்புக்கு மாறாக நான் அரசியல்வாதியாக மாறினேன். எம்ஜிஆர் என்னை அப்படி மாற்றினார்' என்று ஜெயலலிதா குறிப்பிட்டார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினாரோ அப்படி அவரால் அமைத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால், திரைப்பட நடிகையாக அவர் முத்திரை பதித்தார். அதைத் தொடர்ந்து அரசியல்வாதியாக அவர் பல உச்சங்களைத் தொட்டார்.
எனினும், அவருக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை இல்லாமல்போனது. உண்மையில் அவர் என்னவாக வேண்டும் என்று விரும்பினார்? நன்றாகப் படித்து விஞ்ஞானியாக வேண்டுமென்றும், ஆய்வகத்தில் பணியாற்ற வேண்டும் என்றும்தான் விரும்பினார்.
இளம் வயதில் எதிர்காலம் குறித்து கண்ட கனவுகளை அவரால் நனவாக்கிக் கொள்ள முடியவில்லை. எனினும், கனவு கண்டிராத வேறு பல சாதனைகளை அவர் படைத்துவிட்டார்.
சாதாரணமாகவே வாழ ஆசைப்பட்ட ஜெயலலிதாவை அசாதாரண செயல்களைச் செய்பவராக காலம் மாற்றியது.
ஜெயலலிதா தனது பேட்டி ஒன்றில் தனது சிறுவயது வாழ்க்கை குறித்து கூறியிருந்தார். அதில், சிறு வயதில் மிகவும் கூச்ச சுபாவமும், வெளிநபர்களுடன் அதிகம் பழகாத குணத்துடன் இருந்ததாகத் தெரிவித்தார். எனினும், காலம் அவரை அந்தக் கூச்சத்தில் இருந்து வெளியே வரவைத்து திரைப்பட நடிகையாக உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது. தொடர்ந்து அரசியலில் இறங்கி தேசிய அளவிலான தலைவரானார்.
கட்டுப்பாடுமிக்க பிராமண ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்த பாரம்பரியத்தைப் பின்பற்றும் ஒரு கூச்ச சுபாவமுள்ள சிறுமி, திரையுலகில் புகுந்து அதில் உச்சத்தைத் தொட்டதுடன், திராவிடக் கட்சி ஒன்றின் தலைவரானதை விட மிகப்பெரிய ஆச்சரியம் வேறு எதுவும் இல்லை.
தீவிர ஹிந்து எதிர்ப்பைக் கொண்ட திராவிடக் கட்சி ஒன்றுக்கு, இறை நம்பிக்கை மிகுந்த பெண் ஒருவர் தலைமை வகித்தது ஒரு நகைமுரண். இதுபோன்ற வேறுபாடுகளை அவர்
எவ்வாறு கையாண்டார் என்பது எப்போதும் வியப்பை ஏற்படுத்தும்.
கட்சியிலும், ஆட்சியிலும் அவருக்கு உச்சபட்ச அதிகாரம் எப்போதும் இருந்தது. அதனைப் முழுமையாகப் பயன்படுத்த எப்போதும் தவறியதில்லை. தான் விருப்பப்பட்டால் ஒரு அமைச்சரையோ, கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருப்பவரையோ எவ்விதத் தயக்கமுமின்றி உடனடியாக நீக்க ஜெயலலிதாவால் முடிந்தது.
பிற கட்சிகளில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால், நீக்கப்பட்டவர்கள் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்குவர், குறைந்தபட்சம் எதிர்ப்பு தெரிவித்து ஓர் அறிக்கையாவது விடுவர். ஆனால், ஜெயலலிதாவிடம் மட்டும் அது நடந்ததே இல்லை.
கடும் நடவடிக்கைக்கு உள்ளான கட்சியினரும் ஜெயலலிதாவைப் போற்றிப் பேசியே வந்துள்ளனர். அவரது கட்சியில் மட்டும் ஒருவர் பொறுப்பில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி தலைமைக்கு உரிய மரியாதையை சிறிதும் குறைத்துவிட முடியாது.
தனது அரசியல் வழிகாட்டியான எம்.ஜி.ராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு, சில ஆண்டுகளில் அஇஅதிமுக-வை அவர் முழுமையாக ஒருங்கிணைத்தார். கட்சியில் அவருக்கு எதிரான கருத்துடையவர்கள் யாரும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தினார்.
எம்ஜிஆர் காலத்தில் இருந்ததைவிட கட்சியின் மீதான முழுக் கட்டுப்பாடும் ஜெயலலிதாவிடம் இருந்தது. அவரது ஆளுமையும், அவர் மீதான கட்சித் தொண்டர்களின் விசுவாசமும் எங்கும் காண முடியாதது.
ஜெயலலிதாவை மிகச்சிலர் மட்டுமே எளிதாக அணுக முடியும். அவர் தன்னை எப்போதுமே தனிமைப்படுத்திக் கொண்டார். அதனை அவர் விரும்பினார் என்றும் தெரிகிறது.
ஆட்சியில் அவர் நினைத்ததைச் செய்பவர். ஒரு காலகட்டத்தில் காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஜயந்திரர், இளைய பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை கொலை வழக்கில் கைது செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அப்போது, அதற்கான ஆதாரங்கள் வலுவாக இல்லை என்று நான் கூறியதை அடுத்து, என்னை அழைத்து வருமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதனால் நான் தமிழகத்தில் இருந்து ஒரு வார காலம் வெளியேற நேரிட்டது. என்னைக் கைது செய்யாமல் இருக்க நீதித்துறை மூலம் உத்தரவு பெற்ற பிறகே தமிழகம் திரும்பினேன்.
ஒருமுறை அவருக்கு விருப்பமில்லாத செய்தியை ஒரு பத்திரிகை வெளியிட்டபோது, அதன் ஆசிரியர்கள் பெங்களூருக்குச் தப்பிச் செல்ல நேரிட்டது. பத்திரிகை சுதந்திரம் என்பதை அவர் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. எனவே, வாய்ப்பு கிடைத்தபோது அவருக்கு எதிரான நியாயமற்ற செயல்களிலும் சில ஊடகங்கள் ஈடுபட்டன.
பல்வேறு ஊழல் வழக்குகளை அவர் எதிர்கொண்டாலும், அவரது அரசியல் வாழ்க்கையை அவற்றால் முடக்க முடியவில்லை. ஏனெனில், பெரும்பான்மையான மக்கள் அவரது பக்கம் நின்றனர். குடும்பம் ஏதும் இல்லாத அவர் எதற்காக ஊழல் செய்து பணம் சேர்க்கப்போகிறார்? என்பதே பெரும்பாலான மக்களின் எண்ணமாக இருந்தது.
தமிழகத்தில் பெரும்பான்மையான பெண்களின் மனதை ஜெயலலிதா வென்றார். அதனால்தான் அவர் அம்மா என்று தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.
சம்ஸ்கிருதத்தில் "ந பூதோ ந பவிஷ்யதி' என்கிற வார்த்தைப் பிரயோகம் உண்டு. "இதற்கு முன்பும் இல்லை, இனி மேலும் உருவாகப்போவதில்லை' என்பது இதன் பொருள். அரசியலில் இதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா.

கட்டுரையாளர்:
பத்திரிகையாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com